[Untitled]‎ > ‎

04.05.17- மனித வர்க்கமும் ஊடகமும் உலக பத்திரிகை சுதந்திர தின சிறப்புக் கட்டுரை..

posted May 3, 2017, 7:04 PM by Habithas Nadaraja

பத்திரிகை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையும் இதனை அங்கீகரித்து 1973 ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதியை உலக பத்திரிகை சுதந்திர தினம் என அறிவித்தது.

அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது.மேலும் பத்திரிகையையும் பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது.இக்கட்டுரை மனித வர்க்கமும் தொடர்பாடல் ஊடகமும் பற்றி விபரிக்க விழைகிறது

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்காக காணப்படுகின்றான்.மனிதன் எப்போதும் தனித்து வாழ விரும்புவதில்லை.அவன்; எப்போதுமே குழுக்களாக வாழ விரும்புகிறான்.குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்படுவதன் காரணமாகவே மனிதனுக்கு தொடர்பாடல் முக்கியமடைகின்றது.தொடர்பாடல் முறையானது மனித வர்க்கத்தின் அளவுக்கு மிகப் பழமையானதாகும்.

ஒருவழித் தொடர்பாடல்,இருவழித் தொடர்பாடல் என தொடர்பாடலை இரு வகைப்படுத்தலாம்.ஒலி,காட்சி என்ற இரு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்க்கொள்ளப்படுகின்றன.

ஓலி :-பேச்சு,ஒலிகளை பயன்படுத்தல்
காட்சி :- படங்கள்,குறியீடுகள்,நிறங்கள்.

அனுப்புனர்,ஊடகம்,பெறுநர் எனும் மூன்று கூறுகளின் ஊடாகவே சிறப்பானதொரு தொடர்பாடலை சாதாரணமாக ஏற்;படுத்த முடியும்.உதாரணமாக கடிதத் தொடர்பைக் குறிப்பிடலாம்.

மேளங்கள்,தீ,அங்க அசைவுகள் போன்றவற்றின் ஊடகவேஆதிகால மனிதன் தொடர்பாடலை மேற்க்கொண்டான்.இம் மூன்றின் ஊடாகவுமே தொடர்பாடலும் வளர்ச்சியடைந்தது.

பண்டைய தொடர்பாடல் முறைகளின் பின்னரே மொழிகள் விரிவாகத் தொடங்கின.மொழிகள் விரிவாக்கமடைந்ததன் பிற்பாடே எழுத்து வடிவம் உருவாகியது.ஆதி வாழ்க்கை தொடர்பாடலானது அங்க அசைவுகள் மூலமாகவே இருந்தது.அதாவது விலங்குகளை பிடிப்பது தொடர்பான சைகை.நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் அதை நெருப்பிலே வேக வைத்து கூடியிருந்து உண்டு மகிழ்ந்தான்.

ஆடிப்பாடிக் குதூகளிக்கும் வேளையில் மேளங்களும் பயன்படுத்தப்பட்டன.ஆதிகால மனிதனுக்கு இலைகுலைகளும்,நெருப்பும்,இயற்கை வளங்களுமே அவனுக்கு ஊடகமாயிருந்தன.பின்னர் ஒரு காலத்தில் வார்த்தைப் பிரயோகம் வளர்ச்சியடைந்து குறிகள்,சங்கேதங்கள் முக்கியம் பெற்றன.

வரி வடிவத்தின் பரிமாணம் எழுத்தாக மாறியது.17,18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கைத்தொழிற் புரட்சியின் காரணமாக அச்சியந்திரம்,நீராவி இயந்திரம்,கூர்ப்புக்கொள்கை போன்ற பல விசித்திரமான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மனிதனது கருத்துகள்,சிந்தனைகளே கலை வடிவங்களில் படிமங்களாக படைக்கப்படுகின்றன.கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால விடயங்கள்,நிகழ்வுகளையே கலைஞன் படிமங்களாக்குகையில் தனது கற்பனைகளையும் இணைக்கின்றான்.இவற்றின் பேறாக அமையும் கலைப் படைப்பு அடிப்படையில் வாழ்வினை ஒத்ததாக அமையும்.

