[Untitled]‎ > ‎

07.06.17- பெண்மையின் பெருமையையும் நீதியின் வெற்றியையும் பேசும்  பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்

posted Jun 8, 2017, 3:46 AM by Habithas Nadaraja

பெண்மையின் பெருமையையும் நீதியின் வெற்றியையும் பேசும்  பெருங்காப்பியம் - சிலப்பதிகாரம்
கண்ணகையம்மன் சடங்கு சிறப்புக் கட்டுரை

பெண் தெய்வ அல்லது தாய்த் தெய்வ வழிபாடு கி.மு 7000 ஆண்டுகளுக்குரிய நியோதிலிக்காலமான புதிய கற்காலத்திலும் அதற்கு முந்திய காலப்பகுதியான கி.மு25000 ஆண்டுகளுக்குரியதுமான மேலைப் பலியோலிதிக் காலமான பழைய கற்காலத்திலும் பெண் தெய்வ மற்றும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கான சான்றுகளை தொல்பொருளியலாளர்கள் வெளிக்கொணர்ந்துள்ளனர்.

புணர்ச்சியும் மகப்பேறும் ஒன்றோடொன்று தொடர்புடையதென்பதை அறியாத காலத்தில் மக்கட் பேறு பெண்ணிற்கேயுரிய இயற்கை வளமெனவும் மனித இனத்தை பெண்ணாலேயே காப்பாற்ற முடியுமென்ற நம்பிக்கையும் இருந்தது.
சங்க இலக்கியங்களில் பெண் தெய்வமான கொற்றவை திராவிட மக்களால் வழிபடப்பட்டதுடன் குறிப்பாக ஆநிரை கவர்வதில் வெற்றியை தருபவளாகவும் இரத்தப் பலியினால் மகிழ்விக்கப்படுபவளென்றும் குறிப்பிடப்படுகின்றது.

சிவவழிபாடு நாட்டார் பெண் தெய்வ வழிபாட்டுடன் கலப்புற்ற நிலையில் சக்தி வழிபாடாகியது.இந்து மரபில் சக்தியை வழிபடுபவர்கள் சாக்தர்கள்.சாக்த வழிபாடு சிவ வழிபாட்டிலிருந்து வேறுபட்டது.சக்தியின்றி சிவன் உயிரற்றதென சாக்தம் குறிப்பிடுகின்றது.இதிலிருந்து சக்தியின் தன்மை மற்றும் கிராமிய தெய்வங்களில் வல்லமை, மகிமை, அதியற்புத ஆற்றல் புலப்படுகின்றது.
இருக்கு வேதத்தில் ஒளியுடனும் செல்வத்துடனும் தொடர்புடையவளாக கூறப்படும் உஸா பசுக்களின் தாயாகவும் அழகிய இளம் பெண்ணாகவும் தெய்வங்களின் தாயெனவும் பிரபஞ்ச ஒழுங்கையும் அற ஒழுங்கையும் பேணுபவளாகவும் குறிப்பிடப்படுகிறது.
அக்கினி மற்றும் கருட புராணங்களில் எதிரிகளுக்கெதிராக, யுத்தத்தில் வெற்றியைத் தரும் சக்தியாக காளி குறிப்பிடப்படுகிறாள்.12 ஆம் நூற்றாண்டில் காளி வணக்கம் தமிழ்நாட்டில் பரவலாக காணப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் புகார்,மதுரை,வஞ்சிக் காண்டங்களையும் முப்பது காதைகளையும் 5001 பாடலடிகளையும் உள்ளடக்கிய பெருங்காப்பியமாகவுள்ளது.எல்லா பிரிவுகளையும் காதை என்று கூறுவது வழக்கமாயிற்று.காதையென்பதை பொதுவாக பாடல் என்றும் கூறலாம்.

புகார்க்காண்டம் பத்து காதைகளையும் மதுரைக் காண்டம் பதின்மூன்று காதைகளையும் வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளையுமாக மூப்பது காதைகளை சிலப்பதிகாரம் கொண்டுள்ளதுடன் பெண்மையின் பெருமையையும் நீதியின் வெற்றியையும் பேசும் ஒரு பெருங்காப்பியமாகவுமுள்ளது.

