பிறசெய்திகள்1
15.02.20- கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி..
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது. நல்லதம்பி , தில்லையம்பலம் , வில்சன் , யோகம் இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டிக்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கல்முனை கல்வி வலய உடற்கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் , உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் , கோட்ட கல்விப் பணிப்பாளர் , பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , அரசியல் பிரமுகர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் தில்லையம்பலம் இல்லம் 521 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் , வில்சன் இல்லம் 442 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , நல்லதம்பி இல்லம் 366 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் , யோகம் இல்லம் 347 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. சர்வதேச கராட்டி போட்டியில் பங்கேற்று இலங்கை திருநாட்டிற்கும் , பிரதேசத்திற்கும் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்த கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கராட்டி வீரர் எஸ்.பாலூராஜ் பாடசாலை சமூகத்தினால் இவ் விளையாட்டு விழாவின் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். |
13.04.19- வீட்டில் சரியான பாதுகாப்பு கண்காணிப்பு இன்மையே மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு காரணம்..
வீட்டில் சரியான பாதுகாப்பு கண்காணிப்பு இன்மையே மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு காரணம் ! என்கிறார் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம்.. போதை பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களில் கூடுதலான வீதத்தினர் மாணவர்களாகவே காணப்படுகின்றனர் வீட்டிலே சரியான பாதுகாப்பு, கண்காணிப்பு என்பன கிடைக்குமாக இருந்தால் நிற்சயமாக அந்த குழந்தை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகாது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் .தெரிவித்தார் நாட்டிற்காக ஒன்றிணைவேம் எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடைவிலகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு சமூர்த்தி திட்ட முகாமைத்துவ பணிப்பாளர் இதயகுமார் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(11) வியாழக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் சிறுவர்கள்தான் இந்த நாட்டின் நாளைய தலைவர்கள் நீங்கள் பலமாக இருக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும். பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்களை மீள இணைக்கின்ற பொழுது பல பிரச்சினையாக எழுகின்றது. அதாவது இவர்கள் குறித்த வகுப்பில் மெல்லக்கற்கும் மாணவர்களாகவே காணப்படுகின்றனர். அன்பான பெற்றோர்களே உங்களது பிள்ளைகள் கல்வியில் மேம்படவில்லையென்றால் சமூதாயம் உங்களை ஒதுக்கி வைக்கின்றவர்களாவே காணப்படுவீர்கள். ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கின்ற இந்த பாதகமான செயற்பாட்டுக்கு பெற்றோர் என்ற வகையில் நீங்கள் துணைபோகக்கூடாது. எந்த குழந்தையும் கல்வி அறிவில் மேம்பட்ட குழந்தையாக பிறப்பதில்லை பொற்றோரின் பங்களிப்பு மூலமே அது சிறந்து விளங்குகின்றது. நீங்கள் உங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி சிறந்த கல்வியினை பெற வேண்டும் என நினைத்தால் மாத்திரமே உங்களது குழந்தை கல்வியில் சிறந்து விளங்கும் இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மிகவும் கவலைக்குரிய விடயமாக காணப்படுவது என்னவெனில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களில் கூடுதலான வீதத்தினர் மாணவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு குறிப்பாக வீட்டிலே இருந்து சரியான பாதுகாப்பு கண்காணிப்பு என்பன கிடைக்குமாக இருந்தால் நிற்சயமாக அந்த குழந்தை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகாது என்பது உண்மையான விடயமாகும். எனவே இந்த விடயத்தில் ஏனையோரை குற்றம்சாட்டுவதை விடுத்து பெற்றோராகிய உங்களுக்கு இருக்கின்ற குழந்தைகளை சமூகத்திற்க பொருத்தமானவர்களாக வளர்த்தெடுக்கும் கடைமை உங்களுடையதாகும். எனவே அன்பான மாணவர்களே நீங்கள் பெரிய தொழில்களில் சிறந்து விளங்குவதற்கு கற்கவேண்டும் என்று நான் கூறவில்லை நீங்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக வாழ்வதற்காவேனும் நீங்கள் கற்கவேண்டும். இதனால்தான் கூறுகின்றேன் .கல்வி மாத்திரம் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று பாடசாலைக்கு செல்லுங்கள் என நான் கேட்க்கவில்லை நல்ல ஒழுங்கமுள்ள மாணவர்களாக, சிறந்த மாணவர்களாக உங்களால் எதிர்காலத்தில் ஒரு தொழிலினை பெற்றுக்கொள்ள கூடிய மாணவர்களாக நீங்கள் மாறுவதே இந்த சமூதாயத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும் என அவர் இதன்போது தெரிவித்தார். காரைதீவு நிருபர் |
13.03.18- மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு..
சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” ஒன்றினை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “போசாக்கு மற்றும் தொற்றா நோய்” என்ற தொனிப் பொருளில் முதியவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நாளை காலை 9.00 மணி தொடர்க்கம் 11.00 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாகவும், இதில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எம்.அஸ்லம், வைத்தியர்களான ஐ.எல்.அப்துல் ஹை, பர்வீன் முகைடீன், எஸ்.எம்.றிசாத், எல்.பஸ்மினா, எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிறா உள்ளிட்ட வைத்தியர்களின் பங்கு பற்றுதலுடன் விஷேட வைத்திய சேவையும் இதில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பைஷல் இஸ்மாயில் |
07.02.18- தமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்..
தமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்!நேற்று கல்முனையில் த.தே.கூ. ஹென்றிமகேந்திரன் ராஜன் வேண்டுகோள்! தமிழர்களின் பூர்வீகமான பிரதேசமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் சகலபேதங்களையும் மறந்த த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்!இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெலோ உபமுதல்வர் ஹென்றிமகேந்திரன் மற்றும் வேட்பாளர் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தேர்தல் பரப்புரையில் பேசுகையில் குறிப்பிட்டார்கள். இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் த.தே.கூட்டமைப்பு சார்பில் சந்திரசேகரம் ராஜன் கே.சிவலிங்கம் ஆகிய இருவேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் பரப்புரை நேற்று இடம்பெற்ற வேட்பாளர் கு.ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. அங்கு ராஜன் அவர்கள் மேலும் பேசுகையில்: கல்முனைக்க வியாபாரத்திற்கு வந்தவர்கள் கல்முனையை அபகரிக்கவிடமுடியாது. கல்முனை மாநகரசபைத் தேர்தலில் குறிப்பாக 12ஆம் வட்டாரத்தில் தமிழ்மக்கள் வாக்களிக்கத்தவறினால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோவது மட்டுமல்லாது பாரம்பரிய தாயகபூமியையும் இழக்கவேண்டிவரும். நாம் அனைவரும் திரண்டுவந்து வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும். இன்றேல் எம்மீதான தேவையற்ற திணிப்புகள் பாரபட்சங்கள் தொடரும். பிறகு உங்களுக்காக எம்மால் குரல் கொடுக்கமுடியாத துரதிஸ்டநிலை உருவாகும். கல்முனை மாநகரசபையில் 71வீத முஸ்லிம்களும் 29வீத தமிழ்மக்களும் வாழந்துவருகின்றனர். ஆனால் நிலப்பரப்பைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் 60வீத நிலபப்பரப்பிலும் முஸ்லிம்கள் 40வீத நிலப்பரப்பிலும் வாழ்ந்துவருவதை அறிவீர்கள். கடந்தகாலங்களில் பிரிந்துநின்று தமிழினம் பட்ட வேதனைகள் துன்பங்களை நாமறிவோம். எனவே இனியாவது உணர்ந்து நமது இருப்பைக்காப்பாற்ற சிந்தித்து செயற்படவேண்டும். கல்முனை தனியார் பஸ்நிலையத்தை மூடி அங்கு தனியார் வங்கியை அமைக்க கல்முனைத்தமிழர்களின் எவ்வித சம்மதமுமில்லாமல் அன்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் காணி ஒருவகையில் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வந்து மீளப்பெறவேண்டுமானால் ஆதரவளியுங்கள்.நகரஅபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களின் காணி பறிபோவதையோ இருப்பை இழப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எனவே தயவுசெய்து தமிழ்மக்கள் உணர்ந்து தமிழ்மண்காப்பாற்ற வாக்களியுங்கள். என்றனர். காரைதீவு நிருபர் |
10.05.17- இன, மத பேதங்களை மறந்து பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்..
இன, மத பேதங்களை மறந்து பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்.. இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழைப்பு.. இஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்தார். பாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக கையொப்பமிட்ட இராஜாங்க அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- முஸ்லிம்களின் புனித பூமியான பாலஸ்தீனத்தில் அத்துமீறி குடியேற்றங்களை நிறுவி வருகின்ற இஸ்ரேல், ஏராளமான பாலஸ்தீனியர்களை சிறைப்படுத்தி வைத்துள்ளது. பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறையில் வாடுகின்ற அவர்கள் தற்போது உண்ணாவிர போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். 56 பெண்கள், 28 ஊடகவியலாளர்கள், 100 நோயாளர்கள், 300 சிறுவர்கள், 13 நீதித்துறை கவுன்சில் உறுப்பினர்கள், 500 ஆயுள் தண்டனைக் கைதிகள் என சுமார் 6500 பாலஸ்தீனியர்கள் கடந்த மூன்று வாரங்களாக குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு ஆதரவாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயம் கையெழுத்து மகஜர் ஒன்றினை தயாரித்து வருகின்றது. இதில், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் என ஏராளமானவர்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மகஜரில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கையொப்பமிட முடியும். எனவே, இன மத பேதங்களை மறந்து குறித்த மகஜரில் அனைவரும் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
26.03.17- கண்டி, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட காணிகள் அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் அமைச்சர் மனோ கணேசன்..
அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அவ்வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும் சிங்கள மக்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, கடந்த வாரம், கூட்டணிக்கும், அரச பெருந்தோட்ட துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹஷிமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து, கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளின் போது இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்படும் எனவும், தோட்டங்களை அண்மித்து வாழும் கிராமத்தவர்களுக்கும் இதேபோல் காணிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எம்பீக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார். இத்தோட்டங்களில் வாழும், இந்நாள், முன்னாள் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பான விபரங்களை கண்டறிந்து, வாழ்வாதார காணிகள் அதே தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இவை வீட்டு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற ஏழு பர்சஸ் காணியுடன் தொடர்பில்லாத வாழ்வாதார காணிகளாக கருதப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் கண்டி, மாத்தளை மாவட்ட தோட்ட மற்றும் கிராமத்து மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் செயற்பாடுகள் எந்தவித முரண்பாடுகளும் இல்லாத விதத்தில் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூட்டணியின் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமாரை நாம் நியமித்துள்ளதாகவும் பிரதமருக்கு நான் தெரிவித்துள்ளேன். |
06.01.17- வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் பரம பதம் அடையும் வைகுண்ட ஏகாதசி விரதம் 2017..
விரதங்களில் மகிமைமிகு விரதமாக கொள்ளப்படும் ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானுடைய பரம பதம் அடையும் சுவர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசி விரதமானது கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வரலாற்று சிறப்புமிகு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது அத்தோடு விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் நலன் கருதி ஆலய நிர்பாக சபையின் ஏற்பாட்டில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது எனவே அனைத்து பக்தகோடி பெருமக்களும் பக்தி சிரத்தையோடு ஆசாரசீலர்களாகஆலயத்திற்கு வருகைதந்து எம்பெருமானுடைய பூஜை நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பதோடு திருமாலின் திவ்விய தரிசனம் பெற்றேகுமாறு அனைவரையும் உளம் உவர்ந்து அழைக்கின்றோம். (தமிழ்) |
06.01.17- மாலைதீவிலுள்ள கல்முனை மீனவர்களை நாட்டு கொண்டுவர அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் அவசர ஹரீஸ் நடவடிக்கை..
மாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன கல்முனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு என்பவற்றை நாட்டுக்கு வரவழைப்பதற்கும் காணாமல் போய் கடலில் தத்தழிக்கும் ஏனைய நான்கு மீனவர்கள் மற்றும் இயந்திரப்படகு என்பவற்றை மாலைதீவு மற்றும் இந்திய கடற்படையினரின் டோரா படகுகள் மூலம் தேடுவதற்குமான நடவடிக்கையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி சங்க தலைவர் எம்.நசீர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் காணாமல் போன இயந்திரப் படகு உரிமையாளர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரை நேற்று (5) வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதற்கு அமைவாக மேற்குறித் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்முனையைச் சேர்ந்த இரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு மற்றும் ஆறு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்தனர். இவர்களுள் இருவர் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு மாலைதீவு அரசின் பாதுகாப்பிலும் ஏனைய நான்கு பேர் உள்ளிட்ட படகு மாலைதீவு கடற்பரப்பை அண்மித்த பிரதேசத்தில் தத்தழிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன்போது மாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப்படகு என்பவற்றை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பிலும் ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப் படகினை மாலைதீவு கடற்பரப்பை அண்மித்த பிரதேசங்களிளும் இந்திய கடற்பரப்பை அண்மித்த பிரதேசங்களிளும் டோரா படகுகளின் உதவியுடன் தேடுவதற்கு பாதுகாப்பு அமைச்சுடன் பேசி நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாலைதீவு நாட்டு அரச அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்;தை நடத்துவதற்காக மாலைதீவுக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்) |
19.12.16- மு.கா இளைஞர் காங்கிரஸ் ஆதரவுடன் கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தில்சாத் தெரிவு..
நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த தில்ஷாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது இளைஞர் கழகங்களுடாக ஆதரித்ததன் மூலம் சிறந்த வெற்றியை பெற்றுள்ளார். இவரது வெற்றிக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பூரண ஆதரவு வழங்கியுள்ளார். இதற்கமைவாக பிரதி அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தில்சாத்தின் வெற்றிக்காக கட்சியின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இளைஞர் கழகங்களுடாக வாக்களித்துள்ளதுடன் களத்தில் நின்று வெற்றிக்காக உழைத்துள்ளனர். இவ்வாறு செயற்பட்ட கட்சியின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு வெற்றி பெற்ற தில்ஷாத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். (அகமட் எஸ். முகைடீன்) |
1-9 of 9