உணர்ச்சி அல்லது உணர்வைத் தூண்டுவதே கலையின் நோக்காகவும் அவ்வுணர்ச்சி நிலையானதொரு மனப்பதிவினை ஏற்படுத்தி சிந்தனையையும் உணர்வையும் தூண்டுவனவே கலைப் படைப்புகளாக கருதப்படுகின்றன.
சிறந்த கலைப் படைப்புகள் கருத்தை முதன்மைப்படுத்தாது உணர்வு,சூழ்நிலை,அனுபவம் என்பவற்றின் ஊடாக கருத்து நிலையை வெளிப்படுத்தும்.

மனிதன் ஒருவன்மனிதருக்கு மனிதரது சாதாரண மொழியில் பேசுவதுதான் கலையென்று வோட்ஸ்ருவோட்டும் மனிதனின் மானுடத்திற்கான நிவேதனமே கலையென கிறீபிறிற்றேட் கூறுகின்றார்.

ஆதிகாலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும் உடுக்க உடையும்,உண்ண உணவும் உண்டாக்கி கொள்ள தெரியாமல் விலங்கு போல அலைந்து திரிந்தான்.பிறகு மெல்ல மெல்ல நாகரீகம் அடையத் தொடங்கி வசிக்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கி கொள்ள கற்றுக்கொண்டான்.இதனால் அவன் மிருக வாழ்க்கையிலிருந்து விலகி நாகரீக வாழ்க்கையடைந்தான்.

மனிதன் நாகரீகம் பெறுவதற்கு பேருதவியாக இருந்தவை அவன் சிறிது சிறிதாக கற்றுக்கொண்ட பல வகையான தொழில்களேயாகும்.ஆனால் அவன் இந்த நிலையை அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தன.

காவியம்,கட்டிடம்,சிற்பம்,ஓவியம்,நடனம்,நாடகம்,இசை போன்ற நுண்கலைகளை கண்களால் பார்த்தும் செவியினால் கேட்டும் மனதினால் மகிழ்ந்தும் உணர்கிறான்.

எல்லா வகை செய்தித் தொடர்புக்கும் அடிப்படை குறிகள்,சங்கேதங்கள் என்பனவே.குறிகள் தம்மையன்றி பிறவற்றை உணர்த்தும் செய்கைகள்.சங்கேதங்கள் குறிகள் ஒழுங்குற அமைந்துள்ள திட்டவட்டமான அமைவுகளாகும்.இவ்வமைவுகள் எவ்வாறு பல்வேறு குறிகள் ஒருங்கிணைக்கப்படலாம் என்பதை முடிவு செய்கின்றன.

குறிகளும் சங்கேதங்களும் பிறருக்கு செலுத்தப்படுகின்றன.சங்கேதங்களை செலுத்துதலும் பெறுதலும் சமூக உறவுகளின் அடிப்படையாக அமைகின்றன.செய்தித் தொடர்பு என்பது செய்திகள் வாயிலாக சமூக உறவு கொள்ளலாகும்.தனி மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல்,குழுத் தொடர்பு,வெகுசனத் தொடர்பு என தொடர்பாடல் மூன்று வகைககளாக பகுக்கப்படுகிறது.

தகவல்களை,எண்ணங்களை,உளப்பாங்குகளை பரிமாற்றுவது தொடர்பாடலாகும். எண்ணங்கள்,கருத்துக்கங்களை பகிர்ந்து கொள்ள,தகவல்களை வழங்க,சமூகமயமாக்கல்,ஊக்குவித்தல்,விவாதித்தல்,கலந்துரையாடுதல்,கலாசாரத்தை செழுமையாக்கல்,மகிழ்வூட்டல்,ஒன்றிணைத்தல் திறமைகளை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள,புதியவற்றை அறிந்துகொள்ள, ஏனையவர்களை அறிவுறுத்த,வழிநடத்த ,பொழுதுபோக்கு போன்றன தொடர்பாடலின் நோக்கங்களாக அமைகின்றன.

