வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் 26.03.2014(புதன்கிழமை) நடைபெறுகிறது.
![]() அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
தமிழ் இலக்கியங்களில் கண்ணகி வழிபாடு
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய மகா கும்பாபிசேகம் இன்று 26.03.2014 (புதன்கிழமை) நடைபெறுகிறது. அதற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் கடந்த 24ம் திகதி திங்கட்கிழமையும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் யாவும் சனிக்கிழமையன்று 22ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கர்மாரம்பத்தோடு ஆரம்பித்தன.கும்பாபிசேக பிரதம குரு வேதாகம வித்யாபதி சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கிரியைகளை ஆரம்பித்துவைத்தார்.
கும்பாபிசேகத்தையொட்டி ஆலயம் புதுப்பொலிவோடு ஜெகஜோதியாகக் காட்சியளிக்கிறது.ஊர்பூராக பக்திப்பரவசம் நிலவுகிறது.
புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் 26.03.2014 (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கும்பாபிசேக பிரதம குரு வேதாகம வித்யாபதி சிவஸ்ரீ குமார விக்னேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. ஆலய பிரதம குரு சிவாச்சார்யதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் இப்பெருவிழாவிற்கான கிரியை ஏற்பாடுகளை செய்துள்ளார். சர்வபோதகராக நவாலியூர் சிவஸ்ரீ சாமி விஸ்வநாத மணிக்குருக்கள் வேத பாராயணம் ஓதுநராக இந்தியா சிவஸ்ரீ பிரபாகரக்குருக்கள் சாதகாச்சார்யர்களாக யாழ்ப்பாணம் பிரம்மஸ்ரீ ப.சனாதனசர்மா இந்தியா சிவஸ்ரீ விஜய பிரதீபக்குருக்கள் கண்டி பிரம்மஸ்ரீ பத்மநாப ராகவசர்மா ஆகியோர் செயற்படுகின்றனர்.
ஆலயத்தில் புதிதாக அழகாக அமைக்கப்பட்ட பரிவாரமூர்த்திகளுக்கும் பஞ்சதள இராஜ கோபுரத்திற்கும் கும்பாபிசேகம் இடம்பெறுகிறது.
கும்பாபிசேகத்தைத் தொடர்ந்து அன்னதானமும் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகப்பூஜைகள் நடைபெறும்.
கிழக்கில் கண்ணகி வழிபாடு பிரசித்தமானது.இது ஒரு புராதன வழிபாடாகும். திராவிடப்பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம். இலக்கியமானது படைப்பாற்றல் உள்ள தனி மனிதர்களால் படைக்கப்படுவதாயினும் அடிப்படையில் அது ஒரு சமுகசாதனமாகும்.அவ்வகையில் கண்ணகி இலக்கியங்கள் கிழக்கின் சமுக பொருளாதார பண்பாட்டு அமிசங்களில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியுள்ளது. கண்ணகி இலக்கியங்களில் கிழக்கின் பண்பாடு எத்துணை பேணப்படுகின்றது என்பது தொடர்பில் இக்கட்டுரை ஆராய்கிறது.
கண்ணகி வழிபாடு..
சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்தே சக்தி வழிபாடு தமிழர் மத்தியில் முக்கிய வழிபாடாக இருந்து வந்துள்ளது.சக்தி வழிபாட்டில் அம்மன் பராசக்தி காளி சரஸ்வதி இலட்சுமி துர்க்கை கண்ணகை முதலிய பெண் தெய்வங்கள் வடிவில் சக்தியை நாம் வழிபட்டு வருகின்றோம். இத்தெய்வங்களுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் கோவில்கள் கட்டி திருவிழாக்கள் உற்சவங்கள் குளிர்த்தி முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
இத்தெய்வங்களில் கண்ணகை அம்மனுக்கு இலங்கையில் குறிப்பாக கிழக்கிலும் வன்னியிலும் ஆலயங்கள் அமைத்து வருடந்தோறும் பொங்கல் படைத்து குளிர்த்தி பாடி வழிபடுவதைக் காணலாம்.
