[Untitled]‎ > ‎

தமிழ் சிங்கள புத்தாண்டு – ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்

posted Apr 14, 2013, 1:01 AM by Web Team
சிங்களப் புத்தாண்டு என்பது இலங்கை சிங்களவர்களால் பழங்காலம் தொட்டே கொண்டாடி வரும் புத்தாண்டு கொண்டாட்ட முறையாகும். இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை இலங்கையின் பழங்காலத் தமிழர்களின் வழியாக இலங்கையில் தோற்றம் பெற்ற தமிழர் புத்தாண்டு முறையே ஆகும். அதனாலேயே இலங்கையில் தமிழ் சிங்களப் புத்தாண்டு என அழைக்கின்றனர். தமிழர் காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைய 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் (பிரபவ – அட்சய) கணக்கிடப்படும். சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 13 அல்லது ஏப்ரல் 14) ஆண்டு தொடக்கம் நிகழும். அதுவே தமிழரின் புத்தாண்டாகும். 
அதனையே சிங்களவரும் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர். சிங்கள மொழியில் (அழுத் ஸ்ரீ புதிய, அவுருது ஸ்ரீ ஆண்டு) அழுத் அவுருது என்றழைக்கப்படுகின்றது. இலைதுளிர் காலத்தின் அரும்பில் இந்த புத்தாண்டு தொடங்குகின்றது. காலையில் எழுந்து நீராடி, புதிய வெள்ளை ஆடை அணிந்து, பௌத்த விகாரைகளுக்கு சிங்களவர் சென்று வழிபடுவர். கிரிபத், (வெண் பொங்கல்) மற்றும் பிற பலகாரங்கள் செய்து, உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு களிப்பர். பெரியோரை மதித்து கை விசேடம் பெறுவர். சிறுவர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்வர்.
தமிழர் சிங்களவர் புத்தாண்டு கொண்டாட்ட வேறுபாடுகள்
சிங்களவரின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழரின் பண்பாட்டில் இருந்தே தோன்றியது என்றாலும், சிற்சில வேறுபாடுகளும் உண்டு; அவ்வேறுபாடுகளைப் பார்ப்போம்.
1. புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றால் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்தல் தமிழர்களின் பழக்கங்களில் ஒன்றாகும். சிங்களவர்களும் அப்படியே. தற்காலத்தில் சுண்ணாம்பு அடித்தல், வெள்ளைப் பூசுதல், வர்ணம் பூசுதல் என மாற்றம் பெற்றுள்ளது.
2. புத்தாண்டுக்கு முதல் நாட்களில் வீட்டை சுத்தம் செய்தல், (வீட்டின் மண் தரை) சாணம் இட்டு மெழுகுதல், (வீட்டின் சிமெந்து தரை) கழுவுதல் போன்றவைகளும் தமிழர் போன்றே சிங்களவர்களும் செய்கின்றனர். (சாணம் இட்டு வீடுகளை மெழுகும் வழக்கம் திராவிடரின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.)
3. புத்தாண்டு பிறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, புத்தாண்டு நிகழ்வுகளை பஞ்சாங்க நேரக் கணிப்பீட்டின் படியே தமிழர்கள் செய்வது வழக்கம். சிங்களவர்களும் அப்படியே செய்கின்றார்கள். பஞ்சாங்கம் எனும் சொல், சிங்களவர்களால் 'பஞ்சாங்க' என்று 'ம்' எழுத்தின் ஒலிப்பின்றி பயன்படுத்துகின்றனர். இச்சொல் தமிழரின் வழக்கில் இருந்து சிங்களத்திற்குச் சென்றதாகக் கொள்ளலாம். (பஞ்சாங்கம் என்பது தமிழில் வழங்கும் வடமொழிச்சொல்) அதேவேளை பஞ்சாங்கம் எனும் சொல்லுக்கு 'லித்த' எனும் வேறு ஒரு சொல்லும் சிங்களவர்களின் புழக்கத்தில் உள்ளது.