மொழி தெரியாமை ,உள்ளடக்கத்தை தெளிவாக புரியாமை,கவனத்தை திசை திருப்பும் காரணிகள்,நேரம் போதாமை,பௌதீகவியல் காரணிகள்,மருத்துவ ரீதியான காரணிகள்,நம்பிக்கைகள்,வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்பல்,உணர்வுகள் போன்றனவற்றின் மூலமாக தொடர்பாடலில் பாதிப்பும் உருவாகிறது.

அறியப்படாத ஒன்றை வெளிப்படுத்துவதும்உண்மைகளை தொகுத்தளிப்பதும்,மறைத்து வைத்திருப்பதை வெளிக்காட்டுவதும்,அவசரமாக நிகழ்கின்ற ஒரு வரலாறும்,நாளைய சரித்திரத்திற்கான இன்றைய பதிவு,வாசகர் அறியாததன் வெளிப்படுத்துகை,எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததுமான சேர்க்கை போன்றனவே செய்தியாக அமைகிறது.


கிடைக்கின்ற எல்லாவற்றையும் செய்தியாக்க முடியாது,வற்புறுத்தலுக்கு அடி பணியக்கூடாது,விமர்சிக்கும் உரிமை கிடையாது,முரண்பாடுகளை தூண்டக்கூடாததாகவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உறவினர் பார்வை ஒதுக்கப்பட வேண்டும் என்பன செய்தியாளருக்கும் செய்திக்குமுரிய பண்புகளாக அமைகின்றன.

மக்களுக்குள் ஒருவருக்கொருவர் நேர் முகமாக நிகழும் தொடர்பு தனிமனிதர்களுக்கிடையிலான தொடர்பு எனப்படும்.மக்களுக்கு குழுவூக்கம் இயல்பானது.ஜீன்கள் வழி செலுத்தப்படுவது என்று கூறும் பரிணாமவியற் கொள்கை முதல் குழுவினுள் நிகழும் உறுதிப்பாடுகளே இவ்வகை நடத்தையே உருவாக்குகின்றன.

ஒரு குழுவினர் தமக்குள் கொள்ளும் பொதுத் தொடர்பு குழுத்தொடர்பு எனப்படுகிறது.குழுத்தொடர்பு முன்னிலைப்படுத்தும் சாதனங்களான தனி மனிதர் தம் குரல்,பேச்சு,முகபாவம் இவற்றாலோ அன்றி இயந்திர சாதனங்கள் வாயிலாகவோ நிகழலாம்.
பெரும் தொழில் ரீதியாக நிகழுகின்ற உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்ற,அரசாங்கத்தால் பெருமளவு கட்டுப்படுத்துகின்ற சாதனங்கள் வாயிலாக பொழுதுபோக்குகள்,தகவல் அளித்தல் போன்றவற்றிற்கான உற்பத்தி செய்யப்படும் செய்தியமைப்புகளும் அவற்றை உற்பத்தி செய்யும் முறைகளும் வெகுசனத் தொடர்பு என்பதிலடங்கும்.

காவியக்கலை காவியத்தின் பொருளை மனதினால் உணர்ந்து அறிவினால் இன்புற வேண்டும்.ஆகவே காவியக்கலையை துய்ப்பதற்கு மனவுணர்வு மிக முக்கியமானதாகும்.இசைக்கலையினை செவியினால் கேட்டு இன்புறுகிறோம்.இசைக் கலைக்குத் துணைக் கருவிகளாக யாழ்,வீணை,குழல்,முழவு,தாளம் முதலியவையுள்ளன.

