[Untitled]‎ > ‎

03.08.15- சித்தானைக்குட்டி சுவாமிகளும் சமூகச் செந்நெறிச் சிந்தனைகளும்.

posted Aug 2, 2015, 7:06 PM by Unknown user
    
சித்தர் புத்தியைக் கட்டுப்படுத்தியவர். சித்தம் என்பது புத்தி மனம். சித்து புத்தியால் ஆகிய காரியம் சித்தர்கள் யோகத்தின் மூலமும் தியானத்தின் மூலமும் புத்தியை கட்டுப்படுத்துவார்கள். சித்தர்களை ஆன்மீக புரட்சியாளர்கள் என்று சொல்வதும் உண்டு.

இத்தகைய சித்தர்கள் பொதுவாக தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் வாழ்ந்துள்ளனர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்து பல சித்துகளை வெளிப்படுத்தி மகா சமாதியுற்ற ஞான சித்தர்கள் ஜவர் இவர்கள் 1920 ஆம் ஆண்டு முற்பகுதியில் இலங்கையை வந்தடைந்நதாக  கூறப்படுகின்றது இவர்களில் ஒருவரே சித்தானைக்குட்டி சுவாமிகள் காரைதீவிலே 1951 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 21ஆம் நாள் சுவாதி நட்சத்திர தினத்தன்று சமாதி எய்தினார். இத்தகைய ஈழத்துச் சித்தர்களுள் ஒருவரான சித்தானைக்குட்டி சுவாமிகள் சமூகச் செந்நெறிக்காக எவ்வாறான சிந்தனைகளை முன்வைத்துள்ளார் என்பதை நோக்குவது அவசியமாகும்.

மனிதர்கள் பணம் உழைக்கும் இயந்திரங்களாக மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையில் அகவாழ்வின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் எவரும் இல்லை. மனிதர்கள் தங்கள் உடலியல் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகளை பிற தேவைகளின் நிர்ப்பந்தங்களால் பிணைத்து சமாதானப்பட்டுக் கொள்ளும் சூழ்நிலையில் தான் நாம் வாழந்து வருகிறோம்.

புறத்தேவைகள் நிலையில்லாதவை அவை புறந்தள்ளப்பட வேண்டியவை. அகத்தேவைகளை முன்னிறுத்தி முழுமையடையச் செய்வதன் மூலம் ஒரு மனிதன் தன் நிலையை உணர்ந்து பூரணமடைவான் என்பதனை சித்தானைக்குட்டி சுவாமிகளின் வாழ்வும் வாக்கும் புலப்படுத்தி நிற்கின்றன. சித்தானைக்குட்டி சுவாமிகள் நிலையாமையை உணர்ந்தவராய் சமூக நோக்கு கொண்டவராய் சமூகத்தில் வாழ்ந்தவர் இவர் சமூக செந்நெறிக்கான பல படிப்பபினைகளை தனது வாழ்க்கைச் சம்பவங்கள், உபதேசங்கள் அற்புதங்கள் வாயிலாக சமூகத்திற்கு விளக்கியுள்ளார்.

இந்து மதத்தில் நிலையாமை என்பது ஒரு முக்கியமான எண்ணக்கருவாகும். இதனை சித்தானைக்குட்டி சுவாமியும் ஏனைய பல சித்தர்களும் பல்வேறு கருத்துக்கள் சம்பாஷனைகள் வாயிலாக முன்வைத்தார்கள். குணங்குடிச் சித்தர், திருவள்ளுவர், திருமூலர், அழுக்கணிச்சித்தர், கடுவெளிச்சித்தர் ஆகியோர் பல பாடல்கள் வாயிலாக தெளிவாக கூறியுள்ளனர்.

“நீரின் மேல் குமிழி போல் உடம்பு இது நில்லாது
போய்விடும் இது நீயறியா மாயம்”
என்று உடலின் நிலையாமை பற்றி பாடியுள்ளார்.

இதனைப் போல சித்தானைக்குட்டி சுவாமிகளின் வாழ்க்கைச் சம்பவங்கள் வாயிலாக உடல் நிலையாமைச் சிந்தனையை விளக்கியுள்ளதைக் காணலாம். இதனை இவருடைய உடல் தோற்றமும் தெளிவுபடுத்துகின்றன. சுவாமிகள் ஈழத்தின் பல இடங்களுக்கும் கால்நடையாகவே சென்றார். சுவாமிகளுடைய பாதம் படாத இடமே கிடையாது. இவர் உணவிற்கு பெரிதும் முக்கியத்தவம் கொடுக்கவில்லை தனக்கு கிடைத்தவற்றை பிறருக்கு கொடுத்து மகிழ்ந்தார். இதற்கு ஒரு சம்பவம் சிறந்த ஒரு எடுத்துக் காட்டாகும்.

