[Untitled]‎ > ‎

10.07.15- சித்தர் பாடல்களில் காயசித்தி

posted Jul 10, 2015, 9:12 AM by Unknown user

அறிமுகம்

இந்திய ஞானிகளின் வரிசையில் சித்தர்களுக்குச் சிறப்பிடம் உண்டு. "பக்தி நெறியின்றி வேறு நெறியால் கடவுளைக் கண்டு தெளிந்து இருவினையொட்டி நிகழுங்காறும்" உடலோடு உலாவுவோர் சித்தர்’ என மு.அருணாசலம் குறிப்பிடுகின்றார்.  ஆத்தாளைப் பூசித்தோன் அவனே சித்தன்’ என்று கருவூரார் கூறுகின்றார். இவ்வாறு சித்தர்கள் யார் என்பதற்கு பலர் பலவாறு விளக்கமளித்துள்ளனர்.

இவர்களது காலம் குறித்தும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. திரு. ரீ.வி.சதாசிவபண்டாரத்தார், மு. அருணாசலம் ஆகியவர்கள் கி.பி. 5-6ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது என்பர். திரு.இராதாகிரு~;ணபிள்ளை அவர்கள் கி.பி. 14ஆம் நூற்றாண்டு என்கிறார். இவ்வாறு பல கருத்தமைவுகள் நிலவுகின்றமையால் கி.பி 5ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை எனக் கொள்வது ஏற்புடையதாகும்.  

பொதுவாக சித்தர்களை நவநாத சித்தர், பதினெண் சித்தர் என இரண்டு வகைப்படுத்துகின்றனர். ஆனால், சித்தர்கள் எண்ணில் அடங்காதவர்கள் என்ற (ரேஅநசழரள) கருத்தும் உண்டெனப் பேராசிரியர் அம்பை அருணாச்சலம் கூறுகிறார். 

‘பாரப்பா நவசித்தர் பதினெட்டாகி

பாருலகில் பதினெட்டு சித்தரானார்’

என்ற பாடலில் சித்தர்கள் எத்தனைபேர் என்பதற்கு அகத்திய முனிவர் விடை கூறியுள்ளார்.

இயற்கை நிகழ்வான மரணத்தை தவிர்ப்பது சித்தர் நெறியின் நோக்கமாகும். ‘உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’ என்று பாடுவதால், உடம்பின் நுட்பங்களையும், இயல்புகளையும், மனத்தின் தன்மைகளையும், ஆதாரங்களையும் ஆராய்கின்ற காயசித்தி உபாயங்களும், வைத்திய முறைகளும், மனோதத்துவ அறிவும் பல பாடல்களில் புலப்படுகின்றன. இவ்வகையில் காயசித்தி சிந்தனைகள் குறித்து எவ்வாறான கருத்தாடல்கள் சித்தர் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதனை ஆராய்வதாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது.

காயசித்தி - பத விளக்கம்

காயம் என்பது உடலைக் குறிக்கும். சித்தி என்பது சாதனை. உடலைச் சிதையாத படி நரை, திரை, மூப்பினின்றும் முடிந்தால் இறப்பினின்றும் பாதுகாத்துக்கொள்ளும் சாகாக்கலையுடன் காயசித்தி தொடர்புடையது. காயம் எனும் உடலைப்பேணி உயிரைப் பாதுகாத்து அறிவை வளர்த்து வாழ்க்கையில் வெற்றி பெறுவதையே காயசித்தி என்பர். இவர்கள் உடலைத் தாம் விரும்பும் காலம் வரையில் அழியா நிலையில் வைத்திருந்தனர். சாவுக்கு ஏதுவான உடலை சாவை வெல்வதற்கு ஏதுவாக்கியது ஒன்றே சித்தர்களின் அருஞ்சாதனை. திருமூலர், இம் மண்ணில் காயசித்தி மூலமே மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். காயசித்தி பெறுவதற்கு ஒருவன் குருவிடமிருந்து 10 விதமான தீட்சைகளைப் பெறவேண்டும் எனக் கூறப்படுகின்றது.  உடலை தூய்மை அடையச் செய்யும் சுத்தி முறைகளே தீட்சைகள் ஆகும். 

‘மயிர்க்கால் வழியே துர்மீர்களை வழியச் செய்தல்

வாத பித்த ஜய குற்றங்களை நீக்குதல் 

கெட்ட குருதியை கசியச் செய்தல்

உடல் சட்டையை கழற்றுதல்

மயிர் கறுத்தல், பஞ்சமுதம் வசமாதல்

சுழுமுனை திறந்து தூரதிருட்டி வரமாதல்

உடல் ஒளிவடிவமாதல்’

என்பனவே அவை. விந்துதாரணம் பற்றி திருமந்திரம் கூறுகின்றது. விந்துதாரணம் செய்வதால் பிராணன் அழியாது பலன் மிகும். சக்தி உண்டாகும். ‘விந்து கெட்டவன் நொந்து சாவான்’ என சித்தர் பாடல் கூறுகிறது. உடம்பில் ஒரு துளியாவது விந்து இருக்கும் வரை உயிர் உடலை விட்டு நீங்காது என்பது சித்தர் கொள்கை. ‘உன்னுடைய விந்தை அழித்தால் எல்லாம் போச்சு’எனப் பல பாடல்களில் காயசித்திக்கு விந்து எனும் உயிர் சக்தியினைப் பேணுவதன் அவசியம் கூறப்படுகிறது.

