[Untitled]‎ > ‎

10.05.15- அன்னையர் தினம் உருவான வரலாறு..

posted May 9, 2015, 12:29 PM by Unknown user

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து தமது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இணையத்தில் அன்னையர் தின வாழ்த்துகளை படிக்கும் போது அவற்றுக்கு சமனாக இந்த நாளை கட்டாயம் கொண்டாடத் தான் வேண்டுமா என்ற ஏளனங்களும், கிண்டல்களும் கலந்த பின்னூட்டங்களும் கருத்துப் பகிர்வுகளையும் படிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நேரும் போதெல்லாம் மனது வேதனைப்படும்.

ஒவ்வொரு நிகழ்வுகளும் வரலாறு ஆகாது..ஆனால் சில விஷேஷமான குறிப்பிட்ட நிகழ்வுகள் சம்பிரதாயங்களாக – ஏதோ ஒரு வரலாற்றின் சுவடுகளாகத் தான் எம்மோடு கூடவே வருகின்றன. அதே போல் அன்னையர் தினத்துக்கென்றும் பல காரணங்களும் வரலாறும் பண்டை காலந்தொட்டு இருக்கத் தான் செய்கின்றது. அந்த வரலாறுகளைப் பற்றித் தெரியாதவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை…..!!

பண்டைக் காலங்களில் அன்னையர் தினம் என்பது பெண்கடவுள்களை அம்மாவாக போற்றிக் கொண்டாடப்பட்டிருக்கின்றன. உலகில் தோன்றிய எல்லா மதத்திலும் பெண் கடவுள் இன்றியமையாத ஒரு படைப்பாகியிருந்திருக்கிறது. ஏன் நமது இந்து சமயமே அதற்கு பெரிய ஒரு உதாரணமாக கொள்ளலாமே…இயற்கையையும், அனோமதேய சக்தியையும் பெண்ணின் வடிவாக போற்றியிருப்பது கண்கூடான விசயங்கள் . நதியிலிருந்து விதி மகள் வரை பெண்னின் வடிவம். பெண்ணைப் பெரும்பாலும் தாயின் வடிவாகவே போற்றினர்.

உலகில் அன்னையர் தின வரலாற்று சுவடுகளை தேடிக் கொண்டு போனால் பண்டைய எகிப்திய காலம் வரை அவை உங்களைக் கூட்டிச் செல்லும். பண்டைய காலங்களில் அன்னைக்கான மேன்மையையும் பெருமையையும் மானுட அன்னையரை விட அமானுஷ்யமாயிருந்த இயற்கை அன்னைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருந்தனர் என்று சொல்லலாம்.

இந்த வகையில் பண்டைய எகிப்தியர் தான் அநேகமாக உலகில் முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடியவர்கள் என சொல்லலாம். இவர்கள் ஐஸிஸ் என்ற பெண் கடவுளை மேன்மைப்படுத்தும் வகையில் இந்நாளைக் கொண்டாடினர். இந்த பெண் தெய்வமான ஐஸிஸ் (mother of hours)) இயற்கை அன்னையாக போற்றப்பட்ட தெய்வமாகும். இந்தப்பெண் தெய்வமானது அடிமைகளுக்கும் , தாழ்த்தப்பட்டோருக்கும் , நோய்வாய்ப்பட்டோருக்கும், சிநேகமானவளாயும், ஏழை எளியோரின் பிராத்தனைகளை செவிமடுப்பவளாயும் நம்பப்பட்ட தெய்வமாகும்.

இந்த பெண் தெய்வத்தினை போற்றும் விழாவே உலகின் முதலாவது அன்னையர் தினமாக கொள்ளலாமாம். இந்த எகிப்து தெய்வமானது பின்னாளின் ரோமானியரின் சமயத்திலும் , கிறிஸ்தவர்களின் பகானிஸிதத்திலும் கூட வணங்கப்படுபவளாக இருந்திருக்கிறதாம்.

இந்த எகிப்திய பெண் தெய்வமான ஐஸிஸுக்கான விழாவை ரோமானியர்களும் கொண்டாடினர். பின்னாளில் ரோமானியர்களின் பிரத்தியேக தெய்வமான ஸீஸஸ் (Zeus) உட்பட பல தெய்வங்களுக்கும் சிரேஷ்ட தாயாக வணங்கப்பட்ட ரெஹா (Rhea) என்ற பெண் தெய்வத்தை அன்னையர் தினமாக மூன்று நாள் கொண்டாட்டமாக கொண்டாடி வந்தார்களாம். இந்தக் கொண்டாட்டம் வருடத்தின் சம இரவு நாளில் தான் தொடங்குமாம்.