4. தமிழர்களின் புத்தாண்டில் முதன்மையானவற்றுள் ஒன்றாக இருப்பது, பணியாரமும் வாழைப்பழமும் ஆகும். சிங்களவர்களிடமும் அவைகளே முக்கிய அங்கம் வகிக்கின்றது. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே வாழைக் குழைகள் பழுக்க வைக்கப்பதும் அப்படியே.
5. புத்தாண்டிற்கு சில நாட்களுக்கு முன்பே பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் செய்து புத்தாண்டு நாள் பாவனைக்காக மண் முட்டிகளில் பத்திரப்படுத்தும் வழக்கம் பழந்தமிழர் தொட்டு இருக்கின்றது. இதுவும் சிங்களவர்களிடம் உண்டு.
6. இந்த புத்தாண்டிற்கான பணியாரம் மற்றும் தின்பண்டங்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட நேரத்திலேயே தயாரிக்க தொடங்கவேண்டும் எனும் ஒரு வழக்கு சிங்களவரிடையே உள்ளது. அதற்கு 'எண்ணைப் பாத்திரம் அடுப்பில் வைக்கும் நேரம்'  எனக் கூறப்படுகின்றது. அந்நேரத்திலேயே புத்தாண்டிற்கான தின்பண்டங்கள் தயாரிப்பதற்கு தீ மூட்டி எண்ணைப் பாத்திரங்கள் அடுப்பில் வைக்கப்படுகின்றது.
 தயாரிக்கப்படும் தின்பண்டங்கள்
• பணியாரம் - கெவுங்
• கொண்டை பணியாரம் - கொண்டே கெவுங்
• பாசிப்பயறு பணியாரம் - முங் கெவுங்
• கொக்கிசு - கொக்கிஸ்
• அலுவா - அலுவா
• வெளித்தலப்பா - வெளித்தலப்பா
• பானிவலயல் - பெனிவலலு
தமிழர்களின் புத்தாண்டில் முக்கியமாக பணியாரம் மற்றும் பாசிப்பயறு பணியாரம் இருக்கும். சிங்களவர்களிடமும் அப்படியே. சிங்களவர்கள் தயாரிக்கும் கொண்டைப் பணியாரம் தமிழரின் பழக்கத்தில் இல்லாத ஒன்று. ஆனால் கொண்டைப் பணியாரம் என்பது தமிழர்கள் தயாரிக்கும் சாதாரணப் பணியாரம் போன்றே சுவை ஒன்று தான். வேறுப்பாடு அதன் வடிவமைப்பில் தான். பெண்களின் கொண்டைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். (இங்கே 'கொண்டை' எனும் தமிழ் சொல்லே 'கொண்டே' எனப்படுவதையும் அவதானிக்கலாம்.)
தமிழர்களிடம், குறிப்பாக ஈழத்தமிழர்கள் தயாரிக்கும், பனங்காய் பணியாரம் இவர்கள் தயாரிப்பதில்லை.
பாசிப்பயறு பணியாரம் தமிழர்களது போன்றே சிங்களவர்களும் தயாரிக்கின்றனர். இதன் சுவையிலோ தோற்றத்திலோ வேறுப்பாடுகள் இல்லை.
இதைத் தவிர கொக்கிஸ், அலுவா, வெளித்தலப்பா, பானிவலயல் போன்றத் தின்பண்டங்களும் சிங்களவர்களின் புத்தாண்டில் காணப்படுகின்றது.

 புத்தாண்டு கொண்டாட்ட நேர ஒழுங்கு

புத்தாண்டு நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பஞ்சாங்கக் கணிப்பீட்டின் படியே நடைப்பெறும். ஒரு எடுத்துக்காட்டிற்காக கீழே நேரங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்நேரக் கணிப்பு ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் வேறுப்படும் என்பதை உணர்க.
• புத்தாண்டு பிறப்பதற்கு முன் எழுந்து (மூலிகை, இலை, வேர்கள்) மருந்து எண்ணை வைத்து குளிப்பர். புத்தர் கோயில் (பௌத்த பன்சாலைஃவிகாரை) சென்று வழிப்பட்டு வருவர்.