சாகாக்கலை தொடர்பான கருத்துக்கள்

‘முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு

பிடி சாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டு பின்னுமிந்தப்

படி சார்ந்த வாழ்வை நினைப்ப தல்லாற் பொன்னம்பலவர்

அடிசார்ந்து நாமுய்ய வேண்டு மென்றேயறி வாரில்லையே’

என்று மரணத்தின் நிச்சயத் தன்மையினைப் பட்டினத்தார் கூறினாலும் சாகாக்கலை சாத்தியமென்று சித்தர்கள் அனைவருமே கூறுகின்றனர். 

‘மரணப் பிரமாதம் நமக்கு இல்லையாம்’

என்று அருணகிரியும்,
‘தேக மொழியால் சித்திபெறு ஞானம்

போக சித்தி பூசைவிதியுண்

முத்தி யடையார்க்கு நமன்

கால பைரவர்க்கே மரணங் காண்’

என்று வள்ளுவரும்,

‘இத்தனை சாத்திரம் தாம் படித்தோர்

செத்தார் என்றாலுலகத்தோர் தாம் சிரிப்பார்

செத்துப் போய்க் கூடக் கலக்க வேண்டும்

அவன் தேவர்களுடனே சேர வேண்டும்’

என்று கொங்கண முனிவரும் கூறுகின்றனர். ஒளவையார் தனது ‘ஒளவைக் குறள்’ என்ற நூலில் சாகாக்கலை தொடர்பாக பல கருத்துக்களைக் கூறியுள்ளார்.

‘அகம் புறம் போராப் பொருளை அறியில்

ஊகம் பல காட்டும் உடம்பு’         -ஒளவைக் குறள்-

இவ்வாறு சாகாக்கலை தொடர்பாக பலரும் பாடியுள்ளனர். சித்தர்கள் கூறுகின்ற கருத்தமைவுகளை நோக்கும்போது

உடலின் முக்கியத்துவம்

இந்த மனித உடம்பும், மனித வாழ்வுமே தெய்வத்தைக் காணுவதற்குரிய ஒப்பற்ற சாதனங்கள் எனத் தெளிய வேண்டும். இந்த உண்மையை திருமூலர்;

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று

உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”

என்று குறிப்பிடுகிறார். இந்த உடம்பு மிகப்பெரிய சாதனம். இதனுள் பரமாத்வாகிய இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்று கண்குளிரக் கண்டு இந்த உடலாகிய கோயிலைப் பக்குவமாகப் பாதுகாத்து, இறைவனுக்குரிய இடம் என மிகவும் சுத்தமாகப் பேணி யோக சமாதியை விரும்பியவர்களே சித்தர்கள். இதன்படி முதலில் உடம்பின் இயல்பை ஆராய்ந்தனர். ஐம்பூதங்களாலும் 96 தத்துவங்களாலும் உடல் அமைந்துள்ளதையும், அவ்வுடலில் நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும் ஆராய்ந்தனர். உடலுக்கு உறுதியும் உறுதுணையும் அளிப்பதற்கு உலோகங்களையும் மூலிகைகளையும் நுணுகி ஆராய்ந்தனர் சித்தர்கள்.

பொதுவாகச் சமண, பௌத்தர்கள் உடலின் அசுத்தத் தன்மைகளை மிகைப்படுத்திப் பேசிக் காம இச்சையினைக் களைய முயன்றவர்கள். இதனை அசுபபாவனை (ஆநனவையவழைn ழn வந டழயவாளழஅந யெவரசந ழக  டிழனல) என்று பௌத்த ஞானிகள் கூறுவர். புறச்சமயத்தவரேயன்றி அகச்சமயத்தவரிலும் பலர் உடலை நொந்து கொண்டனர். சித்தருள்,“காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா” எனப் பாடியவரும் உண்டு. திருமூலராகிய மூத்த சித்தரும் உடலை வெறுத்த காலம் உண்டு. எனினும் காலப்போக்கில் மெய்ஞ்ஞானம் பெறுதற்கு உடல் நலம் காத்தலின் அவசியத்தினை உணர்ந்தனர். உடம்பு அழிந்து போயின் உயிரும் நீங்கும். உடம்பைப் பேணிக் காப்பதன் வாயிலாக உயிரைப் பேணிக்காத்துத் தனக்கும் சமுதாயத்திற்கும் பயன்பட வாழ இயலும் என்பதை உணர்ந்தார். உடம்புக்குள் கடவுள் உறைதலை உணர்ந்து கொண்டார். எனவே, உடம்பினை ஓம்பும் முயற்சியிலே ஈடுபட்டிருந்தார். திருமந்திரத்தில்,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே” 

எனவரும் பாடல்கள் ‘காயசித்தி உபாயம்’ என்ற தலைப்பின்  பாடல்களாக அமைந்துள்ளன. உடல் மேம்பாட்டிற்குரிய மருந்து பற்றிக் கூறுமிடத்து உணவு முறைகளையும், ஒழுக்கத்தால் உடல் தூய்மையுறும் முறைகளையும், கூறுகின்றனர். யோகம், மருத்துவம், புலன் அடக்கம் ஆகியவற்றின் மூலம் உடம்பைப் பேணுவதன் தேவையையும் பாடியுள்ளார்கள்.

