[Untitled]‎ > ‎

06.05.17- சமூகமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணைச் சிந்துபாடல்..

posted May 5, 2017, 6:43 PM by Habithas Nadaraja
சமூகவாழ்வு,உழைப்பு,உணர்வுஉடையவனேமனிதன். இவ்வாறானமனிதன் தோற்றம் பெற்றகாலத்திலிருந்தேகலைகளும் தோன்றியுள்ளன. கலைகள் யாவும் மனிதஅனுபவஉணர்வுகளிலிருந்தும் அவனதுஉழைப்பிலிருந்தும் தோற்றம் பெற்றுதனக்கெனஓர் வடிவத்தையும் தனித்துவத்தையும் கொண்டுவிளங்குகின்றன. அவ்வாறுதோற்றம் பெற்றபல்வேறுகலைகளுள் “கிராமிய இசையும்”முக்கியத்துவம் பெற்றுவிளங்குகின்றன.

மக்களின்அன்றாடவாழ்க்கையிலும்சமூகபோராட்டத்திலிருந்தும்சுற்றுப்புறச் சூழலில் இருந்தும்மலருகின்றகலைகள்தான் கிராமியப் பாடல்களாகும். இப் பாடல்கள் தாலாட்டுப் பாடல்,விளையாட்டுப் பாடல்,தொழிற்பாடல்,காதல் பாடல்,கூத்துப்பாடல்,சடங்குமுறைகளுடன் கூடியபாடல்,கும்மிப்பாடல்,ஊஞ்சற் பாடல்,கொம்புமுறிப் பாடல்,எண்ணெய் சிந்துப்பாடல்,ஒப்பாரிப் பாடல் எனஒவ்வொருபாடல் வகைகளும் மனிதவாழ்வோடுபின்னிப் பிணைந்துபிறப்புமுதல் இறப்புவரைஎல்லாநிலைகளிலும் பாடப்பட்டுதனக்கெனஓர் வடிவத்தைப் பெற்றுநிற்கின்றன.

இவ்வாறான பாடல் வகைகளுள் எண்ணெய்ச்சிந்து பாடல்கள் மனிதனின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டு அம்சங்களையும்நல்ல உயர்சிந்தனைகளையும் உள்ளடக்கி ஒரு வாழ்க்கைத் தத்துவக் கோட்பாட்டை இசை வடிவில் எடுத்துக் கூறி மனித சமூகத்தின் யதார்த்தத்தையும் இயற்கையுடன் இணைந்த உள்ளத்து இயல்புகளையும்வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த பாடல்களாக எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் காணப்படுகின்றன.

எண்ணெய் சிந்துப் பாடலை யார் இயற்றினார் என்பது அறியப்படவில்லை. ஆயினும் இதனை இயற்றியவர் ஒருவரென்றும் கருதுவர் பலர் என்றும் கருதுவர். எனினும் “யாரோ ஒரு ஏடறியாப் புலவன் நாடறியாக் கவிஞனால் ஆக்கப்பட்டதே” இப்பாடல்களாகும். கிராமங்கள் தோறும் இயங்கிய திண்ணைப்பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்துதான் எண்ணெய்ச்சிந்து பாடல் பாடும் முறையானதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்காலத்தில் தாழ்ந்த உயர்ந்த சாதிபாகுபாடின்றி எல்லோரும் மாணவர்கள் என்ற உயர்வான சாதி அமைப்பினைக் கொண்டு கல்வியினைக் கற்க விரும்பிய மாணவர்களே இங்கு கல்வியினைக் கற்றுவந்தனர். குறிப்பாக கல்வி கற்பது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் உரியதாகக் காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் கல்வி கற்பிப்பவர்களை உபாத்தியாயர் சட்டம்பி புலவர் என அழைத்தனர். இத்திண்ணைப்பள்ளிக்கூடங்களில் வாயிற்கணக்கு,கேசர் கணக்கு, நாட்கணக்கு, எண்ணற்கணக்கு போன்ற கணக்கு வகைகளும் ஆத்திசூடி ,கொன்றை வேந்தன், மூதுரை,நன்னெறி, நல்வழி போன்ற நீதி நூல்களும் இராமாயணம், மகாபாரதம் போன்ற தர்ம நூல்களும் போதிக்கப்பட்டன.