எதிர்மான சிங்கம் உபாத்தியாயர் சுவாமிகள் மீது அதீத பக்தி உடையவர் இவர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அமுது படைக்க வேண்டும் என்றும் ஆசை கொண்டார். இதனால் சந்தையில் ஒரு கோழியும் சுவுhமிகளுக்கான சப்பாத்து, மேசு என்பவற்றை வாங்கிக் கொண்டு சுவுhமிகள் ஆச்சிரமத்தை அடைந்தார். சுவாமிகள் உபாத்தியாயரைப் பார்த்து “என்ன பூசகர் ஆகி விட்டீர்களா” என்று கேலியாக கேட்டார். இருவரும் சேர்ந்து சமையல் செய்தனர் சமையல் வேலை நிறைவுறும் தருவாயில் சுவாமிகள் இதனை உண்பதற்கு இன்னும் சிலர் வருவார்கள் எனக் கூறினார். 

சிறிது நேரம் கழித்து கல்முனையில் இருந்து ஒரு சில அன்பர்கள் சுவாமிகள் ஆச்சிரமத்தை வந்தடைந்தனர். உபாத்தியாயரிடம் உணவினை அனைவருக்கும் பகிர்ந்தளிக்குமாறு சுவாமிகள் கூறினார். உணவு அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வாறு தனக்கென உபாத்தியாயர் சமைத்த உணவினை தானும் உண்டு வந்தவர் அனைவருக்கும் பகிர்ந்தளித்ததன் மூலம் இதனை அறியலாம். இதன் மூலம் அனைவருக்கும் கொடுத்து உதவ வேண்டும் அனைவரையும் பசியாற்ற வேண்டும் என்ற சமூகச் செந்நெறி அறவியல் சிந்தனையும் இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதற்கு மற்றுமொரு சம்பவம் எடுத்துக்காட்டாகும். ஒரு நாள் மதிய நேரம் இவர் காரைதீவில் அமைந்துள்ள தனது ஆச்சிரமத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இவரைக் காண்பதற்கு அடியார்கள் பலரும் வருகைதந்திருந்தனர். சுவாமிக்கு சல்லித்தீவுப் பகுதியைச் சேர்ந்த (தற்போதைய காரைதீவு – 01ஆம் பிரிவைச் சேர்ந்த) சாமித்தம்பி செல்லம்மா அவர்கள் உணவு கொண்டு  கொடுத்தார். அவர் உணவை வாங்கி பிசைந்து ஒரு வாய் உண்டுவிட்டு ஏனையவற்றை வந்தவர்களுக்கு வழங்குமாறு சைகை மூலம் கூறியதாக கூறப்படுகிறது. 

இதன்மூலம் ஏனையவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்ற உயரிய பண்புடன் வாழ்ந்தார் என்பதை இது விளக்குகிறது. அவர் சைகை மூலம் கையை அசைத்து ஏனையவர்களுக்கு உணவினை உண்ணக் கொடுக்குமாறு கூறியதற்கு காரணம் தான் சமாதி அடைவதற்கு சிறிது முன்பிருந்தே அவர் பேசாமல் ஊமை போல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தான் சைகை செய்யாமல் விட்டால் மிஞ்சிய உணவினை வீசி விடுவார்கள் என்பதனால் சைகை செய்தார். இதன் மூலம் புலப்படுவதாவது தனது இறுதிக் காலத்தில் கூட ஏனையவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமும் உணவினை வீண்விரயம் செய்யக் கூடாது என்ற எண்ணமும் அவரது மனதில் கூடி கொண்டிருந்ததேயாகும். அத்தோடு 

“உண்ணும் முன்பு ஒரு கணம் இறைவனை நினை”

என்பதினுடாக இறைவனை வழிபட்ட பின்னே உணவினை உட்கொள்ள வேண்டும் என்ற சிறப்பான உணவு பழக்க வழக்கத்தை தனது உபதேசத்தின் வாயிலாக சமூகத்துக்கு கூறியிருந்தார். 

இதனை இவருடைய உபதேசத்தின் வாயிலாகவும் விளக்கியுள்ளார். “பசித்து வந்தோர் முகம் பார்” என்பதினூடாக இதனை அறியலாம். இவை தொடர்பாக உபதேசங்களும் கூறி நிற்கின்றன. தைத்திரிய உபநிடதத்தில் இதனை ஒத்த கருத்துக்களைக் காணலாம். அதீதீ தேவோ பவ வந்த விருந்தினரை தெய்வமாகக் கருது போன்ற கருத்தக்களோடு ஒத்தச் செல்வதைக் காணலாம். 

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள பிரமச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் போன்ற நிலைகளிலே பிரமச்சரியத்தை கடைப்பிடித்ததற்கான சான்றுகள் இல்லை. எனினும் ஓரளவு தனது வாழ்க்கையிலே பின்பற்றி இருந்தார்.; தான் குருவாக ஏற்றவருக்கு பணிவிடை செய்தால் குருவின் சொற்படி நடந்தால் குரு செய்த செயல் தனக்குத் துன்பத்தை தந்தபோதிலும் அதனை இன்பமாய் ஏற்றார். சந்நியாசத்தை அவர் வலுவாக கடைப்பிடித்திருந்தார் இதனை மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என சித்தானைக்குட்டி சுவாமி அவர்கள் சந்நியாசியின் இயல்புகளை தனது உபதேசத்தில் உள்ளடக்கியிருப்பது அவர் சிறப்பை மேலும் மேருகூட்டுகின்றது.

