மேஷம் குரு 5 ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த வரனும் மகளுக்கு அமையும். சகோதரங்கள் உங்களுடன் விட்டுக் கொடுத்துப் போவார்கள். மனதிலே ஒரு தெளிவு பிறக்கும். புதன் ஒக்டோபர் 4ஆம் தேதி வரை வலுவாக இருப்பதால் நிம்மதி, பணவரவு, எதிர்ப்புகள் நீங்கும். 5 ஆம் தேதி முதல் 6ஆம் வீட்டில் மறைவதால் மனஉளைச்சல் இருக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், கருத்து மோதல்கள் வரக்கூடும். சளித் தொந்தரவு, பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை வந்துப் போகும். நீண்ட நெடுநாட்களாக பாசமாக பழகியவர்கள் கூட உங்களைப் பற்றி தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்துப் போகும். சூரியன் 6&ம் வீட்டிற்குள் நிற்பதால் அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடனடியாக நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகனுக்கிருந்த முன்கோபம், கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். ஆனால் ராகுவுடன் நிற்பதால் மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். அத்தை, அம்மான் தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை நவீன மாக்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 8&ல் சனி அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி ஏமாறாதீர்கள். அவ்வப்போது தூக்கம் குறையும். கன்னிப் பெண்களே! தள்ளிப் போன திருமணம் கூடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். நீண்ட நெடுநாட்களாக தடைப்பட்டு வந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் மூத்த அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் புதன் சென்றுக் கொண்டிருப்பதால் தைரியம் பிறக்கும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். அழகு, இளமைக் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். கம்பீரமாக எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும் அத்தை, மாமா, தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரம் கொஞ்சம் மந்தமாகத் தான் இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். 17ஆம் தேதி வரை சூரியன் 5ஆம் வீட்டில் ராகுவுடன் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிநாதன் சுக்ரன் 4ஆம் வீட்டில் அமர்ந்ததால் வாகனப் பழுது நீங்கும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணி முழுமையடையும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கண்டகச் சனி நடைபெறுவதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி வீண் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் வரும். எனவே விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு முதுகு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். குரு 4ல் நிற்பதால் வீட்டில் கழிவுநீர் குழாய் அடைப்பு, குடிநீர் பிரச்சனைகள் வரக்கூடும். பக்கத்து வீட்டுக்காரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். டி.வி, ப்ரிட்ஜ், வாகனப் பழுது வந்துபோகும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். கன்னிப் பெண்களே! காதல் மற்றும் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் நீங்கும். பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். வேலையாட்களிடம் வளைந்துக் கொடுத்துப் போங்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். என்றாலும் தொல்லைக் கொடுத்து வந்த மூத்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவுப் பெருகும். பணப்பற்றாக்குறையால் உள்மனதில் பயம் வந்து நீங்கும் மாதமிது. மிதுனம் ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் பிறக்கும். வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையவும் வாய்ப்பிருக்கிறது. பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். உறவினர், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த பாகப்பிரிவினை வேலை முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். 17ஆம் தேதி வரை சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குழப்பமான விஷயங்களில் தெளிவு பிறக்கும். தைரியமாகவும் பெரிய முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்ரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சனிபகவான் 6&ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும். குடும்ப வருமானம் உயரும். பழைய பெரிய பிரச்னைகள் தீரும். ஆனால் சின்ன சின்ன பிரச்னைகள் இருக்கத் தான் செய்யும். 3ஆம் வீட்டிலேயே குரு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கூடிக் கொண்டேப் போகும். பணப்பற்றாக்குறையும் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். முகப்பரு, பசியின்மை நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். தள்ளுபடி விற்பனையால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். மருந்து, துணி, உணவு, ஸ்டேஷ்னரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பாருங்கள். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கடகம் சூரியன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். கண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தயக்கம், தடுமாற்றங்கள் தீரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்துப் போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. வழக்குகள் எதிர்பார்த்ததை விட விரைந்து முடியும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். மனைவியுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். புதன் சாதகமாக இருப்பதால் செலவுக்கு தகுந்தாற் போல் பண வரவு இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். சனிபகவான் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கனவுத் தொல்லை அதிகரிக்கும். மனைவி வழியில் செலவுகள் வரும். 2ல் குரு பலமாக இருப்பதால் பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை பேச்சுத்திறமையால் சாதிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். பழைய கடனை தீர்க்க வழி பிறக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் மரியாதைக் கூடும். பூர்வீகச்சொத்துக்களில் மாற்றம் செய்வீர்கள். வி.ஐ.பிகளின் சுபகாரியங்களில் கலந்துகொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். குறைந்த சதவீத லாபம் வைத்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். சிலர் சொந்தமாக கடை வாங்க முயற்சி செய்வீர்கள். வேலையாட்கள் விசுவாசமாக நடந்துக் கொள்வார்கள். ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், பருப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். நினைத்ததை நடத்தி முடிக்கும் மாதமிது. சிம்மம் மாதத் தொடக்கத்தில் உங்கள் பிரபல யோகாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவியுண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். மனைவியின் உடல்நிலை சீராகும். பிள்ளைகளால் மன அமைதியில்லாமல் தவித்தீர்களே, இனி மகிழ்ச்சி கிட்டும். மகளுக்கு தள்ளிப்போன திருமணம் கைக்கூடி வரும். வருங்காலத்திட்டங்களில் ஒன்று நிறைவேறும். உங்கள் ராசிநாதன் சூரியன் 17ந் தேதி வரை ராகுவுடன் சேர்ந்து 2ல் நிற்பதால் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும். சுக்ரன் உங்கள் ராசிக்குள் அமர்ந்ததால் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். குழப்பங்கள் நீங்கும். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் செல்வதால் உற்சாகம் பொங்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். நல்ல மருத்துவர் அறிமுகமாவார். நோயின் தாக்கம் குறையும். ஜென்மகுருவால் எதிர்மறைச் சிந்தனைகள் வரக்கூடும். கன்னிப் பெண்களே! சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். இரும்பு, ஸ்பெகுலேஷன், கடல் உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகள் சில முக்கிய அறிவுரைகள் தருவார்கள். விடா முயற்சியால் வெற்றி பெறும் மாதமிது. கன்னி ராசிநாதன் புதன் 4ம் தேதி வரை 12ல் மறைந்திருந்தாலும் 5ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்குள் நுழைவதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சூரியன் சாதகமாக இல்லாததால் படபடப்பு, முன்கோபம் வரும். அவசரப்பட்டு, உணர்ச்சி வேகத்தில் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். செவ்வாய் சாதகமாக இல்லாததால் சகோதர வகையில் வீண் செலவு, அலைச்சல் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். சுக்ரன் லாப வீட்டில் நிற்பதால் வருமானம் வரும். சுக்ரன் 12ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள். சனிபகவான் சாதகமாக இருப்பதால் புது வாகனம் அமையும். மனைவிவழியில் உதவிகளுண்டு என்றாலும் மனைவிக்கு முதுகு, மூட்டு வலி வந்து நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்து விசா கிடைக்கும். வேற்றுமதம், மொழியினரால் பயனடைவீர்கள். ராசிக்குள் ராகு நிற்பதால் உடல்நலம் பாதிக்கும். மகனின் வேலை விஷயமாக யார்யாரையோ பார்த்து வந்தீர்களே, இப்பொழுது நீங்க எதிர்பார்த்தபடியே நல்ல வேலையில் அமர்வார். 12ல் குரு நிற்பதால் தவிர்க்க முடியாத செலவுகள், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லோன் வாங்கி கடையை விரிவுபடுத்துவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மரவகைகள், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கும் மாதமிது. துலாம் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப வீட்டில் அமர்ந்ததால் அலைச்சல் குறையும். தீர்வு தெரியாமல் இருந்த பிரச்சனைகளுக்கு தெள்ள தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். வாகனத்தை இயக்கும் போது இருந்த தடுமாற்றம் நீங்கும். சாலைகளை கடக்கும் போதும் இருந்த பயமும் நீங்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் சாதகமாக முடியும். வீடு கட்டுவது, வாங்குவது சுமுகமாக முடியும். லோன் கிடைக்கும். உறவினர்கள்,நண்பர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். 