இதே போல் கிரேக்கத்தின் பல பெண் தெய்வங்களுக்கும், ஆசியாவின் பெண் தெய்வங்களுக்கும் இத்தகைய விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. நாகரீக முன்னேற்றமும் , மனிதப்பரம்பலின் விரிவும் தெய்வ வழிபாடுகளிலிருந்த இந்த பெண் தெய்வங்களுக்கான கொண்டாட்டங்கள் வெவ்வேறு பரிமாணங்களில் உருவெடுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

பின்னாளில் பெண் தெய்வங்களை முன்னிறுத்தி கொண்டாடப்பட்ட அன்னையர் தினம் முதன் முதலாக மானுடத் தாய்மாருக்காக பரிமாணமெடுத்தது ஐரோப்பாவில் என்று தான் சொல்ல வேண்டும். ஈஸ்டர் பெருநாளுக்காக 40 நாட்கள் விரதமிருக்கும் கிறிஸ்தவர்கள் அந்த மாதத்தின் 4வது ஞாயிற்றுக் கிழமையில் தாம் ஞானஸ்தானம் பெற்ற தேவாலயம் (மொத்ஹெர் ச்ஹுர்ச்ஹ்) சென்று வழிபாடுகள் நடத்துவார்களாம். அந்த தேவாலயஙளில் தேவமாதாவுக்கு இவர்களின் பரிசுகளாக சமர்ப்பிக்கப்படும் நகைளும் மலர்களும் வேறு பல பரிசுப் பொருளளும் லும் அந்நாட்களில் நிரம்பியிருக்குமாம்.

1600 களில் தான் இந்த உண்மையான அன்னையர் தினத்தை தம்மைப் பெற்றவளுக்காக ஒதுக்கினார்களாம் ஐரோப்பியர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வேலையாட்களுக்கு மே மாதத்தின் 4 வது ஞாயிற்றுக்கிழமையை தமது தாய்மாருடன் சென்று கழிக்க அனுமதி வழங்கப்படுமாம். ம். தாயை சந்திக்கச் செல்லும் வேலையாட்கள் அவளுக்காக மலர்கள், இனிப்பு வகைகள், கேக் வகைகள், மற்றும் தத்தமது வசதிக்கேற்ப பரிசுப் பொருட்களுடன் போய் தத்தமது தாய்மாரை சந்திக்க செல்வது வழக்கமாக இருந்தது. இதை அப்போது மதரிங் சண்டே (mothering sunday)என்று அழைக்கப்பட்டதாம்.

அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த ஐரோப்பியர்கள் வாழ்வில் பிரிட்டிஷ் நாட்டில் வழக்கபடுத்திக் கொண்ட மதரிங் சண்டே பாரம்பரியம் நாளடைவில் மறைந்து போய் சில நூற்றாண்டு காலத்தில் அது மறைந்தே போய்விட்டது எனலாம். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த ஐரோப்பியரின் வாழ்வு மிகவும் நெருக்கடியும், நீண்ட நேர உழைப்புக்கு பலவந்தமாக உந்தப்பட்டவர்களாயுமிருந்ததாலும் அவர்களால் ஐரோப்பாவில் பின்பற்றிய பாரம்பரியங்களை தொடரமுடியாமல் போனதன் காரணம்.

முதன் முதலாக வட அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டில் ஜூலியா வார்ட் ஹோவ் (Julia Ward Howe)  என்ற தாயார் “அன்னையர் தினத்தை” பற்றி பிரகடனம் செய்தார். அமெரிக்காவில் நடந்த சிவில் யுத்தத்தில் இறந்தவர்களின் மறைவும் , யுத்தம் கொடுத்த பேரழிவும் ஜூலியா வார்ட் அவர்களை மிகவும் பாதித்தது. ஒரு தாயின் மகன் இன்னொரு தாயின் மகனை கொல்லும் அடிப்படையிலான யுத்தங்களை எதிர்க்கும் நாளாக அன்னையர் தினத்தை முன்னிறுத்தி யுத்த களத்திலிருக்கும் வீரர்களுக்காக குரல் கொடுக்க அனைத்துலக தாய்மாரையும் ஒன்றிணையச் சொல்லி அழைப்பு விடுத்தார். உலகின் அமைதியையும் தாய்மையும் பேணும் நாளாக அன்னையர் தினம் உலகளவில் கொண்டாடப்பட வேண்டும் என்று அந்த அம்மையார் விரும்பினார்.
Comments