[Untitled]‎ > ‎

19.05.2013- திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாடு..

posted May 19, 2013, 1:09 AM by Web Team

கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது. இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம்.

இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.

பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.

கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல் கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான் . கிபி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான்.

இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப் பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான்.

கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பல இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று.

கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி, துர்க்கை, மாரி, பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி / கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது.

கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது.எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.

தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன.

பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர், பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர், செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு, செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா, அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர், மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே. என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.

நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.

சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ் சமுதாயத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும்,வாழ்க்கை நெறிமுறைகளையும் விளக்கும் வரலாற்று நூல்.

''மனிதர் யாரும் பண்போடு, பிறருக்கும் பயன்படும் நெறியோடு , உயிருக்கும்அஞ்சாது நீதிக்குப் போராடும் உணர்வோடு வாழ்ந்தால், அவரை இந்த உலகம் தெய்வமாகக் கொண்டாடும்''  என்ற உண்மையை கண்ணகி மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார் இளங்கோவடிகள்.

தமிழ்ச் சமுதாயத்தின் நல்வினைப் பயன் காரணமாக வரலாற்றுப் பின்னணியை நமக்கு படம் பிடித்துக் காட்டும் சாசனமாக ஒரு காவிய மாளிகையைச் சமைத்துத் தந்துள்ளார்.  தமிழன் என்னும் மனவுணர்வை வளர்த்து, தமிழ் வழங்கும் நிலப்பகுதி உண்மை எனநிறுபனம் காட்டுவது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரக் கதை சிறிதளவே கற்பனை தழுவிய வரலாறு ஆகும். காப்பியத்தலைவனும் தலைவியும் தமிழ் இனத்தார் பெருமைப்படத்தக்க வரலாற்று நாயகியும் நாயகனுமாவர். தமிழனத்தின் வரலாற்று களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.தமிழர்களின் பண்பாடுகளை தெளிவாகக் காட்டும் தமிழ் நூல் சிலப்பதிகாரத்திற்குப்பின்பு தோன்றவில்லை. இது , அந்தப் பெருங்காப்பியத்திற்குரியதனிப்பெருமையாகும். ஆகவேதான் , '' நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்ததமிழ்நாடு'' என்று டாக்டர் சாமிநாதய்யரும் ; '' யாமறிந்த புலவரிலே...இளங்கோவைப்போல்பூமிதனில் யாங்கனும் பிறந்தில்லை... '' பாரதியும்சிறப்பித்துள்ளனர். அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவதும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் .

வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார்.

சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழட்டினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் ஒற்றைச்சிலம்புகளே சிலப்பதிகாரமாயின என்று கூறலாம். கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது. வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.

சிறு குடியீரே சிறு குடியீரே ....என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது. சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான். இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது. கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே அதன் புகழ் கற்றவர் மத்தியில் பரம்பியது. சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது. கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை. வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் திழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது. வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது. நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது. சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர்.

சடங்குநிகழ்வுகள்

கண்ணகி மதுரையை எரித்தது கயவாகு மன்னன் பத்தினிக்கு விழா எடுத்தது சிங்கள மக்கள் பெரஹரா ஊர்வலம் நடாத்தி பத்தினியை வழிபடுவதெல்லாம் ஆடி மாதத்திலாகும். ஆனால் தமிழர்கள் இதனைத் தவிர்த்து வைகாசி மாதத்தில் கண்ணகிக்கு சடங்கு செய்துவருகின்றனர். வைகாசித்திங்கள் வருவேனென்று வரிசைக்கியைந்து விடைகொடுத்தாரே என குளிர்த்திப் பாடல் கூறுகிறது. இதில் வைகாசித் திங்கள் என்பதில் இருவேறு கருத்துக்கள்நிலவிவருகின்றன. ஓன்று வைகாசிப் பூரணையைக்குறிக்கும்.மற்றயது வைகாசிப்பூரணைக்கு அடுத்து வருகின்ற திங்களைக் குறிக்கும்.இவை சடங்குகளின் இறுதித் தினமாகக் கொள்ளப்படுகின்றன.இச்சடங்குகள் வைகாசி மாதத்தில் நடப்பதால் வைகாசிப் பொங்கல் என்றும் வைகாசிச்சடங்கு என்றும் வைகாசிக்குளுத்தி என்றும் அழைக்கப்படுவதுண்டு.