சந்நியாசிகள் ஒரு இடத்தில் மூன்றுநேர உணவிற்கு மேல் தங்கக் கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறையே உணவு உண்பார்கள் மதியத்திற்கு முன் பிச்சை எடுத்து உண்பார்கள் மதியம் தவறினால் அன்று பட்டினியாக  கிடப்பார்கள் வேண்டிய உணவு ஒரு வீட்டில் கிடைத்து விட்டால் மறு வீட்டில் ஜாசகத்திற்காக செல்லமாட்டார்கள். ஒரு நேர சாப்பாட்டிற்கு ஏழு வீடுகளுக்கு மேல் யாசியார் ஏழு வீடுகளிலும் யாசகம் மறுக்கப்பட்டால் அன்று முழுவதும் பட்டினி கிடக்க வேண்டும் யாசகம் கேட்கும் போது பிச்சை பாத்திரத்தை முன் ஏந்தியவாறு பத்துமாத கற்ப்பினி தண்ணீர் குடத்தை தாங்கி நடப்பது போல நடந்து சென்று வீட்டின் முன்னால் தலை நிலத்தையோ பெருவிரலையோ பார்த்த வண்ணம் இறைவன் புகழ் பாடிய வண்ணம் நிற்க வேண்டும். ஓரு பாக்கு கடித்து உமிழக்கூடிய நேரம் தாமதித்து நிற்க வேண்டும். அதற்கு மேல் தாமதிக்க கூடாது யாசகத்திற்காக பாத்திரத்தில் என்ன போடுகிறார்கள் என்பதை பார்க்க கூடாது. யாசகம் போட்டதும் ஏதாவது உபதேசம் செய்துவிட்டு அவ்விடம் விட்டு அகல வேண்டும் என்று ஒரு சந்நியாசியானவர் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் சமூகத்தை சந்நியாசத்தின் பால் நெறிப்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம்;.

இந்து சமயத்தில் கூறப்படுகின்ற கொடை,தானம் பற்றி மக்களுக்கு விளக்கியவராக விளங்குகிறார் இதனை பற்றியும் இதன் சிறப்பு பற்றியும் இந்து சமய மூல நூல்களும்,அற நூல்களும் எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கின்றன
கொடை வழங்காமையினால் எற்ப்படக்கூடிய தீமை பற்றியும் இந்து சமய மூல நூல்களும்,அற நூல்களும், கூறுகின்றன எடுத்துக்காட்டாக
“நச்சப்படாதவன் செல்வம் நடுவூரில்
நச்சுமரம் பழுத் தற்று”

பிறருக்கு கொடுத்து உதவாமல் பெட்டியிலே பூட்டி வைக்கும் செல்வமானது மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு இடத்திலே நச்சுமரம் காய்த்து பழுத்து தொங்குவதற்கு ஒப்பானது. என்பதனைக் கூறப்படுகின்றது.  இதனை சித்தானைக்குட்டி சுவாமியின் வாழ்க்கை சம்பவங்கள் வாயிலாக மக்களுக்கு விளக்கியுள்ளார். இதனைப் போலவே   கொடையின் சிறப்பினைப் பற்றியும் பிறருக்கு கொடுத்து உதவவேண்டும் என்பது பற்றியும் சித்தானைக்குட்டி சுவாமிகள் தனது உபதேசத்தின் மூலம் கூறியுள்ளார்.

இதனை “உன்னிடத்தில் உள்ளதை இல்லையென்னாமல் மற்றவர்களுக்கு கொடு!” என்பதினூடாக அறியலாம்.

பொருள் ஈட்டுவதனால் ஒரு பயனும் இல்லை பொருளால் விழை பயன் எதுவுமில்லை. ஒருவர் தான் செய்கின்ற உதவிக்கு நன்றிக் கடன் செலுத்தவேண்டும் பொருளின் மீது ஆசையில்லாமல் இருப்பதே நற்காரியம் என்பதை சித்தானைக்குட்டி சுவாமிகளின் செயல்கள் எடுத்துக் கூறுகின்றன. கந்தப்பர் பரியாரியார் நந்தனார் வகுப்பைச் சேர்ந்தவர் அவர் கோளாவிலைச் சேர்ந்தவர் சுவாமிகள் கோளாவிலுக்குச் சென்றால் கந்தப்பன் வீட்டில் தான் தங்குவார் பெரிய பெரிய சாதிமான்கள் எல்லோரும் சுவாமிகளை சந்திக்க வருவார்கள். வருகின்றவர்கள் எல்லோருக்கும் கந்தப்பன் வீட்டில் பலமான உபசரிப்பு நடக்கும். 

