[Untitled]‎ > ‎

15.06.15- கிழக்கிலங்கை கண்ணகி வழக்குரை கோயில்களில் பாடப்படும் முறைமை

posted Jun 15, 2015, 4:00 AM by Unknown user   [ updated Jun 15, 2015, 10:46 AM ]

 “கிழக்கிலங்கை கண்ணகி வழக்குரை கோயில்களில் பாடப்படும் முறைமை” 
(தேர்ந்தெடுத்த நான்கு கோயில்களைப் பற்றிய ஆய்வு)

 இந்துப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினை கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் வழிபாட்டு முறையில் காணமுடிகின்றது. மட்டக்களப்பில் வாழும் சைவப் பெருமக்கள் பலரின் குலதெய்வமாகவே கண்ணகி அமைகின்றாள். 

1.1 ஈழத்தில் கண்ணகி வழிபாட்டின் தோற்றம்
                 “கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தனும்
                 எந்நாட்டாங்கண் இமய வரம்பன் இந்
                 நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
                 வந்தீ கென்ற வணங்கினர் வேண்டத்
                 தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்”

என்பதற்கிணங்க, சேரன் செங்குட்டுவன் சேர நாட்டிற் கண்ணகிக்கு விழா எடுத்த போது, அங்கு சென்ற கஜபாகு மன்னனால் கண்ணகி வழிபாடு; இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது என்பதை சிலப்பதிகாரம் உறுதிப்படுத்துகின்றது. அதேவேளை கிழக்கிலங்கையில் இடம்பெற்ற தென்னிந்தியக் குடியேற்றங்களும் அங்கு கண்ணகி வழிபாடு பரவியமைக்குக் காரணமாக இருக்க வேண்டும். இதனைக் கிழக்கிலங்கை கண்ணகி கோயில்கள் சிலவற்றின் பூர்வீக வரலாற்றுக் கதைகளினூடாகவும் அறிய முடிகின்றது. 

கண்ணகி வழிபாடு ஈழத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் அது சிங்கள, தமிழ் மக்களிடையே நிலைத்து வளரலாயிற்று. தமிழ் மக்களிடையே கண்ணகை அம்மன் வழிபாடென வளர்ச்சி பெற்ற போது, அது சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடாக மலர்ந்தது. இதனாலே தமிழில் உள்ள கண்ணகியைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்களைப் போலச் சிங்களத்திலும் பல பத்தினி காவியங்கள் தோன்றலாயின.           ஈழத்தின் வடக்கிலே யாழ்ப்பாணப் பகுதியிலும், திருகோணமலை, வவுனியா முதலான பிராந்தியங்களிலும் கண்ணகிக்கு பல கோயில்கள் அமைந்திருக்கின்றன. எனினும் ஈழத்தின் ஏனைய பாகங்களைவிட மட்டக்களப்புப் பகுதியிலேதான் கண்ணகை அம்மன் வழிபாடு பெருவழக்காகவும் உன்னத நிலையிலும் உள்ளது. எனவேதான் அப்பகுதிகளில் கண்ணகையைத் தலைவியாகக் கொண்ட இலக்கியங்கள் அதிகமாகத் தோன்றியுள்ளன. 

1.2 கிழக்கிலங்கைக் கண்ணகி கோயில்கள் பற்றிய விபரம்

கிழக்கிலங்கையில் கிராமங்கள் தோறும் கண்ணகிக்கு கோயில்கள் உள்ளன. கிழக்கிலங்கை கண்ணகை அம்மன் ஆலயங்கள் பற்றி பொற்புறா வந்த காவியம், அங்கணாமைக் கடவை கண்ணகை அம்மன் காவியம், கண்ணகி அம்மன் குளுத்திப் பாடல், வழக்குரை காவியம் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. கிழக்கிலங்கையில் பதினைந்து கண்ணகி அம்மன் ஆலயங்கள் இருக்கும் செய்தியை ஊர்சுற்றுக்காவியம் 71ஆம் பாடலினூடாக அறிந்து கொள்ள முடிகின்றது. 

“பட்டிநகர் தம்பிலுவில் காரைநகர் வீரமுனை
           பவிசுபெறு கல்முனைகல் லாறுமகி ழூரெருவில்
செட்டிபா ளையம்புதுக் குடியிருப்பு மண்முனை
           செல்வ முத லைக்குடா கொக்கட்டிச் சோலை
                  அட்டதிக் கும்புகழ் வந்தாறு மூலை
       அன்பான சிற்றாண்டி நகரதனில் உறையும்
வட்டவப் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை
         மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே”
                            (கண்ணகிவழக்குரை: 1968: 930)

இன்று கிழக்கிலங்கையில் 47 கண்ணகை அம்மன் கோயில்கள் இருப்பதாக தகவல் கிடைக்கின்றது.

(M.Phil ஆய்வுக்கட்டுரை குணபாலசிங்கம்)                                                                                       
(கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும்: 2008: xvi)

1.3 கள ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கோயில்கள்

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பரந்துபட்டதாக இருப்பதனால் ஆய்வு வரையறை நோக்கி, பட்டிநகர் கண்ணகை அம்மன் ஆலயம்;, காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், வந்தாறுமூலை ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயம் ஆகிய நான்கு கோயில்களிலும் கண்ணகி வழக்குரை பாடப்படும் முறைமை பற்றியதாக எனது ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.

