[Untitled]‎ > ‎

02.08.14- என்றும் மறக்க முடியாத மறைஞானி சித்தானைக்குட்டி சுவாமிகள்

posted Aug 2, 2014, 10:00 AM by Unknown user   [ updated Aug 7, 2014, 1:12 AM ]
சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின்  61வது குருபூசை தினத்தையொட்டி இக்கட்டுரை கலாநிதி க.கணேசராஜா அவர்களால் (02.08.2012) பிரசுரிக்கப் பட்டது.

                          
சித்தர்கள், மறைஞானிகள், யோகிகள், சூபிஸ்டுக்கள் என்ற பதங்கள் சமயத்தோடும் சமய மெய்யியலோடும் (Religious Philosophy)தொடர்புடைய பதங்களாகும். பொதுவாக சமயம் என்பதற்கு எண்ணக்கரு ரீதியாக பல்வேறு கருத்தாக்கங்கள் காணப்படினும் வெறும் நம்பிக்கை கிரியைகளோடும் மட்டும் அமையாது ஒரு உயர்ந்த குறிக்கோளை அடைய உதவும் சாதனம் அல்லது வழிமுறை (Way of Path) சமயம் எனலாம்”. சமயம் எப்போதும் ஒரு மனிதனுக்கு பௌதிகரீதியாக ஒழுக்கம் சார்ந்த விடையங்களை வளர்ப்பதோடு பௌதீகதீகரீதியான (Metaphysics) சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமையப்பெற்றுள்ளது. உலகில் வாழ்கின்ற எல்லோரும் ஒரே மூலத்தில் இருந்து வந்தவர்கள் என்ற சிந்தனை மேலோங்கும் போது எல்லோரும் சமம் என்ற எண்ணத்தை வைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ வேண்டும் என்ற ஒரு நெறியை சமயம் என்ற சொற்றொடர் விளக்குகிறது. இதனையே சிலர் சமம் + இயல் ஸ்ரீ சமயம் என்பர்.
மனிதன் ஆறாவது அறிவு பெற்றவன். அனுமானம் எனும் ஆறாவது அறிவு உள்ளவன். சிந்திக்க் கூடியவன். மனம் + இதன்= மனிதன் (Human ) மனத்தை இதமாக வைத்துக் கொள்பவன் மனிதன். அவன் மாண்புடையவன்,நற்குணங்களுடையவன். ஐந்தறிவு விலங்கில் இருந்து ஆறாவது அறிவு உள்ள மனிதனாக வந்துள்ளான். விலங்கினப் பண்பிலிருந்து விடுபட்டு  மனித இன பண்புடையவாக சிறந்து விளங்கக் கூடியவன். இத்தகைய மனிதன் நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல் இவற்றின் மூலம் நன்மையே செய்வது மனித இனப்பண்பு. அன்பும் கருணையுமாக இருத்தல். தெய்வீகப்பண்புகொண்டிருத்தல், இயற்கையோடு ஒத்து மகிழ்வாக இருத்தல் எனவே மனித வாழ்க்கை கீழ்வரும் மூன்று அம்சங்களோடு இணைந்துள்ளது. அதாவது  தான், சமூதாயம், இயற்கை. தான் என்பது  தனி மனிதனைக் குறிக்கின்றது. மனிதர்களின் தொகுப்பே சமூதாயம். தனி மனிதனைச் சுற்றி உயிரற்ற பொருடகளும் உயிரினங்களும் அமைந்துள்ளதே இயற்கை. இந்த இயற்கையோடு ஒத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்ற விடையத்தை சித்தர்களும்,யோகிகளும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.தத்துவம் என்ற சொல்லுக்கு (Philosophy) உண்மை என்பது பொருள் (Vision Of Truth) உண்மை என்பது என்றுமே உள்ளது எனப் பொருள்படும். தத்துவஞானம் என்பது உண்மையை அறிவது. உருவமில்லாத இறைவழியே  அனைத்துத் தோற்றத்திற்கும் காரணமாக இருக்கிற 

