05.11.15- தீபாவளி உணர்த்தும் தியாகம்..

posted Nov 4, 2015, 6:41 PM by Unknown user   [ updated Nov 4, 2015, 6:42 PM ]
உலக மக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததுதான். அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதரித்து அசுரர்களை அழித்தான் என்று இந்து மத புராண வரலாற்று கதைகள் கூறுகின்றன. அந்த கதைகளை மேலோட்டமாக படிக்கும் பலரும் அந்தக் கதையில் கூறப்பட்டிருக்கும் உள்ளர்த்தங்களை உணர தலைப்படுவதில்லை.

தீபாவளி பற்றி யாரிடம் கேட்டாலும் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லி விடுவார்கள். பக்தி மார்க்கமாக கூறப்படும் கதையும் அதுதான். ஆனால் அந்தக் கதை மனிதர்களுக்கு எதனை உணர்த்துகிறது என்பதை  எவரும் எண்ணி பார்க்கிறார்களா? என்பது தான் கேள்விக்குரியானது. வாருங்கள் கதைக்குள் செல்லலாம்:–

நரகாசுரன் பிறப்பு

அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம், அதனை அழிப்பதற்காக அவதரிப்பவர் விஷ்ணு பகவான். அவர் ஒருமுறை வராக அவதாரம் எடுத்து, பூமியை கடலுக்கு அடியில் இருந்து மீட்டெடுத்தார். அப்போது அவருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். நரகாசுரனை பெற்றெடுத்த பூமாதேவி, ‘எனது மகனுக்கு மரணம்  ஏற்படக்கூடாது. அதற்கான வரத்தை தந்தருள வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் வேண்டினார்.

அதற்கு விஷ்ணு, ‘இறவா வரத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதனால் பல துன்பங்கள் ஏற்படும். ஆனால் உன் மகனை யாராலும் கொல்ல முடியாது. அவன் என்னாலேயே வீழ்வான். அப்போது நீயும் என்னுடன் இருப்பாய்’ என்றார். நரகா சுரனை கொல்லும்போது நீயும் அருகில் இருப்பாய் என்று விஷ்ணு பகவான் கூறியதற்கு காரணம் இல்லாமலா இருக்கும். அந்த காரணத்திற்காகத் தான் விஷ்ணு, கிருஷ்ணராக அவதாரம் செய்தபோது, பூமாதேவி சத்யபாமாவாக தோன்றினார்.

பிரம்மதேவரிடம் வரம்

ஒரு முறை பிரம்மதேவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான் நரகாசுரன். அவனது தவத்தை ஏற்று அங்கு வந்த பிரம்மதேவரிடம், ‘நான் எந்த நிலையிலும் இறக்கக்கூடாது. அந்த வரத்தை தந்தருளுங்கள்’ என்று  நரகாசுரன் கேட்டான். ‘உலகில் தோன்றிய அனைத்தும் மறைவது என்பது தவிர்க்க முடியாதது. ஆகையால் வேறு வரம் கேள்!’ என்றார் பிரம்ம தேவர்.

சிறிது நேரம் மவுனமாக நின்ற  நரகாசுரன், ‘பிரம்மதேவரே! எனது தாயினால்தான் எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையாவது தாருங்கள்’ என்றான். வரத்தை தந்ததாக கூறி மறைந்தார் பிரம்மதேவர். பெற்ற பிள்ளையை, அதன் தாய் எந்த சூழ்நிலையிலும் கொல்லத் துணியமாட்டாள். எனவே நமக்கு மரணமே கிடையாது என்ற எண்ணமே நரகாசுரனை இவ்வாறு வரம் கேட்க வைத்தது.

போருக்கு சென்ற கண்ணன்

வரத்தை பெற்றுக்கொண்ட நரகாசுரன், மூவுலகத்தையும் ஆட்டிப்படைக்க தொடங்கி விட்டான். தேவேந்திரன் முதலான தேவர்களை அடிமைபோல் நடத்தினான். மனிதர்களை துன்புறுத்தினான். நரகாசுரன், அசாம் ராஜ்ஜியத்தில் உள்ள  பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தான். நரகாசுரனின் கொடுமையால் சொல்லனா துயரம் அடைந்த தேவர்கள், அந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்க கண்ணனின் திருவடிகளில் போய் சரணடைந்தனர். அசுரனை அழித்து தங்களையும், மக்களையும் காத்தருளும்படி கண்ணீர் வடித்தனர்.

‘நல்லது நடக்கும் நம்பிக்கையோடு புறப்படுங்கள்’ என்று தேவர்களுக்கு உறுதியளித்த கண்ணன், அந்த வாக்குறுதியை காப்பாற்ற சத்யபாமாவை தேரின் சாரதியாக அமர்த்திக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்யும் நகரமான பிரக்ஜோதிஷபுரம் நோக்கி சென்றார். நகரின் எல்லையை அடைந்த அவர், அந்த நகரின் பாதுகாவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து, அதன் பிறகு நகருக்குள் நுழைந்து போர் தொடங்க அறிகுறியாக சங்கை முழங்கினார்.