1.4  அறிமுகம்

 கிழக்கிலங்கைக் கண்ணகி அம்மன் கோயில்களைப் பொறுத்தவரையில், வைகாசித் திங்கள்ஃ வைகாசிப் பூரணையைக் குறித்து முன்வரும் ஐந்து அல்லது எட்டு நாட்களுக்கு முன்பு மட்டக்களப்புப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில்களின் கதவுகள் திறக்கப்படுகின்றன. “கதவு திறத்தல்” விழாவோடு தொடங்கும் இவ்வழிபாட்டினை கண்ணகியம்மன் ‘சடங்கு’ என்றே அழைப்பர். கதவு திறத்தலுக்குப் பின் ஒவ்வொரு நாளும் நண்பகலிலும் இரவிலும் சடங்கு நடைபெறும். இச்சடங்கு நிகழ்வில் முக்கிய அம்சமாக ‘பத்ததி மற்றும் பாடல்கள்’ என்பன விளங்குகின்றன. ‘பத்ததி’ எனப்படுபவை கோயில் கிரியை செய்யும் முறைகளை ஒழுங்காக எடுத்துரைக்கும் ஆவணமாகும்.

  இவ்வாறு சடங்கு காலத்தில் பாடப்படும் பாடல்களில் கண்ணகியின் புகழ் உரைப்பனவாய் அமையும் பாடல்களை இரு பிரிவினுள் அடக்கலாம். (கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும்: 2008: xii)

1. கண்ணகை அம்மன் பற்றிய பொதுவான பாடல்கள் ஒரு பிரிவு. இவற்றுள் குளுர்த்தி, ஊர்சுற்றுக்காவியம், கண்ணகி வழக்குரை, கண்ணகை அம்மன் அகவல், பிரார்த்தனை போன்றவை அடங்கும்.

2. தனிப்பட்ட கண்ணகை அம்மன் கோயில்களுக்குரிய பாடல்கள் இன்னொரு பிரிவு. இவற்றுள் பொற்புறா வந்த காவியம், அங்கணாமைக் கடவை கண்ணகி அம்மன் காவியம், பட்டிநகர்க் கண்ணகை அம்மன் மழைக்காவியம், கன்னன்குடா கண்ணகி அம்மன் காவியம் போன்றவை அடங்கும். 

இவ்வாறு பாடப்படும் பாடல்கள் யாவற்றிலும் முக்கியமானதும் பிரசித்தி பெற்றதுமாக விளங்குவது “கண்ணகி வழக்குரை” ஆகும். கண்ணகி அம்மன் கோயில்களிற் படிக்கப்படும் இப் பழையகாவியம் கண்ணகி உரைத்த வழக்கின் பெயரால் “கண்ணகி வழக்குரை”, “கண்ணகி வழக்குரை காவியம்”, “வழக்குரை”, “வழக்குரை காதை”  எனவும் மட்டக்களப்பில் வழங்குகின்றது. 
கண்ணகிவழக்குரை பாடியவர் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் இருந்த போதும்,  ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒருவரான சயவீரசிங்கையாசிரியன் என்னும் சகவீரனால் பாடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதன் காலம் பற்றி நோக்கும் போது இந்நூலைப் பதிப்பித்த (1968) வி.சீ.கந்தையா இது எழுந்த காலம் கி.பி.15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகவே இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

கண்ணகி கூறிய வழக்கினை சிறப்பாக எடுத்துக்காட்டும் இக் கண்ணகி வழக்குரை நூலானது வரம்பெறுகாதை முதல் குளிர்ச்சிக்காதை ஈறாகப் பதினொரு காதைகளைக் கொண்டு 2226 செய்யுள்களில் நிறைவுறுகின்றது.  (கண்ணகிவழக்குரை: 1968: xx)
இதில் அமையப்பெற்றுள்ள வரம்பெறுகாதையில்; கோவலனார் பிறந்த கதை, அம்மன் பிறந்த கதையும், கப்பல் வைத்த காதையில்; மீகாமன் கதை,  தூரியோட்டு , கப்பல் வைத்தலும், கடலோட்டு காதையில்; வெடியரசன் போர், நீலகேசி புலம்பலும் வீரநாரணன் கதையும், மணிவாங்கின கதை, விளங்கு தேவன் போர் என்பனவும், மற்றும் கல்யாணக்காதை, மாதவி அரங்கேற்று காதை என்பனவும், பொன்னுக்கு மறிப்புக்காதையில் பொன்னுக்கு மறிப்பு, இரங்கிய காதலும், வழிநடைக்காதையில் வயந்தமாலை தூது, வழிநடை என்பனவும், மற்றும் அடைக்கலக்காதையும், கொலைக்களக்காதையில் ; சிலம்பு கூறல், கொலைக்களக்கதை, அம்மன் கனாக்கண்ட கதை, உயிர் மீட்புக்கதையும், அடுத்து வழக்குரைத்த காதை, குளிர்ச்சிக்காதையில் குளிர்ச்சி, வழக்குரை காவியம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இவ் வழக்குரை நூல்; வெண்பாவால் முடிகின்ற பல தாழிசைகளைப் பெரும்பாலும் கொண்டு, அந்தாதித்தொடையமைந்து  இடையிடையே விருத்தச் செய்யுளுங் கலந்து, பொதுமக்கள் படிப்பதற்கேற்ற இனிய நடை பயின்று செல்கின்றது. 