வீடுகள் தோறும் சென்று மாணவர்களும் ஆசிரியர்களுமாக பாடிய பாடல்களே எண்ணெய்ச்சிந்து பாடல்களாகும். இங்கு எண்ணெய் ஒரு பொருளாகவும் சிந்து ஒரு பா வகையாகவும் காணப்படுகிறது. சிந்து எனும் போது தமிழ் யாப்பிலக்கணத்தில் மூன்று சீர்கள் உள்ள அடியை சித்தடி என்பார்கள். மூன்று சீர் உடைய அடிகள் மிகுதியாக வருவதனால் இவ் எண்ணெய்ச்சிந்து பாடல்கள் ஒரு சிந்து வகைக்குள் அடங்கும் பாடல்களாகவே கருதப்படுகின்றது. 

எண்ணெய் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாகக் காணப்படுகின்றது. அதாவது சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்துதல், விலங்குகளின் நோய் தீர்க்க மருந்தாகப் பயன்படுத்துதல்,எண்ணெய் உருக்கி தலையில் வைத்து முழூகுதல் அக் காலத்தில் மின்சாரப் பயன்பாடின்மையால் குப்பி விளக்குகளின் பயன்பாட்டிற்கு எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களை இம் மக்களின் வாழ்கை நடைமுறையில் காணப்பட்டது. இதனால் எண்ணெய் வீடுதோறும் மிகுதியாக இருப்பது வழக்கமாகும்.
வீடுகள் தோறும் கிடைக்கும் எண்ணெயைக் கொண்டு கால்நடைகளின் நோய்களைத் தீர்த்தனர். எமது முன்னோர்கள் தமது சுய தேவைக்காகவும் வருவாய்க்காகவும் விலங்குகளை வளர்த்து வந்துள்ளளர். சேகரிப்பில் தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி ஆமணக்கு எண்ணெய், புன்னைக் கொட்டை எண்ணெய்,இலுப்பை எண்ணெய் போன்றன கிடைக்கப் பெற்றன. இதன் மூலம் விலங்குகளின் நோய் தீர்க்கும் மருந்தாக இவை பயன்படுத்தப்பட்டு வந்தன.

மக்கட் பேறில்லாது வருந்தும் தம்பதிகளின் இல்லத்தில் எண்ணெய்ச்சிந்து பாடும் போது மாணவர்களுக்கு இனிப்புக்கள்,பலகாரங்கள், மோர், இளநீர் கொடுத்தால் அடுத்த வருடம் இவ் எண்ணெய்ச்சிந்து பாடலைப் பாடிவரும் போது அக் குடும்பத்தினருக்கு குழந்தை பிறந்திருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

இவ்வாறு குருவின் காணிக்கையாகவும் தமிழ் பாடசாலைகளின் வளர்ச்சிக்காகவும் விலங்குகளின் நோய் தீர்ப்பதற்காகவும் இப் பாடலை பாடியதுடன் மட்டுமின்றி ஆசிரியரின் வருவாய்க்காகவும் பெற்றோர் ஆசிரியரின் அறிமுகத்தை வளர்த்துக் கொள்வதற்காகவும் பாடப்பட்டதுடன் சில பிரதேசங்களில் வயல் பெருக்கி நெல் வளம் வாய்க்கப்பெற்றிருந்த போடியார்மார் தமது இல்லத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் இச் சிந்து பாடி வருவதை ஒரு மரியாதையாகக் கருதினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப் பாடலானது வெவ்வேறு நோக்கங்களுக்காக மேற்கூறப்பட்டவாறு அதன் தோற்றத்தில் அதாவது 1990 வரை பாடப்பட்டு வந்துள்ளன. அதன் பின் நிறுவனமயமாக்கப்பட்ட சைவப் பாடசாலைகள் ஆரம்பிக்க அனுமதி கிடைத்த போது அத்தகைய பாடசாலைகளை நிறுவுவதற்குரிய பணம் சேகரிப்பதற்காகவும் பாடசாலைகளின் அபிவிருத்திற்குரிய பணம் சேகரிப்பதற்காகவும் மாணவர்களுக்கு 

நல்லொழுக்கங்களை எடுத்துரைப்பதற்காகவும் பாடப்பட்டு வந்துள்ளது.