ஒருமுறை காலி கொழும்பு முதலிய இடங்களில் இருந்து செட்டிமார்கள் சுவாமியை சந்திக்க வந்தனர். வரும்போது கையுறையாக பழ வர்க்கங்கள் கற்பூரங்கள் சாம்புராணி முதலிய பொருட்களோடு பாத காணிக்கையும் சுவாமிகளுக்கு வைத்து வணங்கிவிட்டு சென்றனர். வந்தவர்கள் எல்லோரையும் கந்தப்பன் அன்போடு கவனித்தார். செட்டிமார் கொண்டு வந்த பணம் பழம் ஏனைய பொருட்கள் எல்லாவற்றையுமே சுவாமிகள் கந்தப்பனிடம் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி காரைதீவு சென்று விட்டார். கந்தப்பன் மாதக்கணக்காய் சுவாமியையும், அன்பர்களையும் உபசரித்ததற்கு கூலியை சுவாமிகள் எவ்வளவு நாசுக்காக செலுத்திவிட்டுச் சென்றார் என நினைக்கும் போது உடல் புல்லரிக்கின்றது. இதன் மூலம் சமூகத்திற்கு பொருள் நிலையாமையையும் ஒருவர் செய்கின்ற உதவிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற நற்பண்பையும் சமூகத்திற்கு விளக்க முற்பட்டுள்ளார் என்பதனை தெளிவாக விளங்கி கொள்ள கூடியதாக உள்ளது.

பாவங்கள் புரிந்தவர்கள் அதற்குரிய தண்டணையை அனுபவிப்பார்கள் கொடுமை செய்தவர்கள் உடன் தண்டணைக்குள்ளாக்கப்படுவர் என்ற அறவியல் சிந்தனையை சித்தானைக்குட்டி சுவாமியின் வாழக்கைச் சம்பவங்கள் சிலவற்றின் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். பாவங்கள் புரிபவர்கள் பல பிறவிகள் கடந்தாலும் அதற்குரிய தண்டணைகள் கிடைக்கும் என்பதனை இந்து சமய மூல நூல்கள் பல வற்புறுத்தி நிற்கின்றன. 

ஒருவன் செய்கி;ன்ற கன்மம், வினைகளுக்கு ஏற்ப அவனுக்குரிய பிறப்புக்கள் கிடைக்கும் என்பது உபநிடதம் போன்ற பல நூல்களில் விரவிக் காணப்படும் கருத்தாகும். ஆனால் சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு தீங்கு நினைத்தவர்களது குடும்பமே மண்ணோடு மண்ணாய் போனதை நூல் மூலம் அறியக் கூடியதாய் உள்ளது. சுவாமிகள் காiதீவில் பல அற்புதங்களைப் புரிந்து வந்தாலும் அவருடைய அற்புதக் கீர்த்தியை உணராதவர்கள் பலர் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் காரைதீவு நந்தவன பிள்ளையார் கோயில் வண்ணக்கர் சிற்றம்பலம் அவர்கள் இவர் சித்தானைக்குட்டி சுவாமிகள் மீது கொண்ட வெறுப்பால் அவரை ஒழித்து விட வேண்டும் என எண்ணம் கொண்டார். 

சுவாமிகளுக்கு நஞ்சூட்டப்பட்ட சாராயத்தை கொடுத்தார். இறந்தவர்கள் போல மயக்கத்தில் கிடந்த சுவாமிகளை வயலுக்குள் தூக்கிச் சென்று வைக்கோல் கும்பத்துக்குள் போட்டு நெருப்பை வைத்தார். சுவாமிகள் தனது சித்தின் காரணமாக இறக்கவில்லை ஆனால் சிற்றம்பல வண்ணக்கர் சுவாமிகளுக்கு செய்த வினையின் பயனை அப்பிறவியிலே அனுபவித்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். குறிப்பிட்ட சிற்றம்பலத்தாருக்கு ஒரே ஒரு மகன் ஐஸ்வர்யம் படைத்தவன் கடைசிக் காலத்தில் மனைவியை இழந்து பொருள் எல்லாம் இழந்து ஐயம் ஏற்கும் நிலையடைந்து துன்பத்தில் அழிந்து இறந்தார். மகனும் பிற்காலத்தில் இரு கண்ணும் இழந்து இறந்தார். வைக்கோல் சாம்பலானது போலவே குடும்பமும் நாசமாய் போனது. மகான்களுக்கு மனதால் தீங்கு நினைத்தால் கூட அவர்கள் வாழ மாட்டார்கள் என்பதற்கு சிற்றம்பலத்தார்க்கு நிகழ்ந்த சம்பவங்களே எடுது;துக் காட்டாகும்.