கண்ணகி வழக்குரைத்த செய்தியினை கிராமப்புறத்து பொதுமக்களிடையே நன்கு பரப்புதற்கேற்ற நடையில் பாடவேண்டும் என்னுஞ் சிறந்த நோக்குடன் இந்நூல் இயற்றப்பட்டுள்ளதனைக் காணமுடிகின்றது. 

பெரும்பாலும் அந்தாதித்தொடையாலமைந்த இந்நூல் முழுவதும் அகவல் அடிகளும் வெண்பா, தாழிசை என்பனவுங் கலந்ததொரு விருத்தக்காப்பியமாக விளங்குகின்றது. இந்நூலிலுள்ள செய்யுள் சிலவற்றுக்குப் புதுப் பெயர்கள் சில சூட்டப்பெற்றுள்ளது. கலி விருத்தங்களை ‘நடை’ என்றும், ‘நடைசாரி’ என்றும், மற்றைய சந்த விருத்தங்களைச் ‘சிந்து’ என்றும் இந்நூல் கூறுகின்றது. 

1.5  தெரிவு செய்யப்பட்ட நான்கு கோயில்களும், அவற்றில் கண்ணகி
வழக்குரை பாடப்படும் முறைமையும்

ஆகமம்சார் மற்றும் ஆகமம் சாராக் கண்ணகி கோயில்களில் வைகாசிக் குளிர்த்திச் சடங்கு காலத்தில் காவியங்கள் பாடுவதும் கோயிலுக்கே உரித்தான சில பாடல்கள் பாடும் வழக்கம் இருந்த போதிலும், கண்ணகிவழக்குரை பாடுவது கண்ணகி ஆலயங்களில் பெருவழக்காக உள்ளது. குறித்த சில ஆலயங்களில் கண்ணகி வழக்குரை பாடாது விட்டாலும், சில ஆலயங்களில் கண்ணகி வழக்குரைப் பாடல் முழுவதும் பாடும் முறையும், சில ஆலயங்களில் பாடல்களைச் சுருக்கிப் பாடும் முறையும் காணப்படுகின்றது.

 இதன்படி ஆய்வுக்கு தேர்ந்தெடுத்த கோயில்களில் வந்தாறுமூலை ஸ்ரீகண்ணகி அம்மன் கோயில் ஆகமம் சாராக் கோயிலாகவும், பட்டிநகர் கண்ணகை அம்மன் கோயில் ஆகமம் சாராக் கோயிலாகவும், காரைதீவில் ஆகமம்சார் கோயில் ‘இராஜராஜேஸ்வரி கோயில்’ என அழைக்கப்பட, ஆகமம்சாராக் கோயில் ஸ்ரீகண்ணகை அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகின்றது. இருந்தபோதிலும் ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்திலேயே வருடாந்த வைகாசிக் குளிர்த்திச் சடங்கு இடம்பெறுகின்றது. செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆகமம்சார்ந்;த, ஆகமம்சாராத முறையிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆகமம் சார்ந்த உற்சவமும், ஆகமம் சாராத வகையில் வைகாசிக் குளிர்த்திச் சடங்கும் நடைபெறுவதனைக் காணமுடிகின்றது.

கண்ணகி வழக்குரை நூலுருப் பெறமுன்னர் ஏட்டு வடிவில் இருந்த காலத்தில் இருந்து ஏடு பார்த்துப் படிக்கும் முறை காணப்பட்டது. தற்போது கண்ணகி வழக்குரை புத்தகம் பார்த்துப் பாடப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கந்தபுராணம் “புராணபடன” முறையில் அதாவது ஒருவர் பாடல்பாட மற்றவர் பொருள் கூறும் முறையில் பாடப்படுகின்றது. ஆனால் கண்ணகி வழக்குரையில் பாடல் மட்டுமே பாடப்படுகின்றது. பொருள் கூறிப் பாடும் முறை இல்லை.

 கண்ணகிவழக்குரை பாடுவதில் கோயிலுக்கு கோயில் வித்தியாசமுள்ளதனைக் காணமுடிகின்றது. வந்தாறுமூலை ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயத்தில் கண்ணகி வழக்குரை பாடுவதில்லை. ஆனால் குளிர்ச்சிக்காதையில் (ஆ) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள “திருமருவு கைலாய மலையிலுறை நிலவுபுனை” எனத் தொடங்கும் ‘வழக்குரை காவியம்’ பகல், இரவு பூசை நேரத்தில், உடுகு, சிலம்பு வாத்தியங்களைப் பயன்படுத்தி பாடும் முறை உள்ளது. இப்பாடலைக் கட்டாடியார் மட்டுமன்றி பொதுமக்களும் சேர்ந்து பாடும் வழக்கம் இங்குள்ளது. வழக்குரை காவியம் பாடுவதற்கு முன்பும், ஊர்சுற்றுக் காவியம் பாடுவதற்கு முன்பும், வரம்பெறுகாதையில் விநாயக வணக்கமாக வரும் “வீசுகர மேகநிற வேதநுத லாள்கருணை….” என வரும் பாடல் பாடப்படும் வழக்கம் உள்ளது.