முற்காலத்தில் சுவர்களிலும் பலகைகளிலும் துணிகளிலுமே ஓவியங்கள் வரையப்பட்டன.பலவித நிறங்களால் இயற்கையழகு பொருந்த எழுதப்படுகிற படங்களே ஓவியக்கலையாகும்.கல்,சுதை,உலோகம்,மரம் முதலான இயற்கைப் பொருள்களினால் மனிதர்,விலங்கு,பறவை,தாவரம் முதலான இயற்கைப் பொருட்களின் வடிவத்தையும் கற்பனையாக கற்பித்து அமைக்கப்பட்ட பொருள்களின் உருவத்தையும் அமைப்பதுதான் சிற்பக்கலையாகும்.கோயில்கள்,மாடமாளிகைகளின் கட்டட அமைப்பு என்பன கட்டட கலைக்குள் அமையும்.எந்தக் கலை வடிவமும் மனித தொடர்பாடல் இன்றி வெற்றி பெறாது.

செய்தித்தாள்,வானொலி,தொலைக்காட்சி,புத்தகங்கள்,நாடகங்கள்,பிரமாண்டமான விளம்பரங்கள் போன்றன செய்தித் தொடர்புகளாகவுள்ளன.

நிலவுலகத்திலே மிருகம் போலத் திரிந்து வாழ்ந்;த ஆதிகால மனிதர்,நாகரீகமடைந்து நற்பண்பு பெற்ற காலம் முதல் இசைக்கலையை வளர்த்து வருகிறார்கள்.துன்பமும் துயரமும் சூழ்ந்த மனித வாழ்க்கையிலே சிறிது நேரம் ஒய்வுகொண்டு இசையைப் பாடியும் கேட்டும் மனச்சாந்தி அடைகின்றது மனித இனம்.

மனிதத் திறனின் வெளிப்பாடே கலையாகின்றது.கலைக்கு ஒரு தொடர்பாடல் வல்லமை இருக்கிறது.சமூகத்தின் ஒரு பிரிவினர் கலையைப் பிறப்பிக்க ஏனையோர் அதனைப் பெறுகின்றனர்.ஆற்றுகைக் கலையான நடனக் கலையை பொறுத்த வரையில் நடனக் கலைஞன் தான் பெற்ற அனுபவங்களை தன் அனுபவங்களின் ஊடாக ஏனையவர்களுக்கு வழங்குகின்றான்.அந்த வகையில் உலகம் தழுவிய நிலையில் நடனம் சமூகத்துக்கு புரிய வைக்கப்படுகின்றது.

நாடகக் கலையானது சமூக மாற்றுச் சாதனமாக அமைகிறது.சமூகத்தை பல்வேறுபட்ட மாற்ற நிலைக்கு கொண்டு வருவதில் அரங்கிற்கு வலிமையான சக்தியுள்ளதே அதற்கு காரணமாகும்.சமூகத்திலே காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு வெளிப்படுத்துவதும் அதற்கான தீர்வுகளை பெற்றுத் தரும் ஒரு சிறந்த சாதனமாக அரங்கமைகின்றது.

எந்தவெரு கலை வடிவம் ஊடாகவும் சிறப்பானதொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.ஊடகங்களே மனித சமுதாயத்தை வழிப்படுத்துகின்றன.எந்தவொரு கலை வடிவத்தின் வளர்ச்சியில் மனிதத் தொடர்பாடல் பிரதான பங்காற்றுகிறது.உயிருள்ள கலைஞர் உயிருள்ள பார்வையாளர் முன்னிலையில் நிகழ்த்தப்படும்போது நுகரப்படும் கலையாக அமைகிறது.இதனால் நாடகம் வாழ்வை ஒத்ததாகவும் காணப்படுகின்றது.நாடகத்தில் ஆற்றுவோர் பார்ப்போர் உறவு நெருக்கமாக இரத்தமும் சதையுமான கலைஞர்கள் நாடகம் 
ஊடாக தொடர்பு கொள்ளும்போது நாடகம் சிறப்பானதொரு சமூகத்தை கட்டியெழுப்பும் சிறந்த ஊடகமாகவுள்ளது.