தாய் தந்தையர்கள் செய்கின்ற பாவங்களுக்கான தண்டணையை பிள்ளைகள் அனுபவிப்பார்கள் என்ற கருத்து இந்து சமூகத்திலேயே காணப்படுகிறது. இது இவர் விடயத்தில் உண்மையாகிப் போனதைக் காணலாம். சிற்றம்பலத்தார் செய்த தீமை அவரது ஒரே ஒரு மகனது வாழ்க்கையும் சீரழித்தது. இவற்றின் மூலம் பாவங்கள் செய்தவர்களுக்கு எவ்வகையிலாவது தண்டணை கிடைக்கும் என்பதை சித்தானைக்குட்டி சுவாமியுடன் தொடர்புடைய இச்சம்பவம் எடுது;துக் காட்டுகிறது. பாவங்கள் செய்யாமல் ஏனையோருக்கு நன்மைகள் செய்யவேண்டும் அது எமக்கும் எமது சந்ததியினருக்கும் நன்மையளிக்கக் கூடியதாக அமையும் என்ற கருத்தும் மறைமுகமாக இதன்மூலம் புலப்படுவதைக் காணலாம்.

சித்தானைக்குட்டி சுவாமியின் உபதேசங்கள் வாயிலாக வெளிப்படும் சமூகச் செந்நெறிக்கான சிந்தனைகள் அதிகாலையில் நித்திரை விட்டு எழல் வேண்டும் எழும்போதே இறைவனை நினைத்துக் கொண்டு எழவேண்டும் காலை மாலை கடன்களை குறைவர செய்யவேண்டும். போன்ற ஒரு மனிதனின் ஆற்றவேண்டிய தனிமனித கடமைகள் தொடர்பாக இவருடைய உபதேசங்கள் மேற்கூறப்பட்ட கருத்துக்களைக் கூறி நிற்கின்றன. இதனை

“அதிகாலையில் நித்திரை விட்டெழு
எழும்போதே ஆண்டவனை நினை
காலை மாலை கடன்களை குறைவறச்செய்”
போன்ற வரிகள் மூலம் இதனை அறியலாம்

ஒருவர் தனது அன்றாட கடமைகளை சரிவர செய்தும், கோபத்தை விடுத்து ஏனையவர்களுடன் அன்பாக பழகினால் இறைவன் அருள் அவருக்கு தானே கிடைக்கும் என்பதை தனது உபதேசங்கள் வாயிலாக அறியலாம். இதனை

“படுக்க முன்பு இறைவனைப் பிராத்தி
கோபத்தை விடு இறைவன் அருள் தானே வரும்”
போன்ற வரிகள் மூலம் இதனை அறியலாம்

இவை மூலம் சித்தானைக்குட்டி சுவாமிகள் பல்வேறு சிந்தனைகளை முன்வைக்கிறார் இவை தொடர்பாக விரிவான விளக்கங்களை இந்துசமய மூல நூல்கள் வாயிலாகவும் எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

இந்து சமய மூல நூல்கள் என்ற வகையில் சிறப்பிக்கப்படும் இலக்கிங்களில் ஒன்றான ஆகமங்களில் இவை தொடர்பான கருத்துக்களை காணலாம். சமூதாயத்தின் ஒரு உறுப்பினன் என்ற வகையில் ஒரு தனிமனிதன் தனது அன்றாட கடமைகளை முறையாக நிறைவேற்றி துய்மையுடனும் ஒழுக்க கட்டுப்பாட்டுடனும் எவ்வாறு வாழவேண்டும் என்பது பற்றி ஆகமங்கள் விவரமாக பேசுகின்றன. ஒரு தனிப்பட்ட மனிதனுக்கும் ஒரு சமூக மேம்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனால் ஒரு தனி மனிதனுக்குரிய அன்றாடக் கடமைகள் பற்றியும் ஆகமங்கள் ஆராய்கி;ன்றன. தனிமனிதனின் நோக்கம் புற உலகில் சென்று அலைந்து திரியாமல் அகமுகமாகத் திரும்பி  இறைவனிடம் ஒன்றும் வண்ணம் ஆகமங்கள் தனிமனிதனுக்குரிய அன்றாடக் கடமைகளை வரையறுக்கின்றன.
சூரியன் உதயமாவதற்கு ஐந்து நாழிகைக்கு முன் (விடியற்காலை 4 மணியளவில்) ஒருவன் துயில் நீங்கி எழுந்திருத்தல் வேண்டும் இயன்றளவு தனது உடலைத் தூய்மை செய்து கொண்டு இறைவனைத் தியானிக்க வேண்டும் என ஆகமங்கள் கூறுகின்றன. இதனையே சித்தானைக்குட்டி சுவாமியின் உபதேசத்திலும் காணலம்.

“அதிகாலையில் நித்திரை விட்டுஎழு !
எழும் போதே ஆண்டவணை நினை”
என்ற உபதேசத்தின் வாயிலாக அறியலாம்..