உண்மையை அறிவதே தத்துவஞானம். அதை அனைத்து ஞானியரும் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். புலன்களாலும் கருவிகளாலும் காணமுடியாத  அந்த இறைவெளியின் தன்மைகள் எவை? எப்படி அது எண்ணிலடங்கா தோற்றங்களாயிற்று? என்ற வினாக்களுக்கெல்லாம் விளக்கம் தர முடியாமல்  முன்னைய தத்துவங்கள் தேங்கி நின்றுவிட்டன. இறைவெளியோடு ஒன்றிநின்ற மகான்கள் கூட முற்காலத்தில், மறை பொருளாக  உள்ள அந்த இறைநிலையை  விளக்க முடியாது விட்டுவிட்டனர். இக் கருத்தையே        “கண்டவர் விண்டிலர் : விண்டவர் கண்டிலர்” என்ற சொற்றொடர் விளக்குகிறது.  அறிவின் துணை கொண்டு இறை நிலையைப்பற்றி  ஆராயப்புகுந்தோர் எல்லோரும், ஆராயப்படும் பொருளோடு ஒன்றிவிடும் போது  அதன் தன்மையை விளக்க முடியாது விட்டுவிட்டனர். சித்தர்கள் இதனை தங்களது சிந்தனைகளில் இறைநிலையின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு முறையான ஒழுங்கமைப்பில் உள்ளது. அதுவே இயக்க நியதி அல்லது இயக்க ஒழுங்கு என்றனர்.

         சித்தர்தத்துவம் என்பது அறிவு கொண்டு ஒப்புக்கொள்ள வேண்டிய உய்;த்துணரும் பார்வையோடு காண வேண்டிய விஞ்ஞான, மெய்ஞான பேரறிவுக் களஞ்சியமாகும். சித் என்றால் உயிராகும். உயிருக்கும், உடலுக்கும் உள்ள உறவை நன்கறிந்தவர்கள் சித்தர்களாவர். உயிரின் படர்க்கை நிலையான மனத்தையும், மனத்தின் தன்மைகளையும் நன்கு உணர்ந்தவர்கள் சித்தர்கள்;. வாழ்வின் நோக்கமாகிய இறை நிலையை அடைதற்கு மனத்தூய்மை, அதன் மூலம் வினைத்தூய்மை அவசியம் என்பதை வலியுறுத்துவர்கள் சித்தர்கள். அவர்கள் அக நோக்கர்கள். அறிவே தெய்வம் என்று தவத்தில் அக நோக்கால் உணர்ந்தவர்கள் சித்தர்கள். இந்த சித்தரகள் பின்னணியில் பதினெண் சித்தர்கள் வௌ;வேறு கருத்துக்களை மக்களுக்குப் பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளார்கள்.இந்தியாவில் இருந்து நான்கு சித்தர்கள் ஒரே காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவரே சித்தானைக்குட்டி சுவாமிகள், இந்தியாவில் இருந்து வந்த சித்தர் பரம்பரையில் கடையிற் சுவாமி, நவநாதச்சித்தர், பெரியானைக்குட்டி, சித்தானைக்குட்டி போன்றோர் இடம் பெறுகின்றனர். சித்தானைக்குட்டி சித்தரின் வரலாற்றை சுருக்கமாக நோக்குவோம். தென்னிந்தியாவில் இருந்த இராமநாதபுர சிற்றரசருக்கு ஒரே ஒரு மகன். அவரது பெயர் கோவிந்தசாமி என்பதாகும். அரச குடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்த கோவிந்தசாமிக்கு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னர் அரச போகங்களில் நாட்டம் ஏற்படவில்லை. உண்மை உணர்ந்த இவர் வேறு ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு விரும்பினார்.(மகான் புத்தரை போன்று)அவரது உள்ளம் துறவை நாடியது. உலக பற்று அனைத்தையும் துறந்தார். அதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்திலுள்ள காரைதீவு எனும் கிராமத்திலே வாழ்ந்து வந்தார். உண்மையில் இவரது உள்ளம் தெளிவடைந்துவிட்டது. நேரடியாகவே இறையியல் உணர்வு மிக்க இவர் இறைவனோடு தொடர்பு கொண்டார். இவர் உலக வாழ்க்கையையும் அதன் தன்மையையும் இயல்பையும் அறிந்தவர். பாச பந்தங்கள் என்பதைத் தெளிந்தவர். ஏனையோருக்கு விளங்காத விடயங்கள் 