கண்ணகை வழக்குரையில் வரம்பெறு காதையில் கோவலனார் பிறந்த கதையும் அம்மன் பிறந்த கதையும் கப்பல் வைத்த காதையினுள் மீகாமன்,துரியோட்டு,கப்பல் வைத்தல் கதையும் கடலோட்டுக் காதையில் வெடியரசன் போர்,நீலகேசி புலம்பலும் வீர நாரணன் கதையும் மணிவாங்கிய கதையும் மற்றும்  விளங்கு தேவன் போரும் உள்ளடக்கப்பட கல்யாணக் காதை,மாதவி அரங்கேற்று காதை போன்றனவும் பொன்னுக்கு மறிப்பு காதையில் பொன்னுக்கு மறிப்பு கதையும் இரங்கிய காதலும் வழிநடைக் காதையில் வயந்த மாலை தூது,வழிநடையும் அடைக்கலக் காதை,கொலைக்களக் காதையில் சிலம்பு கூறல்,கொலைக் களக் கதை,அம்மன் கனாக் கண்ட கதையும் உயிர் மீட்பு கதையும் வழக்குரைத்த கதையும் குளிர்ச்சிக் காதையில் குளிர்ச்சியும் வழக்குரைக் காவியமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இக்காதைகள் மூப்பதும் கோவலன் கண்ணகி,மாதவி ஆகியோரின் பிறப்பு வளர்ப்பையும் கப்பல் கட்டி நாகமணி பெறச் சென்ற போது மீகாமனுக்கும் வெடியரசன்,வீர நாரணன்,விளங்கு தேவன் என்போருக்கும் இடையே நிகழ்ந்த போரையும் நாகமணி பெற்று வந்ததன் பின்பு கோவலனுக்கும் கண்ணகிக்கும் இடம்பெற்ற திருமணத்தையும் கோவலன் மாதவியுடன் இன்பமுற்றிருந்ததையும் மாதவியின் தாய்க்கு கோவலன் பொன் கொடுத்தல் மற்றும் அவன் மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வந்து அவளுடன் மதுரைக்கு செல்வதையும் மதுரையில் சிலம்பு விற்க சென்றபோது பாண்டிய மன்னனால் கொலையுண்டதையும் கண்ணகி பாண்டிய மன்னனுடன் வழக்காடி பின் மதுரையை எரித்ததையும் கண்ணகியின் கோபம் தணிய குளுத்தி பாடுதல் என்பவற்றை வி.சீ.கந்தையாவின் கண்ணகி வழக்குரை பதிப்பு கூறி நிற்கின்றது.

கண்ணகியம்மன் சடங்குக் காலங்களில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த திருமணம் கன்னிக்கால் சடங்காகவும் கண்ணகியின் கோபம் தணிய குளுத்தி பாடுவது குளிர்ச்சிக் காதையாகவுமுள்ளது.

இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஆகாமம் சாரா நாட்டார் வழிபாடுகள் முக்கியத்துவம் கொண்டதாக விளங்குகின்றது.பெரும்பாலும் கிராமியத் தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருப்பதுடன் கல் அல்லது மரமே தெய்வங்களது இருப்பிடமாகவுமிருக்கும்.உதாரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள கோராவெளி கண்ணகையம்மன் ஆலயம் ,துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலயம் போன்ற பல்வேறு ஆலயங்களை குறிப்பிடலாம்.

சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகை வழிபாடு கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே பெரு வழக்காயுள்ளது.கிழக்கு மாகாணத்தில் இற்றை வரை வருடா வருடம் சடங்காக நிகழ்த்தப்படும்கண்ணகையம்மன்,மாரியம்மன்,பேச்சியம்மன்,காளியம்மன்,திரௌபதையம்மன் முதலான பெண் தெய்வங்கள் பெண் தெய்வ வழிபாட்டின் வரலாற்றுத் தொடர்ச்சியை எடுத்துக்காட்டுவதனுடன் இவ்வாறான கிராமிய தெய்வங்கள் கிராமத்தின் காவல் தெய்வமாகவும் கிராமத்துக்கான பய பக்தியுடைய தெய்வமாகவும் கருதப்படுகிறது.