• ஏப்ரல் 13, முன்னிரவு 11.58 புத்தாண்டு பிறப்பு. (சூரியன் மேச இராசியில் பிரவேசிக்கும் நேரம்) பட்டாசு கொளுத்துவர்.
• ஏப்ரல் 14 மு.ப. 11.58  புத்தாடை உடுத்தி பால் பொங்குதல்இ பால்சோறு சமைத்தல்இ அல்லது தின்பண்டங்கள் தயாரித்தல்; இதில் ஒன்றைக் குறித்த நேரத்தில் செய்வர். இத்துடன் பணியாரம், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர். இப் படையலில் முக்கியமாக பால்சோறு (கிரி - பால்இ பத் - சோறு ஸ்ரீ கிரிபத்) இருக்கும். குத்து விளக்கேற்றுவர், ஊதுவர்த்தி கொழுத்துவர், சாம்பிராணிப் புகைப் பிடிப்பர்.
• ஏப்ரல் 14 மு.ப 08.10 உணவு பரிமாறி உண்பர். அயலவர்களிடமும் உணவு பரிமாறிக்கொள்வர். பெரியோரை மதித்து வணங்குவர். கைவிசேடம் பெறுவர். கைவிசேடம் கொடுக்கும் பெரியவர் அல்லது குடும்பத் தலைவர் வெற்றிலையில் வைத்தே காசு கொடுப்பார். கொடுக்கல் வாங்கல்கள் செய்வர். ஒரு சம்பிரதாயத்திற்காக தத்தமது வேலைஃதொழில் செய்வர். சில மணித்தியாளங்களிற்கு மட்டும். சில வர்த்தக நிலையங்கள் திறந்து ஒன்று இரண்டு வியாபாரங்கள் செய்துவிட்டு மீண்டும் மூடி விடுவர்.
• இவை அனைத்தும் புண்ணியக் காலம் என்று குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு முன்பாக நிறைவு செய்ய வேண்டும்.
• ஏப்ரல் 13 ம் நாள் பிற்பகல் 7;58 முதல் இரவு 3.58 வரை புண்ணியக் காலம் என்படும். இந்த நேரத்தில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் ஈடுப்படவேண்டிய நேரம் என்கின்றனர். அநேகமானோர் புத்தர் விகாரைகளிற்கு 'பன' (பௌத்த உரை) கேட்பதற்காகவும் வேறு விசேட நிகழ்வுகளுக்காகவும் செல்வர். இந்தப் புண்ணியக் காலம் எனும் சொல்லை சிங்களவர்கள் 'புண்ணிய கால' என்பர். அதற்கு (நொனகத்த) எனும் ஒரு சொல்லையும் பயன்படுத்துகின்றனர். இப் புண்ணியக் காலம் முடிந்தப் பிறகுஇ புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவர். பெண்கள் 'றபான்' அடிப்பர். இது தமிழரிடம் இல்லாத ஒரு வழக்கமாகும். சிலவேளை புண்ணியக்காலம் இரவில் முடிவடையுமாயின், இந்நிகழ்வுகள் அடுத்த நாளிலோ அல்லது அடுத்து சில நாட்களிலோ தமது வசதி்க்கேற்ப வைத்துக்கொள்வர்.
• ஏப்ரல் 16,17 (குறித்த நேரத்தில்) மீண்டும் மருந்து எண்ணை வைத்து குளிக்கும் நாளாகும்.
• ஏப்ரல் 17,18,19 இந் நாளில் குறித்த நேரத்தில், குறித்த திசையில் தத்தமது பணிகளுக்கு மீள்வர்.
புத்தாண்டு வரலாறு
புத்தாண்டு என்பது பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றி, மீண்டும் அடுத்தச் சுற்றில் பிரவேசிக்கும் தொடக்க நாளாகும். 
உலகில் மக்கள் வளர்ச்சியடைந்த சமுதாயங்களாக தோற்றம் பெற்ற பல சமுதாயக் கட்டமைப்புகளில், நாடுகளில் காலத்தை கணக்கிட பல்வேறு காலக் கணிப்பீட்டு முறைகள் இருந்துள்ளன. 