இவருக்கு அதிகமாக தெரிந்திருந்தது. இவர் காரைதீவு வீதிகளில் எளிமையாக நாள்தோறும் உலா வந்தவர். 
ஒரு நிலையில் இவர் கோவணத்தோடும், சில வேளைகளில், கோவணமின்றியும், மது மோகத்திலும் புலால் உண்டும் வாழ்ந்தும் வந்த வராவார். அவரை சிலர் முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக, காரைதீவில் வாழ்ந்த மக்களே இவரைப்பற்றி அறியமுடியவில்லை. ஒரு பொருள் இருக்கும் போது அதன் பெறுமதி தெரியாது என்பார்கள். அதே போல் மக்கள் அவரை விளங்காது பல்வேறு வகையாக அவரை வரைவிலக்கணப்படுத்தினர் அல்லது அடையாளப்படுத்தினர்.
தம்முடைய ஞான வலிமையினால் அல்லது உள்ளுணர்வு சக்தியால் (ஐவெரவழைn Pழறநச) அவ்வூரிலே தமது சித்துக்கள் அனைத்தையும் வெளிப்படுத்தாது அயல் கிராமங்களிலும் சென்று பல சாதனைகளை செய்துள்ளார். அந்த வகையில் அக்கரைப்பற்று, பனங்காடு, கோளாவில், கன்னங்குடா, தீவுமுனை, கல்முனை, ஏறாவூர் போன்ற இடங்களிலும் அவர் சென்றுள்ளார். ஒரு முறை கல்முனையில் உள்ள ஒருவரின் வீட்டில் சுவாமி விபுலாநந்தருக்கும் இவருக்குமிடையே விவாதம் நடைபெற்றுள்ளது. அதில் “நான்” என்ற சொல்லினுடைய  அர்த்தத்தை இவர் சுட்டிக்காட்டி விளக்கியுள்ளார்.
சித்தர் எல்லாம் அறிந்தவர் என்பதால் தம்மைப் பிரணமாக சரணாகதி அடைந்தவர்களின் துன்பங்களை எல்லாம் தாமே ஏற்று அனுபவித்து வந்தார். எப்பொழுதும் பக்தர்களுடைய ஆன்ம வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். பூரணமாக தன் மீது நம்பிக்கை உடையவர்களுடைய தவறுகளை  பொறுத்துக் கொள்வார். இவரைப் பூசித்தவர்களுக்குப் புண்ணியமும், தூசித்தவர்களுக்குத் துன்பமும் எப்பொழுதும் ஏற்படும். அவரது போதனையை ஒரு சிலரே கேட்டு வந்தனர். அதே போல் ஒரு சிலரே அவரைப் பூசித்தனர்.
இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களிடம் விசாரித்த போது, அவரைப் பற்றி பல விடயங்கள் கூறுகின்றார்கள். இவரின் சித்துக்கள் பல என்றும், ஆனால் அவரை சிலர் தவறாக விளங்கிக் கொண்டனர் எனவும் சுட்டிக் காட்டினர். இவ்வகையில் இவரின் சித்துக்களைப்பற்றி நா.முத்தையா என்பவர் 1973 இல் முப்பெரும் சித்தர்கள் என்ற நூலில் மேல்வருமாறு   குறிப்பிடப்பிடுகின்றார். 
  • திமிர்வாதக்காரரை நிமிர்ந்து நடக்கச் செய்தமை.
  • கதிர்காமக் காட்டில் வழி தப்பியவர்களுக்கு வழிகாட்டியமை.
  • சமைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்குக் கறி ஒரு கிழமைக்கு சூடு ஆறாமல் இருக்கச் செய்தமை.
  • பைத்தியத்தை மாற்றிய பக்குவம்.
  • மன்னார்க் கடலில் அகப்பட்டவர்களை மீட்ட அதிசயம்
  • தீவுமுனை வெளியில் மழை பெய்வித்த அதிசயம்
  • கண்ணோயை உமிழ் நீரைக் கொப்பழித்து நீக்கியமை.
  • மண்டையில் தாமே வேப்பங்கட்டையால் அடித்து ஏற்படுத்திய காயத்தை, பின்பு வெறறிலைத் தாம்புலத்தால் சுகப்படுத்தியமை.
  • பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு அவரது அருளால் அந்த பாக்கியத்தை வழங்கியமை.
  • மண்னைக் கற்கண்டாக்கியமை.
இப்படி பல விடயங்களை முத்தையா அவர்கள் தனது நூலில் விளக்கியுள்ளார்கள்.
