நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலம் நட்சத்திரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது. கிரக பாதசார விபரங்கள்: லக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம் சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம் சந்திரன் - மூலம் 4ம் பாதம் - கேது சாரம் செவ்வாய் - திருவோணம் 2ம் பாதம் - சந்திரன் சாரம் புதன் - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம் குரு - உத்திராடம் 2ம் பாதம் - சூரியன் சாரம் - அதிசாரம் சுக்கிரன் - ரோகிணி 2ம் பாதம் - சந்திரன் சாரம் சனி - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் சாரம் ராஹு - திருவாதிரை 1ம் பாதம் - ராகு சாரம் கேது - மூலம் 3ம் பாதம் - கேது சாரம் கேது தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள் சார்வரி வருஷத்தின் நவநாயகர்கள்: ராஜா - புதன் மந்திரி - சந்திரன் அர்க்காதிபதி - சந்திரன் மேகாதிபதி - சந்திரன் ஸஸ்யாதிபதி - குரு சேனாதிபதி - சந்திரன் இரஸாதிபதி - சனி தான்யாதிபதி - புதன் நீரஸாதிபதி - குரு பசுநாயகர் - கோபாலன் சார்வரி வருஷ வெண்பா: சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும் ஏம மின்றிச் சாவா ரியல்பு. இடைக்காடர் வாக்கு பொது பலன்கள்: இந்த சார்வரி ஆண்டை பொறுத்தவரை மிதமான மழையும் - மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு ஒன்பது புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலகீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு ஏரி குளம் குட்டை கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும். இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் எரிவாயு தங்கம் விலை அதிகரிக்கும். இந்த ஆண்டு புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும். ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிகமான காற்று ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர் சேதம் பொருள் சேதம் ஏற்படும். இந்த ஆண்டு மேற்கு பகுதியில் ஏற்படக்கூடிய காற்று கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா ரஷ்யா வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம். இந்த ஆண்டு ராஜாவாக புதன் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். ராஜாவாக புதன் இருப்பதால் அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும். மந்திரியாக சந்திரன் வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும். கார், லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும். இந்த ஆண்டு சேனாதிபதியாக சந்திரன் வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள். மேக அதிபதியாக சந்திரன் இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெற முடியும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும். நீரஸாதிபதியாக குரு இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கம் ஏற்படும். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும். ராஜா புதன் பலன் கல்வி நவீன படுத்தப்படும் சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும் பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் மந்திரி சந்திரனின் பலன் : இந்த ஆண்டு மந்திரியாக சந்திர பகவான் வருவதால் நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், பெயிண்ட் , எண்ணெய் வகைகள் ஆகியவற்றை விலை சற்று உயரும் அதிபதி சந்திரன் பலன் : இந்த ஆண்டு அதிபதியாக சந்திரபகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும் பெண்களுக்கு அதிகமாக மாநிலங்கள் தரப்படும். மேக அதிபதி சந்திரன் பலன் : இந்த ஆண்டு மேக அதிபதியாக சந்திர பகவான் வருவதால் நெல், கோதுமை தானியங்கள் சோளம் நவ தானியங்கள் நன்கு விளையும் . ஸஸ்யாதிபதி குருபகவான் பலன் : இந்த ஆண்டு சஷ்டி அதிபதியாக குருபகவான் இருப்பதால் மங்கள காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும், மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும் சேனாதிபதி சந்திரன் பலன் : சந்திரன் பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும் ரஸாதிபதி சனி பகவான் பலன் : துவர்ப்பு சுவையுள்ள பொருட்கள் - கசப்புச் சுவையுள்ள பொருட்கள், மருத்துவ குணமுள்ள பொருட்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும் தனாதிபதி புதன் பகவான் பலன் : இந்த ஆண்டு கம்பு, கேழ்வரகு, சோளம் சிறு தானியங்கள் அதிகமாக விளையும் அதற்கேற்றார்போல் மழையும் இருக்கும். நீரஸாதிபதி குருபகவான் பலன் : இந்த ஆண்டு மஞ்சள் குங்குமப்பூ வாசனை கஸ்தூரி சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும். விலை சற்று ஏறும். சித்திரை மாதப் பிறப்பின் பலன் : இந்த ஆண்டு சித்திரை மாதம் திங்கட்கிழமை அன்று வருவதால் ஓரளவு மறையும். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள். பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். மகர சங்கராந்தி பலன் : இந்த ஆண்டு தை மாதம் பிறப்பதால் நல்ல மழை பெய்யும். மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். முக்கிய பலன்கள் : லக்னத்திற்கு ஒன்னு எட்டு உடையவரான லக்னாதிபதி சுக்கிர பகவான் லக்னத்திற்கு அட்டம ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். அவர் மறைந்தாலும் அவருடைய பார்வையின் மூலமாக பல நல்ல பலன்கள் ஏற்படும். முக்கியமாக அவர் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாட்டு உறவுகள் மேன்மையடையும். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். இந்திய தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடையும். முக்கிய பதவியில் உள்ளவர்கள் நாடு முன்னேற சிறப்பாக பணியாற்றுவார்கள். நேர்மையுடனும் மன வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் அதிகாரிகள் செயல்படுவார்கள். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். லக்னத்திற்கு 2, 7க்குடையவர் ஆன செவ்வாய் பகவான் இந்த இந்த ஆண்டு பிறக்கும்போது உச்சமாக இருக்கிறார். புதிய நவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். புதிய வகை விமானங்கள் இணைக்கப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். நல்ல மழை பெய்யும். உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை ஏறும். மருத்துவத்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை பெறும். லக்னத்திற்கு 3,6க்குடையவரான குரு பகவான் இந்த ஆண்டு பிறக்கும் போது அதிசாரம் நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் இந்த ஆண்டின் நீரஸாதிபதியாகவும் இருக்கிறார். கல்வி ஸ்தானத்தில் இருப்பதால் புதிய சீர்திருத்தம் கல்வியில் செய்யப்படும். மாணவ மாணவிகள் நன்றாக படிப்பார்கள். முக்கியமாக அது பெண் ராசியாக இருப்பதால் மாணவிகள் விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள். அந்நிய நாடுகளில் அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். போற்றத்தக்க வகையில் இந்தியா முன்னேறும். லக்னத்திற்கு சுக ஸ்தான அதிபதியான பஞ்சமாதிபதியான சனி பகவான் இந்த ஆண்டு லக்னத்திற்கு தைரிய வீரிய ஸ்தானத்தில் கேதுவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். மேலும் அவர் ரஸாதிபதியாகவும் இருக்கிறார். இந்தியாவில் வடக்கில் இருக்கக்கூடிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நெல் கோதுமை கம்பு சோளம் நவதானியங்கள் நன்கு விளையும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் நன்கு வளர்ச்சி பெறும். மேலும், அவர் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் மிக அதிகமான உழைப்பின் மூலமாகவே செய்ய முடியும். லக்கினத்திற்கு பாக்கிய விரயாதிபதி புத பகவான் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். காற்றின் மூலமாக இந்த ஆண்டு அழிவு ஏற்படலாம். காற்றின் மூலமாக மேற்கு திசையிலிருந்து வைரஸ் ஒன்று பரவலாம். லக்னத்திற்கு தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். தொழில் சம்பந்தப்பட்ட துறை நல்லபடியாக முன்னேற்றத்தை பெறும். புதிய தொழில் வேலைகளை பலபேர் தொடங்குவார்கள். நீர் சம்பந்தமான தொழில்கள் அபரிமிதமான வளர்ச்சியை பெறும். லக்னத்திற்கு லாபாதிபதியான சூரிய பகவான் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். உலக அளவில் அரசாங்கங்கள் பலவிதமான புதிய சட்டங்களை கொண்டு வருவார்கள். மேஷம்: புத்தாண்டின் துவக்கம் சற்று கூடுதலான அலைச்சலைத் தரும். என்றாலும் ராசிநாதன் செவ்வாயின் ஆட்சி பலம் உங்கள் வேகத்தினை உயர்த்தும். உங்களது செயல்கள் வேகமாகவும், வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்ற வகையிலும் இருக்கும். உங்களது இயற்கை குணமான படபடப்பு, அவசரம், முன்கோபம் ஆகியவற்றை ஓரங்கட்டி வைத்துவிடுங்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை உங்களது கவனம் சிதறாத வகையில் மனதினை ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இந்த வருடத்தில் பொருள் வரவு என்பது ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். கடன்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தினையே