கண்ணகி சடங்கு வழிபாட்டில் ஈழத்தில் என்றும் சிறப்புப் பெற்று விளங்கும் பிரதேசம் கிழக்கிலங்கை என்றால் மிகையாகாது.சோழ நாட்டிலிருந்து சீர்பாத தேவிக்கு வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாதகுலமாகி வீரமுனையில் வாழலாயினர்.
சிங்கள மக்கள் பத்தினி தெய்யோ என்றும் தமிழ் மக்களால் கண்ணகை சடங்கும் என்று ஒவ்வொரு வருட வைகாசி மாதத்திலும் இச்சடங்கினை நிகழ்த்தி வருகின்றனர்.

கண்ணகையம்மன் சடங்குக் காலங்களில்  பக்தியோடு படிக்கப்படும் வாய்மொழி பயில்நிலையில் இன்றுள்ளகண்ணகி வழக்குரை நூல் பல மாற்றங்களைப் பெற்றிருப்பதை அறியக்கூடியதாகவுள்ளது.மட்டக்களப்பு அம்பாறை பிரதேச மக்கள் வழக்குரை காதையெனவும் வழக்குரை ஏடு என வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி,மனிதரும் தெய்வமாகலாம் எனும் மகுட வாக்கியத்தின் வடிவமானாள்.தன் நல்லொழுக்கத்தின் பயனாக தீயாய் மாறி தீமைகளை அழித்தவள்.தன் கணவனுக்கு நிகழ்ந்த அநீதிக்காக தேவர்களையே அழைத்து நியாயம் கேட்ட கற்பின் வலிமை கொண்டவள்.

பெரும்பாலான கண்ணகை அம்மன் ஆலயங்களில் பத்தசி சடங்கு முறைகளை காணக்கூடியதாகவுள்ளது. அம்மாளிடம் மண்டியிட்டு மன்றாடி வணங்குவதையே அடிப்படையாக கொண்டுள்ளது.அம்பாளுக்கு உச்சாடனம் பண்ணப்படும் மந்திரங்கள் தொடக்கம் போற்றிப் பாடப்படும் காவியங்கள் வரை இரந்து தன்னை அம்மையிடம் ஒப்படைத்து நீயே கதியம்மா என வழிபடும் ஆகமம் சாரா பத்ததி பூசை முறைமையினை துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலய சடங்கிலும் காணக்கூடியதாகவுள்ளது.

பொதுவாக கண்ணகியாலயங்களில் இடம்பெறும் ஏழு  மற்றும் ஐந்து நாட் சடங்குகளுள் திருக்கதவு திறத்தல் ஆராதனை, கும்பம் ஊர் சுற்றல்,கல்யாணச் சடங்கு,வட்டுக்குத்துச் சடங்கு திருக்குளிர்த்தி போன்ற சடங்குகள் இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது.காவடி எடுத்தல்,கற்பூரச்சட்டி ஏந்தல்,அங்கப் பிரதட்சணம்,அடி அளத்தல் என்பன சடங்குக் காலங்களில் பக்தர்களால் நேர்த்திக்கடன்களுக்காக செய்யப்படுவது வழக்கமாகவுள்ளது.

மட்டக்களப்பு வாவியினாலும் குளங்களினாலும் சூழப்பெற்ற துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலயம் கிழக்கும் தெற்கும் வயல் 
நிலங்களாலும் மேற்கும் வடக்கும் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்று கிராமத்தின் வட அந்தத்தில் அமைந்துள்ளது.
கோயிலை சுற்றிலும் சிறு சிறு குன்றுகளும் அதன்மேல் விருட்சங்களும் வளர்ந்து காணப்படுகின்றன.இக்கிராமத்தில் கண்ணகையம்மன் அருள்பாலிக்கும் இடத்தில் மாத்திரமே பாறைகள் காணப்படுவதால் இங்குள்ள அம்மனை கல்லடி அம்மன்,கல்லடி நாச்சி என இவ்வூர் மக்கள் பெயர் சொல்லி அழைக்கலாயினர்.