அச்சு ஊடகம்,ஒலிபரப்பு ஊடகம்,ஒளிபரப்பு ஊடகம்,நவீன ஊடகம் என ஊடகங்களை நான்காக வகைப்படுத்தலாம்.குரல் வளம்,உச்சரிப்பு,சமர்ப்பிக்கும் முறை,மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தல்,தன்னம்பிக்கை,வாசிக்கும் திறன்,நேர முகாமைத்துவம்,தன்னடக்கம்,ஊடகத்துறை பற்றிய அறிவு போன்ற பண்புகளை ஒலி,ஒளி ஊடகவியலாளர்கள் கொண்டிருப்பதுடன் மொழியறிவு,பொது அறிவு,நுண்ணறிவு,ஞாபகம்,முதன்மை ஊக்கம்,தலைமைத்துவ பண்பு,சமூகமயமாதல்,ஆளுமை,மனவெழுச்சி 
சமநிலை,தெளிவாக சமர்ப்பிக்கும் முறை போன்ற தகைமைகளையும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஆதி காலத்திலிருந்து இன்றைய சமூகம் வரை எல்லா மட்டங்களிலும் ஒரு வகையிலான தொடர்பு முறைகள் இருந்து வருகின்றன.இத்தொடர்பு முறைகள் சமூக நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதற்கும்,பண்பாட்டுக் கையளிப்பினை மேற்க்கொள்வதற்கும் வழி ஏற்படுத்துகின்றன.

ஆதி காலத்தில் தீ,தூது,முரசறைதல் போன்ற நிலையிலிருந்து பாரிய மாற்றம் பெற்று பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் என எத்தனையோ ஊடகங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது.அவை தாம் வளர்ந்தோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு தேவையானவற்றையும் வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

மிகப் பழமை வாய்ந்த தொடர்பு ஊடகமான பத்திரிகை, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது.எழுத்துருவாக்கம்,நிலைபேறாக்கம்,எழுத்துச் சீர்திருத்தம் போன்றவற்றிற்கும் பத்திரிகைகள் முன்னோடியாக விளங்குகின்றன.
இந்தியாவில் கி.பி 1780 இல் பத்திரிகை இதழ் வெளிவந்ததுடன் 1831 இல் தமிழ் சஞ்சிகை என்ற இதழும் வெளிவந்தது.தமிழில் வெளிவந்த முதல் இதழும் இதுவேயாகும்.இதனைத் தொடர்ந்து தினவர்த்தமானி,சுதேச மித்தரன் போன்றன தோற்றம் பெற்றன.இவை செய்திகளோடு அவ்வப்போது இலக்கிய விடயங்களையும் வெளியிட்டன.

இலங்கையில் 1841 இல் யாழ்ப்பாணத்திலிருந்து உதய தாரகை என்ற சஞ்சிகை மாதம் இரு முறை வெளிவந்தது.1891 இல் உதயாதித்தன்,இலங்கை நேசன் போன்ற போன்ற பத்திரிகைகள் வெளிவந்;தன.
1930 களில் ஆரம்பிக்கப்பட்ட தினத் தபால்,வீரகேசரி,ஈழகேசரி ஆகிய பத்திரிகைகள் தமிழ் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயற்படத் தொடங்கின.

1930 களில் தினத்தபால்,வீரகேசரி,ஈழகேசரி ஆகிய பத்திரிகைகளும் 1947 இல் சுதந்திரனும் 1945 இல் மறுமலர்ச்சி எனும் சஞ்சிகையும் 1950 இல் தினகரனும் 1959 இல் ஈழநாடும் தொடங்கப்பட்டது.

