[Untitled]‎ > ‎

சர்வசமய சமரசஞானி பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ணபரமஹம்சர்..

posted Mar 12, 2013, 10:24 PM by Web Team
இவ்வுலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் இறைவனை அடைவதற்காக தனித்தனி வழியைக் காட்டுகின்றன. இந்த சமயங்களுக்கிடையே பல கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் எந்தவொரு வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல் மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமல் எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேருவது போல சமயங்கள் அனைத்தும் இறைவனை அடையும் அன்பிற்குரிய பாதைகள்தான் என்றும் இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் முயற்சி செய்யுங்கள் என்றும் வழிகாட்டிய மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
இளமை
குதிராம் சந்திரமணி தம்பதியருக்கு 1836 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அன்று நான்காவது குழந்தை பிறந்தது. நான்காவதாகப் பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றான 'கதாதரர்' என்று பெயர் வைக்கப்பட்டது. கதாதரர் வளர்ந்து சிறுவனானதும், அந்த ஊரின் அருகிலிருந்த மாந்தோப்பிற்கு விளையாடச் சென்று விடுவான். சாதீயக் கொடுமைகள் அதிகமிருந்த அந்தக் காலகட்டத்தில், அனைத்து சாதிச் சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டு விளையாடுவான். அவனிடம் எவ்விதச் சாதிப் பாகுபாடுகளும் இல்லை. அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து சாதியினரிடமும் அன்பாக இருப்பான். இதனால் கிராமத்திலிருந்த அனைத்து சாதியினரிடமும் அவன் நற்பெயரைப் பெற்றான்.

 சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.

தட்சினேஸ்வரத்தில்
ராமகிருஷ்ணர் பதினேழு வயதை அடைந்தபோது அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. அப்போது அவர் அண்ணன் ராம்குமார் கல்கத்தாவில் சில வீடுகளிலும், கல்கத்தா அருகிலிருந்த தட்சினேஸ்வர் காளி கோயிலிலும்புரோகிதராக வேலைபார்த்து வந்தார். அவருடன் சென்று தங்கி பணியாற்றுவதற்காக ராமகிருஷ்ணர் கல்கத்தா சென்றார். ராம்குமார் இறந்தவுடன் ராமகிருஷ்ணர், காளி கோயிலின் பூசாரியானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
தட்சினேஸ்வர் காளி கோயில் பவதாரினிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ராமகிருஷ்ணருக்கு தாம் கல்லைத்தான் பூசை செய்கிறோமா, அல்லது உயிருள்ள இறைவனையா என்று சிந்தனை எழுந்தது. தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார்.
ராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சினேஸ்வரத்திற்கு வந்தார். ராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோரைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் ராமகிருஷ்ணர் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி நாட்கள்
ராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர்.
நாட்கள் செல்லச் செல்ல அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா தினமும் அவர் கூறுபவற்றையும் அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார்.
இந்த குறிப்புகளே பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ராமகிருஷ்ணரின் உயிர் 1886 ஆகஸ்ட் 16 அன்று அவர் உடலை விட்டு பிரிந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சர்- பொன்மொழிகள்
•    சத்தியத்தின் மூலமாகவன்றிக் கடவுளை அடைய முடியாது.
•    உள்ளத்தை முதலில் தூயதாக்கு. பிறகு அதனுள் தெய்வத்தைப் பிரதிஷ்டை பண்ணு. வெறும் சங்கு நாதத்தைக் கிளப்புவதால் ஆவதொன்றுமில்லை.
•    உலக வேலைகளைச் செய்து கொண்டிருப்பதற்கிடையிலும் ஒருவன் சத்திய விரதத்தைத் தீவிரமாக அனுஷ்டிக்க வேண்டும். இக்கலியுகத்தில் சத்திய விரதத்துக்கு நிகரான ஆத்மசாதனம் இல்லை. சத்திய விரதம் என்பது சத்தியத்தையே எப்போதும் பேசுதலைக் குறிக்கின்றது. இக்கலியுகத்தில் சத்தியம் பேசுதலே சிறந்ததொரு தவம் ஆகிறது. ஒருவன் சத்தியத்தைக் கொண்டே கடவுளை அடையலாம்.
•    எந்தக் காரணத்தை முன்னிட்டும் மனிதன் பொய் பேசலாகாது. பொய் பேசிப் பழகுபவன் படிப்படியாக பாவ காரியங்களைச் செய்யக்கூடிய கீழான மனப்பான்மையைப் பெறுகின்றான்.
•    அசுத்தமான மனப்பான்மை உள்ளவர்களுக்கும் ஈசனுடைய அருளுக்கும் வெகுதூரம். எளிமையும் சத்தியமும் உடையவன் ஈசனுடைய அருளை எளிதில் பெறுவான்.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகள்
 
பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும் அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும் அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும்.

அதுபோல உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல் பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.
தெரிந்து சொன்னாலும் தெரியாமல் சொன்னாலும் தன்னறிவில் சொன்னாலும் அறியாமல் சொன்னாலும் எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும் பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடும்.

