[Untitled]‎ > ‎

08.03.2014- மௌனத்தில் மொழி தேடும் பெண்..

posted Mar 8, 2014, 3:42 AM by Unknown user
பெண் என்பவள் பல்வேறு வளர்ச்சிப்படிகளில் பலபாத்திரங்களை ஏற்று  செயற்படுகிறாள். சிறு வயதில்  மகளாகவும், சகோதரியாகவும், பருவம் வந்ததும் மனைவியாகவும், தயாகவும், வயது  முதிர்ந்தபின் மாமியாகவும், பாட்டியாகவும் மாறுகின்றாள்.

ஒவ்வொரு நிலைகளிலும் வெ வ்வேறு கடமைக்குரியவளாக செயற்படுகிறாள். தன் பெற்றோருக்கு கட்டுப்பட்டவளாகவும், அவர்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுபவளாகவும், குடும்பத்திலுள்ள சகோதரர்களுக்கு முன்மாதிரியாகவும் செயற்படும் பொறுப்பினை நிறைவேற்றுகிறாள். பெற்றோர் முற்போக்கு கொள்கையுடையவர்களாக இருந்தால் பெண் பொருத்தமாக வளர்க்கப்படுவாள். கல்வியில் சிறந்துவிளங்குவாள். அடக்கமாக, அமைதியாக குடும்பப் பாங்காக, அதேவேளை தன் கருத்துக்களைத் தைரியமாகத் தெரிவிக்கும் துணிச்சலுடையவளாக காட்சியளிப்பாள்.

பெற்றோர் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பெண்களும் உள்ளனர். தன் விருப்பப்படி வாழ்க்கையை  அமைத்துக் கொள்ளும் பெண்களும் உள்ளனர். பெற்றோர் தெரிந்து வாழ்க்கையில் மகிழ்வாக குடும்பம் நடத்தும் பெண்களும் உண்டு. தான் தெரிந்து வாழ்க்கையில் அல்லாடும் பெண்களும் உண்டு. தான் வாழ்க்கையைத் தெரிவு செய்யும்போது பெண் என்பவள் அன்பைத் தவிர வேறெதையும் வேண்டாத அந்தநரங்க காதலியாகவே காட்சியளிக்கிறாள்.

“பாதைகள் புதிது பயணங்கள் புதிது” என அவள் வாழப்புகுந்த குடும்பத்துடன் சிந்தனைகளிலும் வார்த்தைகளிலும் வக்கிரவலைவிரிக்கும் வனிதாமணிகளையும், மறவர்களையும் சந்திக்கின்றாள்.

வாழ்க்கை என்னை நேசிக்காவிட்டாலும் வாழ்க்கையை நேசிப்பவள் நான் என வாழ முயற்சிக்கும் பெண்ணிடம் அவள் காதலன் மற்றவர் என்மீது அன்பு செலுத்தாவிட்டாலும் அன்பு செலுத்துபவன் நான் என்ற கோட்பாட்டைப் பிரயோகிக்கையில் வாழ்க்கையே புயல் சுமந்த மௌனங்களாக மயானத் தெருக்களாக மாறிவிடும். இவ்வாறான சூழலில் தன் அன்புக் குழந்தைகளின் அம்மா என்ற பாத்திரத்தை ஏற்கிறாள். அதைனத்தையும் புறந்தள்ளி “அம்மா” என அழைக்கும் குழ்ந்தையின் மழலையில் தன்னைப் பறிகொடுத்தவளாக, அவர்களைச் சரியாக வளர்ப்பதே தலையாயகடன் எனக்கருதி அக்கடமையைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறாள். தன்னம்பிக்கை, இறைநம்பிக்கை, கடமையுணர்வு என்பன அவளுக்குத் தோள் கொடுக்கின்றன.

அதிக அலங்காரம் மனிதனை அந்நியப்படுத்திவிடுவதுபோல குழந்தை மீதான அதிக அடக்குமுறையோ, அதிக விட்டுக்கொடுப்போ அவர்களை குடும்பத்திலிருந்து     அந்;நியப்படுத்திவிடும். நாம் கற்றுக்கொண்டதும், முன்னோர்களால் அனுபவப்பட்டுக் கூறப்பட்டனவுமான உளவியல் கருத்துக்களை பொருத்தமாகப் பிரயோகிப்போமானால் பொருத்தமான நற்பிரஜைகளை பிள்ளைகளை சமூகம் பெற்றுக்கொள்ளும். படகு ஒழுங்காக போய்க்கொண்டிருந்தால்தான் அதில் பயணம் செய்யும் நாமும் விருப்பம்போல் வலையை வீசிப்பார்க்கலாம். தண்ணீருக்குள் படகே மூழ்கித்தரைதட்டிப் போனால் நாம் வலைவீச முடியாது நம்மைத் தேடித்தான் வலை வீசிக் கொண்டிருப்பார்கள்.

அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணாயின் குடும்பக் கடமைகள். சமூகக் கடமைகள். அலுவலகத்தில் ஆடுபுலி ஆட்டம், புகுந்த வீட்டில் தன்மகன் அரசாளத் தந்திரங்கள் செய்யும் கைகேயிகள், யாராலும் வளைக்க முடியாத கைகேயியின் உள்ளத்தை வளைத்து உடைத்த இனையற்ற வில்லாளிக்கூனிகள், தந்திரத்திட்டங்கள் தட்டும் சகுனிகள் இவர்களுக்குள் திண்டாடி இறுதியில் வனவாச சோகங்கள் அவளுக்கு, அரசாளும் யோகங்கள் சிலருக்கு.

ஒரு புதிய வைகறையின் வெளிச்ச விலாசமாய் விரைந்து செல்லும் குடும்ப வாகனத்தில் காதல் குறைகிறது. கடமை மேலோங்குகிறது.  ஊமையாகிப் போய்க் கிடக்கும் குடும்பம் எழுந்து நடக்க ஊன்றுகோலாக அவள் மாற வேண்டியுள்ளது. பல குடும்பங்கள் வாழ்வதற்காக அவள் தன் கணவனுடன் கழிக்கும் சந்தோஷமான நேரங்கள், பிள்ளைகள் தம் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் பொழுதுகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது. தர்மத்தின் சிறகுகள் வெட்டப்படுகின்றன. அதர்மத்தின் சிறகுகள் வருடப்படுகின்றன. கணவன் சிபிச்சக்கரவர்த்தியாகின்றான். இவ்வேளை தாயாகவும், தந்தையாகவும் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு பெண்ணுக்கு.

இளம் வயதிலுள்ள தன்னையும் பாதுகாத்து, தடுமாறும் வயதிலுள்ள பிள்ளைகளையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்புக்காக சிறந்த ஒரு இல் வாழ்க்கை வாழ்வதாகவும், தன் குடும்பக் கடமைகளை செய்வதுபோல் மற்றவர்களை நம்பவைக்கும் கணவனக்கு ஏற்ற வகையில் நடிகையாக நடிக்க வேண்டிய வகிபாகமும் பெண்ணுக்குண்டு. கோடுகளைத் தாண்டியதால் அவதிப்பட்ட சீதைகளை விட கோடுகளைத் தாண்டமுடியாமல் அவதிப்படுகின்ற சீதைகளைக் கோடுகள் கூடுகளாகாமல் கூண்டுகளாகி விடும் அவலங்களும்  உண்டு.

பாரதிகண்ட புதுமைப்பெண்ணாக பெற்றோர் பெண்களை  அறிவூட்டி புதுயுகம் படைக்க முயற்சித்தாலும், பாரதியின் புரட்சிக்கப்பால். புரட்சிகரமாக 21ம் நூற்றாண்டில் 18ம் நூற்றாண்டிற்கான புதுமையான இவ்வாறான மனிதர்களும் இருக்கிறார்கள். விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்பதும் விந்தையாகின்றது. சபையில் திரௌபதையின்  துகில் உரியப்பட்டபோது பார்த்திருந்த தருமனை பொறுமையின் சிகரம் என பாராட்டிய சமூகமல்லாவா? அன்பேயுருவான கண்ணகி தன் கணவனைக் கொன்றவர்களிடம் அன்பின் சாயலே தெரியாதவளாக, கோபமே மேலோங்கி அரசனதும், கோப்பெருந்தேவியினதும் உயிரைப் பறித்தும் கோபம் அடங்காத நிலையில் ஊரையே எரித்தாள். இன்று வழக்குரைக்க முடியாமல் மௌனத்தில் மொழி தேடும் கண்ணகிகள் எத்தனை பேர். தாய்வழிச் சமுதாயத்தின் சாயலாக விளங்கும் தாய்த் தெய்வம் இவர்களின் முகவரியைக் கண்டு பிடிப்பாளா? காதலுடனும் கனவுகளுடனும் கைபிடித்த கணவனுடன் வாழ முடியாத வேதனையும், கணவனை அனியாயமாக இழந்த துயரமும் உன்னையன்றி வேறு எத்தெய்வத்திற்குப் புரிய முடியும்?

அடிமைத் தனத்தின் அடையாளமான கட்டுக்களிலிருந்து விடுபட்டு ஆக்கபூர்வமான சிந்தனைகளின் உழைப்பின் வடிவமான கட்டுமானங்களிற்கு பெண்கள் வரும்வரை நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின என்று கும்மியடி என்ற பாடலும் கேள்விக்குறியாகின்றது. மனங்கள் மாறும்போதுதான் பெண்ணுக்கான விடியலும் ஏற்படும். அது எத்தனை  நூற்றண்டுகளாயினும் சரி.

 

திருமதி. வசந்தா குமாரசாமி
செயலாளர்
மட்/ மாவட்ட மகளீர் அமைப்பு,
இலங்கை  தமிழ் ஆசிரியர் சங்கம்.

தகவல்::  
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா



Comments