இப் பாடல்கள் இரவு பகல் என இரு வேளைகளிலும் பாடப்படுவதோடு அதற்கென ஒரு மரபாக சனிக்கிழமைகளிலே பாடப்பட்டு வருவதே முறையாகக் காணப்படுகிறது. எண்ணெய்ச்சிந்து பாடல்கள் அடங்கியநூலை குருமாணக்கர் பரம்பரையை முன்னெடுத்துக் காட்டும் பழமை பொருந்திய பாடலாக மட்டுமின்றி அன்பு பாசம் தியாகம் முதலிய நற்பண்புகள் நமது சமுதாயத்தில் வேரூன்றுவதற்கும் மனித வாழ்க்கை முறையை அதாவது வாழ்க்கையினை எவ்வாறு சீரமைக்க வேண்டும் என்ற நோக்கம் வாழ்க்கைக்கு என்ன என்ன தேவை என்றும் வாழ்வாதாரத்துடன் கூடிய சேமிப்பு முறை என்பவற்றை எடுத்துக் கூறுவதோடு இத்தத்துவங்களை எம் முன்னோர்களும் நன்குணர்ந்து நடைமுறையில் கடைப்பிடிக்கும் வண்ணம் வாய்மொழி இசையாக காணப்பட்டு தற்போது ஒரு பதிப்பு நூலாக அமையப் பெற்றுள்ளது.

பாடல் அமைப்பு :

எந்தவொரு பாடலும் தான் கூறவந்த விடயத்தை ஒன்றன்பின் ஒன்றாக ஒரு ஒழுங்கு முறையில் தொகுத்து காப்பு துதி என ஆரம்பித்து பின் கூறவந்த விடயம் ஆரம்பமாகின்றது.இதன் அடிப்படையில் ஒரு எளிமையான மொழிநடையிலும் ஆழமான கருத்துக்களுடனும் ஒரு முழுமையான வடிவத்தை இந்நூல் பெறுகின்றது.இதன் படி எந்தக் காரியமும் தொடங்குவதற்கு முன் இறைவனை வணங்கியே தொடங்குவது எமது தமிழரின் வழக்கமாகும். அவ்வாறே ஒரு நூலை எழுதும் போது அதற்கு வாழ்த்துப்பாடியே ஆரம்பிக்கப்படுகிறது. வாழ்த்து எனும் போது நாம் தொடங்கும் காரியங்களுக்கு இடையூறு தொடரா வண்ணம் அதை முழுமையாக நிறைவேற்றுவதற்காகப் பாடுவதே கடவுள் வாழ்த்து ஆகும். எண்ணெய்ச்சிந்துப் பாடல்களும் இதனடிப்படையில் விநாயகருக்குத் துதி பாடி முறையே சிவன் பரமேஸ்வரி சுப்பிரமணியர் சரஸ்வதி போன்ற தெய்வங்களையும் வேண்டி காப்பு பாடப்படுகின்றது. அதன் பின்னே எண்ணெய்ச்சிந்து நூற்பகுதி தொடர்கின்றது.

