[Untitled]‎ > ‎

18.07.15- உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர்..

posted Jul 17, 2015, 9:11 AM by Unknown user
                                 
                   

           தமிழுக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தினர். அத்தகைய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால், முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலானந்தர் என்றால் மிகையாகாது.

அறிமுகம்    

    மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் தென்கோடியில் செந்நெல்லும் செந்தமிழும் சிறந்து விளங்கும் பழம்பெரும் பதியான காரைதீவில் 1892-03-27 அன்று, சாமித்தம்பி- கண்ணம்மை தம்பதியினருக்கு மகனாக “தம்பிப்பிள்ளை” என்ற நாமத்தோடு அவதரித்தார். சிறுவயதில் நோய்வாய்ப்படவே கதிர்காம முருகனின் பெயராகிய “மயில்வாகனன்” எனும் பெயரை பெற்றோரால் சூட்டப்பெற்றவர்; இன்று தமிழ் கூறும் நல்லுலகில்; முதல் தமிழ்ப் பேராசிரியர் விபுலானந்தராக மாறியமைக்கு அவரது பல்திறப்பட்ட ஆளுமையும், பன்முகப்பட்ட பணிகளும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கிய விபுலானந்தர்; சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வன.

   சிறுவயதில் குஞ்சித்தம்பி ஆசிரியரிடமும், வைத்திலிங்க தேசிகரிடமும் கல்வி பயின்ற இவர்; பாரத வசனம், பெரியபுராணம், பஞ்ச தந்திரம், விநோத மஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம் போன்ற நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலக்கல்வியினை இவர் முதலில் கல்முனையிலுள்ள மெதடிஸ்ற் கல்லூரியிலும் பின்னர் மட்டக்களப்பிலுள்ள மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். இவர் 16வது வயதிலேயே கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) பரீட்சையில் சித்தியெய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1916இல் மதுரைத் தமிழ்ச் சங்கப்பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, ‘இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்’ என்னும் பெருமையையும் பெற்றார். 1919இல் இலண்டன் பல்கலைக்கழகம் நடாத்திய பி.எஸ்.சி தேர்விலும் சித்தியடைந்தார். 

   கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக்கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக்கொண்டார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞான சித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1925ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928இல் அதிபர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

   மயில்வாகனனுக்கு சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சித்தானந்தரினால் பிரபோத சைதன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. 1924இல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து “பிரபோத சைதன்யர்” என்னும் பெயர் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பௌர்ணமியில் துறவறம் மேற்கொண்டு சுவாமி சிவானந்தரால் “சுவாமி விபுலானந்தர்” என்னும் நாமம் சூட்டப்பெற்றார். கல்லடி உப்போடையில் விபுலானந்தர் தாம் அமைத்த பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது தமது குருவின் ஞாபகார்த்தமாகவே.

கல்விப் பணிகள் 

“கலை, அறிவியல், மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வி” என்பது அடிகளாரின் கருத்தாகும்.

   1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர், மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித்தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித்தொண்டாற்றினார். மேலும், இராமகிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். 

   1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், 1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல் மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில் எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதழியல் பணிகள்

   இராமகிருஷ்ணமிஷன் நடாத்திய ‘இராமகிருஷ்ண விஜயம்’ என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், ‘வேதாந்த கேசரி’ என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.    இராமகிருஷ்ணமிஷன் இமயமலைப்பகுதியில் உள்ள (Almorah) அல்மொறாஹ் என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ‘பிரபுத்த பாரத’ (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934ஆம் ஆண்டில் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போதுதான், இசைத்தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப்பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது. 

தமிழியல் பணிகள்

 செட்டிநாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலானந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில்தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார். இங்கு இராமகிருஷ்ணமிஷன் மேற்கொண்டுவந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 

   தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக ‘யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பா~h அபிவிருத்திச் சங்கம்’ என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது.

   யாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன. மேலும் இலக்கியம், இசை, சமயம், மொழியியல், கல்வி, அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார். மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924), கருமயோகம் (1934), ஞான யோகம் (1934), நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941), விவேகானந்தரின் பிரசங்கம் (1934) மேலும் அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933), கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936), கலைச் சொற்கள் வேதிநூல் (1938), மின்சார சாத்தி வரலாறு, விஞ்ஞான தீபம் (1922), விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 

    மேலும், விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும். சுப்பிரமணியபாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத்துக்களைப் பொதிந்துள்ளனவாய் இருந்தாலும் அவை பழைய யாப்பமைதியோடும், தமிழ் மரபோடும் முற்றப் பொருந்தாமையினால் உண்மையான தமிழ்க் கவிகளல்ல என இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் வெறுத்தனர். அப்பாடல்களுக்குரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனால் அடிகளார் அண்ணாமலை நகரை அடைந்த போது அங்கு ‘பாரதி கழகம்’ என்ற சங்கமும் கூட்டி அப்பாட்டுக்களை இசை அறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் பாடுவித்தார். அதன் பின்னரே பாரதியாரின் புகழும், பாராட்டுக்களும் தமிழ் நாடெங்கணும் பரவின. தேடாதிருந்த பாரதியாரை தமிழுலகம் கனம் பண்ண வைத்த பெருமை விபுலானந்த அடிகளாருக்கே உரியதாகும். விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. 