மனிதன் பிறவி பெற்ற பயனை அடைந்து ஆத்ம ஞானமும் விடுதலையும் பெற வேண்டுமென்றால் அதற்கு இந்த சரீரம் உள்ளபோதே முயற்சி செய்ய வேண்டும். உடலை இழந்து விட்டால் பிறகு ஆன்மாவுக்குப் போக்கிடம் கிடையாது. அதனால் பிறவிப் பிணியை நீக்குவதற்காக முயற்சிக்கவும் முடியாது. உடல் இருக்கும் பொழுதே ஆன்ம சாதனையை அடைந்துவிட வேண்டும் என்ற அழுத்தமான கொள்கைப்  பிடிப்புடையவராக இருந்தனர். அதற்காக இந்த உடல் எப்பொருள்களால் வளர்கிறது, எதனால் வளர்ச்சி தடைப்படுகிறது, எக்காரணங்கள் தசைகள் நரம்புகளில் சோர்வையும்முதுமையையும் உண்டாக்குகின்றன, மனித உடலுக்கு ஏற்படும் நரை, திரை, மூப்பு என்பவற்றின் காரணங்கள் யாவை என்பவற்றை ஆராய்ந்தனர். பிணி. மூப்பு, சாக்காடு என்பவற்றை வெல்ல முடியும் என்பதைத் தங்கள் நீண்ட நெடுங்கால ஆய்வுகளின் பயனாய்க் கண்டறிந்தனர். இதற்காக அவர்கள் மேற்கொண்ட முறையே காயசித்தி எனப்படுகிறது. அவ்வகையில் காயசித்தி என்பது இருவகைப்படும்.

யோக சாதனத்தால் உடலை நீண்ட காலம் வாழச் செய்தல்.

சித்த மருந்துகள் (மூலிகைகள், காயகல்பம், மூப்பு முதலியன) மூலம் உடலை நீண்டகாலம் பேணுதல் 

1.யோக சாதனத்தால் உடலை நீண்ட காலம் வாழச் செய்தல்

சித்தர்கள் காயசித்தி பெறுவதற்காக கைக்கொண்ட முதல்படி நிலை இதுவாகும். அந்த வகையில் யோகசாதனை பற்றிய விடயங்களை நோக்கும் போது,

யோகம் என்பது இணைப்பு என்று பொருள். இது கடவுளைக் காண்பதற்கான சாதனம் எனவும், வாழ்க்கையின் தேவை அல்லது குறிக்கோளை அடைவதற்கான சாதனம் எனவும் கூறப்படுகின்றது. சித்தர்கள் தங்கள் உடம்பை உணர்ச்சியற்ற உயிர்ப்பு கூட இல்லாத நிலைக்கு உள்ளாக்கிக் கொண்டு, அந்த நிலையிலேயே இறைவனுடன் கலந்து நின்று ஈடற்ற இன்பத்தை அனுபவித்தவர்கள். 

இந்த உலகம் மூலங்களால் ஆனது. நமது உடலும் நிலம், நீர், வளி, காற்று, வெளி ஆகிய ஐந்து மூலங்களினால் உருவாக்கப்பட்டதே. இதில் காற்றே அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாகின்றது.உடலில் உயிரை உறுதியோடு நிலைக்க வைப்பது உயிர்ப்பாகிய காற்றே. தாவரம் முதலிய எல்லா உயிரினங்களும் உயிர்ப்பால் உயிர் வாழ்கின்றன. உயிர்ப்பை நாம் சுவாசித்தல் என்கிறோம். காற்றை உட்கொள்வதும் வெளியிடுவதும் சுவாசிப்பது ஆகும். இந்த உயிர்ப்பு எல்லா உயிரினங்களுக்கும் இயல்பாய் அமையும். இதனைக் கூட்டியோ, குறைத்தோ இயங்க வைக்கலாம். மூச்சுப் பயிற்சி இதற்கு உற்ற துணையாகும்.

மூச்சுப் பயிற்சியைப் பிரணாயாமம் என்று சித்தர்கள் கூறுகின்றனர். இதனை வாசியோகம் என்றும் அழைப்பர். பிராண வாயுவின் அசைவு எதுவோ அதுவே சித்தத்தின் அசைவு. பிராணனது சலனத்தை ஜெயிக்க முயன்ற சித்தர்கள் வாசியோகம் (பிராணாயாமம்) பயின்று சகல சித்திகளையும் பெற்றனர். பிராணாயாமம் மரணத்தை வெல்வதற்கான மார்க்கம் என்று திருமந்திரம் கூறும்.