காண்பீர்கள். பொதுவாக இந்த வருடத்தில் குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். ஆயினும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்களுடைய தனித்துவம் வெளிப்படும் வகையில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுவீர்கள். அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர்கள். கையிருப்பில் பணமாக வைத்துக்கொள்ளாது அரசுத் தரப்பு நிறுவனங்களில் சேமிப்பாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. கவனத்துடன் இருக்கவும். அதே போல அரசுத் தரப்பிலிருந்து எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன்கள் போன்றவை வந்து சேரும். பொதுவாக பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவப் பாடங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் தோன்றிய முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண்பீர்கள். தொலைதூரப் பிரயாணங்களின் போது வேற்று மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் பெருமை தேடித் தரும். மேஷ ராசிக்காரர்கள் இந்த வருடத்தில் அதிக அலைச்சலை சந்திக்க உள்ளதால் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுதல் அவசியம். பொதுப்பிரச்சினைகளில் எப்பொழுதும் முன்நிற்கும் நீங்கள் இந்த வருடத்தில் சற்று அடக்கி வாசிப்பது நல்லது. எந்த ஒரு செயலும் எளிதில் முடியாமல் இழுபறியில் இருந்து உங்களது விடாமுயற்சியினால்தான் வெற்றி பெறும் என்பதால் இவ்வருடத்தில் நீங்கள் ஓய்வு என்ற வார்த்தையை நினைத்துப் பார்க்க இயலாது. மாணவர்கள் மாணவர்களின் கல்வித்தரமானது இந்த வருடத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையில் இருந்து வரும். ஆராய்ச்சித்துறையில் இருக்கும் உயர்கல்வி மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயலாஜி மற்றும் மருத்துவத்துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். அவசரப்படாமல் நிதானமாக விடையளித்தால் மட்டுமே நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையமுடியும் என்பதனை மனதில் கொள்ளுங்கள். பெண்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீர குலதெய்வ வழிபாட்டினை மறக்காமல் செய்யுங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த வீண் வம்பு பிரச்னைகள் விலகும். முக்கியமாக இவ்வருடத்தில் குடும்பத்தினர்களின் வெற்றியில் உங்களது பங்கு பிரதானமாக இருக்கும். தொழில் - உத்யோகம் உழைப்பதற்கு அஞ்சாத உங்களுக்கு இவ்வருடம் வரப்பிரசாதமாக இருக்கும். உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். வண்டி, வாகனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகத்தினைக் காண்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் லேசான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் அவர்களை விட்டுக்கொடுக்காது நடந்துகொள்வதால் அவர்களது ஆதரவினையும் பெற்று நற்பெயரினை அடைவீர்கள். சுயதொழில் செய்பவர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறுவார்கள். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. உழைப்பு ஒன்றே உங்களுக்கு உயர்வினைத் தரும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். உண்மையான உழைப்பிற்கு எந்த வகையிலும் இடையூறு நேராது. அயராத உழைப்பினால் அசாத்தியமான வெற்றியைக் காண்பீர்கள். பரிகாரம் மாரியம்மனுக்கு மலர் வழிபாடு என்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். வீட்டு வாயிலில் அல்லது வசிப்பிடத்தின் வளாகத்திற்குள் வேப்பமரம் வளர்க்க முயற்சியுங்கள். வீட்டினில் வேப்பமரத்தினை உடையவர்கள் தினசரி நீரூற்றி மரத்தினைச் சுற்றி வந்து வழிபடுங்கள். வேம்பின் வாசம் உங்கள் சுவாசத்தில் புத்துணர்ச்சியைத் தருவதோடு செயல்வேகத்தினையும் உயர்த்தும் ரிஷபம்: கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம் வரை) அஷ்டமத்துச்சனியோடு குருவும் இணைந்திருக்கும் சூழலில் 2020ம் ஆண்டினைத் துவக்க உள்ளீர்கள். சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட நீங்கள் இந்த ஆண்டில் பலவிதமான அனுபவங்களை சந்திக்க உள்ளீர்கள். மனதினில் எதையும் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களது உண்மையான உழைப்பினை முழு மூச்சோடு வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உங்களது எண்ணம் அடுத்தவர் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெறும். எங்கே, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன ஸ்தானம் நல்ல வலுவினைப் பெறுவதால் இவ்வருடத்தில் பொருள் வரவிற்கு