கிழக்கில் காலங்காலமாக வணங்கப்பட்டுவரும் காளி துர்க்கை மாரி பேச்சி முதலிய பெண் தெய்வ வழிபாடுகளில் இறுதியில் வந்து சேர்ந்த தெய்வம் கண்ணகி கண்ணகை என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இன்று வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க குழல்நய ஓசையெழுப்ப வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமையாகிவிட்டது.
பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித்தெய்யோ என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.
கண்டியிலுள் தலதா மாளிகையில் கண்ணகி கோயில் இருப்பதும் கயபாகு மன்னன் இந்தியாவின் சேரநாட்டிலிருந்து கொணர்ந்த சந்தனக்கட்டையாலான விக்கி;ரகமும் சிலம்பும் இன்றுமுள்ளது.
ஈழத்துக் கடைசித் தமிழ் மன்னனின் தலைநகர் கண்டி என்பதுடன் அது கண்ணகி வழிபாட்டின் உறைவிடமுமாகும்.இன்று கண்டியில் நடைபெறும் பெரஹரா ஊர்வலமானது பத்தினித்தெய்வமாம் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட விழாவேயாகும்.இவ்வாறாக கண்ணகி வழிபாடு கிழக்கின் பண்பாட்டு விழுமியங்களோடு உணர்வுபூர்வமாக ஆழ பின்னிப்பிணைந்துள்ளது.
தமிழ் இலக்கியங்கள்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் .
எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று சிவனைப் பாடுகின்றனர் தமிழர்கள்.
இச்சிவன்தான் தமிழ்ச்சங்கங்களின் தலைவன் என்று சொல்லலாம். தமிழ்ச்சங்கத்தால் ஒரு நூல் அங்கீகரிக்கப்படவேண்டுமாயின் அது பல வாதப் பிரதிவாதங்களைத் தாண்டவேண்டும்.
தமிழர்களுக்கு தங்கள் மொழிமீதிருந்த ஒரு கௌரவத்தையும் தமிழ்ப்படைப்பிலக்கியங்களின் மீதிருந்த நம்பிக்கையையும் காட்டுவதாக இதைக்கொள்ளலாம்.சங்கம் தழைத்த காலத்தில்வாழ்ந்த சான்றோர்க்கு ஒரு உலகு தழுவிய பார்வை இருந்தது.
சங்கப்பாடலை எழுதிய கணியன் பூங்குன்றனார்
உலகமே நம் உறவு.அதனால் வேற்றூர் என்பது கிடையாது. யாதும் ஊரே யாவரும் கேளீர் . வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்படும் தெப்பம் போன்றதுதான் வாழ்க்கை என்நு குறிப்பிடுகிறார்..
2000 வருடங்களுக்குப் பின்னர் நிகழப்போகும் தமிழனின் இடப்பெயர்ச்சியை மனதில் வைத்து எழுதிய தீர்க்கதரிசனமான பாடலாக இதைக்கொள்ளலாம்.
இலக்கியமானது படைப்பாற்றல் உள்ள தனி மனிதர்களால் படைக்கப்படுவதாயினும் அடிப்படையில் அது ஒரு சமுகசாதனமாகும்.
இன்று ஈழத்திலே இலக்கிய விழிப்பு ஏற்பட்டிருக்கிறது.பல நாவல்களும் சிறுகதைகளும் கவிதைகளும் சஞ்சிகைகளும் புதிதாகப் படைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்இலக்கியங்கள் பண்பாட்டின் ஆணிவேர்களாகத் திகழ்கின்றன.அவை தமிழனின் இருப்புக்கும் தமிழ்மொழியின் இருப்புக்கும் நிறைய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன. இவற்றுள் சமயம் சார்ந்த இலக்கியங்கள் முக்கியமாக நோக்கப்படவேண்டியவை.இதில் சிலப்பதிகாரம் தன்னிகரில்லாக் காப்பியமாகும்.
சிலப்பதிகாரம்
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் குறித்தவொரு காலகட்டத்து வாழ்வியல் இலட்சியங்களை கோவலன் கண்ணகி மாதவிஆகிய பாத்திரங்களின் வாழ்க்கை அனுபவங்களுடாக சிலப்பதிகாரம் வெளிக்காட்டி நிற்கிறது.
