மறைஞானி சித்தானைக்குட்டி சுவாமிகளது 63 வது குருபூசை தினத்தையொட்டி வீரகேசரிப் பத்திரிகையில் 02.08.2014 இல் இக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. மறைஞானம் நல்கும் சித்தானைக்குட்டி சுவாமிகள் மனித வரலாறுசார் விடயம் வௌ;வேறு வகையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கப்பட்டாலும் தத்துவத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் மத்தியில் மனிதன் வாழ்ந்து கொண்டு வருகின்றான். காலாகாலமாக இந்த வாழ்வு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும், சுகமானதாகவும் அமைவதற்கு பல சிந்தனையாளர்கள் வௌ;வேறு வகையான நோக்கில் உண்மை பற்றிய தேடலுக்கு அல்லது விசாரணைக்கு (Vision of Truth) முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தேடல் “மேலைத்தேச சிந்தனை மரபிலும், கீழைத்தேச சிந்தனை மரபிலும் வௌ;வேறு வகையாக அமைந்;திருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.” ஆதிகாலத்தில் இருந்து இன்றுவரைக்கும் இந்தத் தேடல் சடவாதம் சார்ந்ததாகவும், கருத்துவாதம் சார்ந்ததாகவும் இருந்ததை அவதானிக்கலாம். ஒருவகையில் சடவாதத்திற்கும் கருத்துவாதத்திற்கும் இடையிலான தொடர்பிலும் வேறுபாட்டிலும் தத்துவ சிந்தனையை அல்லது சிந்தனையாளர்களை தொடர்புபடுத்திப் பார்க்கலாம். ஆரம்ப மேலைத்தேச சிந்தனையில் சோக்கிரட்டீஸ் கூறிய “உன்னையே நீ அறிவாய்” (Know Thy self) என்ற கூற்று இன்றும் மனிதனுக்குப் பயன்படுகின்றது. ஒரு மனிதன் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு வகையான பரிணாம ஆளுமைத் தன்மையைக் கொண்டிருக்கின்றான். இதற்குப் பின்புலமாக பல்வேறு காரணிகள் பல்வேறு வகையாக செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றது. ஒரு மனிதனுடைய உள்ளம் பௌதீக விடயங்களில் நாட்டம் கொள்வதை விட பௌதீக அதீத விடயங்களில் (Metaphysical world) நாட்டம் கொள்வது மிகவும் முக்கியமாகும். மேலைத்தேச மெய்யியல் வரலாற்றில் ஜெர்மனிய தத்துவ வாதியான இமானுவல்காண்ட் கூறுகின்ற கடந்தநிலை கருத்துப் பொருளவாதமும்; (Transcendental Idealism) அதேபோல் கெகல் கூறுகின்ற முழுமைவாதமும் (Absolutism) பௌதீக அதீதம் பற்றிய தேடலுக்கு எடுத்துக்காட்டாகும். இந்தப் பின்னனியில் கீழைத்தேச சிந்தனை மரபு முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கின்றது. இது வாழ்க்கையோடு இணைந்த சிந்தனை என்பதால் வாழ்க்கையினுடைய உண்மையை விசாரணை செய்வதில் ஏராளமான தத்துவவாதிகள், மறைஞானிகள், சித்தர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்கள். ஒரு மனிதன் தனக்குள் உள்ள சக்தியைப் பயன்படுத்தி பௌதீத அதீத உண்மையை உணர்வதற்கு முயற்சிக்க வேண்டும் என்ற கீழைத்தேச கருத்தியல்வாத (Idealism)நோக்கில் பல கோட்பாடுகளையும், நூல்களையும், சூத்திரங்களையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அந்தப் பணியில் ஒருவர் பௌதீத அதீதத்தை உணர்ந்து அல்லது தெளிந்து கொள்வது “The Person for Enlightment” என்ற நிலையை குறிக்கிறது. இந்த நிலை சாதாரண மனித நிலையை விட ஒரு உயர்ந்த நிலையாக (Super Man) அதீத நிலையாக எடுத்துக்கூறலாம். இந்தப்போக்கில் சாதாரண நிலையில் உள்ள மனிதர்களைவிட தெளிவடைந்த மனிதர்களாக சித்தர்களையும் மறைஞானிகளையும் ஜீவன்முத்தர்களையும் முனிவர்களையும் அடையாளங்காணமுடிகின்றது. ‘சித்’ என்றால் அறிவு என்று பொருள். மேலும் சித்தத்தை அடக்கியவன், சாத்திரத்தை சுட்டெரித்தவன், ஜெகமெல்லாம் சிவமென்று இருப்பவனே சித்தன் எனப்படுகின்றான். இப்படி சித்தராக வாழ்ந்தவர்கள் அநேகர்;. இந்தப் பின்னனியில் இந்தியாவில் பல சித்தர்கள் தோற்றம் பெற்று பல்வேறு வகையான உணர்வுகளையும், அனுபூதி நிலைகளையும் பெற்றனர். அவர்களை பதினெண் சித்தர் மரபு, நவநாத சித்தர் மரபு என இரண்டாகப்பிரிக்கலாம். இவர்கள் ஆத்மீகம் (Spiritualism) சார்ந்த பௌதீக அதீத உண்மைத் தன்மையை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு; பல்வேறு செயற்பாடுகளை மிகவும் அற்புதமாகச் செய்ததனை வரலாற்றில் அவதானிக்கலாம். இந்தப் பின்னனியில்தான் மறைஞானி சித்தானைக்குட்டி அவர்களைப் பார்க்கலாம். சுவாமிகளின் இலங்கைக்கான வருகை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நான்கு சித்தர்கள் ஒரே காலப்பகுதியில் வந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரே சித்தானைக்குட்டி சுவாமிகள். இந்தியாவில் இருந்து வந்த சித்தர் பரம்பரையில் கடையிற் சுவாமி, நவநாதசித்தர், பெரியானைக்குட்டி, சித்தானைக்குட்டி சுவாமிகள் போன்றோர் இடம்பெறுகின்றனர். சித்தானைக்குட்டி சுவாமிகளின் வரலாற்றை சுருக்கமாக நோக்கும் போது, தென்னிந்தியாவில் இருந்த இராமநாதபுர சிற்றரசருக்கு ஒரே ஒரு மகன். அவரது பெயர் கோவிந்தசாமி என்பதாகும். அரசகுடும்பத்தில் பிறந்து வாழ்ந்து வந்த கோவிந்தசாமிக்கு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னர், அரச போகங்களில் நாட்டம் ஏற்படவில்லை. உண்மை உணர்ந்த இவர் வேறு ஒரு வாழ்வை வாழ்வதற்கு விரும்பினார். அவரது உள்ளம் துறவை நாடியது. உலகப்பற்றுக்கள் அனைத்தையுமே துறந்தார். இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து இலங்கையிலே உள்ள கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு என்னும் கிராமத்திலே சித்தானைக்குட்டி எனும் பெயருடன் வந்து வாழ்ந்தார். உண்மையில் இவரின் உள்ளம் தெளிவடைந்து விட்டது. நேரடியாகவே இறையியல் உணர்வு மிக்கவர். அது மட்டுமல்ல. இவர் பௌதீக அதீத உலகோடு இணைந்தவர்;. இவர் உலக வாழ்க்கையையும் அதன் தன்மையையும் இயல்பையும் அறிந்தவர். ஏனையோருக்கு விளங்காத விடயங்கள் இவருக்கு அதிகமாகத் தெரிந்திருந்தன. இவர் காரைதீவு வீதிகளில் எளிமையாக நாள்தோறும் உலாவந்தார். ஒரு நிலையில் இவரது செயற்பாட்டையே அங்கு வாழ்ந்த மக்கள் முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக, காரைதீவில் வாழ்ந்த மக்களுக்கே இவரைப் பற்றி அறியமுடியவில்லை. ஒரு பொருள் இருக்கும் போது அதன் பெறுமதி தெரியாது என்பார்கள். அதேபோல் மக்கள் அவரை விளங்காது பல்வேறு வகையாக வியாக்கியானம் கொடுத்ததாக அவரது காலத்தவர்கள் கூறுகின்றனர். சுவாமிகளது அதீத செயல்கள் தம்முடைய ஞான வலிமையினால், அவ்வூரிலேயே தமது சித்துக்கள் அனைத்தையும் வெளிப்படுத்தாது அயல் கிராமங்களிலும் சென்று பல சாதனைகளை (அற்புதம், சித்து) செய்துள்ளார். அந்த வகையில் அக்கரைப்பற்று, பனங்காடு, கோளாவில், கன்னங்குடா, தீவுமுனை, கல்முனை, ஏறாவூர் போன்ற இடங்களுக்கு அவர் சென்று பல அற்புதங்களைச் செய்துள்ளதாக 1973 இல் நா.