தற்போது கோயில் அமைந்திருக்கும் இடம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் காடடர்ந்த பகுதியாக காணப்பட்டுள்ளது.சில முனிவர்கள் அவ்விடத்தை தேர்ந்தேடுத்து ஆச்சிரமம் அமைத்து உறைவிடமாக்கிக் கொண்டார்கள்.இவர்கள் மந்திர தந்திர சித்து வித்தைகளில் மேம்பட்டு இருந்ததனால் இவ்வூர் மக்கள் இப்பகுதிக்கு செல்ல பீதியுற்றார்கள்.இம் முனிவர்கள் சக்தி வழிபாட்டை பின்பற்றியிருந்தார்கள்.

சில காலத்தின் பின் இம்முனிவர்கள் ஏதோ காரணத்தை யொட்டி வேறிடத்துக்கு சென்றுவிட்டார்கள்.இதன் பின்னர் மக்கள் அப்பகுதிக்கு சென்று ஊடாடித் திரிந்தார்கள்.இவ்வாறு சனநடமாட்டம் ஏற்பட்டு வரும் காலத்தில் இக்கிராமத்தை சேர்ந்தவொருவர் அங்கு சென்ற போது ஓர் ஆச்சரியத்தைக் கண்டார்.அங்கு மூன்று சிலைகளையும் முக்கோண வடிவமுடையதும் அதிக வேலைப்பாடுடைய இரு சோடிச் சிலம்பையும் தண்டச் சிலம்பு இரு சோடிகளையும் கண்ட அவர்கள் பயத்தோடு தான் கண்டதை கிராமத்து மக்களுக்கு எடுத்துக்கூறினர்.சிலைகள் உருவ அமைப்பில் கண்ணகை அம்சங்களை கொண்டு இருந்த படியால் கண்ணகை அம்மன் என்று நாமம் சூட்டி வழிபடலாயினர்.

மட்டக்களப்பு வாவியை வடமுகப்பாக கொண்டு குன்றையும் சிலையையும் நடுவணாகக் கொண்டு ஒரு கோயில் அமைத்து வழிபட்டுவந்த வேளையில் அக்காலத்தில் பல முனிவர்கள் வாழ்ந்த குறுமண்வெளி எனுமிடத்திலுள்ள கெங்காதசி ஐயர் என்பவரை வருவித்து மூன்று சிலைகளையும் காண்பித்ததுடன் அவர் சிலை வடிவில் அமைந்த கண்ணகையம்மனுக்கு பூசை செய்யும் விதிகளையுடைய பத்ததியொன்றை வழங்கினார்.

வருடா வருடம் சடங்கு நடத்திய தன்மார் எனும் பூசகருக்கு அம்மனின் தரிசனமும் கட்டளையும் கிடைத்தது.அதாவது இந்த மூன்று சிலைகளில் மிக்க ஒளியுடையதும் அகோரம் பொருந்தியதுமான சிலையை கோயிலுக்கு எதிரேயுள்ள மட்டக்களப்பு வாவியின் நான்கு  உபவாவிகள் ஒன்றுடனொன்று சேருமிடத்தில் அமிழ்த்தி விட வேண்டும் என்ற அம்மனின் கட்டளைக்கு இணங்க அதன் படி கிராம மக்களுடன் தன்மார் எனும் பூசகர் செய்து முடித்ததன் பிற்பாடு வருடா வருடம் பூசை செய்யும் பூசகர்கள் இறக்கும் நிலை நின்றுவிட்டது.சடங்கு செய்யும் வேளையில் தீபம் வாவியை நோக்கி காட்டப்படுவதும் தெய்வமேறியாடுபவர்கள் வாவியை நோக்கி குதித்து ஓடுவதும் இன்றும் கூட இருந்து வருகின்றது.