17ஆம் தேதி வரை சூரியன் 12ஆம் வீட்டில் அமர்ந்திருப்பதால் அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். அவர்களால் செலவினங்களும் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்தப்பாருங்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். தூக்கம் கொஞ்சம் குறையும். ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும். வி.ஐ.பிகள் வீட்டு விஷேங்களில் கலந்து கொள்வீர்கள். குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஏழரைச்சனி நடைபெறுவதால் யாருக்காகவும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பெற்றோர் உங்களுக்கு முழு உரிமை தருவார்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முரண்டு பிடித்த வேலையாட்கள் உங்களை புரிந்து நடப்பார்கள். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கடையை நவீன மயமாக்குவீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் கோரிக்கைகளை மேலதிகாரியிடம் எடுத்துச் செல்வீர்கள். அலுவலக ரகசியங்களை வெளியில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். விருச்சகம் ராசிநாதன் செவ்வாய் பகவான் வலுவாக நிற்பதால் உங்களின் நீண்டநாள் விருப்பங்கள் நிறைவேறும். ரசனையான வீடு அமையும். சகோதரிக்கு தள்ளிப் போன கல்யாணம் கூடிவரும். வீடு வாங்குவது விற்பது எளிதாக அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். குழப்பங்கள் தீரும். கணவன்&மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் 17ஆம் தேதி வரை சூரியன் வலுவாக அமர்ந்துதிருப்பதால் சிலருக்கு பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசால் அனுகூலம் உண்டு. கட்டிட வேலையைத் தொடங்குவீர்கள். மூத்த சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். 5ஆம் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். ஜென்ம சனி தொடர்வதால் அவ்வப்போது குடும்பத்தில் வாக்குவாதங்கள், கண், பல் வலி, தொண்டை வலி வரக்கூடும். 10ல் குரு நிற்பதால் வீண் அவமானங்கள், ஏமாற்றங்கள் வந்துபோகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் உதவியுண்டு. கன்னிப்பெண்களே! பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விளம்பர யுக்தியால் விற்றுத் தீர்ப்பீர்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம் கடையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துப் போங்கள். நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். அலுவலக சூட்சுமங்கள் அத்துபடியாகும். சக ஊழியர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு சில காரியங்களை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் மாதமிது. தனுசு உங்கள் ராசிநாதனாகிய குரு 9ஆம் வீட்டில் வலுவாக நிற்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வீடு கட்டும் பணியிலிருந்த தேக்க நிலை மாறும். வங்கி கடனுதவி கிடைக்கும். சங்கம், டிரஸ்ட் இவற்றில் சேருவீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் கூடும். அரசால் ஆதாயம் பெறுவீர்கள். சொத்துப் பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். வீடு வாங்குவீர்கள். ஒரு சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். உங்களை அவமானப்படுத்தியவரெல்லாம் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். சூரியன் வலுவாக அமர்ந்திருப்பதால் புது வேலைக் கிடைக்கும். உற்சாகமடைவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். புகழடைவீர்கள். வழக்குப் பிரச்னை தீரும். அரசு காரியங்கள் அனைத்தும் சாதகமாக முடிவடையும். வீடு கட்ட அனுப்பியிருந்த ப்ளான் அப்ரூவலாகும். சுக்ரன் 9ஆம் வீட்டில் அமர்ந்ததால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு குறையாது. பணப்புழக்கம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வங்கியில் லோன் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கி அவர்களால் ஆதாயமடைவீர்கள். புதன் இந்த மாதம் முழுக்க வலுவான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் மகிழ்ச்சி, பணவரவு உண்டு. புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்ப பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். சொன்ன தேதியில் கடனைத் திருப்பித் தருவீர்கள். எதிர்ப்புகள் குறையும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை அமையும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். ஏழரைச்சனி நடைபெறுவதால் எதிர்ப்பாராத பயணங்களும், செலவுகளும் ஒருபுறம் இருந்துக் கொண்டேயிருக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். சந்தை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அதிக லாபம் ஈட்டுவீர்கள். மகரம் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் செல்வாக்கு, யோகம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் மாததொடக்கத்தில் செவ்வாய் 8ல் நிற்பதால் வீண் செலவுகள், அலைச்சல்கள், சகோதரங்களுடன் கருத்துமோதல் வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். கேது 3ல் வலுவாக இருப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 9ல் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாத அளவிற்கு செலவுகள் துரத்தும். 17ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனத்தாங்கல் வரக்கூடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்களின் ராசிக்கு பிரபல யோகாதிபதியான சுக்ரன் 8ல் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனம் விட்டு பேசி பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருப்பதால் பிள்ளைகளால் நிம்மதியுண்டு. நட்பு வட்டம் விரியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் கூடிக் கொண்டே போகும். ராசிக்கு 8ஆம் வீட்டில் குரு நிற்பதால் பழைய பகை நீங்கும். என்றாலும் ஈகோ பிரச்சனைகளும், விமர்சனங்களும் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! திருமணம் கூடி வரும். சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களுக்கு உதவுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையறிந்து கொள்முதல் செய்வதால் லாபம் அதிகரிக்கும். ஹோட்டல், துணி, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களை திருத்துவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் மாதமிது. கும்பம் உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டேயிருப்பதனால் அழகு, இளமைக் கூடும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வேற்று மதத்தினர், ஹிந்தி, தெலுங்கு மொழியினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சிலர் காற்றோட்டமில்லாமல், வெளிச்சமில்லாமல் இருந்து வந்த வீட்டை மாற்றி எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு மாறுவீர்கள். 17ந் தேதி வரை சூரியன் உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சுக்ரன் 7ல் வந்து அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்து கொண்டிருப்பதால் மனஉளைச்சல் நீங்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வாகனப் பழுது நீங்கும். வாகன விபத்துகளும் குறையும். மனதில் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும். 5ஆம் தேதி முதல் புதன் 8ஆம் வீட்டில் நுழைவதால் பழைய நண்பர்களில் பெரிய பொறுப்பில் இருக்கும் சிலரால் ஆதாயமடைவீர்கள். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்சனைகள் பெரிதாக இருக்காது. பெட்ரோல், டீசல், செங்கல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் தொல்லைகள் அகலும். உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். உங்களிடம் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களின் பரந்த மனசை புரிந்து கொள்வார்கள். குறைக் கூறியவர்களுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். முற்பகுதி கசந்தாலும் பிற்பகுதியில் முன்னேறும் மாதமிது. மீனம் மாதத் தொடக்கத்தில் புதன் ஆறில் நிற்பதால் நெருங்கிய நண்பர்கள்,உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். செலவுகள் கூடிக் கொண்டே போகும். ஆனால் 5ம் தேதி முதல் புதன் உச்சம் பெற்று ஏழில் அமர்வதால் நட்பு வட்டம் விரியும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் பழைய வழக்குகள் வெற்றியடையும். மனதில் தைரியம் பிறக்கும். ஆனால் சில சமயங்களில் சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். 17ந் தேதி வரை ராசிக்கு 7ஆம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் நலக் குறைவு ஏற்படும். எனவே உணவில் கீரை,காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்துப் போகும். மனைவிவழியில் செலவுகளும் அதிகரிக்கும். சுக்ரன் 6ல் மறைந்திருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். கண்ணாடிப் பொருட்கள் உடையும். எலக்ட்ரானிக் சாதனங்கள் பழுதாகும். விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். சனிபகவான் ஓரளவு சாதகமாக இருப்பதால் எதிலும் நிம்மதி, தெளிவு பிறக்கும். தைரியமும் உண்டாகும். மரியாதைக் கூடும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்களும் நீங்கும். உடல் நிலை சீராகும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை விலகும். குரு 6ல் நிற்பதால் வீண்பழி,டென்ஷன் வரக்கூடும். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் ஆலோசனையை கேட்டு முடிவுகள் எடுப்பது நல்லது. வியாபாரத்தில் மாதத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். புது ஒப்பந்தங்களை யோசித்து செய்வது நல்லது. பங்குதாரருடன் மனக்கசப்பு வந்து நீங்கும். உத்யோகஸ்தர்களே! உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புது அதிகாரி மதிப்பார். மாதத்தின் பிற்பகுதியில் உயர்வு உண்டு. தானுன்டு தன்வேலையுண்டு என்று இருக்க வேண்டிய மாதமிது. ![]() |
கலாச்சாரம் >