அசுரனை அழித்த சத்யபாமா

சத்தம் கேட்டு அரண்மனையில் இருந்து வெளிப்பட்ட நரகாசுரன், தனது கோட்டைகள் உடைக்கப்பட்டு துகள் களாக கிடப்பதையும், அதற்கு காரணமான கண்ணனையும் கண்டு கடும் சீற்றம் கொண்டான். தனது படைகளை திரட்டிக்கொண்டு கண்ணனுடன் மூர்க்கத்தனமாக போரிட்டான். ஆனால் சாந்தம் தவழ்ந்த முகத்துடன் அம்புகளை தொடுத்த கண்ணன், நரகாசுரனின் படைகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்து விட்டார்.

இதனால் மேலும் கடும் கோபத்திற்கு ஆளான நரகாசுரன் ஏவிய அஸ்திரம் ஒன்று தாக்கி கண்ணன் தேரில் சாய்ந்து விட்டான். இல்லை... இல்லை... சாய்ந்தது போல் நடிக்க தொடங்கி விட்டார். அதுவரை தேர் ஓட்டும் சாரதியாக அமைதியாக இருந்த சத்யபாமா, தனது கணவரின் நிலைகண்டு கொதித்தெழுந்தாள். அதற்காகத்தானே கண்ணன் தேரில் மூர்ச்சையானதுபோல் விழுந்தார். கோபத்தில் கண்கள் சிவக்க, அம்பு மழை பொழிந்தாள் சத்யபாமா. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் நரகாசுரன் வீழ்ந்தான்.

தீமையை விலக்கி...

இனி இந்தக் கதையில் உள்ள உள் அர்த்தத்தை காணலாம். கதையில் 4 கோட்டைகளை உடைத்தெறிந்து, 5–வது கட்டமாக நரகாசுரனின் நகருக்குள் கண்ணன் நுழைந்தான். பின்னர் கொடியவனான நரகாசுரனை அழித்தான் என்று கூறப்பட்டுள்ளது. இது பஞ்ச பூதங்களால் ஆன நமது உடம்பின் உள்ளே புகுந்து தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்து கிறது. கதையில் வரும் கோட்டைகளான கிரி துர்க்கம் என்பது நிலத்தையும், அக்னி துர்க்கம் என்பது நெருப்பையும், ஜல துர்க்கம் என்பது நீரையும், வாயு துர்க்கம் என்பது காற்றையும் குறிப்பதாகும். பஞ்ச பூதங்களில் 4 இங்கு கூறப்பட்டுள்ளதால் 5–வதான ஆகாயமும் சேர்ந்தே வரும்.

தீமையை அகற்றி நன்மையை அளிக்கும் இறைவனின் உத்தியானது கதையின் ஒரு கருத்தாக அமைந்தாலும், இந்தக் கதையில் தியாகத்தை உணர்த்தும் உன்னதமான மற்றொரு கருத்தும் புதைந்துள்ளது.

துக்கத்தை மறைத்து

கண்ணனுடன் சேர்ந்து போர் புரிந்து, நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு தனது மகன் இறந்துவிட்டானே என்ற துயரம் ஏற்பட்டது. இருந்தாலும், ‘மகன் இறந்தது என் ஒருத்திக்குதான் துக்கம். ஆனால் அவனால் பல துன்பங்களை அடைந்த தேவர்களுக்கும், மக்களுக்கும் இது நன்மை அளிப்பது’ என்று மனதை ஒருவாறு தேற்றிக்கொண்டாள்.

பின்னர் கண்ணனிடம் இப்படி கூறினாள். ‘என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினாள் என்பதும் கதையின் ஒரு பகுதியாகும்.தியாகத்தால் சிறப்பிடம்

அசுரனை அழித்ததால் தான் தீபாவளி வந்தது என்றால், இறைவன் பல அவதாரங்கள் எடுத்து பல அசுரர்களை அழித்துள்ளார். அதையெல்லாம் ஒரு பண்டிகையாக அல்லவா கொண்டாட வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையை உணர வேண்டியது அவசியம். தனக்கு துயரம் ஏற்பட்டாலும் உலகம் மகிழ்வுற அதனை ஏற்றுக்கொள்ளும் தியாக உணர்வு இங்கு வெளிப்பட்டதன் காரணமாகத்தான் தீபாவளி, இந்து பண்டிகைகளில் சிறப்பிடத்தை பிடித்தது.

மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தாமலும், நாம் துன்பத்தில் உழன்றாலும் அடுத்தவர்களை மகிழ்வுற வைக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதும் தான் தீபாவளியை கொண்டாடியதற்கான பலனை பெற வழிவகுக்கும்.


Comments