காலை மாலை கடன்களை குறைவரச் செய் என்ற உபதேசத்தினையும் சித்தானைக்குட்டி சுவாமிகள் முன்வைத்துள்ளார். ஒரு தனிமனிதன் தான் செய்ய வேண்டிய காலை, மாலை கடமைகளை சரியான முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் இதன்மூலம் அவனுக்கு பல நன்மைகள் கிடைக்கும் எனவும் விளக்கப்படுகிறது. இக்கருத்தினை ஆகமங்கள் பல விதமாக வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம் எடுத்துக் காட்டாக காலையில் ஒருவன் எழுந்தவுடன் ஏயைவர்களைத் தொந்தரவு செய்யாமல் மௌனமாக வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் காலைக் கடன்களை கழிப்பதற்குரிய தகுந்த இடத்தை அணுக வேண்டும் எனக் கூறுகிறது. இக் கருத்துக்கள் காடுகளிலும் மலை குகைகளிலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற சித்தர்களின் வாழ்க்கை முறையோடு பெரிதும் ஒத்துப் போகும் தன்மை உடையதாக அமைவதைக் காணலாம். 

திருநீற்றின் மகிமை தொடர்பாக சமூகத்திற்கு பல கருத்துக்களை தனது உபதேசத்தின் வாயிலாக முன்வைத்துள்ளார் சித்தானைக்குட்டி சுவாமிகள். ஒரு இந்துவானவர் பொதுவாக திருநீறு அணிய வேண்டும் என்பது நியதியாகும். இதனை சித்தானைக்குட்டி சுவாமி உபதேசத்திலும் காணலாம். “நெற்றிக் கழகு விபூதி பூசுதல்” என்பது அவர் உபதேசத்தில் வரும் செய்தி இதனையே சமய குரவர்களும் தங்கள் பாடல்கள் வாயிலாக விளக்கியுள்ளனர். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார். திருநீற்றுப் பதிகம் 11ஆவது பாடலில் திருநீற்றின் சிறப்பை கூறியுள்ளார்.

“நீறில்லா நெற்றி பாழ்” 
என்பதினூடாகவும்
“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
...................................................................
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயாந் திருநீறே”
என்பதினூடாக அறியலாம்.

சித்தானைக்குட்டி சுவாமிகள் நாயன்மார்களை ஒத்த இயல்புடையவராய் திருநீற்றின் மகிமையை தனது உபதேசத்தில் உள்ளடக்கி உள்ளமை சிறப்பாக எடுத்துக்காட்டத்தக்கது இவர் நாயன்மார்கள் கருத்துக்களை உள்வாங்கி சமூகத்தை மீண்டும் மறுமலர்ச்சி அடைய வைக்கும் பணியில்  ஈடுபட முனைந்துள்ளார் என்பதனை இதன் மூலம் அறியக் கூடியதாய் உள்ளது. பல்லவர் காலத்திற்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்திற்கும் இடையில் ஏற்பட்ட சமூக இடைவிலகலை சரிசெய்ய முனைந்துள்ளார் என்பதும் இதன் மூலம் புலனாகும் செய்தியாகும். 

விரதம், தியானம் பற்றிப் பேசியுள்ளார். மனம் பொறி போகாது நிற்றல் பொருட்டு உணவைச் சுருக்கியேனும் விடுத்தேனும் இறை சிந்தனையுடன் மேற்கொள்வது விரதமாகும். இது பொதுவாக தற்போது எல்லா மதத்தவர்களும் தங்கள் தங்கள் கடவுளர்களை நினைத்தும் நற்காரியங்களை வேண்டியும் நடைபெறுகி;ன்றன. மனதினை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இறைசிந்தனையுள் ஆட்படுத்துவதற்கும் விரதங்கள் உதவுகின்றன. சித்தானைக்குட்டி சுவாமியின் உபதேசத்திலும் இதனைக் காணலாம். “எங்கும் அலைபாயாதே” என்பதன் மூலம் விரத அனுட்டானம் பற்றிக் கூற விழைந்துள்ளதைக் காணலாம். விரத அனுட்டான முறையில் கூறப்படுகின்ற விரதமாவது மனம் பொறி வழி போகாது நிற்றல் என்ற கருத்துடன் சித்தானைக்குட்டி சுவாமியின் உபதேசம் ஒன்றிப் போவதைக் காணலாம்.

மனதினை ஒருநிலைப் படுத்தி விரதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தினை இவர் இதன் மூலம் சமூகத்திற்கு புலப்படுத்தியுள்ளதைக் காணலாம். ஆகம கிரியை முறையிலே விரதங்களின் முக்கியத்துவம் பற்றிய கருத்தாடல்கள் காணப்படுகின்றன. விரதங்களில் பல வகையுண்டு அவை காலம் இடம், வாழ்க்கை, கடமை, சிறப்பு நோக்கம் என்ற அடிப்படையில் விரதங்களை வகைப்படுத்தலாம் இவை வாரம் ஒரு முறை சுக்கிரவார விரதமும் இருவாரம் ஒரு முறை சோமவார விரதமும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சதுர்த்தி, பூரணை விரதமும், இரு மாதத்திற்கு ஒரு முறை, பல மாதங்களுக்கு ஒரு முறை, ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நவராத்திரி விரதமும் ஆவணி சதுர்த்தி திருக்கார்த்திகை விரதமும் அனுட்டிக்கப்படும் என ஆகமங்களில் விரதம் பற்றிக் கூறப்படும் செய்தியாகும். இதனை ஒத்ததாக சித்தானைக்குட்டி சுவாமிகள் விரதம் பற்றிக் கூறியுள்ளமை சிறப்பாக எடுத்துக் காட்டத்தக்கது. 