பட்டிநகர் கண்ணகை அம்மன் கோயில், காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் கோயில்களில் வைகாசிக் குளிர்த்திச் சடங்கின் போது மட்டும் கண்ணகி வழக்குரை பாடப்படுகின்றது. குளிர்ச்சிக் காதையில் (ஆ) பிரிவில் வரும் ‘வழக்குரை காவியம்’ பாடப்படுவதில்லை. ஆனால் செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வைகாசிச் சடங்கின் போது கண்ணகி வழக்குரை பாடப்படுவதுடன், தைப்பொங்கல் தினத்தன்று ‘தைக்குளிர்த்தி’ என்ற பெயரில் கண்ணகி வழக்குரையில் 11வது காதையாக அமைந்துள்ள குளிர்ச்சிக்காதை பாடப்படும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இங்கு குளிர்ச்சி வருடத்தில் இரு தடவைகள்  பாடுவதனால் அதனை ‘உற்சவக் குளிர்ச்சி’ என்றும் ‘தைக்குளிர்ச்சி’ என்றும் இருவிதமாக அழைப்பர்.

சடங்கு நாட்களின் எண்ணிக்கையைக்கொண்டு கண்ணகி வழக்குரை பாட ஆரம்பிக்கும் முறையை மேற்குறிப்பிட்ட கோயில்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது, வித்தியாசம் உள்ளதனைக் காணலாம். பட்டிநகர் கண்ணகை அம்மன் கோயிலில் வைகாசிப் பூரணைக்கு முதல் வரும் வெள்ளிக்கிழமை கதவு திறக்கப்பட்டு 5 நாள் சடங்கு இடம்பெறும். கதவு திறந்த நாள் முதல் கண்ணகி வழக்குரை பாடப்படுகின்றது. கப்புகனார் உட்பட பொதுமக்கள் அனைவரும் பாடுவர். ஆண்கள் மட்டும் பாடல் பாடுவர். புடைவை விரித்து அதன் மீதிருந்து பாடுவார்கள். சடங்கு நாட்களில் காலை 10.00 மணி தொடக்கம் மதிய பூசை 12.00 மணி வரையும் பின்னர் பூசை முடிந்ததும் 2.30 மணியளவில் பாட ஆரம்பித்து பிற்பகல் 5.00 மணிவரையும் பாடுவார்கள். கண்ணகிவழக்குரை ஏடு ஆலயத்தினுள் இருக்கும் ஆனால் பாடல் பாடுபவர்கள் கண்ணகி வழக்குரை புத்தகத்தைப் பார்த்தே பாடுவர், ஏடு பார்த்துப்பாடும் முறை இங்கு இல்லை. பாடல்கள் அதிகம் இருப்பின் சுருக்கிப் பாடும் முறை இங்கு காணப்படுகின்றது. குளிர்த்தி அன்று குளிர்ச்சிக்காதை பாடப்படுகின்றது. பட்டிமேட்டுக் கண்ணகை அம்மன் காவியமான “திருமருவு பூலோக மெங்கினும் வாழ்கின்ற….” எனத்தொடங்கும் பாடல் பாடப்படுவதற்கு முன்னர் காப்பாக வரம்பெறு காதையில் வரும் விநாயக வணக்கப் பாடலான “வீசுகர மேகநிற வேதநுது லாள்கருணை……..” என்ற பாடல் பாடப்படுகின்றது. இங்கு ஊர்சுற்றுக்காவியம், குளிர்ச்சிக்காதையில் இறுதியாக அமைந்துள்ள வழக்குரை காவியம் என்பன பாடப்படுவதில்லை. 

 காரைதீவுக்  கண்ணகை அம்மன் ஆலயத்தில் கதவு திறத்தலுக்கு முதல் நாள் “பட்டயம் வாசிக்கும் நிகழ்வு” ஊரில் இடம்பெறுகின்றது. பட்டயம் ஆலயத்திலிருந்து பூசை செய்து எடுத்துச் செல்லும் முன் வரம்பெறுகாதையில் வரும் விநாயக வணக்கம், சிவ வணக்கம், குரு வணக்கம் என்பன பாடப்படுகின்றது. அத்துடன் 63 வருடங்களின் பின் இம்முறை காரைதீவில் இடம்பெற்ற கொம்புமுறி விழா நிகழ்வு நடைபெறும் முன் பூசையின் போது, இம்மூன்று பாடல்களும் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