மனிதர்கள் பெண்ணாசையும் பணத்தாசையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணமே தீராத நோயாக அவர்களைப் பீடித்திருக்கிறது. இதிலிருந்து விடுபட நல்லவர்களோடு பழகுவது தான் சரியான தீர்வு.
சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும். அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்குள் ஆன்மிக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடுதல் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.
பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்வத்தை சுயநலத்தால் தனக்காகவே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு உதவி புரிய வேண்டும்.
மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும் .வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடுபட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சிந்தனை துளிகள்

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையயருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள் அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது..
கதாதரர் பணியாற்றிய காளி கோயிலின் நிர்வாகியாக ராணி ராசமணி தேவியின் மருமகன் மதுர்பாபு என்பவர் இருந்து வந்தார். அவர் ஒரு நாள் கதாதரரைச் சந்திக்க அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றார். கதாதரர் தனது அறையின் முன் உள்ள வராந்தாவில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தார். அவர் நடைபயிலுவதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழையப் போனார் மதுர்பாபு. அப்போது திடீரென அங்கே கதாதரரின் உருவத்துக்குப் பதில் காளியின் உருவம் நடமாடுவது தெரிந்தது. அவர் நம்ப முடியாமல் தன் கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தார். அங்கே காளிதான் நடமாடிக் கொண்டிருந்தார். அவர் அப்படியே உறைந்து போனார்.

கதாதரர் அறையின் எல்லைக்குச் சென்று திரும்பியதும் காளி உருவம் மறைந்தது. சிவன் உருவம் தோன்றியது. கதாதரர் காளியாகவும் சிவனாகவும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தார். மதுர்பாபு ஆச்சரியத்துடன் அங்கேயே நின்று கொண்டார். தான் பார்ப்பது உண்மைதானா அல்லது நம் கற்பனையா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

அறைக்கு வெளியே இருந்த அவர் தன் கையைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். மீண்டும் அறைக்குள் உற்றுப் பார்த்தார். அங்கே சிவனும் சக்தியும் மாறிமாறி நடமாடிக் கொண்டிருந்தனர். அங்கே கதாதரர் சிவசக்தி சொரூபமாய்க் காட்சி அளித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் பயந்து போய் திரும்பி விட்டார்.

சிறிது நேரம் கழித்து கதாதரர் கோயிலுக்கு வந்தார். மதுர்பாபு கதாதரரிடம் தான் கண்ட காட்சியைப் பற்றிச் சொன்னார். ஆனால் கதாதரர் அதனை 'ஆம்' என்று ஒப்புக் கொள்ளவுமில்லை. 'இல்லை' என்று மறுக்கவுமில்லை. 'எனக்கு ஏதும் தெரியாது! எல்லாம் இறைவன் செயல்' என்று மட்டும் கூறினார்.

மதுர்பாபு தான் நேரில் கண்ட காட்சியைப் பற்றி பலரிடமும் கூறி ஆச்சர்யப்பட்டார். கதாதரர் சாதாரண மனிதனல்ல அவர் பரமனின் அம்சமானவர் என்பதை உணர்ந்தார். அதன் பிறகு கதாதரரை பரமஹம்சர் என்றே அழைத்தார்.

'ஒவ்வொரு சமயத்தின் வழிபாட்டு முறைகளும் தர்ம முறைகளும் வேறுபாடுகளுடையதாக இருக்கின்றன. கடவுள் ஒருவரே. வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்தான். யார் எந்த முறையைப் பின்பற்றினாலும் அவர்கள் தேடும் கடவுளை அடைய முடியும்.' என்று பரமஹம்சர் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் பரமஹம்சரின் மனைவி சாரதாமணி தேவிக்கு 18 வயது ஆகியிருந்தது. அப்போது அவரது கணவர் பைத்தியமாக இருப்பதாகச் சிலர் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் மன வருத்தமடைந்தார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கமார்புகூரிலிருந்து தட்சினேஸ்வரம் வரை கால்நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார்.

பரமஹம்சர் அவரைப் பிரியமுடன் வரவேற்றார். பரமஹம்சர் அவரிடம் 'உன்னை மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போது இருக்கும் பரமஹம்சன் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் என் தாய் காளியைத்தான் காண்கிறேன்.' என்றார்.

சாரதாமணி தேவியும் 'தாங்கள் என்னை மனைவியாக ஏற்க வேண்டாம். தங்களுக்குப் பணிவிடை செய்யும் சீடராக ஏற்றுக் கொண்டு தங்களுக்கு அருகில் இருக்க அனுமதியளிக்க வேண்டும்' என்று வேண்டினார். பரமஹம்சரும் அதற்கு சம்மதித்தார். சாரதாமணி தேவி அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வாழத் தொடங்கினார்.

அதன் பிறகு பரமஹம்சருடைய காலம் முழுவதும் அவரைத் தேடி வருபவர்களுக்கு உபதேசங்கள் செய்வதில்தான் கழிந்தன. அவரைத் தரிசித்து ஞானோபதேசம் பெறுவதற்காக வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

பரமஹம்சரின் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இப்படி வேண்டிச் சீடராகச் சேர்ந்து கொண்டவர்களில் நரேந்திரன் என்பவரும் ஒருவர். இந்த நரேந்திரன்தான் பின்னாளில் ஒரு மகானாக விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அவருடைய உபதேசங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில சமயம் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக சின்னச் சின்னக் கதைகளையும் அவர் கூறுவதுண்டு. இந்த உபதேசங்களுக்காக அவர் நன்கொடையாக எதையும் பெற்றுக் கொள்வதில்லை.
அதன் பிறகு அவரது சீடர்கள் மற்றும் அவரைத் தேடி வரும் பக்தர்களால் ராமகிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டார். கதாதரராக இருந்து பின்னர் அவரது சீடர்களாலும் பக்தர்களாலும் பரமஹம்சர், ராமகிருஷ்ணர் என்று அழைக்கப்பட்டவர் பின்னர் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகானாக உயர்ந்தார்.


ஆக்கம்: விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா

Comments