[Untitled]‎ > ‎

25.05.2013- காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய தொன்மைச் சிறப்பு..

posted May 25, 2013, 2:45 AM by Web Team
இற்றைக்கு ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலைவேளையில் மதுரை மாநகரத்தின் ஒரு பகுதியில் ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டது.  “இந்த ஊரில் கற்புடைய பெண்கள் இல்லையா? அருளுடைய சான்றோர் இல்லையா? அறம் காக்கும் தெய்வம் இல்லையா?”என்று அழுது அரற்றுவதுதான் கேட்ட அந்த கூக்குரல். வெளியூரில் இருந்து மதுரைக்கு கணவனோடு வந்தவள் அவள். அன்று மாலை கணவனது உடல் வெட்டுண்டு புழுதியில் கிடப்பதைக் கண்டு அலறினாள், அழுதாள், அரற்றினாள். சிறிது நேரத்தில் அந்தப்பழம் பெருமை வாய்ந்த நகரம் தீப்பற்றி எறிந்தது. துயரமே உருவான அவள் அந்த நகரத்தை விட்டு நாட்டையும் கடந்து சென்றாள். நெடுந்தொலைவு நடந்து ஒரு குன்றின் மேல் ஏறி வேங்கை மரத்தடியில் நின்று கணவனை நினைத்து ஏங்கினாள். அங்கே அவளுடைய வாழ்க்கை முடிந்தது. அங்கு அவளின் அவதாரத்தின் நோக்கம் ஆதிபராசக்தியினால் உணர்த்தப்பட்டு அவள் தெய்வீக நிலையை எய்தப்பெற்றாள். அதைக் கண்டவர்கள் மருண்டார்கள். வியந்தார்கள்! இதைக் கேட்டறிந்த வேந்தன் அவளை கற்புத் தெய்வம் எனப்போற்றினான். கோயில் எழுப்பி வழிபட்டான். இதுதான் கண்ணகி எனும் உலகறிந்த வீரமங்கையின் வாழ்வு வரலாறாக கூறப்பட்டுள்ளது.