முத்தையா என்பவர் ‘முப்பெரும் சித்தர்கள்’ என்ற தனது நூலில் கூறியுள்ளார். அந்த நூலில் 86 பக்கம் தொடக்கம் 89 ஆம் பக்கம் வரை சுவாமி விபுலானந்தருக்கும் சித்தானைக்குட்டிக்கும்; இடையில் கல்முனையில் நடந்த விவாதம் பற்றி கூறுகிறார். அதாவது, சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு சுவாமி விபுலானந்த அடிகளார் மீது தனி ஒரு மதிப்பும் அன்பும் இருந்து வந்தது. ஆனால் சித்தானையின் அருளாட்டங்களைச் சுவாமி விபுலானந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருநாள் நண்பகல் நேரம். சித்தானைக்குட்டி சுவாமிகள் கல்முனை இராமகிருஸ்னமிசன் பாடசாலை ஒழுங்கையால் சென்று கொண்டிருந்தார். பாடசாலை வாயிலை அடைந்ததும் பாடசாலைக்குள் புகுந்தார். ‘சாமியாரே, நாய்கட்டியிருக்கா என்று கேட்டுக்கொண்டே உள்ளே சென்றார்கள். சுவாமி விபுலானந்தருடன் நொத்தாரிஸ் இராNஐஸ்வர முதலியார் பேசிக் கொண்டிருந்தார். இருவரில் எவராவது சுவாமிகள் வாருங்கள் என்றோ, அன்றி எழுந்தோ, ஆசனம் கொடுத்தோ உபசரிக்கவில்லை. சித்தானைக்குட்டி சுவாமிகள் தானாகவே சென்று சுவாமி விபுலானந்தர் இருந்த சாய்மனை நாற்காலியின் வலது பக்கத்துச் சட்டத்தில் உட்கார்ந்தார்கள். சித்தானைக்குட்டி சுவாமிகள் விபுலானந்த அடிகளாரைப்பார்த்து பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் விபுலானந்தர் கோபப்பட்டதாகவும் இதனை அவதானித்த சித்தானை சிரித்துக்கொண்டு அமைதியாக எழுந்து “ நாய் கட்டாதவன் சாமியாவதெப்படி” என்று கூறினார். இந்த கூற்று விபுலானந்தரையே உள்ளகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியது. இங்கு சித்தானைக்குட்டி சுவாமிகள் நாய் என்று குறிப்பிட்டது ஆணவத்தையாகும். மேலும், நா.முத்தையா அவர்கள் தனது நூலில் சித்தானைக்குட்டி சுவாமிகளது பல அற்புதங்களையும் விளக்குகிறார். சித்தானைக்குட்டிச் சுவாமிகள் கல்முனைச் சந்தியில் தெரு ஓரத்தில் ஒருநாள் உட்கார்ந்து இருந்தார்கள். சில அடியார்கள் சுவாமியைச் சூழநின்றார்கள். சுவாமி முன்னிலையில் ஒரு அமைதி காணப்பட்டது. திடீரென உடுத்திருந்த வேட்டியை உரிந்து கசக்கத் தொடங்கினார். கூட நின்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். “என்னடா பார்த்துக்கொண்டு நிற்கின்றீர்கள், கதிர்காமத்திரை தீப்பிடித்து எரிகிறது. கசக்கி அணையுங்களடா” என்றார். “இதை அணைப்பது எவ்வளவு கஸ்டம் தெரியுமோ?” என்று கூறினார். கூட நின்றவர்கள் நிலைகுலைந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். ஒருவர்கூட அணைக்க முன்வரவில்லை. பின்னர் சுவாமிகளே அதனைக் கசக்கி அணைத்தார்கள். கல்முனைச் சந்தியில் சுவாமியைச் சந்தித்தவர்கள் சுவாமியின் மகிமையை உணரத் தலைப்பட்டார்கள். மேலும், ஒரு நாள் மன்னார்க் கடலில் மீன்பிடிக்க நால்வர் சென்றிருந்தனர். அவர்கள் நால்வரும் நான்கு நாட்களாக கடலிருந்து திரும்பவில்லை. எவ்வித செய்தியும் கிடைக்காததால் வீட்டில் உள்ளவர்கள் துக்கம் கொண்டாடினர். வீட்டில் ஒரே அழுகை ஒலியாக இருந்தது. சுவாமிகள் மன்னாருக்குச் சென்றிருந்த சமயம் இந்த வீட்டில் அழுகை ஒலிக்கு காரணம் என்ன என்ற வினாவினார். அவர்கள் நடந்ததைக் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து சுவாமிகள் அந்த வீட்டிற்குச் சென்றார்கள். ஒரு தென்னம் மட்டையை எடுத்து முற்றத்தில் ‘ஏலேலோ ஏலைலே’ என்று கூறிய வண்ணம் தானே தண்டு வலித்துக்கீறினார் அரை