குறைவிருக்காது. சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு நற்பெரை அடைவீர்கள். ருசியான உணவு வகைகளையும், தின்பண்டங்களையும் உண்பதில் தனி ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகளைக் காண்பீர்கள். அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லது. ஆயினும் அவர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயமும் உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வரும் அதே நேரத்தில் அவ்வப்போது தைரியத்தினை இழந்து விடுகிறீர்கள். திடீர் திடீர் என மனதில் விரக்தியான எண்ணங்கள் தோன்றுவதால் உடலில் சோம்பல்தன்மை இடம்பிடிக்கும். நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தினை வளர்த்துக்கொண்டால் எவ்வித தடையும் இன்றி செயல்பட முடியும். உறவினர்களின் வழியில் குடும்பத்தில் கலகம் உண்டாகும் வாய்ப்பு உண்டு. தாயார் வழி உறவுகளுடன் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வண்டி வாகனங்களால் செலவுகளை சந்திக்க நேரிடும். சிறுசிறு வாகன விபத்துகளுக்கான வாய்ப்பும் உள்ளதால் பிரயாணத்தின்போது கவனத்துடன் இருக்கவும். ஒரு சிலருக்கு குடியிருக்கும் வீட்டை மாற்றும் வாய்ப்பு உருவாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரித்து அதன் மூலமாக உங்கள் தொழில்வளத்தை பெருக்கிக் கொள்ள முயற்சிப்பீர்கள். எல்லா சூழலிலும் காரியத்தில் கண்ணாக இருப்பதில் கெட்டிக்காரர்களாக வலம் வருவீர்கள். மாணவர்கள் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். ஆயினும் அவ்வப்போது தோன்றும் எது சரி என்ற குழப்பத்தினைப் போக்க தீவிர பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். ஞாபக மறதி தொல்லையும் உடன் இணைவதால் தேர்வு நேரத்தில் குழப்பமான மனநிலைக்கு ஆளாகிவிடுவீர்கள். ஆகவே ஒருமுறைக்கு இருமுறை எழுத்துப்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். இயற்பியல், உயிரியல், மொழியியல் போன்ற துறையில் உள்ள மாணவர்கள் அபார வெற்றியைக் காண்பார்கள். பெண்கள் வரும் 2020ம் ஆண்டில் நிறைய ஆடம்பர செலவுகளை செய்ய முற்படுவீர்கள். குடும்ப சூழ்நிலையை உணர்ந்து செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது உங்கள் கடமையாகிறது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் ஓய்வாக இருக்கும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். குடும்பத்து விஷயங்கள் வெளியில் செல்வதை விரும்பாத நீங்கள் அடுத்தவர்களின் குடும்பப் பிரச்னையைத் தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் காட்டுவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் உடல்நிலையில் தனி கவனம் செலுத்துவது நல்லது. தொழில் - உத்யோகம் தொழில் ரீதியாக ஓய்வு என்ற வார்த்தைக்கு ஓய்வளிக்க வேண்டி இருக்கும். தொடர்ந்து வேலை பளு அதிகரித்தவாறே இருக்கும். அலைச்சலுக்கு அஞ்சாதவர்கள் என்பதால் நன்றாக அலைந்து திரிந்து தொழில்முறையினை வளர்த்துக் கொள்வீர்கள். ஜூன் மாத வாக்கினில் எதிர்பார்த்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளவர்களுக்கு வருடத்தின் பிற்பகுதி சாதகமாக இருக்கும். தானிய வியாபாரம் அபிவிருத்தி அடையும். நல்ல தன லாபத்தினைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய நுணுக்கங்கள் கைகொடுக்கும். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடம் உங்களுக்கு நற்பலனைத் தரும் வகையில் அமைந்துள்ளது. உண்மை, நேர்மை, உழைப்பு ஆகியவை இந்த வருடத்தில் உங்களுக்கு மிகுந்த நற்பெயரை உண்டாக்கும். பரிகாரம் மாதந்தோறும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகப்பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபட்டு வரவும். நீங்கள் வசிக்கும் பகுதியில் அறுகம்புல் மற்றும் தும்பைபூச் செடி வளர்த்துவர முயற்சிக்கவும். தும்பைப்பூவினால் தினமும் விநாயகப் பெருமானை அர்ச்சித்து வழிபட்டு வர துன்பங்கள் பறந்தோடும். மிதுனம்:(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம் வரை) வருகின்ற 2020ம் ஆண்டிள் துவக்கத்தில் நிலவும் கிரஹ நிலையால் செயல்களில் லேசான தடுமாற்றம் இருந்து வரும். எனினும் குரு பகவானின் பார்வை பலத்தினால் பேச்சுத்திறனைக் கொண்டு வெற்றி கண்டு வருவீர்கள். இந்த வருடத்தில் ஆகஸ்டு மாதம் வரை ராகுவும் அசாத்தியமான தைரியத்தை அளித்து உங்கள் முயற்சிகளுக்கு உடன் இருப்பார். உங்களுக்குத் தெரியாத விவகாரங்களில் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. சிந்தனைகளில் இருந்து வரும் கலக்கம் செப்டம்பர் மாதம் முதல் நீங்கும். ஜீவனாதிபதி