எமது ஈழத்திரு நாட்டிற்கு இக்கண்ணகியின் வழிபாட்டினை கஜபாகு மன்னனே கொண்டு வந்தான் என வரலாறு சிறப்பிக்கின்றது. ஆனால் கிழக்கிலங்கையிலே மீன்பாடும் தேன்நாட்டிற்கு தென்பால் நெய்தலும் மருதமும் சார்ந்த இயற்கை வனம் பொருந்திய மண்ணிலே பழம்பெரும் சைவக்கிராமமாக சீர்சிகழ நிற்கும் காரேறுமூதூர் எனும் காரைதீவுப்பகுதியிலே கண்ணகி வழிபாட்டின் தோற்றமும் அதன்ஆலய தொன்மைச்சிறப்பும் மகோன்னதமானது. இற்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டின் அரசன் சேனாதிராசன் மகள் தேவந்தி எனும் அம்மையார் தனது மகள் சின்னனாச்சியுடன் கதிர்காம யாத்திரைக்காக புறப்பட்டு வரும் சமயம் தாம்வழிபடும் குலதெய்வமாகிய கண்ணகியின் திருவுருவத்தையும் சிலம்பு ஒன்றையும் பேழைஒன்றில் வைத்து எடுத்து வந்ததாகவும் வரும்வழியில் காரைதீவு எனும் புனிதபதியில்  தங்கியதாகவும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியிலே இப்பிராந்தியத்தை வன்னிய அரசர்கள் ஆட்சிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.ஒருநாள் எதிர்மனசிங்கம்  எனும் வன்னிய அரசன் சிங்கபரத் தோப்பு எனும் மாளிகையிலிருந்து நிந்தவூரின் தென்பகுதியில் காணப்படும் வயல் நிலத்தின் நடுவிலுள்ள மடத்தடி எனும் இடத்தில்) யானை மீது ஏறி தனது பரிவாரங்களோடு பவனிவரும்  வேளையில் காரைதீவைக் கடக்க முற்படும் போது  அவர் பவனிவந்த யானை தொடர்ந்து செல்ல மறுத்த வண்னம் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அண்மையில் அப்படியே படுத்து விட்டது. அரசன் யானையை விட்டு இறங்கி யானைப்பாகர்களைக்கொண்டு யானையை எழுப்ப முயற்சித்து முடியாமல் போகவே அச்சமயம் அவ்விடத்தில் பூசை செய்துகொண்டிருந்த தேவேந்தி அம்மையாரை நாடி தெய்வசங்கற்பத்தால் இந்த யானையை எழுப்பித்தருமாறு கூற அம்மையாரும் தாம் வழிபடும் குல தெய்வமான கண்ணகியை நினைத்து யானையை சுற்றி வந்து பத்திரத்தால் அம்மன் தீர்த்தத்தை யானை மீது தெளித்ததும் யானை எழுந்து நின்று வணங்கி பின் மன்னன் தொடந்து செல்ல வழியமைத்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன் அம்மையாரை வணங்கி பின்பு ஒரு தடைவ பூசைக்கு வருவதாக சொல்லி விடைபெற்றுச்சென்றான். மன்னன் தான் சொன்னபடி பூசைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடனும் தனது மனைவி, பரிவாரங்களுடன் தேவேந்தியம்மயார் இருக்கும் இடத்திற்கு வந்து அம்மையாரிடம் பூசை பொருட்களை ஒப்படைத்து அம்மனுக்குப் பூசையை ஆயத்தம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க தேவேந்தி அம்மையாரும் விஷேட பூசைக்கான சகல ஆயத்தங்களையும் செய்தார் பின் மன்னனின் மனைவியிடம் சென்று திரைச்சீலை நீக்கப்பட்டு பூசை இடம்பெறும் போது உள்ளிருக்கும் அம்மனை உற்றுப் பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு திரையை திறந்து பூசையை செய்தார். மன்னனின் மனைவி அம்மையார் சொன்ன விடையத்தை மறந்து சிலையை உற்றுப்பார்க்கவே என்ன ஆச்சரியம் ! அவரது இரு கண்களும் பார்வையற்றுப் போனது அரசனும் மனைவியும் செய்வதறியாது கலங்கி நிற்கவே அம்மையார் அவர்களைத் தேற்றி அம்மனுக்கு  ஒரு நேர்த்தி வைத்து வழிபாடு செய்யுங்கள் எனக் கூறினார். மன்னன் அம்பாளை வேண்டி  “ மனைவியின் பார்வை பழையபடி தெரியவருமேயானால் இந்த இடத்தில் அம்பாளுக்கு ஒரு கோயில் கட்டி அனைவரும் வந்து வணங்வதற்கும் பூசைகள் எக்காலத்திலும் தவறாமல் நடப்பதற்குமான ஏற்பாடுகளைச்செய்வேன்” என அம்மனை மன்றாடினார்.

இவ்வேளை தேவேந்தி  அம்மையார் மஞ்சளில் துவைத்த சீலையொன்றை எடுத்து அரசனின் மனைவயின் இரு கண்களையும் மூடிக்கட்டி அம்மனின் சந்நிதானத்தில் படுக்க வைத்தார். சற்று நேரத்தின் பின் அரசன் மனைவியை எழுப்பி சீலையை திறந்து பார்ததும் அவரது இரு கண்களும் நன்கு ஒளி பெற்றிருந்தது. வியப்படைந்த மன்னன் அம்மனை வணங்கி தனது நேர்த்தியை உடனே நிறைவேற்றுவதாகக் கூறி அம்மையாரிடம் விடை பெற்றுச் சென்றான். மறு நாள் ஆலயம் அமைக்க வேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டு வந்து மிக விரைவாக தற்போது காணப்படும் தலவிருட்சத்தின் கீழ் அழகிய ஆலயம் ஒன்றை அமைத்து ஊர் மக்களின் உதவியுடன் அம்பாளை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயத்திற்குத் தேவையான அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கி எக்காலத்திலும் பூசை தவறாமல் இடம்பெறவேண்டும் எனக் கூறி ஆலய நடவடிக்கைகளை தேவேந்தி அம்மையாரிம் ஒப்படைத்துச் சென்றான். தேவேந்தி அம்மையார் இறைபதம் அடைந்த பின் அவர் மகள் சின்னனாச்சியிடம் ஆலய நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டு இடம்பெறவே தனிமையில் இருந்த சின்னனாச்சிக்கு ஊர் மக்கள் சேர்ந்து கோரளக்களப்பிலிருந்து கவுத்தன் குடியை சேர்ந்த வைரநாதன் என்பவரை திருமனம் செய்து கொடுத்து கோயில் பொறுப்பை ஒப்படைத்தனர். இவ்வாறு இவர்கள் குடும்பமாக இருந்த காலத்தில் அவர்களுக்கு மாணிக்கனாச்சி, கதிரனாச்சி, வள்ளினாச்சி எனும் மூன்று பெண் குழந்தைகளும் இராமநாதன் எனும் ஒரு ஆண் மகனும் கிடைகடகப் பெற்றனர். இவ்வாறு இருந்து வரும் நாளில் சின்னனாச்சி அம்மனடி சேர்ந்ததும் அவரது தலைமகன் திரு.வை. இராமநாதன் கப்புகனாராக கோயில் கடைமைகளை ஏற்று மேற்கொண்டு வந்தார். இவரின் பின் சின்னனாச்சியின் மூன்று பெண் பிள்ளைகளினதும் வம்சாவளியினரிடம் ஆலயத்தின் பணிகள் ஒப்படைக்கப்பட்டதாக வரலாறு செப்புகின்றது. அன்று தொட்டு இன்றுவரை ஆலயத்தை இந்த மூன்று பெண் பிள்ளைகளினதும் குடி வழியினரே நிர்வகித்து வருகின்றனர் என்பது ஒரு தனிச்சிறப்பாகும். அது மட்டுமல்லாமல் இவ் ஆலயத்தின் தல விருட்சமானது எந்தவொரு ஆலயத்திற்கும் இல்லாத தனித்துவமாகும் இதன் மருத்துவக் குணங்களோ இவ்வூர் மக்களுக்கு பெரும் பொக்கிஷமாகும். அத்துடன் இவ் ஆலயத்தில் இடம்பெறும் அனைத்துப் பூசை நடைமுறைகளும் பழைய பத்ததியின் முறைப்படியே இன்றும் இடம்பெற்று வருகின்றது.