காரைதீவில் வைகாசிக் குளிர்த்திச் சடங்கானது, வைகாசித் திங்களிற்கு முதல் வரும் திங்கட்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து எட்டு நாட்கள் சடங்கு நடைபெறும். கதவு திறந்த அன்றிலிருந்து வழக்குரை பாடுவதில்லை. அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை காலையில் உடுக்கு, வழக்குரை புத்தகம், வழக்குரை ஏடு என்பவற்றுக்கு பூசை செய்து மடை வைத்து அதன் பின்னர் பாடல் பாடத் தொடங்குவர். புடைவை விரித்து பாடுபவர்கள் அதன்மீது அமர்ந்திருந்து, மரக்குற்றி ஒன்றின் மேல் ஏடு வைத்து அதன் மேல் கண்ணகி வழக்குரைப் புத்தகத்தை வைத்து பாடும் முறை இங்குள்ளது. ஏடு பார்த்துப் பாடும் முறை இங்கு இல்லை. ஒவ்வொரு நாளும் பாடும் முன்னர் மடை வைக்கும் வழக்கம் இங்கு உண்டு. சடங்கு நாட்களில் காலையில் 8.00 மணியளவில் பாடத்தொடங்கி மதியப்பூசை நடைபெறும் வேளையில் 1.00 மணிக்கு பாடுவதனை நிறுத்தி, பின்னர் பூசை முடிந்ததும் பாடத்தொடங்கி இரவுப் பூசை 7.00 மணிக்கு பூசை ஆரம்பமாகும் வரை பாடுவார்கள்.  இங்கு கப்புகனாருடன் பொதுமக்களும் சேர்ந்து பாடுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. குறிப்பாக ஆண்கள் மட்டுமே இங்கு கண்ணகி வழக்குரையை பாடுகின்றனர். இங்கு கண்ணகி வழக்குரையில் வரும் 2226 செய்யுள்கள் முழுவதும் பாடி முடித்து, பின்னர் மீண்டும் திங்கள் காலையில் கொலைக்களக் காதையில் இருந்து ஆரம்பித்து குளிர்ச்சிக்காதை வரை பாடி முடிக்கும் வழக்கம் இங்கு உள்ளது. குளிர்ச்சிக்காதையில் வரும் வழக்குரை காவியம் பாடப்படுவதில்லை. ஆனால் பூசையின் போது ஊர்சுற்றுக் காவியம் பாடும் முதல் வரம்பெறுகாதையில் வரும் விநாயக வணக்கமான “வீசுகர மேகநிற வேதநுத லாள்கருணை……” என்ற பாடலும், குருவணக்கமாக வரும் “கருவாக உருத்தரித்துக் காசினியிற் வீழ்ந்ததற்பின்…..” என வரும் முதலாவது செய்யுள் மட்டும் பாடப்படுகின்றது. 
ஆரம்ப காலத்தில், கண்ணகி வழக்குரை காவியம் காரைதீவு கண்ணகை அம்மன் கோயிலில் கைலாயபிள்ளைக் கப்புகனாராலும் முன்னோராலும் படிக்கப்பட்டதென்றும்  அதனால் சிறுவயதில் கவரப்பட்டே சிலப்பதிகாரம் மீதும் தமிழ்ப்பண்பாட்டின் மீதும் விபுலானந்த அடிகள் தம் கவனம் திருப்பினார் என்றும் கூறுவர். 

பழந்தமிழ் இலக்கியங்களிலே ஆர்வம் காட்டிய சுவாமி விபுலானந்தருக்கு சிலப்பதிகாரத்தில் அதீத ஈடுபாடு ஏற்பட்டமை பற்றி அவரே பின்வருமாறு கூறுகின்றார்.                                              

 “ஈழநாட்டின் குணபாலிலே, என் முன்னோருக்கு உறைவிடமாகிய காரேறு தீவிலே, கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் வழிவந்த மன்னர்களாலே நிறுவப்பட்ட பழமையான கண்ணகையார் கோயில் ஒன்று உள்ளது. அதன் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் மீதுள்ள ஆர்வம் பெருகிற்று……..” எனக் குறிப்பிட்டுள்ளார். (யாழ்நூல்: பக்கம்: 29)          (காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் : 2014: 50)  

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் வருடாந்த வைகாசிக் குளிர்த்திச் சடங்கானது வைகாசித் திங்களிற்கு முதல் வரும் வெள்ளிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பித்து தொடர்ந்து நான்கு தினங்கள் சடங்கு நடைபெறும்.  முதல் நாளிலிருந்து வழக்குரை காவியம் பாடப்படுகின்றது. முதல் நாள் சம்பிரதாயத்திற்காக ஏடு அவிழ்த்து ஏடு பார்த்து பாடும் முறை இங்குண்டு. இவ்வாலயத்தில் கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு, களுதாவளை என, ஆறு ஊர்க்கிராம மக்கள் சேர்ந்து சடங்கு செய்து வருகின்றனர். இங்கு ஆரம்ப காலத்தில் ஏடு பார்த்துப் படிப்பது மாங்காட்டு மக்கள் என்ற நடைமுறையும், வழக்குரை பாடுவது கிரான்குள மக்கள் என்ற நியதியும் பின்பற்றப்பட்டு வந்தது. எனினும், தற்போது ஊர் வேறுபாடின்றி, ஆண்களோடு பெண்களும் சேர்ந்து வழக்குரை பாடும் முறை காணப்படுகின்றது. அதிகாலை 5.30 மணியளவில் பாடத்தொடங்கி 1.00 மணிப் பூசை நேரத்தில்  பாடுவதனை நிறுத்தி பின்னர் பூசை முடிவடைந்ததும், பிற்பகல் 4.00 மணியளவில் பாட ஆரம்பித்து இரவு 9.00 மணிப் பூசைநேரத்தில் நிறுத்தி பின்னர் பூசை முடிவடைந்ததும் தொடர்ந்து இரவு 11.30 வரை பாடுவார்கள். கண்ணகி வழக்குரையில் வரம்பெறு காதையிலிருந்து வழக்குரைத்தகாதை வரை உள்ள பத்துக் காதைகளையும் (2149 பாடல்கள்) பாடுவார்கள். வரம்பெறுகாதையில் விநாயக வணக்கம், விநாயகர் காப்பு மட்டும் படிக்கப்படுகின்றது, சிவ வணக்கம், குருவணக்கம் என்பன பாடப்படுவதில்லை. குளிர்ச்சிக்காதை குளிர்த்தி நிகழ்வின் போது களுதாவளை ஊர் மக்களால் பாடப்படும் முறை உள்ளது. இங்கு பூசையின் போது வழக்குரை காவியம் பூசகரால் பாடப்படுகின்றது. 