மூன்று சிலைகளில் மற்றைய சிலைகளில் ஒரு சிலை கும்ப ஊர்வலத்தின்; போது எடுத்துச் செல்லப்பட மற்றையது ஆலய கற்பக்கிரகத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றது.
துறைநீலாவணை கண்ணகையம்மன் ஆலய வளாக சூழலில் வதனமார்,நாகதம்பிரான்,வைரவர் ஆலயங்களுடன் பதினொரு தேவதைக்குரிய கோயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சுருங்கக் கூறின் பொதுவாக சிலப்பதிகாரம் மற்றும் கண்ணகி வழக்குரை ஆகிய இரு நூல்களினதும் கதையமைப்பு ஒன்றாகவுள்ளதுடன் இவ்விரு காவியத்தினை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு வருட வைகாசி மாதத்திலும் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.மட்டு அம்பாறை கண்ணகியம்மன் ஆலயங்களில் முதல் நாள் கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகி வைகாசி மாத பூரணை அல்லது பூரணையை அடுத்து வரும் திங்கட்கிழமை குளுத்தி பாடி நிறைவு பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கும்.

கண்ணகி வழக்குரை காவியம் சடங்கு வழிபாட்டில் பராயணம் செய்யப்படும் தன்மையாதலினால் சைவ சமய வழிபாட்டு மரபு பண்பாட்டு அமைவுக்கு ஏற்ப கண்ணகியை பிறப்பிலேயே வழிபடப்படுகின்ற அம்மனாக காட்டப்பட்டுள்ளதுடன் கண்ணகி கண் கண்ட தெய்வமாகவும் கண் எதிரே காட்டுபவளாகவும்,காவல் தெய்வமாகவும் வளம் மற்றும் சௌபாக்கிய மகப்பேற்று பாக்கியத்தை பெற்றுத் தரும் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள்.

அம்மை போன்ற தொற்று நோய்களில் இருந்தும் இயற்கை அழிவிலிருந்தும்தீய சக்திகளிலிருந்தும் அகால மரணங்களிள் இருந்து விடுபடவும் மழை மற்றும் மக்கட் பேறு வளம் பெறவுமே கிராமிய பெண் தெய்வ வழிபாடுகள் பய பக்தியுடன் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
தெய்வ நிலை அடைதல்,கனவு காணுதல்,வஞ்சினம் கொள்ளுதல்,பழி தீர்த்தல்,நீதிக்காக போராடுதல்,இல்லற கடமைகளை புரிதல் என்பவை கண்ணகி வழக்குரை மற்றும் சிலப்பதிகார கண்ணகி பாத்திரத்துக்கூடாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் ஆண்களினால் நீதியீனமாக நடத்தப்பட்ட பெண்கள் தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக கிளர்ந்தெழுந்த பொழுது தெய்வமாக மேலுயர்த்தப்பட்ட வரலாற்றை உணர்த்துவதாகவுள்ளது.

மஞ்சந்தொவாய்,வந்தாறுமூலை,கன்னங்குடா,கோவில்போரதீவு,ஆரையம்பதி,புதுக்குடியிருப்பு,கோட்டைக்கல்லாறு,தம்பிலுவில்,திருககோயில்,காரைதீவு,ஒந்தாச்சிமடம்,11 ஆம் மற்றும் 15 ஆம் கிராமம்,துறைநீலாவணை போன்ற மட்டு அம்பாறை மாவட்டங்ளிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் கண்ணகியம்மன் சடங்கு நிகழ்த்தப்பட்டவண்ணமுள்ளது என்றால் மிகையாகாது.
முற்றும்.

கிழக்கிலங்கையில் கண்ணகி அம்மன் சடங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இக்கட்டுரையின் அவசியமும் உணரப்படுகின்றது.

பாக்கியராஜா மோகனதாஸ்
(துறைநீலாவணை)Comments