இப் பாடல் ஒரு தாய்க்கும் சேய்க்கும் உள்ள பிணைப்பை எடுத்துக்காட்டுகின்றது. ஒரு பெண்மையின் புனிதம் தாய்மை என்ற மதிப்பும் அப் பெண்ணிற்கு புத்திர செல்வத்திலே கிடைக்கின்றது. ஒரு சமூகத்தில் தாய்மையடையாத பெண்கள் சுபகாரியங்கள் நல்ல விடயங்கள் நடைபெறும் போது ஒதுக்கப்பட்டு முடக்கப்படுகின்றார்கள். இவ்வாறு குழந்தை இல்லாதவர்கள் நேர்த்திக்கடன் வைத்தல் தான தருமங்களைச் செய்வதன் மூலம் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாகவும் இறைவன் மீது கொண்ட பக்தியும் புத்திர செல்வத்தின் முக்கியத்துவத்தையும் கூறி நிற்பதோடு தாய் தந்தையர் இறைவன் சார்பில் அவர்கள் நம்மைப் படைத்துக் காத்து பராமரிக்கும் மறு தெய்வங்கள். எனவே தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும் என்ற உண்மைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
மேலும் குழந்தை பிறந்தவுடன் செய்யும் சடங்கு முறைகள் சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் என்பன இப் பாடல்களில் காணப்படுகின்றன. 

ஒரு குழந்தைக்கு கல்வியானது இச் சமூதாயத்தில் பண்புள்ள மனிதனாகவும் நல்லொழுக்கத்துடன் கூடிய ஒரு நற்பிரஜையாகவும் எல்லோராலும் மதித்துப் போற்றத்தக்க அளவிற்குச் சிறந்த கல்விமானாகவும் திகழவைக்கின்றது. அவ்வாறு கல்வியைக் கற்காதவர்கள் இச் சமூதாயத்தில் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பதையும் இவ் எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் எடுத்துக் கூறுவதோடு ஒரு சமூகத்தின் சீரான வளர்ச்சிக்கும் மனித வாழ்க்கை முறையில் உயர்ந்து செல்வதற்கும் கல்வியானது முக்கியம்; வாய்ந்தது என்பதை வலியுறுத்துவதாகவே இப் பாடல்கள் அமைந்துள்ளன.

மேலும் இப் பாடல்கள் எல்லோரும் விளங்கிக் கொள்ளும் முறையில் எளிமையான மொழிநடையிலும் உவமை உருவக அணிகள் எதுகை மோனைகள் எனப் பல்வேறு இலக்கணச் சிறப்புக்களைக் கொண்டமைக்கப்பட்டு பெற்றோர் பிள்ளைகள் ஆசிரியர்கள் என ஒன்றிணைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை தெளிவுபடுத்தும் நூலாக இவ் எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் காணப்படுகின்றன.
இசையானது சமூகம் சூழல் பொருளாதாரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெறுகிறது. மனிதன் தோற்றம் பெற்ற காலம் முதல் அவனிடம் தோன்றிய உணர்வுகளின் வெளிப்பாடு ஒரு சில ஒலிகளாகவும் பின்பு அவனது மொழிபெயர்ப்பு வளர வளர இந்த ஒலிகளும் அழகான இசை வடிவத்தைப் பெறத் தொடங்கின. மனிதனையும் இறைவனையும் மற்ற உயிரினங்களையும் அசைய வைக்கின்ற ஓர் சாதனமே இசையாகும். இவ் இசையின் ஆதி மூலம் தமிழிசையே ஆகும். 

தமிழில் செய்யுளையோ பாடலையோ எழுதி அவற்றிற்கு இசையமைத்துப் பாடுவதைக் குறிக்கும். இது இசையும் தமிழுமாக ஒன்றாகப் பின்னிப்பிணைந்து பாடலாசிரியரின் மனதிலிருந்து தோன்றுவது. பாடல் எழுதி அதற்கு இசையமைக்காமல் பாடும் பொழுதே இயலும் இசையுமாக கலந்து வருவதே தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் தங்கள் வாழ்க்கையோடு இசையும் தாளத்தையும் கருப்பொருள் அமைத்து எழுத்துக்கும் இசைக்குமிடையேயுள்ள உறவை உணரும் நுட்பமான முறையைப் பெற்றிருக்கின்றன. இத்தகைய மரபினை அடியொற்றியதாகவே எண்ணெய்ச்சிந்துப் பாடல்களும் பாடப்படுகின்றன.