கண்ணகி வழக்குரை பாடல்கள் பாடுவோர், பாடப்படும் முறைமையினடிப்படையில் தேர்ந்தெடுத்த இவ்வாலயங்களில் வித்தியாசம் உள்ளதனைக் காணலாம். இதன்படி பட்டிநகர் கண்ணகை அம்மன் கோயிலிலும், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் கோயிலிலும் இருவர் சேர்ந்து பாடுவர். முதல் 2 அடியை ஒருவர் பாட, அடுத்து வரும் 2 அடியை ஒருவர் பாடும் முறை இவ் ஆலயங்களில் உண்டு. இறுதி வரியை இரு தடவை பாடும் முறை இல்லை.  அதிலும் செட்டிபாளையம் கண்ணகை அம்மன் கோயிலில் வெண்பா பாடலை ஒருவரே பாடுவார். பிரித்துப்பாடும் வழக்கமில்லை, அத்துடன் பாடல்கள் அதிகம் இருப்பின் வழக்குரை முழுவதும் பாடி முடிக்கவேண்டும் என்பதற்காக நான்கு பேர் சேர்ந்து ஒருவரியை ஒருவர் வீதம் பாடும் முறை இங்கு காணப்படுகின்றது. ஆனால் காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருவர் பாடினாலும் முதல் ஒரு அடியை ஒருவர் பாட அடுத்து வரும் ஒரு அடியை அடுத்தவர் பாடும் முறை உள்ளதோடு கடைசி வரியை இரு தடவைகள் அழுத்திப் பாடும் முறை உள்ளது. 

கண்ணகி வழக்குரையை ஒவ்வொரு முறையும் புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பிக்கும் முதல் ‘திருச்சிற்றம்பலம்’ சொல்லி விநாயக வணக்கமான “வீசுகர மேகநிற வேதநுத லாள்கருணை……….” என்ற பாடலை பாடி தொடர்ந்து வழக்குரை பாட ஆரம்பிக்கும் முறை பட்டிநகர் கண்ணகை அம்மன் ஆலயத்திலும், காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்திலும் பின்பற்றப்படுகின்றது. ஆனால் செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இவ்வாறு ‘திருச்சிற்றம்பலம்’ சொல்லி விநாயக வணக்கம் பாடாமல் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பாடும் முறை உண்டு.

மேலும் கண்ணகி வழக்குரை கண்ணகி கோயில்களில் மட்டுமே பாடப்படுகின்றது. ஆனால் கோயிலுக்கு அருகே இல்லாமல் தூரத்திலிருப்பவர்களும் பாடல்களைக் கேட்க வேண்டும் என்பதற்காக, ஊரிலுள்ள ஏனைய பிள்ளையார், முருகன் கோயில்களிலும் இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தி கண்ணகி வழக்குரை பாடும் போது நேரடியாக ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புச் செய்யப்படுவதனை காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் என்பவற்றில் காணக்கூடியதாக இருந்தது. 

கண்ணகி வழக்குரையில் பல்வேறுபட்ட பாவினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் சிந்து, வெண்பா, விருத்தம், வேறு என்பன தனித்தனி மெட்டில் பாடப்படுவதனையும் நடை, நடைசாரி என்பன ஒரே மெட்டில் பாடப்படுவதனையும் மூன்று கோயில்களிலும் காணமுடிந்தது.

மூன்று ஆலயங்களிலும், கண்ணகிவழக்குரை பாடும் போது எவ்வித வாத்தியங்களும் பயன்படுத்தப்படுவதில்லை. 
கண்ணகி வழக்குரையில் வரும் ‘மாங்கனிக் கதை’ போன்று செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மட்டும்; ‘மாங்கனிக் கதை’ ஒன்று உள்ளது. இதன்படி, குறிப்பிட்ட காலத்திற்கு முதல் ஏழு ஊருக்கு பொதுவாக இருந்த இவ்வாலயம் பின்னர் ஆறு ஊருக்கு பொதுவானதாக மாறியது. இதில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக ஆலயத்தினுள் இருந்த பொன்னாலான மாங்கனியை பிரிந்து சென்ற ஊரவர்கள் தோணியில் வைத்து ஆற்றினூடாக களவாக எடுத்துச் சென்றதாகவும், தோணியில் வைக்கப்பட்டிருந்த மாங்கனி தானாக ஆற்றினுள் குதித்து மாயமாக மறைந்ததாகவும், தற்போதும் ஆற்றில் ‘மாங்கனி குதித்த பள்ளம்’ எனும் பெயரில் பள்ளம் ஒன்று உள்ளதாகவும் இங்கு ஒரு தொன்மக் கதை உள்ளது. இக்கதையினை ஆலயச் சுவற்றில் சிற்பமாகவும் பொறித்துள்ளனர். 

  மேலும் கண்ணகி வழக்குரை செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மட்டும் நிகழ்த்துகை முறையில் நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து நடைமுறையில் கொண்டுவரப்படவில்லை. வந்தாறுமூலை ஸ்ரீகண்ணகி அம்மன் கோயில், பட்டிநகர் கண்ணகை அம்மன் ஆலயம், காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயங்களில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை.