மூச்சுப்பயிற்சி வேறு, பிராணாயாமம் வேறு. காற்றை வேகமாக உள்ளிழுத்து வெளிவிடுவது என மூன்று நிகழ்வுகள் உண்டு. ஒரு கால அளவில் மூச்சுப் பயிற்சி கட்டுப்பாட்டுடன் நிகழ்வதே பிராணாயாமம். இதையே சித்தர்கள் வாசியோகம் என்றனர். பிராணனாகிய உயிர்ப்பு மனத்துடன் பொருந்தி, அடங்கி இருக்குமாயின் பிறப்பு இறப்பு இல்லை.

பிராணாயாமத்தால் உள்ளம் ஒருமை பெறுகிறது. உயிர் திண்மை உறுகின்றது. உடல் நோயற்ற இளமைப் பேற்றை மாறா இளமை நலத்தைப் பெறுகிறது. எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணிய உள்ளம் அமைகிறது. ‘ஞானசரநூல், திருமந்திரம், சிவவாக்கியார் முதலிய சித்தர் பாடல்கள் பிரதணியத்தை வலியுறுத்துகின்றன.  

உயிர்க்காற்றை 1 உயிர்த்து, 2 இருத்தி அடக்கி, 3 வெளியிடுவது என்ற மூன்றுபடி நிலைகளை உடையது. உயிர்ப்பு அடிப்படையில் தான் அனைத்து உயிர்களுக்கும் ஆயுள் அமைகின்றது. விரைந்து சுவாசிக்கும் உயிர்களுக்கு வயது குறைவு. ஆடு, மாடு, நாய் ஆகியவைகளின் உயிர்ப்பு (சுவாசம்) வேகமாக நடைபெறுவதால் குறைந்த வயதிலேயே இறக்கின்றன. மெல்ல உயிர்த்து, இழுத்து, இருத்தி, மெல்ல மூச்சு விடும் உயிரினங்கள் நீண்ட நாட்கள் வாழ்வதைக் காணலாம். மனிதன், ஆமை, யானை ஆகியன நூறாண்டு வாழ வாய்ப்புள்ளது.

நமது உடம்பில் உள்ள 72 ஆயிரம் நரம்புகளும் பத்து நாடியில் அடங்கும். இதனைத் தச நாடி என்பர். இந்த பத்தும் மூன்று நாடியில் ஒடுங்கும். சந்திரநாடி மூக்கின் இடது பக்கம் பொருந்தியுள்ளது. சூரியநாடி மூக்கின் வலது பக்கம் பொருந்தியுள்ளது. சுழுமுனை நாடி புருவ நடுவில் அமைந்துள்ளது. சந்திர நாடியை இடகலை என்பர். சூரிய நாடியை பிங்கலை என்பர். சந்திரநாடி- சக்தி, சூரிய நாடி - சிவம், பூரணம்-ஆண், சூனியம்-பெண்.

பிராணாயாமத்தில் வெளி வாயுவை உள்ளிழுத்தல் பூரகம். அவ்வாயுவை உள்ளே நிறுத்துதல் கும்பகம், குப்பித்த வாயுவை வெளிப்படுத்துதல் இரேசகம் எனப்படும். சித்தர்கள் இந்த பிராணாயாம யோகத்தை நன்கு கவனமுடன் அதிசிரத்தையுடன் பயில வேண்டும் என கூறுகின்றனர். காரணம் எல்லா யோக சித்திகளை அடைவதற்கும் இதுவே படிக்கல். பிராணாயாமம் மூன்று நிலையில் அமைகின்றது. காற்றை இழுத்து, உயிர்த்து உடனே வெளியிடுதல் ஒருநிலை. காற்றை இழுத்து,  இருத்தி வெளியிடுதல் இரண்டாவது நிலை. காற்றை இழுத்து வெளியிட்டு நுரையீரலை வெறுமையாக்கிப் பின் காற்றை உட்கொள்ளுதல் மூன்றாவது நிலை. முதல் நிலையில் தொடங்கி இரண்டாவது நிலைக்குச் செல்லுதல் வேண்டும்.

பிராணாயாமத்திற்கு முதலில் மன அமைதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்து பழக வேண்டும். ஆணிற்கு வலது பக்கமும், பெண்ணிற்கு இடது பக்கமும் ஆளுமை உடைய பக்கங்களாகும். முதலில் இரு நாசியிலும் மூச்சை இழுத்து விடுதல் வேண்டும். நாலைந்து முறை செய்து இதயத் துடிப்பைச் சமநிலைக்குக் கொண்டுவருதல் வேண்டும். பின் பிராணாயாமத்தைத் தொடங்க வேண்டும். சூரிய நாடியாகிய பிங்கலையில் பிராணனை இழுத்து மெல்ல மெல்ல வயிற்றை நிரப்பி விதிப்படி பந்த பூர்வமாகிய கும்பகம் செய்து மறுபடியும் சந்திர நாடியாகிய இடகலையில் இரேசிக்க வேண்டும்.

பின்னர் சந்திர நாடியாகிய இடகலையில் பிராணனைப் பூரித்துக் கும்பிக்கப்பட்ட பிராணனை பிங்கலையில் இரேசிக்க வேண்டும். பிங்கலையில் வாயுவைப் பூரித்துக் கும்பித்த வாயுவை இடகலையில் இரேசிக்க வேண்டும். இவ்வண்ணம் சந்திரனால் பூரித்துக் கும்பித்து சூரியனால் இரேசிக்க வேண்டும். இவ்விதம் சூரிய சந்திர நாடிகளில் அப்பியாசத்தை தினமும் விஸ்தரிக்க வேண்டும்.