தியானம் தொடர்பாகவும் கருத்துரைத்துள்ளார் சித்தானைக்குட்டி சுவாமிகள். இந்து இலக்கியங்கள் தியானம் தொடர்பாக பின்வருமாறு கூறுகிறது. தியானம் என்து மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சியாகும். இது இந்தியாவிலே தோன்றிய யோகக் கலையை ஒத்த பயிற்சியாகும். பெரும்பாலும் கடவுளை நினைத்தே தியானம் செய்கின்றனர். இக்கலையை அக்காலத்தில் முனிவர்களும் யோகிகளும் சித்தர்களும் ரிஷிகளும் அமைதியான இடங்களிலும் ஆச்சிரமங்களிலும் மேற்கொண்டனர். மின உன்னத மனிதவளக் கலையில் தியானமும் ஒன்றாகும். 

வேத காலத்திலும் தியானம் தொடர்பான கருத்துக்களை காணலாம். தியானம் உலகியல் நன்மைக்காகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் செய்யப்பட்டது என்ற கருத்தும் காணப்படுகிறது. தியானத்தின் அங்கமாக வேதகாலத்தின் சூரியன் , அக்கினி, வாயு, நீர், ஆகாயம், பூமி, இயற்கை எனும் பிரகிருதி, இரணிய கர்ப்பன் போன்ற இயற்கைப் பொருட்களை தியானத்தில் ஆழம்பனமாகக் கொண்டனர் என்ற கருத்தும் கூறப்படுகிறது.
         
இத்தகைய தியானம் பற்றிய செய்திகளை சாந்தோக்கிய உபநிடதத்திலும் பிருகதாரணிய  உபநிடதத்திலும் மற்றும் பல உபநிடதங்களிலும் வித்தை என்றும் உபாஷனை என்றும் பலவகையாக விளக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 

இத்தகைய தியானம் பற்றி சித்தானைக்குட்டி சுவாமிகளது உபதேசமும் வற்புறுத்தி நிற்கின்றன. இதனை “ இருந்தபடியே இரு” என்பதினூடாக அறியலாம். பொதுவாக சித்தர்கள் அமைதியை விரும்புவார்கள் என்ற போக்கும் காணப்படுகின்றது. இதனை போலவே சித்தானைக்குட்டி சுவாமிகளும் தியானத்தை தனது ஆச்சிரமத்தில் மேற்க்கொண்டிருந்தார்,மக்களையும் அதில் ஈடுபடுத்தியிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டே சித்தானைக்குட்டி சுவாமிகளும் இக் கருத்தினை முன்வைத்துள்ளார்.

பொதுவாக தியானம், விரதங்கள் மக்களின் மனவலிமையை அதிகரிக்கவும் நம்பிக்கையை அதிகரிக்கவும் அவர்கள் வாழ்வில் வளமும் நலமும் மிகுவதற்கும், குடும்ப நலன், உடல் நலன் விசுவாசம் தன்நம்பிக்கை, துணிவு, பணிவு, பக்தி, என்னும் பண்புகளை அதிகரித்து வாழ்வில் ஒழுக்கம் நியமம், நேர்மை, தூய்மை என்பவற்றை அதிகரிக்கின்றன. தியானங்கள் விரதங்கள் ஒவ்வொரு கோணத்தில் நின்று உடல் நலத்தையும் ஆயுள் விரத்தியையும் நல்குகின்றன.

புலால் மறுத்தல் தொடர்பான கருத்துக்களைக் கூறியுள்ளார். சித்தானைக்குட்டி சுவாமிகள் இந்து சமயத்தில் கூறப்பட்ட பல உன்னத விடயங்களை எளிமையான முறையில் விளக்கியவர். இந்து சமயத்தில் கூறப்படும் கொல்லாமை, கல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, பிறர்மனை நயவாமை போன்ற பஞ்சமா பாதகங்களுள் புலால் மறுத்தல் பற்றி பேசியுள்ளார். இதனை இவரது உபதேச மொழியில் காணலாம்.

“மரக்கறி உணவு மனதிற்கு மகிழ்ச்சி” என்பதினூடாக இதில் வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் இந்து சமயத்தில் முக்கியத்துவப்படுத்தப்படும் மரக்கறி உணவின் மேன்மையினை பாமரர் சமூக மக்களுக்கு விளக்கியுள்ளார். மரக்கறி உணவானது மனதிற்கு சாந்தத்தையும் அமைதியையும் அழிக்கவல்லது. மாமிச உணவு அதற்கு மாறான தன்மை உடையது. மனிதனை வக்கிர குணமுடையவனாகவும் மாற்ற வல்லது என்பதை மறைமுகமாகவும் தெளிவாகவும் மக்களுக்கு தனது உபதேசம் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.