மணிமேகலை சிந்தாமணி சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி ஆகிய ஜம்பெரும் காப்பியங்களுள் தமிழில் உருவான முதல் பெரும் காப்பியம் சிலப்பதிகாரமாகும்.இதனை இளங்கோவடிகள் சிருஸ்ட்டித்திருந்தார்.
சிலப்பதிகாரம் ஒரு சர்வசமய சமரச இலக்கியமான தமிழ்க் காவியமாகும் . இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும் ஒருங்கே கூறும் தனிச்சிறப்பு வாய்ந்த முத்தமிழ்க்காப்பியமாகவும் இது விளங்குகின்றது.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றுவது ஊஉம்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினைச் உருத்து வந்து ஊட்டும் என்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் மேற்படி மூன்றுஉண்மைகளிலும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநாட்டியுள்ளார் .
வேறெந்த தமிழ் இலக்கியத்திலும் இல்லாத வகையில் முடியுடை மூவேந்தரையும் அவர்தம் ஆளுகைக்குட்பட்ட தமிழ் நிலத்தையும் சமநோக்கோடு காண்கிறார்.
கற்பெனும் திண்மையே பெண்களின் பெரும் வீரம் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கினை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் எனக் கூறுகின்றார்.
சங்ககாலத்திலே கன்னிப்பெண்கள் மட்டுமே காலிலே சிலம்பு அணிவது வழக்கம்.ஆனால் சற்று பின்வந்த சிலப்பதிகார காலத்திலே திருமணமான பெண்கள் சிலம்பணிந்தார்கள்.அச்சிலம்பிலே ஒரு சிலம்பு கழன்றாலோ உடைந்தாலோ கழற்றினாலோ அங்கு விபரீதம் நிகழும் என்பது நம்பிக்கை. அவ்வகையிலே கண்ணகையினதும் கோப்பெருந்தேவியினதும் கழற்றிய ஒற்றைச்சிலம்புகள் சிலப்பதிகாரமாயின என்று கூறலாம்.
கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.
வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.
சிறு குடியீரே சிறு குடியீரே.. என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.
சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.அங்கு இந்திரவிழா எடுத்தான்.
இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.இச் சிலப்பதிகாரத்தையும் பழைய ஏடுகளையும் வைத்து கிழக்கில் பல காப்பியங்களும் நூல்களும் வெளிவந்தன.
கிழக்கு கண்ணகி இலக்கியங்களில் சிலப்பதிகாரம்
கண்ணகிதேவியைப் பத்தினித்தெய்வமாக முதன்முதல் ஈழநாட்டிற்கு அறிமுகஞ்செய்து வைக்கின்றது சிலப்பதிகாரம்.வழக்குரைநூலோ கண்ணகிதேவியை சோழநாட்டின் பெருந்திருமகளாக காவிரிப்பூம்பட்டணத்து நங்கையர் திலகமாக ஈழநாட்டிற்கு முதன்முதல் அறிமுகஞ்செய்து வைக்கின்றது.
இன்று காணப்படும் கிழக்குக் கண்ணகி இலக்கியங்கள் பல 16ம் 17ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம்.அதற்காக அதற்கு முதல் கண்ணகி வணக்கம் இல்லையெனக் கூறமுடியாது.
கிழக்கு மக்கள் படித்தவர்கள். சிலப்பதிகாரக் கதையை இற்றைக்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிந்துள்ளனர்.
கிழக்கின் கரிகாலன் மோனத்தவமுனி முத்தமிழ் வித்தகன் இப்புண்ணிய பூமியில் அவதரித்த ஆண்டான 1892 இல்தான் சிலப்பதிகாரமும் முதன்முதலில் அச்சிடப்பட்டது.அதன் பின்பே கற்றவர் மத்தியில் அதன் புகழ் பரம்பியது.
கயவாகு காலத்தில் அதாவது கி.பி.2ம் நூற்றாண்டில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.ஆனால் இப்போதுள்ள கண்ணகை அம்மன் ஆலயங்கள் மீது பாடப்பெற்ற காவியங்கள் 15ம் நூற்றாண்டின் பின் தோன்றியவை.எனவே இடைப்பட்ட காலத்தில் வழிபாடு பற்றி ஆய்வுசெய்யப்படவேண்டும்.