இந்த யோக அப்பியாசிகள் சூரிய சந்திர கலைகளில் பிராணவாயு செல்லுங்கால் பிருதுவி, அப்பு, தேயு, வாயு என்னும் நான்கு தத்துவங்ளும் வந்து விலகும். அப்போது அப்பிராணவாயு ஆகாய தத்துவத்தில் அமையும். அச்சமயம் சுவாசம் குறைந்து வரும். அக்காலத்துச் சுவாச பந்தனம் செய்யக் கூடும். இந்தச் சுவாச பந்தனத்தின் போது,

ஓர் அங்குலம் குறைந்தால் யோகியானவன் இவ்வுலகத்தினின்று சுவாதினப்படுவான். 

இரண்டு அங்குலம் குறைந்தால் மனம் ஆனந்திக்கப்பட்டு அவனுக்கு ஞானச் செல்வமும் உண்டாகும். 

மூன்று அங்குலம் குறைந்தால் தூர தேசத்தில் நடக்கும் நடவடிக்கைகள் அவனுக்குப் புலனாகும். 

நான்கு அங்குலம் குறைந்தால் விவேகியாவான். 

ஐந்து அங்குலம் குறைந்தால் முதுமையை வெல்வான். 

ஆறங்குலம் குறைந்தால் ஆகாயத்திலுள்ள சகலமும் கண்டுணர்வான்.

ஏழங்குலம் சுவாசம் குறைந்தால் அவன் சரீரம் காயசித்தி பெறுவான். 

எட்டங்குலம் குறைந்தால் அணிமாதி சித்திகளை அடைவான். 

ஒன்பது அங்குலம் குறைந்தால் நவகண்டங்களில் சஞ்சரிப்பான். 

பத்து அங்குலம் குறைந்தால் ஒரு தேகத்தை விட்டு மற்றொரு தேகத்தில் பிரவேசிப்பான். 

பதினொரு அங்குலம் குறைந்தால் தனது ஆன்மாவைக் கண்டு விசனிப்பான். 

பன்னிரண்டு அங்குலம் அடங்கும் சுவாசமானது உதித்த இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கின்றபடியால் அந்தப்பரம யோகி நெடுங்காலம் அன்னபானாதிகளை நீக்கி அசைவற்றிருப்பான். 

சித்தர்களுக்கு மரணம் நேரிடுவது க~;டம். யோகம் சித்தியான சித்தர்கள் மரணம் அல்லது நோய் வருவதை முன்கூட்டியே சில குறிப்புகள் மூலம் உணர்ந்து, உடனே வாயுவைச் சோதித்து அதைச் சரிபடுத்திக் கொள்வர். பின்னர் அப்பியாசத்தால் வாயுக்களையும், தத்துவங்களையும் தம் உடலினுள் உணர்ந்து முத்திரையைப் பின் தொடருவார்கள். இடது வலது நாடிகளிலுள்ள வாயு எந்த மத்திய தேகத்தில் செலுத்துகின்றதோ, அத்தேகத்தில் கேசரி முத்திரை ஸ்திரமுடையதாகின்றது. 

ஒருவன் தேகத்தினுள் வெளியிலுள்ள வாயுவைத் தனக்குள் கேசரியில் எப்படி இலயமாக்குகிறானோ, அப்படியே, தேகத்தில் இருக்கும் வாயுவையும் இலயமாக்குவான். அப்போது பிராணனது ஸ்தானத்தில் சித்தத்தோடு ஸ்திரத் தன்மையும் அடைவான். அப்போது சொரூபத்தில் நிலைத்தலாகிய ஜீவன் முத்தனாவது திண்ணம். கேசரி முத்திரை எவ்வளவு காலம் ஜீவித்திருக்க வேண்டுமோ அவ்வளவு காலம் ஜீவித்திருப்பார்.

உயிர்க் காற்றை உயிர்த்து இருத்துகின்ற அளவில் தான் உயிர்களுக்கு ஆயுள் அமைகின்றது. பிராணாயாமத்தின் உயிர்க் கருத்தே இதுதான். 

4 விநாடி இருத்தி 4 விநாடி வெளியிட்டால் மனிதனானவன் 50 ஆண்டுகள் உயிர் வாழலாம் 

4 விநாடி இழுத்து 8 விநாடி இருத்தி 6 விநாடி விட்டால் 75 ஆண்டுகள் உயிர் வாழலாம் 

4 விநாடி இழுத்து 16 விநாடி இருத்தி 8 விநாடி விட்டால் 100 ஆண்டு உயிர் வாழலாம் 
         -எனச் சித்தர்கள் வகுத்துள்ளனர்.