தமிழிசை மரபில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாவினங்கள் காணப்படுகின்றன. இப் பாவினங்களில் ஒன்றான வெண்பா அமைப்பினைக் கொண்டதாக எண்ணெய்ச்சிந்துப் பாடல்களின் நூற்பகுதி காணப்படுகின்றன. உதாரணமாக:
“ ஆனைமுகனே யரனார் திருமானே
  கானமதம் பொழியுமொரு கையோனே – ஞானமுற
  வித்தை கற்கும் பிள்ளைகட்கும் விக்கினங்கள் வாராமற்
  நித்தம் நிதம் நீ துணையாய் நில்.”
  என ஆரம்பிக்கப்படுகிறது.

இவ்வாறான நால்வகைப் பாக்களுக்குரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் எனும் ஓசை விகற்பங்கள் தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. இவ்வாறு தாளத்தோடு பொருந்திய இயற்தமிழ் பாவினோடுஇசையை இயைந்து பாடும்போது அது பண் அல்லது ராகம் தோன்றி இனிமையாக ஒலிக்கின்றது. இத்தகைய பண்கள் நூற்றிமூன்று(103) காணப்படுகின்றன. இவை கி.பி 6ம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை தோன்றிய நாயன்மார்களின் உருப்படிகள் தேவார திருமுறைகளிலே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான காலகட்டத்தில் பாடப்பட்ட பாடல் வகைகளுள் “அம்மானைப் பாடல்களும்” முக்கியம் பெறுகின்றது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் சில பாடல்வகைகளைக் கூறியுள்ளார். இவற்றுள் அம்மானைக்காய் கொண்டு விளையாடும்இளைய மகளீர் தம் முன் உரையாடி மகிழும் முறையில் அமைந்த வரிப்பாடலே அம்மானைப் பாடலாகும். இப் பாடல்களுக்கென ஒரு தனியான இசையமைப்பு உள்ளது. தாலாட்டுக்குரிய பண்ணை மேகராக குறிஞ்சி எனும் நீலாம்பரி ராகத்திலே இப் பாடல்கள் பாடப்படுகின்றன. இது ஒரு பெரும்பான்மைப் பண்ணாக காணப்பட்ட போதிலும் அம்மானை பாடுவதற்கேற்றதாக இவ் ராகம் உள்ளது.

மேலும் ஆரம்ப காலத்தில் ஓதுவார் வழிமுறையினூடாகவே பாடல்கள் இசைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் ஓதுவார் முறைகளிலும் பாடல்களுக்குப் பண்ணமைத்துப் பாடியும்; பண்ணிசையாகவும் சுக்தாங்;கமாகவும் அதாவது பாடுபவர் தம் உணர்ச்சிப் பெருக்கிற்கும் இசையறிவில்லாத கற்பனை வளத்திற்கும் ஏற்ப இசையும் சொல்லும் பொருளும் சிதையாமல் பாடலை விரித்து விளக்கிப் பாடும் முறையாகவும் பாடப்பட்டன. இவ்வாறான இசை ஒழுங்குடன் கூடியதாகவே எண்ணெய்ச்சிந்துப் பாடல்களும் பாடப்படுகின்றன. இதன் மூலக்கருத்தும் அறக்கருத்துக்களும் மக்கள் மத்தியில் ஒரு இசை மரபினூடாக வெளிப்படுத்தப்படுவதைக் காணலாம்.

மக்கள் கூட்டமாக வாழுகின்ற அமைப்பே சமூகமாகும். மக்களின் வாழ்க்கை முறை,பண்பாட்டு அம்சங்கள்,பழக்கவழக்கங்கள்,கல்வி என்பன ஒரு சமூகத்தைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறான சமூகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையையும் வாழ்வியல் அம்சங்களையும் எடுத்துக் கூறுவதாக அமைவதே எண்ணெய்ச்சிந்துப் பாடல்களாகும். குழந்தைகள் சிறுவர்கள் தாய் தந்தையர் மாணவர்கள் ஆசிரியர்கள் என ஒன்றிணைக்கப்பட்ட சமூக அமைப்பைப் பிரதிபலிப்பதாக இவை அமைகின்றன.