சிலப்பதிகாரம் மானுடப்பெண்ணை தெய்வமகளாகச்செய்து நிற்க வழக்குரைப் பனுவல் தெய்வமகளை மானுடப் பெண்ணாகக் காட்டிச் செல்கின்றது.
கிழக்கில் கண்ணகி இலக்கியங்களாக வசந்தன் கவித்திரட்டு. குளுத்திப் பாடல். உடுகுச்சிந்து. ஊர்சுற்றுக்காவியம். மழைக்காவியம் .கூவாய்குயில். கண்ணகை அம்மன் ஊஞ்சல். கண்ணகி அம்மன் குழுத்திப்பாடல்கள். ஆகியவற்றை திரு.தி.சதாசிவஜயரும் பண்டிதர் வீ.சீ.கந்தையாவும் வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை கண்ணகி வழக்குரைப்பாடல்களை பத்திரிகைகளில் நிறையவே எழுதியுள்ளார்.வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா கண்ணகி வழக்குரை நூலின் முதற் பகுதியினை 1965 இல் வெளியிட்டிருந்தார்.
அதன்பின்பு வித்துவான் பண்டிதர் வீ.சீ.கந்தையா கண்ணகி வழக்குரை எனும் முழு அளவிலான நூலை1968 இல் எழுதியுள்ளார்.காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் இதனை வெளியிட்டுவைத்தது.
கண்ணகி வழிபாட்டின் தோற்றம் பற்றி தமிழ் இலக்கிய நூல்கள் மட்டுமல்ல சிங்கள இலக்கிய நூல்களும் காணப்படுகின்றன.ராஜாவலிய ராஜரத்தினாகார பத்தினிக்கத்தாவ முதலிய சிங்கள நூல்கள் அவை.
வழக்குரைநூல் சிறிய மணிப்பரல் காரணமாகப் பெரிய போரினைக் கிளப்பிவிட்டுத் தமிழனைத் தமிழன் வென்ற செய்தியினை விரித்துச் செல்கின்றது.ஈழநாட்டிற்கும் சோழநாட்டிற்குமிடையே நடந்தேறிய இச் சண்டையில் தமிழன் தமிழனோடு சமாதானப்பட்டு வாழ்ந்த செய்தியினை ஈற்றில் நமக்குத் தெரிவித்து நம்மை மகிழ்விக்கின்றது.
வழக்குரைநூலில் வருகின்ற அணிகலன்கள் பலவற்றின் பெயர்கள் கிழக்கோடு தொடர்புடையவை.கொப்புவாழி தண்டை காலாழி பீலி உட்கட்டு மேல்வாளி கொப்புவாளி காறை கைக்கட்டு போன்ற நகைகளை அணிகின்ற வழக்கம் இன்றும் நடைமுறையிலிருக்கின்றது.
மாதவி அரங்கேற்றுக் காதையிலே சிலப்பதிகாரம் கூறுகின்ற இசை.நாடக இலக்கணங்களில் மட்டக்களப்பு நாட்டுக்கூத்தின் சாயல் கலந்துரைக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு வடமோடி நாடகங்களிலே நாடகப் பாத்திரங்கள் கூறுகின்ற தன்மேம்பாட்டுரைகள் பல மாதவியின் பேச்சில் வருவதையும் நாம் காணலாம்.தாளக்கட்டுகள் என்கின்ற நாட்டுக்கூத்து சம்பந்தமான நாட்டியக்கலைச்சொல் வரிசைகளும் மாதவி நடனத்தில் இடம்பெற்றுவருதலையும் இவ்வண் குறிப்பிடலாம்.
வழக்குரைநூலில் கிழக்கின் பேச்சுவழக்கு சொற்கள் பல வருகின்றன.பணிவிடை கழிசறை கிளப்பிவிட்டு அடிச்செழுப்பினாற்போல விடுப்புப் பண்ணுதல் அடசல் முதலான சொற்கள் உள்ளன.