ஒரு நாள் சித்தானைக்குட்டி சுவாமிகள் கல்முனைச் சந்தியில் தெரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார். சில அடியார்கள் சித்தானைக்குட்டியைச் சூழ நின்றார்கள். சுவாமி முன்னிலையில் ஒரு அமைதி காணப்பட்டது. திடீரென உடுத்திருந்த வேட்டியை உரிந்து கசக்கத் தொடங்கினார். கூட நின்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். “என்னடா பார்த்துக் கொண்டு நிற்கின்றீர்கள் கதிர்காமத் திரை தீப்பிடித்து எரிகிறது. கசக்கி அணையுங்களடா” என்றார். இதை அணைப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமோ” என்று கூறினார். கூட நின்றவர்கள் நிலை குலைந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒருவராவது அணைக்க முன்வரவில்லை. பின்னர் சுவாமிகளே அதனைக் கசக்கி அணைத்தார்கள். சுவாமிகள் தகுந்த சந்தர்ப்பத்தில் வந்திருக்காவிட்டால், என்ன நிகழ்ந்திருக்குமோ என்று கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. என்று அந்த அன்பர் கூறினார். கல்முனைச் சந்தியில் சுவாமியை சந்தித்தவர்கள் சுவாமியின் மகிமையை ஓரளவு உணரத் தலைப்பட்டார்கள்
ஒரு நாள் மன்னார்க் கடலில் மீன்பிடிக்க நால்வர் சென்றிருந்தனர். அவர்கள் நால்வரும் நான்கு நாட்களாக கடலிலிருந்து திரும்பவில்லை. எவ்வித செய்தியும் கிடைக்காததால் வீட்டில் உள்ளவர்கள் துக்கம் கொண்டாடினர். வீட்டில் ஒரே அழுகை ஒலியாக இருந்தது. சுவாமிகள் மன்னாருக்குச் சென்றிருந்த சமயம் இந்த வீட்டில் அழுகை ஒலிக்கு காரணம் என்ன என்று வினவினார். அவர்கள் உள்ளதைக் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து சுவாமிகள் அந்த வீட்டிற்குச் சென்றார். ஒரு தென்னை மட்டையை எடுத்து முற்றத்தில் “ஏலேலோ ஏலைலோ” என்று கூறிய வண்ணம் தானே தண்டு வலித்துக் கீறினார். அரை மணித்தியாலமாக இது நிகழ்ந்தது. முற்றம் முழுவதும் புழுதிக் காடாக மாறி விட்டது. வீட்டில் உள்ளவர்கள் இது ஏதோ பைத்தியம் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் கடலில் காணாமல் போன நால்வரும் வந்தார்கள். அழுகை மகிழ்வொலியாக மாறியது. நால்வரும் சுவாமிகள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இந்தச் சுவாமிகள் இல்லா 
விட்டால் நாங்கள் கடலில் ஆழ்ந்திருப்போம் என்றனர். சுவாமிகள் தகுந்த சந்தர்ப்பத்தில் வந்து காப்பாற்றினார் என்று கூறியதோடு , இவர் எப்படி எங்களை விட்டு இங்கே வந்து சேர்ந்தார் என்று ஆச்சரியமும் தெரிவித்தனர். இப்படியே ஏனைய அவரது சித்துக்களும் அற்புதமானவை. மேற்கூறிய அனைத்துச் செயல்களும் தம்முடைய உள்ளுணர்வினைக் கொண்டு வெளிப்படுத்தியவையாகும். ஆனால், இது இலகுவான காரியமல்ல. இத்தகைய செயல்களை நிகழ்த்தியதை பார்த்தவர்கள் இருந்துள்ளனர். இன்று அவரை வழிபடுபவர்கள் இதனைப்பற்றி சரியாகக் கூறுகின்றனர். பல அற்புதங்களை நிகழ்த்தியமை மட்டுமன்றி பின்னர் தான் இறக்கப் போகும் நேரம், காலம் எல்லாவற்றையும் முன் கூட்டியே நண்பர்களிடம் கூறியவர். தாம் கூறியபடியே 10.08.1951 இல் சமாதி நிலை அடைந்தார்.
இவர் வாழந்த அதே ஊரில் தான் இராமகிருஷ்ணமிஷன் ஆச்சிரமமும், சுவாமி விபுலானந்தரின் பிறந்த வீடும் அமைந்துள்ளன. தற்பொழுதுங் கூட அக்கிராமத்தில் இம்மூன்றும் காணப்படுகின்றன. சிறப்பாக சித்தானைக்குட்டியின் சமாதியை ஒரு நினைவுச்சின்ன ஆலயமாகக் கொண்டு மக்ககள் வழிபட்டு வருகின்றனர். அவரது சமாதியை தரிசிப்பதற்கு அவ்வூரில் மட்டுமன்றி ஏனைய பல ஊர்களிலிருந்தும் ஒவ்வொரு பூரணைக்கும், குருபூசைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அச்சமாதியை தரிசித்து பயன்பெறுவது நமக்கெல்லாம் கிடைத்த பெரும் பாக்கியமாகும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் உள மகிழ்வுடன் நோயற்று வாழ்வதற்கு தற்போது சித்தர்கள் உபதேசமும், வழிபாட்டு நம்பிக்கையும் மக்கள் மத்தியல் அதிகரிப்பது ஆத்மீக உணர்வுக்கும் வாழ்வுக்கும் வலுச் சேர்ப்பதை நேரடியாக அவதானிக்கலாம்.
“ வாழ்க வள​முடன்
வாழ்க சித்தர்கள் இலக்கியம்”

நன்றி
கலாநிதி. க.கணேசராஜா,முதுநிலை விரிவுரையாளர் ,தென்கிழக்குப் பல்கலைக்கழகம்


Comments