அதீத செயல்கள் ஊடாக சுவாமிகள் சமூகத்திற்கு கூறும் சிந்தனைகள்.
இவருடைய அதீத செயல்கள் தொடர்பான விரிவான கருத்துக்களை பல நூல்களிலும் காண்கின்றோம்.  இவர் நிகழ்த்திய அதீத செயல்கள் ஊடாக எவ்வாறான சமூக சிந்தனைகளை முன்வைத்துள்ளார் என்பதனை நோக்கலாம்.
இந்து சமயத்தில் கூறப்படும் சிவ சின்னங்களில் ஒன்றான விபூதியின் முக்கியத்துவத்தை பல அதீத செயல்கள் ஊடாக வலியுறுத்தியுள்ளார். இதனை ஆறுமுகத்தின் மனைவியார் நோய் நீக்கியமை, பைத்தியத்தை குணப்படுத்தியமை, பனங்காட்டு விதானையாருக்கு ஏற்பட்ட நோயை விபூதியை கொண்டு நீக்கியமை போன்ற அதீத செயல்கள் மூலம் அறியலாம்.

மரக்கறி உணவின் முக்கியத்துவத்தை சுவாமிகள் சில அதிசங்கள் வாயிலாகவும் மக்களுக்கு மரக்கறி உணவின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். மீன்கறி கத்தரிக்காய் கறியாக மாறியமை, மாட்டிறைச்சி மல்லிகைப் பூவானமை, மீன்கறி பலாச்சுளைக் கறியானமை போன்ற அற்புதங்கள் வாயிலாகவும் மரக்கறி உணவு உண்ண வேண்டும் என்பதை மக்களுக்கு விளக்கியும் உணர்த்தியும் காட்டியுள்ளார்.

சுவாமிகள் இந்தியாவின் பல தலங்களுக்கும், ஈழத்தில் கதிர்காமம், செல்லக் கதிர்காமம் போன்ற தலங்களுக்கும் தலயாத்திரை சென்றுள்ளாh.; பல அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்து சமயக் கடவுளான முருகக் கடவுளை வணங்கியுள்ளார் இந்துக்களின் சமயச் சடங்குகளில் ஒன்றான தலயாத்திரையை ஆதரித்துள்ளார் என்பதனை விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது. இதன் மூலம் மக்களை தலயாத்திரைக்கு ஆற்றுப்படுத்தியுள்ளார் என்பதனை அறியலாம். சித்தர்கள் பொதுவாக சமயச் சடங்குகளை வரவேற்கவில்லை உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்கின்றார்களா  இல்லையா என்பது கேள்விக் குறியான விடயமாக உள்ளது. ஆனால் சித்தானைக்குட்டி சுவாமிகள் சமூகத்தை இறைவழிபாட்டின்பால் ஆற்றுப் படுத்தியுள்ளதை காணலாம்.        

மருத்துவமுறை என்பது அவர் வாழந்த காலப்பகுதியில் கிராமப்புற மக்களுக்கு கற்பிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. சித்தானைக்குட்டி சுவாமிகளும் பல சித்த மருத்துவ முறைகளை அறிந்திருந்தார். இதன்மூலம் மக்களின் நோய்களை குணப்படுத்தி இருந்தார். ஏனைய சித்தர்களைப் போல தமது மருத்தவ முறைகளை பாடல்களில் யாத்து பாதுகாக்கவில்லை ஆயினும் தான் அறிந்த மருத்துவ முறைகள் சமூகத்தை சென்றடைய என்ற உயரிய நோக்கொடு  தனது அடியவரான சரவணமுத்து என்பவரை அதீத சக்தியால் மூலிகைத் தோட்டத்திற்குள் அழைத்துச் சென்று மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும், தனது கையில் ஒன்றை உடைத்து முறிவு வைத்தியத்தையும் கற்பித்துக் கொடுத்தார். 

சித்தானைக்குட்டி சுவாமிகள் சமூகத்தோடு பின்னிபிணைந்து வாழ்ந்த படியால் சமூகத்தில் எச்சிந்தனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என எண்ணினாரோ அவற்றை தனது உபதேசங்கள்,அதீத செயல்கள்; வாயிலாக சமூகசெந்நெறிக்கான சிந்தனைகளாக  சித்தானைக்குட்டி சுவாமிகள் முன்வைத்தார். இவ்வாறாக சித்தானைக்குட்டி சுவாமிகள் சித்தர்களின் காலம் தொடக்கம் இக்காலம்வரை  சமூகத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய சமூக செந்நெறிச் சிந்தனைகள் சமூகத்தில் மிளிர்வதைக் காணலாம்.

ஆக்கம்:உலகநாதன் சுபராஜ்,B.A.(இந்து நாகரிக துறை சிறப்புக் கற்கை)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழகம்.

Comments