மணித்தியாலமாக இது நிகழ்ந்தது. முற்றம் முழுவதும் புழுதிக் காடாக மாறிவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் இது ஏதோ பைத்தியம் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் கடலில் காணாமல் போன நால்வரும் வந்தனர். அழுகை மகிழ்வொலியாக மாறியது. நால்வரும் சுவாமிகள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். இந்தச் சுவாமிகள் இல்லாவிட்டால் நாங்கள் கடலில் ஆழ்ந்திருப்போம் என்றனர். சுவாமிகள் தகுந்த சந்தர்ப்பத்தில் வந்து காப்பாற்றினார் என்று கூறியதோடு, இவர் எப்படி எங்களை விட்டு இங்கே வந்து சேர்ந்தார் என்று ஆச்சரியமும் தெரிவித்தனர். இவற்றோடு திமிர்வாதக்காரர் நிமிர்ந்து நடக்கச் செய்தமை, கதிர்காமக் காட்டில் வழிதப்பியவர்களுக்கு வழிகாட்டியமை, சமைக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்குகறி ஒரு கிழமைக்கு சூடு ஆறாமல் இருக்கச் செய்தமை, பைத்தியத்தை மாற்றிய பக்குவம், தீவுமுனை வெளியில் மழை பெய்வித்த அதிசயம், கண்ணோயை உமிழ்நீரைக் கொப்பளித்து நீக்கியமை, மண்டையில் தாமே வேப்பங்கட்டையால் அடித்து ஏற்படுத்திய காயத்தை, பின்பு வெற்றிலைத் தாம்பூலத்தால் காயச் செய்தமை, பிள்ளை இல்லாதவர்களுக்குப் பிள்ளைப் பேறளித்தமை, மண்ணைக் கற்கண்டாக்கியமை போன்றனவும் அவரால் மேற்கொள்ளப்பட்ட அற்புதங்களிற் சிலவாகும். மேற்கூறிய அனைத்து செயல்களும் தம்முடைய உள்ளுணர்வினைக் (Intuition power) கொண்டு வெளிப்படுத்தியவையாகும். ஆனால் இது இலகுவான காரியமல்ல. இத்தகைய செயல்களை நிகழ்த்தியதற்கான சான்றுகள் உள்ளன. இன்று அவரை வழிபடுபவர்கள் இதனைப்பற்றி சரியாகக் கூறுகின்றனர். இத்தகையவற்றையெல்லாம் நிகழ்த்தியமை மட்டுமின்றி பின்னர் தான் இறக்கப்போகும் நேரம், காலம் எல்லாவற்றையும் முன்கூட்டியே கூறினார். இவர் வாழ்ந்த அதே ஊரில் தான் அவரது சமாதியும், இராமகிருஸ்ணமிஸன் ஆச்சிரமமும், சுவாமி விபுலானந்தரின் பிறந்த வீடும் அமைந்துள்ளன. தற்பொழுதுங்கூட அக்கிராமத்தில் இம்மூன்றும் காணப்படுகின்றன. சிறப்பாக சித்தானைக்குட்டியின் சமாதியை ஒரு நினைவுச்சின்ன ஆலயமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இதைத் தரிசிப்பதற்கு அவ்வூரில் மட்டுமன்றி ஏனைய பல ஊர்களிலிருந்தும் மக்கள் அச்சமாதியை தரிசித்து வருகின்றனர் என்பது அவ்வூரின் பெருமைக்குரிய விடயமாகும். “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” எனும் சாத்திரக்கூற்றிற்கேற்ப உண்மையை அறிந்தவர்கள் அல்லது தெளிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களின் வருகையினாலேயே உண்மை உணரப்பட்டது மட்டுமல்ல, சித்தர் இலக்கியம், சித்தர் வைத்தியம், யோகக்கலை, மர்மக்கலை என்பன வளர்வதற்கு வித்திட்டனர். இந்த நோக்கில் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமியும் சமநிலை ஆளுமையுடனும், எளிமைத்தன்மையுடனும், யதார்த்தத்தின் உண்மையை விளங்கியவராகவும் வாழ்ந்து அவர் கூறியபடியே 10.08.1951 இல் சமாதிநிலை அடைந்தார்கள்;. அன்றிலிருந்து இன்றுவரை காரைதீவு மக்கள் அவரது ஞாபகமாக பல நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். அத்தோடு வருடாவருடம் குருபூசையையும் சிறப்பாக நடாத்துகின்றார்கள்;. கலாநிதி க.கணேசராஜா, முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். |
[Untitled] >