தமிழ் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகச் சிறந்து விளங்குவது தைப்பொங்கற் பண்டிகையாகும். பண்டிகைகள் ஒரு இனத்தின் கலாச்சார மேம்பாட்டைப் புலப்படுத்துவன.அவற்றைப் பேணிக் காப்பன என்றும் கூறலாம். அவற்றில் ஒரு சமுக நோக்கு இருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. அறிவு மாத்திரம் மனித வாழ்வை நிறைவு செய்து விடாது. தேவைகள் யாவும் நிறைவு பெற வேண்டும். தேவைகளை நிறைவேற்ற உழைப்புத் தேவை. அவ்வுழைப்பின் உயர்வை எடுத்துக்காட்டும் பண்டிகையாகவும் பொங்கற் பண்டிகை அமைகிறது. தேவைகளுள் அடிப்படையான தேவைகள் - உணவு, உடை, உறைவிடம் என்பர். அவற்றில் எல்லாம் தலையாயதும், அதி அத்தியாவசியமுமானதும் உணவுத் தேவையேயாகும். அவ்வுணவை உற்பத்தி செய்யும் உழவர் திருநாளாக - உழைப்பின் திருநாளாக - இப்பண்டிகை போற்றப்படுவது மிகப் பொருத்தமேயாகும். நிலமும், விதையும், மாடும் மட்டும் இருந்துவிட்டால் விவசாயம் செய்து விட முடியுமா? நீரும் வெயிலும் இன்றியமையாதன பயிர்வளர்சிக்கு. அந்த நீரைத் தருவது மழை. ஆனால் அந்த மழையைத் தருவது யார்? ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளிலுள்ள நீரை ஆவியாக்கி மேலேளச் செய்து அங்கிருந்து மழையாகப் பெய்யச் செய்து வளம் தருபவன் சூரியனே. இதனை உணர்ந்த மக்கள் அச் சூரியதேவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் நாளாகப் பொங்கலிட்டு வழிபாடு செய்யும் நாளாக இப்பொங்கற் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். நான்குநாள்திருவிழா பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும். 1.போகி போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பழையவற்றையும் உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் 'போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி 'போகி' என்றாகிவிட்டது. அன்றைய தினம் வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்கள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். 2.தைப்பொங்கல் தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல மழை பெய்யவும் நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை மாதம் தமிழ் முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி சூரியன் உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. பொங்கல் விழா மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும். 3.மாட்டுப்பொங்கல் மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல் ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர் பச்சைகளை வைத்தும் தேங்காய் பூ பழம் நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு காளை எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் பழம் கொடுப்பார்கள். 'நன்றிமறப்பதுநன்றன்று' என்றும் 'எந்நன்றிகொன்றார்க்கு...உய்வுண்டாம்உய்வில்லைச் செய்ந்நன்றிகொன்றமகற்கு' என்றும் கூறும் வள்ளுவர் வாக்கைத் தம்முடைய வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித் தொழுகும் தமிழ் மக்கள் தமது உழவுத் தொழிலுக்கு உதவிபுரிவதோடு உரமும் உதவும் மாடுகளுக்கும் தைப்பொங்கலுக்கு மறுநாள் பொங்கலிட்டு வழிபட்டு மகிழ்வதைக் காண்கின்றோம். சூரியதேவனுக்கு முதலிடமும், மாடுகளுக்கு இரண்டாம் இடமும் கொடுத்து அடுத்துவரும் இருநாட்களில் தைப்பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுவது இப்பண்டிகைகள் நன்றிக்கடனாகவே கொண்டாடப்படுவதை மேலும் வலியுறுத்துகின்றன. காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார் உறவினர் நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பட்டி மன்றம் வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்.பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள். மக்கள் யாக்கை உணவின் பிண்டம்' என்கிறது மணிமேகலை. 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' எனவருமடியும் இங்கு நோக்கத்தக்கது. 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்' என்கிறார் பாரதியார். இதனாலேயே 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி அல்லது அச்சாணி' என்கிறார் வள்ளுவர். 'பகடுபுறந்தருநர்பாரம்ஓம்பிக் குடிபுறந்தருகுவைஆயின்நின் அடிபுறந்தருவர்அடங்காதோரே' என்கின்றார். விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா |
[Untitled] >