இவற்றில் பல இன்று செல்வாக்கிழந்து அழிந்துப் போயின. ஒன்றின் செல்வாக்கு மிகுதியால் இன்னொன்றின் செல்வாக்கு இழக்கப்பட்டு அதன் வரலாற்றுத் தடங்கள் மறைகின்றன. இன்னும் சில வேண்டுமென்றே மறைக்கப்படுகின்றன.

பண்டைய இலங்கை

இலங்கையில் புத்த மதம் அறிமுகமான காலப் பகுதியில் இலங்கையை ஆட்சி செய்த அரசர்களின் பெயர்களைப் பார்த்தால்:

Bak, Vesak, Poson, Æsala, Nikini, Binara, Wap, Il, Undhuvap, Dhuruthu, Navam, Mædhin.


இதன் அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான; 60 ஆண்டுகள் சுழற்சி முறையில் கணக்கிடப்படும் (பிரபவ – அட்சய) காலக் கணிப்பீட்டு முறை இலங்கையில் இருந்துள்ளதை அறியலாம்.
இதைத் தவிர பழந்தமிழர்களிடம் பிரமிக்க வைக்கும் கணக்கியல், கூட்டல் எண்கள், அளவைகள் போன்றவைகளும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. 
எனவே இதனடிப்படையில் பழந்தமிழர் பயன்படுத்திய காலக் கணிப்பீட்டு முறையே இலங்கையில் இருந்தாகக் கொள்ளலாம். இதனை சான்றுகளுடன் நிரூபிக்க கூடிய தடயங்கள் எதுவும் இல்லை என்றாலும், யாரும் மறைக்க முடியாத சான்றாகவே, இன்றும் இலங்கை சிங்களவர்களிடம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்வதை உணரக்கூடியதாக உள்ளது.
 பௌத்தக் கணக்கீட்டு முறை
பௌத்தரின் தோற்றத்தின் பின்னர் அதன்படி புத்த ஆண்டுப் பிறப்பு மே மாதம் பௌரணமி இரவில் ஆரம்பிப்பதாகக் கூறப்படுகின்றது. அந் நாளை இலங்கை பௌத்தர்கள், மென்கடதாசி கூடுகள் அமைத்து அதற்குள் மெழுகுவர்த்தி அல்லது மின் விளக்குகள் ஒளிரச் செய்து, தோரணங்கள் கட்டி வெசாக் பண்டிகை என இரவில் கொண்டாடுகின்றனர். ஆனால் அதனை புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் சிங்களவர்களிடம் இல்லை. இதன் அடிப்படையில் இலங்கையில் புத்த காலக் கணிப்பீட்டு முறை நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் எதுவுமில்லை என்பது தெளிவாகிறது. அவ்வாறு இருந்திருக்குமானால் புத்தர் பிறந்த நாளாகிய மே மாத பௌரணமி நாளையே சிங்களப் புத்தாண்டாக. சிங்களவர்கள் கொண்டாடி இருப்பர்.
தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். 
தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
வரலாறு
இலங்கையில் இந்த புத்தாண்டு கொண்டாட்ட முறை எத்தனையாம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது என்பதை அறுதியிட்டு கூறமுடியாதுள்ளது. அதேவேளை இலங்கையில் பௌத்தம் அறிமுகமாகும் முன்னர் இருந்தே இந்த புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கிறது. கி.மு. 3ம் நூற்றாண்டுகளில் தேவநம்பியதீசன் ஆட்சி காலத்திலேயெ பௌத்தம் இலங்கையில் நிலைப்பெற்றதாக மகாவம்சம் நூல் கூறுகிறது. இலங்கையில் பௌத்தம் நிலைப்பெற்றதன் பின்னர், தேவநம்பியதீசனால் மகாவிகாரை ஒன்று கட்டப்படுகின்றது. அந்த மகாவிகாரையில் பௌத்த பிக்குகள் தங்கியிருந்து பௌத்தக் குறிப்புகளையும், பௌத்தம் இந்தியாவில் தோன்றி இலங்கையில் நிலைப்பெற்ற வரலாற்றையும் பாளி மொழியில் செய்யுள் வடிவில் குத்து வைக்கத்தொடங்கினர்.