     1948இல் வெளிவந்த ஈழமணிப் பத்திரிகையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு அடிகளாரை நினைவு கூருகின்றார்.

                        “சங்கத் தமிழ் கேட்க
                        வேண்டுமானால் இருவரிடம்
                        கேட்க வேண்டும் ஒருவர்
                        பெரும் பேராசிரியர்
                        சாமிநாதையர் மற்றொருவர்
                        விபுலானந்தர்”

   அக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.

 கலைச்சொல்லாக்கப் பணி

    சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே. கணிதம், வரலாறு, பௌதிகவியல், தாவரவியல், விலங்கியல், இரசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குவதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத்தலைவராகவும் இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க் கலைச்சொற்களைக் கொண்ட ‘கலைச்சொல் அகராதி’ 1938ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்த வகையில் தமிழ்மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது. 
  
இசைப்பணி

   விபுலானந்தரின் இசை ஆராய்ச்சிப் பணியை எடுத்து நோக்கினால், பண்டைத்தமிழிசையின் பெருமையையும் தனித்த இயல்பையும் எடுத்துக்காட்டும் வகையில் “யாழ்நூல்” என்னும் அரிய இசை ஆராய்ச்சி நூலை ஆக்கியுள்ளார். பண்டைத்தமிழரின் இசைக்கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ்நூல் கூறுகின்றது. அடிகளார் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரள்யேசுவரர் கோயிலில் திருஞான சம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப் பண்களைத் தாமே அமைத்து 1947ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.


   சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுவது “கங்கையில் விடுத்த ஓலை” என்னும் அடிகளாரின் கவிதை மலராகும். இமயமலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலத்தில் தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப் புலமையும் தூய்மையான வாழ்வும் சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது.

   நெருங்கிய ஒருவர் இறந்தவிடத்து அவர்க்கிரங்கிப் பாடிய கையறுநிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் “கங்கையில் விடுத்த ஓலை” புதுவகையில், புது மெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்றுமுழுதாக கையறுநிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்பனின் குணநலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையை நினைவு கூருகின்றார். வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகஜம். இந்த உண்மையை நன்கு அறியாதோரே இன்பம் வந்த போது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்த போது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும் என்பதை இக்கவிதை மலரில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். 

   மேலும் பல இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன. விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருப்பாதங்களுக்கு சூட்டப்பட வேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகின்றார் அடிகள்:

வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்ததாமரையோ,கழுநீர்மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது

என்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.

நாடகப் பணி  

  1924ஆம் ஆண்டு மதுரைத்தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் “நாடகத் தமிழ்” என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.எஸ்.சீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளுக்கிணங்க “மதங்கசூளாமணி” என்ற நூலை எழுதினார்.
N~க்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், ‘மதங்கசூளாமணி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

சமய, சமூகப் பணிகள்

   மேலும், விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.                “நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெறவேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்”, “வணக்கத்துடன் சிரத்தையுடன் ஈசுவரனை வழிபடுவோன், உள்ளத் தூய்மை பெற்றுக் கடவுளைக் காண்கின்றான்” என்றார்.

“பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்” என்றும் உரைத்தார்.

  சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் விபுலானந்தர். வறுமையிலும், சாதியப் பாதிப்பிலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் “பெரிய கோயில் வாத்தியார்” எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது மனிய நேய யாத்திரை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலானந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள், நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன.

தொகுப்புரை

   மக்களுக்கு எண்ணத்தை ஊட்டுவது இயற் தமிழ், உணர்ச்சியை ஊட்டுவது இசைத்தமிழ், நல்வழி காட்டுவது நாடகத் தமிழ் என்ற வகையில் முத்தமிழிற்கும் தொண்டாற்றி வித்தகராய் திகழ்ந்த விபுலானந்தர் 1947ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு இறைபதம் அடைந்தார். அவரது உடல் அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. 
  
    ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டிலுள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் ‘அகில இலங்கை தமிழ்மொழி தினம்’ இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது. மெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலானந்த அடிகளாரின் 60வது நினைவை முன்கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலானந்தர் இப்பூவுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற சமய, சமூக, தமிழியல் பணிகளினூடே இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்.
ஆக்கம்:க.ஜீவரதி, உதவி விரிவுரையாளர்,மொழித்துறை
     கிழக்குப் பல்கலைக்கழகம்


Comments