இப் பாடல்கள் சமூகத்தின் இயங்கியலுக்கும்  ஒரு மனிதனை ஆரோக்கியமான வாழ்விற்கு வழி காட்டி செல்வதற்கும் ஊன்று கோலாக அமைந்துள்ளன. எம் முன்னோர்கள் சிக்கன சேமிப்புடன் கூடிய வாழ்க்கையை மேற்கொண்டனர்.அதாவது அன்றாடம் உணவு சமைக்கும் போது பயன்படுத்தும் அரிசியில் ஒரு பிடியை சேமித்து பின் அதனைத் தேவையேற்படும் போது பயன்படுத்தினர். சில குடும்பத்தினர் சீட்டுப்பிடிக்கும் முறையை மேற்கொண்டு தமது மூலதனத்தினைப் பெருக்கினர். இவ்வாறான சேமிப்பு முறைகளை மேற்கொள்வதோடு பண்டமாற்று முறையுடன் கூடியதாக ஆளுக்காள் தமது சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு வலுவான சமூகத்தை மேம்படுத்துவதற்கும் இப் பாடல்கள் உதவுகின்றன.

மேலும் எம் முன்னோர்களால் கடைப்பிடித்து வந்த சடங்கு முறைகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், சமய நிலமைகள் என்பவற்றை இன்னும் எமது சமூகத்தில் காணப்படுவதற்கும் அதாவது குழந்தை பிறந்தவுடன் நாள் குறிப்புக்கள் பார்த்தல், குழந்தைக்குக் கண்ணூறு வராமல் திருநீறு ஓதிப் பூசுதல், குழந்தையைப் பன்னிரெண்டாம் நாள் தோட்டிலில் இடல், முப்பதாம் நாள் முடியெடுத்து மருங்கை செய்தல்,அன்றைய தினம் காப்பு, அரைநாண் கயிறு, சதங்கை என்பன அணிவித்தல், கல்வி முறையில் தோத்திரப் பாடல்கள்,சமயம் சார்ந்த கதைகள் போதிக்கப்பட்டன. இம் முறைகள் இன்றைய தலைமுறைகளிடம் பின்பற்றி நிற்பதற்கு ஒரு வழிகாட்டியாக இவ் எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் காணப்படுகின்றன.

எண்ணெய்ச்சிந்துப் பாடல்கள் பாடசாலைமாணவர்களால் பாடப்பட்டு வந்தாலும்இவர்களுடன் இணைந்து கிராம பொதுமக்கள் சிறுவர்கள் என அனைவரையும் ஒன்று சேர்க்கும் களமாக இது காணப்படுவதோடு உயர்ந்த தாழ்ந்த சாதிப் பாகுபாடின்றியும் ஆரம்ப காலத்தில் ஆண் சமூகத்தில் மதிக்கப்பட்டதாகவும் இப் பாடல்க்ள மூலமே ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் சமத்துவமானவர்கள் என்று மதிக்கப்பட்டும் எல்லோரும் ஒன்றிணைந்தும் செயல்படுவதற்கும் இ இதன் மூலம் சமூக ஒற்றுமையையும் நல்லுறவையும் கட்டியெழுப்புகின்ற களமாக காணப்படுகின்றது.

இன்று எவ்வளவோ புதிய இசைகளின் வளர்ச்சியின் மத்தியில் தமிழிசை மரபானது இவ்வாறான பாடல்களினூடாக நிலை நிறுத்தப்பட்டு மக்கள் மத்தியில் நிலை பெற்று ஓர் இசை மரபினூடாக சமூக விழுமிய கருத்துக்கள் பரிமாறப்படுவது சிறப்பானதாகும். மேலும் தாய் தந்தையரை மதிக்காது புறக்கணித்து வாழும் சமூகத்திற்கும்இனிவருகின்ற சந்ததியினரது வாழ்க்கை வழிகாட்டியாகவும் இவ்வாறான தத்துவப்பாடல்கள் தோன்றியிருப்பதும் அவற்றினூடாக ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இப் பாடல்கள் மக்களது வாழ்க்கையில் பயனுள்ளதாகக் காணப்படுகின்றன.

கட்டுரையாக்கம் :- சௌந்தரராஜன் செசயனாComments