மட்டக்களப்புக்கேயுரிய மொண்ணையப்பர் எனும் பெயர் இந்நூலில் வருகின்றது. மொண்ணையப்பர் பரம்பரையினர் மட்டக்களப்புக் காரைதீவில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களே பின்பு அங்குள்ள கண்ணகி ஆலயத்தை பரிபாலித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள் முத்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தின் தமிழிசை மரபுகளை கோர்த்து தொகுத்து இசைக்களஞ்சியமாம் யாழ்நூலை யாத்தருளினார்.
நாடுகாட்டுப் பரவணி;க் கல்வெட்டில் கண்ணகி வணக்கம் பற்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் பத்தினி தெய்யோ என்றும் வழங்கப்பட்டுவந்தது.
சிலம்புக்காதை பற்றியபாடல்களை மட்டக்களப்பிலே கண்ணகி வழக்குரை என்றும் திருமலையிலே கோவலன் காதை என்றும் வவுனியாவிலே சிலம்பு கூறல் என்றும் பாடுவர்.
ஊர்சுற்றுக்காவியத்தில் கற்பனை உளதான இளங்கோவடிகள் சொற்கொண்டு தாபித்த கருணை மயிலே என்று பத்தினி போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் கண்ணகிக்கு வழங்கிய திருமாமணி திருமாபத்தினி என்ற அடைமொழிகள் குழுத்திப்பாடல்களில் மூன்றிடங்களில் வருகிறது.
கண்ணகி அம்மன் அகவலில் வரும் பொன்செய் கொல்லன் கோவலன் பட்ட கொலைக்களங்குறுகி என்ற அடிகள் சிலப்பதிகாரத்தில் வருபவை. பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்தில் சிலம்பிங்கு கொண்டுவந்த கயவாகு வாழி என கயவாகு மன்னனும் வாழ்த்தப்படுகிறான்.
குளுத்திப் பாடலில் 91ம் காதையில்
தேனாருஞ் செஞ்சொற் சிலப்பதிகாரக் கதையை எந்நாளும் போற்றி இனிது வாழ்வாரே.. என வாழ்த்துகிறது.
கிழக்கில் கண்ணகை ஆலயங்கள்..
கயவாகு மன்னன் காலத்தில் கண்ணகி வழிபாடு இலங்கைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இன்று கிழக்கில் 60க்கு மேற்பட்ட கண்ணகை அம்மன் ஆலயங்கள் இருந்திற்றபோதிலும் முதல் ஆலயம் எங்கு எப்போது கட்டப்பட்டது என்பது தொடர்பில் தெளிவில்லை.
கயவாகு வேந்தனும் இலங்கையில் முதலில் எங்கு கண்ணகிக்கு கோயில் எடுப்பித்தான் என்பதில் ஜயமிருக்கிறது.
அனுராதபுரத்தில் அல்லது யாழ்.கந்தரோடைக்கு அருகிலுள்ள அங்கணாமைக்கடவையில் கட்டப்பட்டது என்று ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
மதுரையை எரித்த கண்ணகி சினத்துடன் தென்பகுதியூடாக இலங்கை வந்து வன்னியின் முல்லைத்தீவிலுள்ள வற்றாப்பளை எனுமிடத்தில் குளிர்ந்து சீற்றம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது.
தனிப்பட்டவர்கள் கண்ணகை ஆலயங்களை சிறிய அளவில்கட்டி வழிபட்டு வந்தனர்.இதனை மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் என்ற நூலும் சுட்டிநிற்கிறது.
கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது. எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் கூறப்படாத ஆறு ஊர்களின் பெயர்கள் பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் காவியத்திற் காணப்படுகின்றன.
பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர்
பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்
செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு
செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா
அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர்
மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே.
என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.
நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டுக்குறிப்புகளின்படி பட்டிமேட்டுக் கண்ணகியம்மன் ஆலயம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 19ம் நூற்றாண்டின் முதற்கூற்றில் கட்டப்பட்டிருக்கலாம் என ஊகிக்கமுடிகிறது.
ஆக்கம்: விபுலமாமணி.வி.ரி.சகாதேவராஜா(B.A, PGDE.,M.Ed)
உதவிக் கல்விப் பணிப்பாளர்
![]() |
[Untitled] >