விபுலமுனி தோன்றிரலேல் பாரதியின் பாவன்மை பாரிற்கு பரவியிருக்குமா? பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டி, தொட்டிகளில்கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும் பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே. தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப்பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். பாரதியாரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துவிட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள். படித்தவர்கள் விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள் அவருக்குப் பதவி அளித்தவர்கள் எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது? விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால்இ தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால்இ மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள். சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும். சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும் மற்றைய இனிமையான கவிதைகளும் எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன. சைவத்தின் காவலர்கள் என்று எழுந்தவர்கள் சாதித்துவத்தின் காவலர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை விதைத்தார்கள். மனித குலத்தின் மடமைத்தனத்தின் உச்சநிலையான வருணப் பாகுபாடுகளை வளர்த்தார்கள். ஆனால் சுவாமி விபுலானந்த அடிகளோ மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார். சாதிப் பிரிவுகளை நீக்க உழைத்தார். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று தீயவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார். வாழ்க்கை அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் பிறந்தது மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள காரைதீவு எனும் நெய்தலும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற பழந்தமிழ்க் கிராமத்திலாகும். சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-03-27 இல் அடிகளாரைப் பெற்றெடுத்தனர். அப்பகுதியில்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமும் உள்ளது. காரைதீவின் காத்தல் தெய்வமாம் பத்தினித்தெய்வம் கண்ணகியைக் குலதெய்வமாகவும், அவ்வம்மையின் நாமத்தைத் தாங்கியவருமாகிய கண்ணம்மையின் வயிற்றில் முதலாவது உதித்தவர் அடிகளார். அடிகளார் இயற்பெயரான தம்பிப்பிள்ளை என்ற நாமத்தோடு பிறந்தார். அவர் நோய்வாய்ப்படவே கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று விரதம் அனுஷ்ட்டித்து நோய் குணமாகவே முருகப் பெருமானின் பெயரான 'மயில்வாகனன்' எனும் பெயரை அவருக்குப் பெற்றோர் சூட்டினர் மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி எத்தனை மணிநேரம் பேசினாலும் எடுத்தியம்ப இயலாது. தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக விளங்கிய விபுலானந்தர் சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும் தமிழிற்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன. அடிகளார் 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். இவரே தமிழ்நாட்டின் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றின் முதல் தமிழ்ப் பேராசிரியர் என்று கூறப்படுகிறது. அதுவே உலக வரலாறாகவும் கூறப்படுகிறது. 1898 இல் பள்ளியில் சேர்ந்தார். 1902-இல் மெதடிஸ்ட பள்ளியிலும் பின்பு மட்டக்களப்புக் கல்லூரியிலும் பிறகு அர்ச் மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார். 1916-இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ் சங்கப் பண்டிதர் என்னும் பெருமையையும் பெற்றார் 1919ல் தனது சொந்த முயற்சியில் கற்று இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி. தேர்விலும் சித்தியடைந்தார். 1924ல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து 'பிரபோதசைதன்யர்' என்னும் பிரமச்சரிய நாமம் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பெளர்ணமியில் துறவறம் மேற்கொண்டு 'சுவாமி விபுலானந்தர்' என்னும் பெயர் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் சிறீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தராவார். 1925ல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர், மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பாரிய கல்வித் தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைதீஸ்வர வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண 'சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார். 1931ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். 'சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்' என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. 'சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்' – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. 'ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் கவி வனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்' என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது. அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் 'நாடகத் தமிழ்' என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த 'மதங்க சூளாமணி' என்ற நூலை எழுதினார். 1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் 'பிரபுத்த பாரதா' என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார். அன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதே வேளை சுப்ரமணிய பாரதியை 'மகாகவி' என்ற அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்பதிலும் இவர் முனைப்பாக இருந்தார் என்று ஒரு தகவல் கூறுகின்றது. தமிழுக்காக தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் இனத்திற்காக இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். விபுலானந்த அடிகளார் மனிதாபிமானம் மிக்கவர் ஆதித் தமிழ்க் குடியின் அறவழியில் வந்தவர். பாதியில் முளைத்தெழுந்த சாதிக் கொடுமைதனைச் சாடித் தகர்த்தெறிந்த சாதனைத் தமிழன் அவர் அன்னார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட ஆதி திராவிடர் வாழ்ந்த திருவேட்களம் என்னும் சேரிக்குச் சென்று பாலர் படிக்கப் பள்ளிகள் அமைத்தார். முதியோர் கல்விக் கூடங்களும் ஏற்படுத்தினார். இதை அறிந்த உயர் சாதிப் பார்ப்பன்னர்கள் சுவாமி மீது ஆத்திரம் கொண்டனர். குடிப்பதற்குக் கூட நன்னீர் தர மறுத்தனர். இதனால் அடிகள் பலகாலம் உவர் நீரையே குடித்து வாழ்ந்தார். அடிகளாரின் நீண்ட நாளைய இசை ஆராய்ச்சிப் பணி 1947ல் 'யாழ் நூல்' என உருப்பெற்றது. கரந்தைத் தமிழச் சங்கத்தின் ஆதரவில் திருக்கொள்ளும் புதூர் ஆலயத்தில் 20-06-1947, 21-06-1947 ஆகிய இரு தினங்களிலும் யாழ் நூல் அரங்கேற்ற விழா நடந்தேறியது. தமிழ்நாட்டு மக்களிடையே கல்வி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தன்னிகரற்ற பணிகளை ஆற்றிய சுவாமி அவர்கள். ஈழத்திலும் ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனானார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்காக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் சுவாமி அவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராகப் பணிபுரிந்தோர் அவரதுகாலத்திற்கு முன்னர் என்றாலும் சரி அவருக்குப் பின்னர் இன்றுவரை என்றாலும் சரி யாருமே பிறந்ததுமில்லை உயர்ந்தவராய்த் திகழ்ந்ததுமில்லை, பணியிலே சிறந்ததுமில்லை. தமிழர்களுக்குக் கல்வியுட்டுவதிலே தளராத அவரது முயற்சியினால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். பேராசிரியர்களாக பண்டிதமணிகளாக புலவர்மணிகளாக உருவாகினார்கள். வாழையடி வாழையாகத் தமிழ் வளர்ச்சியின் எருவாகினார்கள். அதனால் சுவாமியவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மொழி வளர்ச்சியின் கருவாகினார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கான பாடத்திட்டத்தினைத் தயாரித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே. அதன்மூலம் சீரியவழியில் தமிழ் ஆராய்ச்சிக்கல்வி வளர்வதற்கும்இ தமிழ் ஆராய்ச்சிக் கலை தொடர்வதற்கும்இ தமிழ்மொழியின் நிலை உயர்வதற்கும் காலாக அமைந்தவர் சுவாமிகளே. சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே. கணிதம், வரலாறு, பொதிகவியல், தாவரவியல், விலங்கியல், இராசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத் தலைவராகவும், இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க்கலைச் சொற்களைக் கொண்ட கலைச்சொல் அகராதி 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்தவகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பக்காற்றிக் கொண்டிருக்கின்றது. சுவாமி அவர்கள், இந்தியாவில் இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட 'வேதாந்த கேசரி' என்றும் ஆங்கிலப் பத்திரிகைக்கும், இராமகிருஷ்ண விஜயம் என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரால் அவ்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கங்களும் சமய உண்மைகளை விளக்குவனவாக மட்டுமன்றித் தமிழ் மொழிஇ தமிழ்ப்பண்பாடு என்பவற்றைப் பரப்புவனவாகவும் அமைந்திருந்தன. விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமாகும். இறைவனின் திருப்பாதங்களில் சூட்டப்படவேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகிறார் அடிகள்: வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ, வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ? வெள்ளைநிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ? காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ? பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் புவுமல்ல நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது. என்று 'ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று' என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது. |
[Untitled] >