காரைதீவு மக்களைப் பொறுத்த வரையில் வைகாசி பிறந்தால் ஒரே குதூகலந்தான். இக்காலப்பகுதி முழுவதும் மங்களகரமான  நாட்களாகவே கருதுவார்கள். ஏனெனில் அம்மனின் திருக்கதவு வைகாசிப் பூரணைக்கு முந்திய திங்களில் சமுத்திர தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கல்யாணக்கால் நாட்டி திறக்கப்பட்டு தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று பூரணையை அடுத்து வரும் திங்களில் திருக்குளிர்த்தி பாடி அடுத்த திங்கள் எட்டாம் சடங்கு பூசையுடன் இனிதே இடம்பெறும். இவ்விழா காலத்திலே ஊர் மக்கள் மட்டுமல்லாது அயல்கிராமங்களில் இருந்தும் மக்கள் வெள்ளம் திரண்டுகொண்டே இருக்கும். அம்மனின் சந்நிதானத்திலே இடம்பெறும் அங்கப்பிரதட்சணை நிகழ்வும் தீச்சட்டி எடுக்கும் நிகழ்வும் கண்கொள்ளா காட்சியாகவும் காணப்படுகின்றது. எமது இந்து மதமானது எறும்பை கூட மிதிக்காத அளவிற்கு கொல்லாமை மூலம் மனிதாபிமானத்தைப் போதிக்கும் நிலையில் கண்ணகியின் வாழ்வும் வழிபாடும் எதை உணர்த்துகின்றது எனின்  “ உண்மையும் தூய்மையும் கொண்டு கணவனை வழிபடும் மனைவியின் நெறியே கற்புநெறி”. அதனால் உயர்வு பெற முடியும் என்பதற்கு கண்ணகி போன்ற கற்புடைய மகளின் வாழ்வு சான்றாக விளங்குகின்றது.

இத்தனை தடைவை கோயிலுக்குச் சென்று இத்தனை முறை நீராடினால்தான் புண்னியம் என்று எந்த இந்து தத்துவமும் சொல்லவில்லை. அவை நம்முடைய ஆத்மதிருப்திக்காக நாம் ஏற்படுத்திக்கொண்டவை. எனவே இந்துக்களாகிய நாம் அன்பின் வழி நின்று ஒவ்வொரு குடும்பத்தையும் கோயிலாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன் மூலமாக நாம் பேரின்பப் பெருவாழ்வடைய அம்மனின் துனை கிடைக்க அவளை வேண்டி முடிக்கின்றேன்.
ஆக்கம்: த.தமிழ்ச்செல்வன்
          ஆசிரியர்,
          காரைதீவு-01

Comments