 இவ்வாலயங்களில் கண்ணகி வழக்குரை பாடுவதற்கான காரணத்தை நோக்கும் போது, மேற்குறிப்பிட்ட நான்கு ஆலயங்களிலும் காரணம் ஒரே விதமாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது. இதன்படி முன்னோர்கள் பாடி வந்த முறையினைத் தொடர்ந்து, அடுத்து வரும் சந்ததியினரும் பாடும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அத்துடன் ‘கண்ணகி வழக்குரை’ என்ற சொல்லை மட்டும் மக்கள் அறிந்துள்ளனரே தவிர அதில் வரும் விடயங்கள் பற்றி மக்களுக்குத் தெரியாது. இதனால் கண்ணகியின் வரலாற்றை, பெருமையை, கண்ணகையின் தெய்வீகத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கிலும், பூமி குளிர்ந்து பூலோகம் குளிர்ந்து நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்பாடல் பாடப்படுகின்றது.

 கண்ணகி வழக்குரை பாடுவதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றது, கண்ணகி வழக்குரை கற்புக்கரசி கண்ணகியின் கதை, முன்னோர்களால் நெறிப்படுத்தப்பட்ட வரலாறு என்பதனால் நம்மவர்கள் இதனைக் கேட்பதனால் சமுதாயக் கட்டமைப்பை ஒழுக்கத்தோடு பேணுவதற்கு இது ஒரு வழிகாட்டியாய் அமைகின்றது, இதனூடாக மக்கள் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதனையும், மக்கள் மத்தியில் பக்தி உணர்வு ஏற்படவும் வழிவகுக்கின்றது.

 கண்ணகிவழக்குரை பாடுவோரின் நிலை பற்றிப் பார்க்கும் போது இழைப்பு, களைப்பு தெரியாமல் மேலும் பாடவேண்டும் என்ற உணர்வோடு உணர்ச்சிபூர்வமாக உருக்கத்தோடு இமைகளை உயர்த்தியும், தலைகளை அசைத்தும் பாடுவதனைக் காணமுடிகின்றது. “பாடலைப் பாடப் பாட இனிமையாக இருப்பதாகவும், பாடும் போது ஏற்படும் உணர்வை வார்த்தையால் வர்ணிக்கமுடியாதென்றும்” பாடுவோர் கூறுகின்றனர். 

 கேட்போர் நிலை பற்றிப் பார்க்கும் போது, சடங்கு காலத்தில் கண்ணகி வழக்குரை கேட்பதற்கென்றே ஆலயத்திற்கு மக்கள் வருகின்றார்கள். குறிப்பாக இளைஞர்களை விட வயதானவர்களே பாடல் கேட்பதில் ஆர்வம் மிக்கவர்களாக உள்ளனர். இளைஞர்கள் பாடல் பாடுபவர்களிற்கு அருகில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பதனையும், வயதானவர்கள் அம்மனை உற்றுநோக்கி அம்மன் சிந்தையுடையவர்களாக இருந்து உற்சாகத்துடன் கண்ணீர் ததும்ப கேட்டுக்கொண்டிருப்பதனையும், பாடுபவர்கள் தவறுதலாக பிழை விட்டால் நிமிர்ந்து பார்ப்பதனையும், பூசை நேரத்தில் பாடலை நிறுத்தும் போது “ஏன் நிறுத்திட்டீங்கள்?” என்று கேட்பதனையும் காணமுடிகின்றது.

 காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் கண்ணகி வழக்குரை கேட்பதில் ஆர்வம் காட்டும் மக்களின் எண்ணிக்கையிலும் பார்க்க பட்டி நகர் கண்ணகை அம்மன் ஆலயத்தில் பாடல் கேட்க வருவோர் எண்ணிக்கையில்  குறைவாகவே காணப்படுகின்றனர். 

தொகுத்து நோக்குமிடத்து, ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்த நான்கு ஆலயங்களில் வந்தாறுமூலை ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலயம் தவிர, பட்டிநகர் கண்ணகை அம்மன் ஆலயம், காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயம், செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம் என்பவற்றில், கண்ணகி வழக்குரை ஏட்டிலிருந்து பாடத்தொடங்கிய காலம் முதல் அச்சுருப்பெற்று நூலாக வெளிவந்த பின்னர், இன்று வரை பாடப்பட்டு வருகின்றது. பாடாமல் விடப்பட்ட சந்தர்ப்பம் இம்மூன்று ஆலயங்களிலும் இல்லை. மேலும் பாடுபவர்கள் 30 வயதிற்கு மேற்பட்டோராகவே உள்ளனர். இளைஞர்கள் ‘படிக்கவரலாமா?’ என்று கேட்கின்றார்களே தவிர பாட வருவதில் பின்நிற்கின்றனர். ஆர்வம் இருந்தும் இளைஞர்கள் மத்தியில் தயக்கம் காட்டும் நிலையே நிலவுகின்றது.