குரு ஆட்சி பெற்று இருப்பதால் பலவழிகளிலும் பொருள்வரவு இருந்துவரும். இந்த வருடத்தில் சேமிப்பில் இறங்கமுடியும் என்பதால் வீண் விரயங்களைத் தவிர்த்து முடிந்த வரை சேமித்துவைப்பது நல்லது. எறும்பினைப் போல் நீங்கள் சேமித்து வைப்பது எதிர்காலத்திற்கு உதவும். ருசியான உணவு வகைகளை அதிகம் விரும்பி உண்பீர்கள். உங்களது சமயோஜிதமான வார்த்தைகள் முக்கியமான நேரத்தில் பிரச்னைகளிலிருந்து உங்களை விடுவிக்கும். நீங்கள் உதிர்க்கும் பொதுவான கருத்துக்கள் பெரியோர்கள் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெறும். உடன்பிறந்தோரால் தொல்லைகள் உருவாகும். அதே நேரத்தில் அவர்களே மனம் திருந்தி உங்களுக்கு உதவத் தொடங்குவார்கள். அறிமுகமில்லாத புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகி வருவது நல்லது. அவசரப்பட்டு இறங்கும் செயல்களில் அவப்பெயர் உண்டாகலாம். கவனம் தேவை. வருடத்தின் மத்தியில் குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வருடத்தின் இறுதியில் புதிய சொத்துக்கள், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. உறவினர்களிடமிருந்து விலகியே இருந்து வருவீர்கள். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தில் அக்கறை கொண்டு செயல்படும் நீங்கள் சிறிது அவர்களின் மனநிலையிலும் கவனம் செலுத்தி வாருங்கள். அவர்களது பிடிவாத குணங்கள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கினாலும் அவர்களோடு அதிக நேரத்தை செலவழிப்பது நன்மை தரும். எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காது மேலோட்டமாக இருந்து வருவது நல்லது. மாணவர்கள் குரு பகவானின் துணையினால் புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். அதே நேரத்தில் எழுதும் திறன் குறைவாக இருப்பதால் தேர்வினில் விடையளிக்க நேரம் போதவில்லை என்ற குறை உண்டாகலாம். முதல் இரண்டு மாதங்களில் அதிகம் எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித்தேர்வுகளை எழுதிப் பழகி வந்தால் தேர்வு நேரத்தில் கை கொடுக்கும். அக்கவுன்டன்சி, காமர்ஸ், எகனாமிக்ஸ் பிரிவு மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பெண்கள் வருடத்தின் பிற்பாதியில் நீங்கள் நினைத்தபடி நிறைய ஆடம்பர பொருட்கள் வீட்டினில் சேரும். அதிகம் பேசுவது ஆபத்தினைத் தரும் என்பதை நீங்கள் உணருவது நல்லது. நம் வீட்டுப் பிரச்னைகளை வெளியில் சொல்வது நல்லதல்ல என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களை முகஸ்துதி பாடி ஏமாற்றுபவர்களை நல்லவர்கள் என நம்பிவிடுவது உங்களின் பலவீனமாக உள்ளது. குடும்பத்தில் பொறுப்புகள் அதிகம் என்பதால் மனதில் லேசான விரக்தி தலைதூக்கும். வாழ்க்கைத்துணைவருக்கு மிகுந்த பக்கபலமாக இருந்து செயல்படுவீர்கள். தொழில் - உத்யோகம் ஜீவன ஸ்தான அதிபதி குருவின் வலிமையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். தொழில் ரீதியாக அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். பல புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு உங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தின் முதற்பாதியிலும் சரி, பிற்பாதியிலும் சரி இன்பமும், துன்பமும் சரிசமமான அளவில் இருந்து வரும். சனியின் பார்வையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் சங்கடங்கள் காணாமல் போகும். சந்தோஷம் தரும் வருடம் இது. பரிகாரம் பிரதி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு உணவருந்துவது நல்லது. வருடப்பிறப்பு நாளன்று அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்குச் சென்று உங்களால் இயன்ற நல உதவிகளைச் செய்யுங்கள். வீட்டினில் சங்குபுஷ்பச் செடியினை வளர்த்து வாருங்கள். தினமும் பூஜைமணி மீது உள்ள நந்தி உருவத்திற்கு சங்கு புஷ்பத்தை வைத்து வணங்கி வர உங்கள் பணியில் உண்டாகும் தடைகள் விலகும். கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை) வருடத்தின் துவக்கநாளே சந்திராஷ்டம நாளாக அமைவதால் இந்த வருடத்தில் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. வரும் ஆண்டில் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றார்போல் பலன்கள் அமையாது. மனதினில் தர்ம சிந்தனைகளும், தியாக உணர்வுகளுமே அதிக அளவில் இடம் பிடிக்கும். சுயநலத்திற்காக இல்லாமல் அடுத்தவர்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். எடுத்த வேலையை முடிப்பதற்கு அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் மிகுந்த ஈடுபாட்டோடு