 இந்த தொகுப்புகளின் காலவரிசை எந்த காலக்கணிப்பீட்டு முறைக்கு அமைவாக காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன என்றால், பௌத்த நாட்காட்டிக்கு அமைவாகக் குறிக்கப்பட்டன என்று கொள்ளமுடியாது. காரணம், அந்த தொகுப்புகள் பௌத்தம் தோன்றுவதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னரான (கி.மு. 6ம் நூற்றாண்டு) கதைகளையும் கொண்டுள்ளது. இன்னும் கூறுவதானால் புத்தர் பிறப்பதற்கு முன்னரான கதைகளும் அதில் உள்ளன. எனவே பௌத்த நாட்காட்டி அப்போது பயன்பாட்டில் இல்லை. பயன்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை.
தமிழரின் ஆண்டு பிறப்பு சித்திரை 13 அல்லது 14ல் தொடங்குகிறது. அதற்கமைவாகவே மகாவசம் நூலின் குறிக்கப்பட்டிருக்கும் ஆண்டு தொடக்கமும் அதே நாளை குறிக்கிறது. இங்கே சித்திரை 13 அல்லது 14ம் திகதியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளும் முறை தமிழர்களுடையது என்பதை தெளிவாக்கிக்கொள்ளலாம்.. 
எனவே மகாவம்சம் காலத்தில் காலத்தை கணிப்பிட்டு குறித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையையே ஆகும். அதற்கமைவாக தமிழ் ஆண்டு தொடக்கம் சித்திரை முதலாம் திகதி (ஏப்ரல் 13 அல்லது 14) புத்தாண்டு கொண்டாடப் படுகின்றது. தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை ஆரம்பம் முதலே சிங்களவர்கள் பயன்படுத்தி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் இலங்கை சிங்களவர்கள், தமிழ் புத்தாண்டை, தமிழ் சிங்களப் புத்தாண்டு எனக் கொண்டாடுகின்றனர்.
 தமிழர் காலக்கணிப்பீட்டு முறைகள் இன்று பல தமிழ் இணையத்தளங்கள், செய்தித் தாள்கள், திருமண அழைப்பிதல்கள், கோயில் உட்சவங்கள், பஞ்சாங்கம் பார்த்தல், நேரம் குறித்தல் போன்றவற்றில் பயன்படுவதைக் காணலாம். சில கிராமங்களில் தமிழ் மாதப்பெயரிகளிலே தை, மாசி, பங்குனி என காலங்களை குறித்துப் பேசுவோரும் உளர்.
இலங்கை சிங்கள பௌத்தப் பிக்குகள் நேரம் குறித்தல், பஞ்சாங்கம் கணித்தல் போன்றவற்றில் நமது தமிழ் காலக்கணிப்பீட்டு முறையை பயன்படுத்துவதை சிற்சில இடங்களில் காணலாம். ஆனால் சிங்களவரது பயன்பாட்டில் இல்லை. இவை முற்றிலுமாக மறைந்து விட்டன. அல்லது மறைக்கப்பட்டுவிட்டன.
ஆனால் காலத்தால் மறைக்க முற்பட்டாலும், மறைக்க முடியாத சான்றாகவே காலம் காலமாக பழங்காலம் தொட்டு கொண்டாடிவரும் தமிழர் புத்தாண்டு இன்றும் இவர்களின் கொண்டாட்டமாக இருக்கின்றது. இன்றும் இத் தமிழ் ஆண்டுப் பிறப்பை, சிங்களவர்கள் தமிழ் சிங்களப் புத்தாண்டு என கொண்டாடி வருகின்றனர்
 சிறப்பு
இப்புத்தாண்டை பௌத்த சிங்களவர்கள் மட்டுமன்றி, அதிகளவிளான சிங்கள கிருத்தவர்களாலும் கொண்டாடப்படுகின்றது.
