பிரணவ வடிவமே விநாயகர், தமக்கு மேலான நாயகர் இல்லாத பெருமான் என்பதே சொற்பொருள். தேவர், மனிதர் முதலிய, யாவராலும் முதலில் வழிபடப்படுபவர் மூத்த பிள்ளையாரே. “விக்கின விநாயக பாத நமஸ்தே” என்பர் வட நூலார். தம்மை நினைவாரது இடையூறுகளைப் போக்கியும், நினையாதார்பால் துன்பங்களை உளவாக் கியும் விளங்குதலால் விநாயகருக்கு விக்கினேசுவரர் என்ற திருநாமமுளதாயிற்று. சிவபிரான், திரிபுர தகனஞ் செய்யச் செல்லுங்கால் நினையாமையால் அவர் சென்ற தேரின் "அச்சது பொடி" செய்தார் என்பர். திருபாற்கடல் கடையும்போது திருமால் முதலினோர் விநாயரை வணங்காமையால், கணேசமூர்த்தி மந்தர மலையைச் சாய்த்தனர் என்றும் கூறுவர். ஒளவையார் பூசையை ஏற்று அவரை கயிலையில் சேர்த்த அனுக்கிரக மூர்த்தி விநாயகரே! சேரமான் குதிரை கயிலை சேரமுன் ஒளவையாரை விநாயகப் பெருமான் துதிக் கையாலெடுத்துக் கயிலையில் இட்டனர். இதனால், கிழவியுங் காதம், குதிரையுங் காதம்” என்றனர் முன்னோர். விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாசம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாசத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமும் ஒன்றாகும். மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் இந்திடன் முதலான தேவர்களுக்கு இடர் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவ-சக்தியின் வேண்டுதலினால் விநாயகர் தன் பூதப்படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அவன் விட்ட பாணங்களை எல்லாம் விநாயகர் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அவனை அடித்தார். கஜமுகன் மயங்கி விழுந்தான். ஆனால் இறக்கவில்லை. அவன் பெற்றவரம் நினைவுக்கு வரவே, விநாயகர் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவன் மீது ஏவினார். அவன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி விநாயகரைத் தாக்க வந்தான். விநாயகர் அதனை அடக்கி தன் வாகனமாக்கிக் கொண்டார். ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது (அவ்விளையாட்டில் சிவபெருமான் தோற்றுப் போகவே சிவபெருமான் சாட்சியாக நின்ற மகாவிஷ்ணுவை பார்த்து கண்ணால் ஜாடை காட்டி யார் வென்றது எனக் கேட்ட்க விஷ்ணுவும் செய்வதறியாது தோற்றவராகிய சிவபெருமானே வென்றதாகவும்,வென்ற உமாதேவியார் தோற்று விட்டதாகவும் பொய்ச்சாட்சி கூறிவிட்டார். அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டு மலைப் பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார். விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப் பாம்பாக மாறி இருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார் விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார். இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, பெருங்கதை விரதம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும். 21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்). ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும். விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள் ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை: ஒம் சுமுகாய நம: ஒம் ஏக தந்தாய நம: ஒம் கபிலாய நம: ஒம் கஜகர்ணிகாய நம: ஒம் விகடாய நம: ஒம் விக்னராஜாய நம: ஒம் கணாதிபாய நம: ஒம் தூமகேதுவே நம: ஒம் கணாத்யக்ஷ£ய நம: ஒம் பாலசந்த்ராய நம: ஒம் கஜாநநாய நம: ஒம் வக்ரதுண்டாய நம: ஒம் சூர்ப்பகர்ணாய நம: ஒம் ஹேரம்பாய நம: ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம: விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும். நன்மை நாடொறும் நம்மை நணுக விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோமாக. |
கலாச்சாரம் >