[Untitled]‎ > ‎

11.02.15- புதிய​ கி.மாகாண சபையாவது தமிழர் புறக்கணிப்பை தவிர்க்குமா??

posted Feb 11, 2015, 7:00 AM by Unknown user   [ updated Feb 11, 2015, 7:02 AM ]
கிழக்குமாகாண சபையானது கடந்தகால ஆட்சியாளர்களினாலும் ஆளுநராலும் கிழக்கு தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டதுடன் அவர்களின் உரிமைகளும் புறக்கணிக்கப்பட்டது. இப்புறக்கணிப்பின் மூலம் கடந்தகாலங்களின் கல்வி, காணி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்களில் மாகாண ஆட்சியாளர்கள் தமிழர்களை முற்றாக புறக்கணித்த வரலாறே காணப்படுகின்றது. 

மஹிந்த அரசு மூலமும் தமிழ்ப் பிரதேசங்களினை ஆளும் ஒருசில அமைச்சு மூலமும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் உள்ளுர் ஆளுகையிலுள்ள உள்ளுர்த் தமிழ்த் தலைமைகளின் ஆலோசனை அற்றமுறையிலும் தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்தியினை தான்தோன்றித்தனமாக முன்னெடுத்தது. இதன் விளைவாக பல அபிவிருத்தித் திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்ட வரலாறும் பொருத்தமற்ற வேலைத்திட்டங்களையுமே தங்களின் இலாபநோக்காக கொண்டு செயற்படுத்ப்பட்டதாகவே காணப்படது. இதற்கு பல அரச ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டமையும் வருத்தமளிக்கின்றது.

இவ்வாறான பல கசப்பான காலங்களைக் கடந்து தற்போது மைத்திரி யுகத்தில் உள்ள தமிழர்களுக்கு இனிவருங்காலமாவது தமது உரிமையினை சிறிதளவேனும் பெறுவதற்கான செயற்திட்டம் அரசினால் முன்னெடுக்கப்படவேண்டும்.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பல அநீதிகளை கருத்தில் கொண்டு தற்போது கிழக்கு மாகாண சபை ஆட்சியாளர்கள் செயற்பட வேண்டும். இதனூடாக இதுவரை காலமும் தொழில் வழங்கும் நடவடிக்கைகளில் முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சாரதிகள் மற்றும் சிற்றூழியர்கள் நியமனங்கள் என்பனவும், தொழில் வாய்ப்புக்காக எழுத்துப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் தெரிவு செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்டு தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதினை அவர்களுக்கு மீளவும் தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல் அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்ட கிழக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகவுள்ள சமூக சேவை உத்தியோகத்தர் தரம்-ஐஐ இற்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக திறந்த போட்டிப் பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தமிழர்கள் விண்ணப்பிக்க முடியாதவாறு செய்யப்பட்டுள்ளதனையும் மறுபரீசிலனை செய்து அனைவரும் போட்டிப்பரீட்சைக்கு தோற்றி திறமையானவர்கள் குறித்த வெற்றிடத்திற்கு நிரப்பப்பட ஆவனவு செய்யப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி தமிழர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த உள்ளுராட்சி மன்றங்களுக்காக இதுவரை காட்டப்பட்ட பாகுபாடு முறையிலான வளப்பங்கீடுகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பல விடயங்களில் புதிய முதலமைச்சர் கருத்தில் கொண்டு கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினையும் பெற்றுத்தர முன்வரவேண்டும்.
யோ. கோபிகாந்த்,தவிசாளர்,பிரதேச சபை, காரைதீவு.
Comments