கண்ணகி வழக்குரை பாடுவதென்பது ஒரு குறிப்பிட்ட தலைமுறையோடு கைவிடப்படும் விடயமல்ல. ஏனெனில் சடங்கு முறையோடு பின்னிப்பிணைந்ததாக கண்ணகி வழக்குரை பாடப்படும் முறை இருந்துவருகின்றது. இது தொடர்ந்துகொண்டுதானிருக்கும். பொதுவாக கண்ணகி வழக்குரை பாடப்படும் மூன்று ஆலயங்களிலும் ஆரம்பத்தில் பாடல் பாட வந்தவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க தற்போது பாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் பாட முன்வந்திருப்பதும், குறிப்பிட்ட நாட்களினுள் பாடல்கள் அனைத்தையும் பாடி முடிப்பதனையும், வைத்து நோக்கும் போது, கண்ணகி வழக்குரை பாடுதல் எதிர்காலத்திலும் நின்று நிலைக்கும் சூழலே காணப்படுகின்றது.
உசாத்துணை 

1. கந்தையா,வி.சீ, (1968), “கண்ணகி வழக்குரை”, காரைதீவு இந்துசமய விருத்திச் சங்க வெளியீடு.

2. கணபதிப்பிள்ளை,சி, (1971), “மகாமாரித் தேவி திவ்விய கரணி”, விவேகானந்தா அச்சகம், யாழ்ப்பாணம்.

3. ஹேமா சண்முக சர்மா, (2003), “வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கருணை மலர்”, வற்றாப்பளைக் கண்ணகி அம்பாள் கோயிற்             பரிபாலன சபை.

4. மட்/செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு, (1994), ஆலய நிருவாகம், புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு.

5. வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வழிபாட்டு முறைகள், (துண்டுப்பிரசுரம்)

6. குருநாதபிள்ளை தோம்பதோர்,க. “பட்டிநகர் கண்ணகை” (துண்டுப்பிரசுரம்)

7. சாம்சிவம்,ஜீ.கே. (2003) “காரைதீவு சேனாதிராசன் குடியின் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு”, கலைக்கோட்டம், காரைதீவு-04.

8. ஜெயநாதன்,வெ, (2014), “காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக சிறப்புமலர் - 2014”, ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபை.

9. கூடல்,பரல்:02, கண்ணகி கலை இலக்கிய விழா மலர் -2013, கண்ணகி கலை இலக்கியக் கூடல், மட்டக்களப்பு.

10. ஆறுமுகம்.கண, (2008), “கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும்”, சண் அச்சகம். மட்டக்களப்பு.

11. http//www.kannahikoodal.com

12. இராஜேஸ்வரன்,சி. (வந்தாறுமூலைக் கண்ணகி அம்மன் கோவில் முன்னாள் கட்டாடியார்) நேர்காணல், 2015.05.13, 2015.05.21

13. சதாசிவம்,வே. (வந்தாறுமூலைக் கண்ணகி அம்மன் கோவில் தற்போதைய கட்டாடியார்) நேர்காணல், 2015.05.28, 2015.05.29

14. யோகேந்திரன்,தா. (வந்தாறுமூலைக் கண்ணகி அம்மன் கோவில்) நேர்காணல், 2015.05.29  

15. பிரபாகரன்,சோ. (வந்தாறுமூலைக் கண்ணகி அம்மன் கோவில்) நேர்காணல், 2015.05.29

16. சுவேந்திரன்,க. (வந்தாறுமூலைக் கண்ணகி அம்மன் கோவில்) நேர்காணல், 2015.05.29

17. தனுராஜ்,கு. (வந்தாறுமூலைக் கண்ணகி அம்மன் கோவில்) நேர்காணல், 2015.05.29

18. ரவீந்திரநாத்,கு. (பட்டிநகர் கண்ணகை அம்மன் கோவில் கப்புகனார்) நேர்காணல், 2015.05.20, 2015.05.31

19. கிருபைராஜா,மா. (இராமகிருஷ்ணா வித்தியாலய அதிபர், அக்கரைப்பற்று) நேர்காணல், 2015.05.31

20. தியாகராஜா,செ. (காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் கப்புகனார்) நேர்காணல், 2015.05.13, 2015.05.30

21. சிறீதரன்,அ. (காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் கப்புகனார்) நேர்காணல், 2015.05.14, 2015.05.30 

22. கணேசமூர்த்தி,க. (காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் தர்மகர்த்தா) நேர்காணல்,  2015.06.01

23. வேல்நாயகம்,இ. (காரைதீவு கண்ணகை அம்மன் கோவில் தர்மகர்த்தா) நேர்காணல்,  2015.06.01

24. நமசிவாயம்.ச, (காரைதீவு கண்ணகை அம்மன் கோவில்) நேர்காணல்,  2015.06.01

25. தேவராஜா,கு. (செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கட்டாடியார்) நேர்காணல், 2015.05.15

26. நிதிரூபன்,ம. (செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்) நேர்காணல், 2015.05.31

27. உதயகீர்த்தி,அ. (செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்) நேர்காணல், 2015.05.31

28. விஸ்வலிங்கம்,வீ. (செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்) நேர்காணல், 2015.05.31

29. மோகனசௌதமி,து. (செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம்) நேர்காணல், 2015.05.31

30. அ.கிருபா(செட்டிபாளையம் -ஆசிரியர்) நேர்காணல், 2015.05.02


ஆய்வு; செல்வி.க.ஜீவரதி, உதவி விரிவுரையாளர்,
கிழக்குப்பல்கலைக்கழகம்.

 

Comments