முன்நின்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பெரியவர்களின் துணையுடன் மிகுந்த தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு வருவீர்கள். முறையான நிதானமான தன வரவு தொடர்ந்து இருந்து வரும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும் என்பதால் தனிப்பட்ட முறையில் உங்களது சம்பாத்தியத்தினை மட்டும் வைத்துக்கொண்டு சேமிப்பில் ஈடுபட முடியாது. குடும்ப விஷயங்களில் உங்களது பங்களிப்பு மிகவும் அதிகமாக இருந்து வரும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பார்கள். நண்பர்களின் துணையோடு எவராலும் எளிதாகச் செய்ய முடியாத ஒரு சில சாதனைகளை செய்து முடிப்பீர்கள். பேசுவதற்குத் தயங்கும் உங்களுக்கு இவ்வருடத்தில் எழுத்து வலிமை அதிகரிக்கும். உங்களது மனதில் இருக்கும் எண்ணங்களை கதைகள், கட்டுரைகள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்துவீர்கள். வருடத்தின் துவக்கத்தில் உறவினர்களால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். அதோடு அவர்களது பேச்சினால் கலகம் விளையும் வாய்ப்பும் உள்ளதால் நெருங்கிய தொடர்பாகக் காட்டிக்கொள்ளாது சற்று விலகியே நிற்பது நல்லது. குழந்தைகளின் மீதான பாசம் மிகவும் அதிகமாக இருக்கும். அவர்களது வாழ்வினில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிடுவீர்கள். கலைத்துறையினரின் கற்பனை வளத்திற்கு சரியான வாய்ப்பு கிடைக்கும். மே மாதத்தின் இறுதியில் அல்லது ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் உங்களது எண்ணத்திற்கு ஏற்ற வகையில் ஒரு சில சாதனைகளை செய்து காட்டுவீர்கள். அதுவரை வெளியில் அதிகம் காட்டிக்கொள்ளாது நிறைகுடமாகவே இருந்துவிடுவீர்கள். மொத்தத்தில் நற்பலன்களைத் தருகின்ற வருடமாக இருக்கும். மாணவர்கள் ஞாபக மறதியினால் அவதிப்படும் அதே நேரத்தில் உங்களின் எழுத்துத்திறன் அதிகரிக்கும். வேகமாக எழுதக் கற்றுக்கொண்டு விடுவீர்கள், பத்து முறை படிப்பதைவிட ஒருமுறை எழுதிப் பார்த்தாலே உங்கள் மனதில் பதிந்து விடும் என்பதால் பாடங்களை அவ்வப்போது எழுதிப் பாருங்கள். பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். ஏரோநாட்டிக்ஸ், மெரைன் இன்ஜினியரிங், ஃபேஷன் டிசைனிங், ஆர்க்கிடெக்சர் போன்ற துறைகளில் பயிலும் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பெண்கள் வருகின்ற புத்தாண்டில் உங்களுடைய அளவு கடந்த உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை வரும். பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி உங்கள் உழைப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவரவர் தங்கள் குடும்ப நலனுக்காக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்தும்கூட பெரிதாக கவலைப்படாமல் அவர்கள் எதிர்பார்த்த உதவியை செய்து தருவீர்கள். பொதுவாக விட்டுக்கொடுத்தலின் மூலம் நற்பெயரை அடைவீர்கள். தொழில் உத்யோகம் உண்மையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம். தொழில் நிலையில் தொடர்ந்து ஓய்வற்ற நிலையையே சந்திப்பீர்கள். அலுவலகத்திலும் சரி, இல்லத்திலும் சரி உங்கள் புகழ் பாடியே நன்றாக வேலை வாங்கிக் கொள்வார்கள். ஆயினும் புன்னகையோடு எடுத்த காரியத்தை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பலசரக்குக் கடை, ஹோட்டல் தொழில், ஸ்வீட் ஸ்டால் ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடம் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். வருடத்தின் துவக்கத்தில் சற்று சிரமும், பிற்பகுதியில் நினைப்பதை சாதிக்கின்ற வகையில் வெற்றிகரமான சூழலும் நிலவும். பரிகாரம் மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் அருகிலுள்ள சிவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஏலக்காய் பொடி தூவிய பாலை விநியோகம் செய்து வாருங்கள். சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதும் நல்லது. வீட்டினில் நந்தியாவட்டை செடி வளர்த்து வாருங்கள். தினமும் இறைவனுக்கு நந்தியாவட்டை மலரினைச் சாத்தி வழிபடுதன் மூலம் நினைத்தது நடக்கக் காண்பீர்கள். சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் வரை) குருவின் பார்வை பலத்தோடு 2020ம் ஆண்டினை துவக்க உள்ளீர்கள். ராசிநாதன் சூரியனின் பலம் உங்களைக் கொள்கைப் பிடிப்பாளராகக் காண்பிக்கும். நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். வருடத்தின் துவக்கத்தில் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அநாவசியமான வம்பு, வழக்குகள் வந்து சேரும். உங்களுடைய வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதால் கவனத்துடன் பேசுவது