திருமந்திரத்தில் இராஜயோகப் பயிற்சியாக 16 விநாடி இழுத்து 64 விநாடி இருத்தி 32 விநாடி விடுதல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. தச வாயுக்களில் ஒன்றான பிராணன் என்னும் உயிர்க்காற்றை வெளியிடாதவாறு கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். பிராணயாமப் பயிற்சியால் உயிர்ப்பினை வாங்கி, உந்திக்கண் உள் அடக்கி வயப்படுத்தினால் உடம்புக்கு காலவரையற்றபடி பிறப்போ, இறப்போ இல்லை. நமது உடலின் மண்டலங்களைச் சித்தர்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றனர். அவை ஆதவன், அக்கினி, சந்திரன் என்பவைகளாகும். 

பிராணாயாமத்தின் மூலம் இட, பிங்கல நாடிகளைச் சுத்தி செய்யும் மூச்சுப்பழக்கம் மேற்கொள்ளுதல் உள்ளத்தை மாசற்றதாகச் செய்யும். அன்றியும், அனலாலும் துளைக்க முடியாத உடலாற்றலைத் தரும். 

பிராணாயாமத்தினைச் சூரிய உதய நேரத்தில் பயின்றுவரின் சிலேட்டும உபாதை அகலும். நண்பகலில் பயின்றுவரின் வாத உபாதை அகலும். அந்தியில் பயின்றுவரின் பித்த உபாதை அகலும். வாதம், பித்தம், சிலேட்டுமம் என்ற மூன்றினாலும் வரும் பிணிகள் பிராணாயாமத்தினால் நீங்கி உடலில் நரை, திரை தோன்றாது என்கிறார் திருமூலர். குண்டலினி யோகப் பயிற்சியால் உடம்பு அழியாது என்றும் அவர் கூறுகின்றார். 

வலது நாடி வழியாக 166 மாத்திரை அளவும், இடது நாடி வழியாக 166 மாத்திரை அளவும் சுவாசிப்பதுடன், இம் முறையினை மாற்றி இடது நாடியில் தொடங்கிப் பின் வலது நாடி வழியாக அதே கால அளவு சுவாசித்து இப்படி மாறி மாறி நாள்தோறும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுவார் 166 ஆண்டுகள் வாழ்வர் என்கிறார் திருமூலர். யோகப் பயிற்சியினால் ‘உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்’ என்று மற்றொரு பாடலில் குறித்துள்ளார்.  

திருமந்திரத்தின் பல பகுதிகளிலும் காயசித்தி பற்றிப் பேசப்பட்டுள்ளது. திருமூலர் வழிவந்த பிற்காலத்துச் சித்தர்களும் காயசித்தி பற்றிப் பாடியுள்ளனர். அகத்தியர் அமுதகலை ஞானம் 1200 என்ற நூலில் குண்டலினி யோகத்தினால் காயசித்தி பெறும் முறைமையும் நீண்டகாலம் வாழும் முறையும் விரிந்துரைக்கப் பெற்றுள்ளன.

2. சித்த மருந்துகள் (மூலிகைகள், காயகல்பம், முப்பு முதலியன) மூலம் உடலை நீண்டகாலம் பேணுதல்

எவ்வாறு யோகப் பயிற்சிகள் மூலமாக உடம்பினை நீண்ட காலம் பாதுகாக்கலாமோ அதுபோல காயகல்பம் எனப்படும் மருந்துகள் மூலமாகவும் உடலினை நீண்ட காலம் பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றனர்.

‘நெடுநல் உளனொருவன் இன்றல்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு’    - திருக்குறள்-

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம் என்பார் திருவள்ளுவர். இதனை நீக்க எந்த அறிவியல் மேதைகளாலும் முடியவில்லை. இதற்கு விடை கண்டவர்கள் சித்தர்கள் மட்டுமே. காயம் என்பது உடம்பு. கல்பம் என்பது அழியாது வைத்திருக்கும் மருந்து. ஆகவே உடலை அழியாது வைத்திருக்கச் செய்வதே காயகல்பம் எனப்படும்.இதனை சாகா மருந்து என்றும் கூறுவர். இது உடம்பைப் பலப்படுத்தி சாகாமல் இருப்பதற்கும், மூப்பு, பிணி, பசி, இளைப்பு, தாகம், நித்திரை போன்றவைகள் வராமலும் எப்போதுமே உடல் இளமையுடன் இருக்கவும் வழிகோலியது. காயகற்பம் உடலை அழியாத நிலைக்குக் கொண்டு செல்கிறது. இதனை உடலிலிருந்து பெறவே யோகாசனங்கள்-வாசியோகம் முதலியவை பயன்படுத்தப்பட்டன எனலாம். காற்றைக் கணக்குடன் உடலில் இழுக்கவும்-நிறுத்தவும்-வெளியிடவும் செய்தால் ‘ஆயுள் நீடிக்கும் என்பர். வாசியோகத்தின் கடைசிநிலையாக அறிவும்-மனமும் ஒடுங்கி ரவி, மதி, சுடர் என்ற நாடிகள் ஒன்றுபட்டு அண்ணாக்குக்குமேல்- புருவமையத்துக்கு நேர் சந்திக்கும் இடத்திலுள்ள ‘மதியமுதம்’ என்ற அருமருந்து பெறப்படுகிறது. இதனை மதியமுதப்பால் எனவும் கூறுவர். இதனைச் சித்தர்கள் காயகற்பம் என்றும் முப்பு என்றும், அமுரி என்றும் கூறியுள்ளனர்.