1963 இல் செய்தி என்ற வாரப் பத்திரிகை இலக்கியத் தகவல்களை வெளியிட்டதுடன் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கதிர் என்ற சஞ்சிகையும் யாழ்ப்பாணத்திலிருந்து உதயன்,ஈழநாதம் போன்றனவும் கொழும்பிலிருந்து தினக்குரல்,மித்திரன்,தினமுரசு போன்றவையும் வெளிவந்தது.

இலங்கை வானொலி,இலங்கையின் முன்னணி வானொலி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும்.இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது.1922 இல் தந்தி திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முயற்சியில் ஒலிபரப்பபட்டது.இலங்கை ஒலிபரப்புச் சேவையை தீவிரமாக முன்னெடுத்த எட்வேட் ஹாப்பாரே இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை என்று பலராலும் பாராட்டப்பட்டார்.

இலங்கையில் 1950 களில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலி 1967 இல் கூட்டுத்தாபனமாக மாற்றம்பெற்று அன்றிலிருந்து இன்று வரை பல தமிழின் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்ரபி சமுதாயத்தின் ஊடகமாக அமைந்தன.1972 மே 22 இல் இலங்கை குடியராசாக மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்று இலங்கையரசின் ஊடக,தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.

இலங்கை வானொலி தெற்காசியாவிலே பல சிறப்பான வல்லுனர்களை உருவாக்கியுள்ளது.அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் லிவி விஜேமான,வேணன் கொரெயா,பேர்ள் ஓண்டாட்ஜி,டிம்; ஹோர்;சிங்டன்,கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி,ஜம்மி பாருச்சா,மில் சன்சோனி,கிளோட் செல்வரெட்ணம்,அமீன் சயானி,எஸ்பி.மயில்வாகனம்,தேவிஸ் குருகே,விஜயா கொரெயா போன்றோரைக் கூறலாம்.
இமயமலை உச்சியில் கால் பதித்த ஹிலாரியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை தான் முதலில் கேட்டார்கள் என்று அறியப்படுகிறது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கே.எஸ்.ராஜாவை மறக்க முடியாத நேயர்கள்; இருக்கிறார்கள்.அவருக்குப் பின்னர் பி.எச்.அப்துல் ஹமீட் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.தேச எல்லைகளை கடந்து பல கோடி நெஞ்சங்களை செவிமடுக்க வைத்த இலங்கை வானொலியின் சிகரங்களாக விளங்கிய கே.எஸ்.ராஜா,பி.எச்.அப்துல் ஹதீத் மற்றும் இராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரை குறிப்பிட்டு கூறலாம்.
மக்களின் மனங்களில் விரைவாக மாற்றத்தை ஏற்படுத்தும் தொலைக்காட்சி பல விடயங்களை மக்களிடம் கொண்டு செல்கின்றன.இலங்கையில் ரூபவாஹினி ஐ அலைவரிசை,சக்தி ரீ.வி போன்றன அவ்வாறான தாக்கங்களை சமூகங்களிடத்து செலுத்தியிருந்தது.

இன்று இனம் சார்ந்து மட்டுமே பேசப்படும் ஆயிரக்கணக்காண மொழிகளில் தமிழும் ஒன்று.தமிழ் பல நாடுகளில் பேசப்பட்டாலும் தமிழர்களால்; பேசப்படும் முதன்மையான மொழியாக காணப்படுகின்றது.

தமிழும் கணிப்பொறிநுட்பமும் கைகோர்த்துக்கொண்ட தமிழில் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்தது ஊடக இணையமாகும்.இணையத்தில் தமிழர்களின் தொடர்பாடல் ஆசியாவிலுள்ள ஏனைய மொழிகள் அனைத்துடனும் போட்டிபோடக்கூடியளவிற்கு முன்னேறியுள்ளது.மொழி ஊடகங்கள் மூலமாகவே நிலைத்து நிற்கின்றது.தொடர்ந்தும் நிலவுகின்றது என்றால் மிகையாகாது.

பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)
துறைநீலாவணை


Comments