[Untitled]‎ > ‎

10.07.15- அனைவருமே தடுத்திடுவோம்..

posted Jul 9, 2015, 9:12 PM by Unknown user

விஞ்ஞானம் தானிப்போ
 விண்ணோக்கிச் செல்கிறது
 நல்ஞானம் எனப்பலரும்
 நாட்டிலிப்போ சொல்லுகிறார்

கல்ஞானம் எனவெண்ணி
கட்டளையும் இடுகின்றார்
உள்ளமெலாம் விஞ்ஞானம்
உட்புகுந்தே நிற்கின்றது

தொழிநுட்ப விஞ்ஞானம்
தொகையாக வந்துளது
 துறைதோறும் அதுசென்று
 சூடாக்கி நிற்கின்றது

  கிராமத்தார் கூடவிப்போ
  கிறுகிறுத்து நிற்கின்றார்
  அங்கெல்லாம் தொழிநுட்பம்
  அரங்கேறி நிற்கின்றது

   மொழிபற்றிக் கவலையின்றி
   முறுவலுடன் ஏற்கின்றார்
   முகம்பார்த்து கதைத்துவிட்டு
   அகங்குளிர்ந்தும் நிற்கின்றார்

  அழகான படம்பார்த்து
  அவர்மகிழ்வு கொள்ளுகிறார்
  அயல்நாட்டில் மருமகளின்
  சுகம்கேட்டும் நிற்கின்றார்

 குறுஞ்செய்தி பலர்பார்த்து
 குதூகலத்தில் மிதக்கின்றார்
 முகநூலால் திருமணங்கள்
 சபையேறி  நிற்கின்றது

 வியாபாரம் பெருகுதற்கும்
 விளம்பரங்கள் செய்வதற்கும்
 நலமான நண்பனென
 நாட்டிலுள்ளோர் நினைக்கின்றார்

 தகவல் பரிமாற்றம்
 தான்பெருகி நிற்பதற்கும்
 சரியான வழியெனவே
 சகலருமே எண்ணுகிறார்

 அரசியல் தலைவரையும்
 ஆன்மீகத் தலைவரையும்
 ஆட்டிவைக்கும் சக்தியென
 அதுவிப்போ திகழ்கிறது

 கற்பழிப்பு நடப்பதற்கும்
 காடைத்தனம் செய்வதற்கும்
 கண்போன்ற தொழிநுட்பம்
 கருவியென நிற்கின்றது

 மண்ணிலுள்ளோர் பயனடைய
 வந்ததொழில் நுட்பமதை
 மனிதகுல மாண்பழிக்க
 மாற்றுவது முறைதானா

விஞ்ஞான தொழில்நுட்பம்
எஞ்ஞான்றும் உதவுவதை
வீணடிக்கும் கூட்டமதை
வீதிக்குக்  கொணர்ந்திடுவோம்

நல்லபக்கம் பார்த்திட்டால்
நமக்கெல்லாம் நன்மையன்றோ
நம்மனதில் நல்லெண்ணம்
நாளும்நாம் வளர்த்துநிற்போம்

உள்ளமதில் நல்லெண்ணம்
ஊற்றெடுக்கச் செய்துவிடின்
பள்ளமதில் வீழ்ந்திருக்கும்
பாதகரும் மாறுவரே

தொழில்நுட்பச் சேவையினை
துஷ்டத்தனம் செய்யாமல்
அழிவுநாடிச் செல்வதனை
அனைவருமே தடுத்திடுவோம் !

ஆக்கம்:அன்புடன் கே.சீ. குமார் ஜெர்மனி.
Comments