பெரும்பாலும் காயகல்பம் என்னும் மருத்துவ முறையினால் நெடுங்காலம் வாழலாம் என்று எண்ணியவர்கள் காயபல்பத்தினை முப்பு என்றும் வழங்குவர். இம்மருந்தின் ஆற்றலால் ஒரு இலட்சம் ஆண்டு வாழலாம் எனச் சித்தர் நம்பினர். இதனால் இரும்பினைப் பொன்னாக்கவும் முடியும் என்றனர். அகத்தியர் பெயரினால் முப்பு என்னும் சித்த மருத்துவநூல் வழங்கி வருகின்றது.பொது காயகற்பம், சிறப்புக் காயகற்பம் என இரண்டுவகை உண்டு.

நோயற்ற நிலையில் உண்ணுவது – பொது காயகற்பம்

குறித்த ஒரு நோயை நீக்குவதற்கானது – சிறப்பு காயகற்பம்

சித்தர்களின் கண்டுபிடிப்பில் மிகவும் அற்புதமானது காயகல்பம். மனித உடல் மூப்படையாமல் என்றும் மாறாத இளமையோடு வாழ்ந்திட சித்தர்கள் கண்டறிந்து வழங்கிய காயகல்பம் மிகவும் பயனுள்ளது. காயகல்ப தேகம் என்பதை அவ்வளவு சீக்கிரத்தில் பெற்றுவிட முடியாது. இதற்காக கடுமையான முயற்சிகள் செய்ய வேண்டும். அந்த காயகல்ப தேகம் என்பதைப் பற்றி உரோமரி~p முனி கூறுவதாவது,

‘தேகம் என்பது இருள் தேகம்

மருள் தேகம், சுத்த மேகம்

பிரணவ தேகம், ஞான தேகம்’ 

என ஐந்து வகைப்படும்.

இந்த கல்ப மருந்தை தயாரிக்கும் முறைகளையும், உண்ண வேண்டிய நேர காலத்தையும் சித்தர்கள் அவரவர் அனுபவங்களுக்கேற்ப கூறியுள்ளனர். இவற்றை அவர்கள் வைத்திய காவியங்களில் விளக்கியுள்ளனர்.

‘கற்பத்தை யுண்டல் காயமழியாது

கற்பத்தினாலே காணலாம் கலையை

கற்பத்தினாலே காலையும் கட்டிடே

கட்டிட சித்தாம் காயப் பரீட்சை’

என்கிறார் சட்டைமுனி. இவர் காயசித்தி செய்து வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இது போல காயகல்பம் உண்பவர்களின் உடல் எவ்வாறு இருக்கும் என்று கோரக்கர் கூறுகிறார்.

‘காலமதில் கடியரவம்  விடமும் ஏறா

கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா

ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா

நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்’

இயற்கையிலிருந்து கிடைத்த மூலிகைகள், உப்புக்கள், உலோகங்கள், பா~hணங்ள் எல்லாவற்றின் தன்மைகளையும் ஆராய்ந்து அவற்றால் உடலைப் பாதுகாக்கும் கல்ப மருந்துகளை கண்டுபிடித்தனர். அந்த கல்ப மூலிகைகள் வருமாறு,

‘கேளென்ற 1 கருநெல்லி 2 கருத்த நொச்சி

கேடியான 3 கருவீழி 4 கருத்த வாழை

காளென்ற 5 கரிய கரிசாலையோடு

6 கருப்பான நீலியொடு 7 கரியவேலி

கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச்சோதி

10 கொடுதிரணச் சோதி 11 சாயா விருட்சம்

ஏளென்ற 12 எருமைகனைச்சான் 13 ரோம விருட்சம்

ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா……’

இதில் போக முனிவர் நாற்பத்தைந்து (45) கல்ப மூலிகைகளைப் பற்றிக் கூறியிருக்கிறார். இவற்றை முறையாக உட்கொண்டால் மனிதனுடைய வயது ஏறினாலும் வாலிபம் குன்றாது. முடி நரைக்காது. தோல் சுருங்காது. உடல் மூப்படையாது. எனவே சித்தர்கள் தாம் அடைய வேண்டிய நிலையினைப் பெற முடியும்.

அழுகணிச் சித்தர் பாடல்கள் 32 இலும் வாசியோகம், காயசித்தி  முறைகளைக் கூறுகிறது.
இடைக்காட்டுச் சித்தர்,

‘சாவாதிருந்திடப்பால்கற – சிரம்

தளிலிருந்திடும் பால்கற….’

என்ற பாடலிலும் காயசித்தி முறையின் அவசியத்தினையும் மூலிகைகளின் நோய் போக்கும் தன்மையினையும் குறிப்பிடுகிறார். இத்தகு காயகல்ப முறையினால் ஒரு இலட்சம் ஆண்டுகள் வரை வாழலாம் எனவும் நம்பினார். 

