புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் தந்தையாக விளங்குபவரது ஆத்மாவுக்குப்பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசைத் தினம் இன்றாகும். ஆடிமாதம் பிறந்து விட்டாலே கூடவே நல்ல மகிமை நிறைந்த விரதங்களும் விழாக்களும் வரத்துவங்கிவிடும். ஆடிப்பிறப்பு, ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை என்று அடுக்கடுக்காய் வரும் விசேடங்கள் அனைத்துமே மிகுந்த சிறப்புடன் கூடியனவாகும் ஆயினும் இந்த ‘ஆடி அமாவாசை’ தனிச்சிறப்பு மிக்கது. இறந்துவிட்ட தந்தையினது ஆத்மாவுக்குப் பிள்ளைகள் பிதிர்க்கடன் செலுத்தத் தவறக்கூடாது. இன்றைய ஆடி அமாவாசை நன்னாளிலே பூதவுடலை நீத்துப் புகழுடம்பைப் பெற்றுவிட்ட தந்தைக்குப் பிதிர்க்கடன் செலுத்த வேண்டியது தலையாய கடமையாகும். “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்பதற்கிணங்க இவ்வுலகிலே நம்மைப் பிறக்கச் செய்து நேர்மைமிக்க நல்வழியில் நடக்கச் செய்து சுகமே வாழவைத்த அன்புத் தெய்வத்தை நாம் மறக்கக்கூடாது. நமது மூதாதையர்கள் "நாம் இவ்வுலகில் இப்படித்தான் வாழவேண்டுமென்று" வாழ்ந்து காட்டிப் போயிருக்கின்றார்கள். அந்த நெறிமுறையை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. தந்தையின் ஆன்மாவுக்கான பிதிர்க்கடனை நாம் கட்டாயம் செய்தேயாக வேண்டும். இந்தப் பூவுலக வாழ்க்கையை விடுத்து தேகவியோகம் செய்யநேர்ந்தால் அந்தப் பிதிருக்குப் பிரீதி செய்யவேண்டியது பிள்ளைகளின் தலையாய கடனாகும். இன்றைய ஆடி அமாவாசைத் தினத்தன்று காலையில் எழுந்து புனித புண்ணிய நீராடி சந்தியாவந்தனம் முடித்து பக்கத்திலுள்ள முருகனுடைய ஆலயத்துக்கோ அன்றி பிள்ளையார், சிவன், அம்மன் கோவிலுக்கோ சென்று அந்தண சிவாச்சாரியாரிடமிருந்தோ அல்லது சர்மாவிடமிருந்தோ தர்ப்பை ஒன்றை வாங்கி அணிந்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். இந்த ஆடி அமாவாசை விரதத்தின்போது அறுசுவை உணவு தயார்பண்ணி இறந்துபோன தந்தையின் ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்தல்வேண்டும். "தந்தையோடு கல்வி போம்" என்பார்கள். பெரிய அளவிடற்கரிய கிடைத்தற்கரிய செல்வம் கல்விச் செல்வம். இதனை எமக்கு அளிப்பவர் தந்தையே. ஆகவே அவர் இறந்துவிட்டால் கல்வியும் அற்றுப்போய்விடும் என்பது ஆன்றோர் நம்பிக்கை. மானிடவர்க்கத்தினருக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒருநாள் என்ற கணக்கில் தைமாதம் முதலாக ஆனிமாதம் ஈறாக உள்ள ஆறு மாதங்களுக்கு பகற்பொழுதாகும். இது உத்தராயணகாலம் என அழைக்கப்பெறும். பின்பு ஆடி மாதம் முதலாக மார்கழி மாதம் ஈறாக வரும் ஆறுமாதங்களும் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். இது தட்சணாயன காலம் என அழைக்கப்பெறும். இந்த முறையைக் கொண்டே ஆடி அமாவாசை நாளானது பிதிர்க்கடன் செலுத்த உகந்த நாளாகக் கொள்ளப்பட்டது. இன்றைய விரத நாளில் "காத்தோட்டிக்காய்" என்னும் காயும் பொரித்துப் படைக்கப்படும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. பிதிர்களுக்குக் கசப்பான உணவில் பிரீதி அதிகம். அதனால் தான் காத்தோட்டிக்காயும் பாகற்காயும் விரதத்திற்கு நிவேதனம் செய்யப்படுகின்றது. மேலும் “அமா என்பது ஓரிடத்திற் பொருந்தியது; குவிந்தது; அடுத்தது என்று கருத்துப்படுகிறது. ஆகவே சூரியனும் சந்திரனும் ஓர் இராசியிற் சஞ்சரித்து உறவாடும் நாளே அமாவாசையாகும். இவ்வுலக இயக்கத்துக்கு மூலகாரணராக இருப்பவர் சூரியனே. ஆனால், சந்திரன் மிகுந்த மனமகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கும் தெளிந்த அறிவுக்கும் தலைவராக இருக்கின்றார். அபுத்தி பூர்வமாகச் செய்த வினைகள் அந்தியேட்டி, தகனக்கிரியைகளால் மாறும். புத்திபூர்வமாகச் செய்த வினைகள் நாம் அனுபவித்தேயாக வேண்டும். பிதிர்க்கடன் செய்யாது விடுவது பாவச் செயலாகும். ஆகவே, இன்றைய நல்ல நாளில் ஓர் அந்தணர் மூலமாகதர்ப்பையிலான பவித்திரத்தை விரலில் அணிந்து எள்ளுந் தண்ணீரும் இறைத்து ஆன்மாவுக்கு பிரீதி செய்யவேண்டும். இயலுமாயின் அரிசி காய்கறிவகைகள் தானமும் செய்யலாம். ஆகவே இன்றைய ஆடி அமாவாசை விரதத்தை முறையாக அனுஷ்டித்து பிதிர்க் கடன் செலுத்தி இவ்வுலக நல் வாழ்க்கைக்கு அடிகோலுவோமாக. |
கலாச்சாரம் >