சடங்கு

சடங்கு நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை ஊருக்கு ஊர் வேறுபடும்.சில ஊர்களில் 5 நாட்கள் சில ஊர்களில் 7 நாட்கள் இன்னும் சில ஊர்களில் 9 நாட்களும் நடைபெற்றுவருகின்றன. சடங்கின் ஆரம்பநாள் கதவுதிறத்தல் என்று கூறுவர்.மாரியம்மன் காளியம்மன் சடங்கைப் பொறுத்தவரை இது கும்பம் வைத்தல் என அழைக்கப்படும். ஆரம்பநாள் கல்யாணக்கால் வெட்டும் சடங்கு என்றும்' கூறுவர்.அன்று கடல்நீர் எடுத்துவரும்வழியில் ஏலவே பார்த்துவைத்திருந்த இடத்தில் பூவரசு மரம் அல்லது வேம்பு மரக்கிளையை கத்தி பாவிக்காமல் முறித்து ஊர்வலமாக வந்து ஆலயத்தில் புடவைகள் சுற்றி நடப்படும். இது பக்தியுட்டும் நிகழ்வாக சித்திரிக்ப்பட்டுள்ளது. பின்பு பச்சைகட்டல் என்பது பாரம்பரிய நிகழ்வாகும்.மதுரையில் மாதவி வீட்டில் புகுந்த கண்ணகைக்கு சமையல் செய்து கொடுக்கப்பட்டதைக் குறிக்கும்.அன்று வழக்குரையில் அடைக்கலக்காதை பாடப்பெறும்.இக்கதையிற் கூறப்படும் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சொல்ல கட்டாடியார் அவற்றை எடுத்து அம்மன் முன் காணிக்கையாக வைப்பது இதில் முக்கிய அம்சமாகும். இறுதிநாள் பகலில் வழக்குரையில் கொலைக்களக்காதை பாடப்பெறும்.கோயில் சோகமயமாகவிருக்கும்.அன்று மதியச்சடங்கு நடைபெறமாட்டாது.மாலையில் வழக்குரைக் காதை பாடுவர்.இறுதியில் குளிர்த்திக் காதை பாடியபின் வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நடைபெறும்.அதன்போது அவ்வவ் ஊர்களிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபடுவது இன்றும் வழக்கிலுள்ளது. இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது, மாவிடிக்கக்கூடாது, புலால் உண்ணக்கூடாது இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன. அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது எனலாம். ஆனால் சிலப்பதிகாரத்தில் இது காணப்படவில்லை. பாண்டி நாட்டிலே பிறந்து சோழ நாட்டிலே வளர்ந்து சேர நாட்டிலே பத்தினித் தெய்வமாகிய கண்ணகி பற்றி ஈழத்தில் தெய்வமாகிய கண்ணகி பற்றி ஈழத்தில் தமிழ் நூல்களை விட சிங்கள நூல்களே அதிகமாக உள்ளன. வழக்குரை காதை, ஊர் சுற்று காவியம் பொற்புறா வந்த காவியம் கண்ணகை அம்மன் குளிர்த்தி பாடல்கள் கண்ணகை அம்மன் அகவல் உருகுச் சிந்து என்பன தமிழிலுள்ள நூல்களாகும். சிங்களத்தில் இராசாவளி பத்தினி கதா கஜபாகு கதா சிலம்பு கதா பத்தினி தெய்யோ பத்தினி எனப் பலவுள்ளன. தென்னம் பழஞ்சொரியத் தேமாங் கனியுதிர வன்னி வழிநடந்த மாதே குளிர்ந்தருள்வாய்" , "வாளை எடுத்து வளமுலையைத் தானரிந்து தோளாடை யாகத் துணிந்தாய் குளிர்ந்தருள்வாய்" என்று பாடி கண்ணகியை கிழக்கிலே குளிரச் செய்வர். இறுதிநாள் பகலில் வழக்குரையில் கொலைக்களக்காதை பாடப்பெறும்.கோயில் சோகமயமாகவிருக்கும்.அன்று மதியச்சடங்கு நடைபெறமாட்டாது.மாலையில் வழக்குரைக் காதை பாடுவர்.இறுதியில் குளிர்த்திக் காதை பாடியபின் வைகறைப் பொழுதில் திருக்குளிர்த்தி நடைபெறும்.அதன்போது அவ்வவ் ஊர்களிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வழிபடுவது இன்றும் வழக்கிலுள்ளது. இச்சடங்கு காலகட்டத்தில் கிராமங்களில் மஞ்சள் தட்டக்கூடாது மாவிடிக்கக்கூடாது புலால் உண்ணக்கூடாது இப்படி பலத்த பாரம்பரிய கட்டுப்பாடுகள் உள்ளன.அவை இன்றும் பண்பாடு ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை அம்மனிலுள்ள பயபக்தியைக் காட்டுகிறது எனலாம். 

விபுலமாமணி. வி.ரி.சகாதேவராஜா

( உதவிக் கல்விப் பணிப்பாளர்)


Comments