தாயுமானவர் பாடலில் இவ்வாறாக காயகல்பம் புசித்து நீண்டகாலம் வாழ்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்களுக்கு மனம் இரங்கிப் பாடிய பாடலாக,

‘நெடுநாள் இருந்த பேரும்

நிலையாக வேகினும் காயகற்பம் தேடி

நெஞ்சு புண்ணாவார்’

என்கிறார். காயகல்பம் உண்டவர்களுக்கு உடம்பில் எதுவித தீங்கும் ஏற்படாது என்பதனையும் காயகல்பம் உண்டாவதை அறிவதுமான பாடலாக,

‘தித்திக்கும் இலட்சணம் தான் பிரண்டை முற்றி

செய்த பின்பு என்மக்காள் கேளு கேளு….’

எனும் பாடல் அமைகிறது. பாம்பாட்டிச் சித்தரும் தான் கற்பம் உண்டு பெற்ற பயனை,

‘காலனென்னும் கொடிதான கடும் பகையை நாம்

கற்பமென்னும் வாளினாலே கடந்து விட்டோம்…’

என்று கூறுகிறார்.  

ஆகவே காயசித்திக்கு பல உயர்வான தெய்வீக மூலிகைகளையும், பா~hணங்களையும், உலோகங்ளையும் இன்னும் உயர்வான தாதுப் பொருட்களையெல்லாம் வேதியல் மாற்றங்களுக்குட்படுத்தி கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளையும் செய்து உடலை சித்தி செய்து கொண்டுள்ளனர்.

மேலும் உடல் தூய்மைக்கு இரத்தம்  தூய்மையாக்கப்படல் வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இரத்தத்தினைக் கொண்டே உடலின் நோய்க்கு காரணம் அறியப்பட்டு வருகிறது. இது சித்த மருத்துவத்தில் பேசப்படும் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள நோய்க் கிருமிகளை அழிப்பதே அடிப்படையானது என்பதனை,

‘உண்ணப்பா மண்டலந்தான் நோயும் போகும்….’

(நந்தீசர் சகலகவி ஞானம் - 926)

நந்தீசர் தமது பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இக்காயகல்பம் பற்றி ‘பதினெண்சித்தர்கள் வைத்திய சில்லறைக் கோவை’,‘அகத்தியர் பூசைவிதி 200’,‘அகத்தியர் பூரண காவியம்’,‘கொங்கணவர் வாத காவியம்’ போன்ற மருத்துவ நூல்களில் அதிகம் கூறப்படுகிறது.  

காயசித்திக்கான மேலுமொரு வழிமுறையாக ‘பிலியன் சுரப்பு’ பற்றிக் கூறப்படுகிறது.( Pineal Gland) இதன் மூலம் ‘மெலடோன்’ எனப்படும் ஹோர்மோன் சுரக்கிறது. இதன் இயக்கத்தினை யோகத்தின் மூலமாக செயற்பட வைப்பதே சித்தமுறையாகும். இவ்வகை ஹார்மோன்கள் ஆயுளை கூட்டவும் குறைக்கவும் வல்லது. சுரப்பை நீட்டிக்க வாசியோகம், குண்டலி யோகம் பயன்படுகிறது.

காயசித்தி உபாயங்களில் இரசவாதமும் உள்ளடங்கலாக அமைகிறது. இரசம் என்பது பாதரசம் ஆகும். இதனைப் பயன்படுத்தி மட்டமான உலோகங்களை உயர்ந்த உலோகமாக மாற்றும் உபாயத்தினை சித்தர்கள் கண்டிருந்தனர். இப்பாதரசத்தினைப் பயன்படுத்தி முப்பு எனப்படும் மருந்துச் சேர்க்கையால் செய்யப்படும் காயகல்பத்தினை உண்டு நீண்டகாலம் வாழும் உபாயத்தினை அறிந்திருந்தனர். இது பற்றி திருமந்திரத்தில் ஆதாரபூர்வமான செய்திகள் காணப்படுகின்றன.

நிறைவாக

மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு. ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றுவதும், உறுமாறுவதும் சித்தர் சாதனையில் முக்கியமானவையாகும். சித்தர்கள் தங்கள் சாதனையை காய சாதனை (தேகத்தை மேம்படுத்துவது) என்றனர். அதன் மூலம் காயசித்தி (தேகத்தை பூரணத்துவம் அடையச் செய்வது) பெறுவது அவர்கள் நோக்கம். ஞானநிலையினை அடைவதற்காக முயற்சி செய்தபோது அதற்கு இந்த உடல் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று அறிந்து கொண்டனர். இதற்காக அவர்கள் தெரிவுசெய்து கொண்ட முறையே காயசித்தி என்பதாகும். உடல் அழிந்து போகுமானால் உயிர் வேறு பிறப்புக்களை எடுக்க நேரிடும். அந்த நிலையினை சித்தர்கள் விரும்பவில்லை. எடுத்த பிறவியிலேயே தமது குறிக்கோளை அடைய வேண்டும் என்பதற்காக இம் முறைகளைக் கையாண்டு உடலினைப் பாதுகாத்து அதன் வாயிலாக தமது இலக்கினை அடைந்து கொண்டனர் என்பதே பொருத்தமானதாகும்.

ஆக்கம் : த.வினோதினி , இந்துநாகரிகத்துறை,
உதவி விரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம்


Comments