இலங்கை சிங்களவர்களின் கொண்டாட்டங்களில் பிரதான கொண்டாட்டமாக, இத் தமிழ் சிங்களப் புத்தாண்டே விழங்குகின்றது. இலங்கை அரசு உத்தியோகப் பூர்வமாக இரண்டு நாற்கள் பொது விடுமுறை வழங்குகின்றது. ஆனால் அதிகமானோர் இதனை சில வாரங்களிற்கான விடுமுறையாக எடுத்துக்கொள்வர். 
இதன் காரணமாக இலங்கையின் கொழும்பு உற்பட பெரு நகரங்களின் அனைத்து வர்த்தக நிலையங்கள் சில வாரங்களுக்கு மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கும். பல வர்த்தகக் நிலையங்கள் இரண்டு மூன்று வாரங்களின் பின்பே திறக்கப்படும்.
இப்புத்தாண்டு ஆரம்பிக்கும் முதல் நாள் தொடக்கம் ஒவ்வொரு நிகழ்வுகளும் பஞ்சாங்கத்தின் குறிக்கப்படும் நேரங்களின் அடிப்படையிலேயே தொடங்கப்படும். எனவே இப் பஞ்சாங்க நேரம் குறித்தலின் படி புத்தாண்டு நாளில் இருந்து (ஏப்ரல் 14) சில நாட்களுக்கு பின்பே வேலை மற்றும் பணி நிமித்தம் வெளிக்கிளம்பும் நாள் குறிக்கப்பட்டிருக்கும். அந்நாளிலேயே அதிகமானோர் தத்தமது பணிக்கு மீள்வர்.
ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால், அவ்வீட்டார் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அவ்வீட்டாரை 'தீட்டு வீடு' என்பதுப் போல், சிங்களவர்கள் 'கிலி கே' (கிலி - தீட்டு, கே - வீடு) என்கின்றனர். அப்பொழுது அயலவர்களும் உறவினர்களும் இவ்வீட்டாருக்கு உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கும் பழக்கமும் சிங்களவர்களிடம் உள்ளது. இதுவும் தமிழர்களிடம் காணப்படும் பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
  புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்கள்
புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளயாட்டுக்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை. சில இடங்களில் புத்தாண்டு அன்றே நடைப்பெறும். அநேக இடங்களில் தத்தமது வசதிக்கேற்ற நாட்களில் வைத்துக்கொள்வர். இப்புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுக்களில் சில:
• வலுக்கு மரம் ஏறுதல்
• கண்கட்டி முட்டி உடைத்தல்
• கயிறு இழுத்தல்
• யாணைக்கு கண் வைத்தல்
• பப்பா பழத்தினுள் இருக்கும் கொட்டைகளை என்னுதல்
• தலையனை சண்டையிடல்
• ஊர் சுற்றி ஓட்டப் பந்தயம்
• மறைந்திருக்கும் நபர் தேடுதல்
• மிதி வண்டி ஓட்டப்போட்டி
• ரபான் அடித்தல் போட்டி
• அழகுராணி தேர்வு (சிங்கள கலாச்சார உடையில்)
• பெண் குழந்தைகளின் அழகுராணிப் போட்டி
இவ்வாறு சிங்களப் புத்தாண்டு தமிழரின் கொண்டாட்டங்களில் இருந்து சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும்இ இவை தமிழரின் பண்பாட்டு பழக்கவழக்கங்களில் இருந்தே தோன்றியவை என்பதை எவரும் மறுக்க முடியாது. 
அதாவது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் காலமாக தமிழ் புத்தாண்டையே சிங்களவர்களும் கொண்டாடி வந்த வழக்கின் காரணமாகவே இன்றும் அவர்கள் தமிழ் புத்தாண்டை 'தமிழ் சிங்களப் புத்தாண்டு' என கொண்டாடி வருகின்றனர். இது வரலாற்று ரீதியாக தமிழரின் பண்பாடும் பழக்கவழக்கங்களும் இலங்கை தீவெங்கும் வியாபித்து இருந்ததற்கான ஒரு சான்றாகும்.
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா






Comments