'காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்'- என்கிறார் சேக்கிழார். திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன. தத்துவம் கண்களால் காணக்கூடிய உருவம்இ காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது. பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்? லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது. லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன. இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது. சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன? சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான். சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது. இந்துவாக வாழ்வோம்! இந்து தர்மம் காப்போம் ! கு.ஜெயராஜி, கௌரவ செயலாளர், இந்து சமய விருத்திச்சங்கம் - காரைதீவு |
[Untitled] >