தமிழ் தலைகளின் மனமெலாம் மாறல் வேண்டும் ! உள்ளத்தில் உறுதி வேண்டும் உண்மையாய் நடத்தல் வேண்டும் கள்ளத்தை போக்க நாளும் கடவுளை வேண்டல் வேண்டும் பள்ளத்தில் வீழ வைக்கும் பதரென நிற்பார் எல்லாம் மெள்ளவே திருந்தி வாழ உள்ளத்தை திருத்தல் வேண்டும் தெள்ளிய அறிவு வேண்டும் தேர்ந்தநல் உறவு வேண்டும் உள்ளமாம் கோவில் தன்னுள் ஒழுக்கத்தை இருத்தல் வேண்டும் கல்வியைக் காணா நிற்பார் கைதனைப் பற்றிக் கொண்டு மெள்ளவே அவர்கள் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்டல் வேண்டும் சாதியால் சண்டை செய்வோர் சமயத்தால் சண்டை செய்வோர் போதிய அறிவைப் பெற்றால் பூக்குமே நல்ல வாழ்வு ஆதியாய் நிற்கும் அந்த ஆண்டவன் முன்னே நின்று மோதியே நிற்போம் ஆனால் முழுமையே சிதைந்து போகும் வெட்டிநீ வீழ்த்து என்று வேதங்கள் சொன்ன துண்டா தொட்டதும் கையை வெட்ட துறவியர் சொன்ன துண்டா சட்டங்கள் மக்கள் எல்லாம் எங்கள் கைகளில் இருக்கு தென்று கொட்டமே அடிக்கும் கூட்டம் குழப்பத்தைத் தவிர்த்தல் வேண்டும் கொட்டிடும் மழையைப் போல கோரமாம் புயலைப் போல மட்டிலா கொடுமை செய்வார் மனமெலாம் மாறல் வேண்டும் மனங்களில் அமைதி வேண்டும் மற்றவர்க் கிரங்க வேண்டும் சினமெனும் நெருப்பை வாழ்வில் தீண்டிடா இருத்தல் வேண்டும் உலகிலே வாழ்வோர் எல்லாம் உறவென எண்ணல் வேண்டும் மனமுறை மாசைப் போக்கி இனமெலாம் இணைந்து வாழ்வோம் ! அன்புடன் குமார் ( கே.சீ.கே.) ஜெர்மனி. ![]() |
[Untitled] >