நல்லது. கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதால் அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுத்துவிடாதீர்கள். அதேபோல, அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் வாய்ப்பும் உள்ளது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் என ஒன்றுவிட்டு ஒருமாதம் பொருளாதார நிலைமை நல்ல நிலையில் இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகளுக்காக திட்டமிடுவீர்கள், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உடன்பிறந்தோருக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அவரிடமிருந்து பரஸ்பர உதவி இல்லாவிடினும் மிகுந்த ஈடுபாட்டுடன் உங்களால் இயன்றதை அவருக்குச் செய்வீர்கள். இவ்வருடத்தில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களால் உங்களுக்கு அவ்வளவாக லாபம் இருக்காது. தத்துவவாதிகளின் புத்தகங்களைப் படிப்பதில் தனி ஆர்வம் உண்டாகும். வண்டி, வாகனங்களால் அவ்வப்போது உண்டாகும் சிறுசிறு இழப்புகள் மே மாதம் வரை தொடரும். மே மாதத்திற்குப் பிறகு வீடு, வண்டி, வாகனங்கள் போன்றவற்றில் மாற்றங்களைச் செய்வீர்கள். பிள்ளைகளின் செயல்களில் வேகத்தினைக் காண்பீர்கள். அவர்களை நிதானித்துச் செயல்படும்படி அவ்வப்போது அறிவுரை சொல்ல வேண்டியது அவசியம். உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். நீங்கள் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த முக்கியமான நபர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இவ்வருடத்தில் உருவாகும். பொதுவாக நிதானித்துச் செயல்பட வேண்டிய வருடம் இது. மாணவர்கள் மாணவர்கள் சிறப்பானதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள். உங்களுடைய அசாத்தியமான ஞாபக சக்தி உங்களுக்கு துணை நிற்கும். ஆயினும் கூடுதலாக எழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வேகமாக எழுதும் கலையையும் வளர்த்துக் கொண்டீர்களேயானால் சிறப்பானதொரு வெற்றி நிச்சயம். தாவரவியல், விவசாயம், புவியியல் சார்ந்த படிப்புகளைப் படித்து வரும் மாணவர்கள் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். பெண்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் உங்களால் தீர்விற்கு வரும். இதுநாள் வரை எதிரிகளாக இருந்து வந்த உறவினர்கள் உங்களுடைய அன்பு நிறைந்த செயல்பாடுகளால் பகைமை மறந்து மீண்டும் நல்லுறவு கொள்வார்கள். கணவரின் சிக்கன நடவடிக்கைகள் உங்களை மன வருத்தத்திற்கு உள்ளாக்கும். அதே நேரத்தில் குடும்பத்தினருக்காக என்று நினைத்து நீங்கள் செய்து வரும் அநாவசிய செலவுகளையும் தவிர்க்க வேண்டியது அவசியம். தொழில் - உத்யோகம் உழைப்பதற்கு ஏற்ற பலன் இல்லையே என்ற வருத்தம் மனதில் இருந்து வரும். ஜூன் மாத வாக்கில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. ஆயினும் ஜூன் மாதத்திலிருந்து இன்னமும் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உங்களை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவார்கள். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். கட்டுமானப் பொருட்களின் வியாபாரிகள் தொழிலில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். பொதுவான நிலை பொதுவாக வருகின்ற 2020ம் ஆண்டில், இதுவரை தடைபட்டு வந்த காரியங்களை வெற்றியோடு செய்து முடிப்பீர்கள். எல்லா விஷயங்களிலும் உங்களுக்கு போட்டியாக செயல்படுபவர்களை அன்பான அணுகுமுறையால் வெற்றி காண்பீர்கள். பரிகாரம் ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு நாளன்றும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வாழைப்பழத்தார் வாங்கி நைவேத்யம் செய்து வருகின்ற பக்தர்களுக்கு தானம் செய்து வாருங்கள். வீட்டினில் வாழைமரம் வளர்த்து வருவதும் நல்லது. ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபட்டு வருவதால் ஆன்ம பலம் அதிகரிக்கும். எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் இல்லையென்றாலும் பொருளாதார ரீதியாக அதிக சிரமம் ஏதும் இராது. இந்த வருடம் பொருளாதார நிலை உயரக் காண்பீர்கள். குடும்பப் பொறுப்புகளில் வாழ்க்கைத்துணைவர் உதவியாய் செயல்படுவார். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாய் இருப்பார்கள். இணையதளம் போன்ற தகவல் தொடர்புகளின் மூலம் நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்வீர்கள். வீட்டில் பட்டாடைகள், வெள்ளி பாத்திரங்கள் சேரும். ஏப்ரல் மாதத்தில் குடியிருக்கும் வீட்டினில் நிறைய மாற்றங்களைச் செய்ய நேரிடும். மே மாதத்தில் பழைய வாகனங்களை மாற்ற நேரிடும். உறவினர்களிடம் இருந்து விலகியே நிற்பீர்கள். பிள்ளைகளால் லேசான மனவருத்தம் உண்டாகும். அவர்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். உங்களின் தேவையற்ற கற்பனையாலும், வீணான பயத்தினாலும் சதா அவர்களைக் குறைகூறிக்கொண்டே இருப்பீர்கள். பிள்ளைகளின் வாழ்க்கையில் சுபநிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு உண்டு. இந்த வருடத்தின் பிற்பாதியில் நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அளவோடு பேசி வந்தாலும் முன்கோபத்தில் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மற்றவர் மனம் புண்படும்படியாக அமையும் என்பதால் யோசித்து பேசுவது நல்லது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உங்கள் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நடைபெறும். நினைவில் நிற்கும் வருடமாக அமையும். மாணவர்கள் மாணவர்கள் கல்வி நிலையில் ஏற்றம் பெறும் வருடம் இது. கடந்த காலத்தில் உண்டான ஞாபக மறதி காணாமல் போவதோடு நினைவாற்றலும் கூடும். பாடத்தினை நிதானமாக உள்வாங்கி படித்தீர்களேயானால் வெற்றி நிச்சயம். அதுவும் தேர்வுகள் நடைபெற உள்ள மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிரஹ நிலை சாதகமாக உள்ளதால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. மருத்துவத்துறையில் உயர்கல்வி பயில விரும்புவோர்க்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். பெண்கள் குடும்பத்தில் நிலவி வரும் பிரச்னைகளை சமாளிப்பதில் கணவர் மிகுந்த உதவியாய் இருப்பார். ஆயினும் அவ்வப்போது அவருடன் கருத்து வேறுபாடு கொள்வீர்கள். பிள்ளைகளின் நலனுக்காக சேமிப்பில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும். உங்களின் பொறுப்பான செயல்களினால் குடும்பத்து பெரியவர்களிடம் நற்பெயரினை அடைவீர்கள். அக்கம்பக்கத்து வீட்டு பிரச்னைகளை அலசும் நீங்கள் கௌரவம் காரணமாக உங்கள் வீட்டு பிரச்னைகள் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். தொழில் - உத்யோகம் கலைத்துறையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையை அடைவார்கள். அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்படும் அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் ஒத்துப்போவது நல்லது. எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிட்டும். பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள் நல்ல தன லாபத்தினை அடைவார்கள். வங்கி, இன்ஷ்யூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தொழில் முறையில் அதிகமாகக் கடன்பாக்கிகளை நிலுவையில் வைத்துக்கொள்வது நல்லதல்ல. பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தில் உங்களது தனித்துவம் வெளிப்படும். வருடத்தின் பிற்பாதியில் நல்ல பெயரையும், புகழையும் சம்பாதிப்பீர்கள். கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் யாரைப் பற்றியும் அதிகம் கவலைப்படமாட்டீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் மிகச்சிறந்த ஆண்டாக வரும் 2020 அமையும். பரிகாரம் பிரதி ஏகாதசி நாளன்று அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி தீர்த்தம் வாங்கி அருந்திவிட்டு விரதம் முடிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். வீட்டினில் துளசிச்செடியை வளர்த்து வருவதோடு அதற்கு தினமும் நீரூற்றி வணங்கி வருவது நல்லது-. சனிக்கிழமை தோறும் அன்னதானம் செய்து வருவதும் மனநிம்மதியைத் தரும். துலாம்: (சித்திரை 3,4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம் வரை) இந்தப் புத்தாண்டில் நீங்கள் செய்ய நினைக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் முழுமையாக திட்டமிட்டு இறங்க வேண்டி இருக்கும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் எடுத்துக்கொண்ட வேலையை நேரத்திற்கு செய்ய இயலாமல் போகும். சற்று சிரமப்பட்டாலும் கூட எடுத்துக்கொண்ட வேலையை மிகச்சரியாக செய்து முடிப்பதில் அதிக அக்கறை கொள்ளுங்கள். ஜூன் மாதம் வரை வேலை பளு அதிகமாக இருக்கும். அதிக லாபமில்லாவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜூலை மாதம் முதல் உங்கள் உழைப்பிற்கான பலனைக் கண்கூடாகக் காண்பீர்கள். பெயர், புகழ், அந்தஸ்தோடு எதிர்பார்த்த தனலாபமும் வந்து சேரும். தொலைதொடர்பு சாதனங்களின் உதவியோடு அலைந்து திரிந்து செய்ய வேண்டிய காரியங்களை உட்கார்ந்த இடத்திலேயே செய்து முடிப்பீர்கள். வருடத்தின் முதல் பாதியில் பொருளாதார ரீதியாக அதிக சிரமத்திற்குள்ளாக நேரிடும். குடும்பத்தில் லேசான சலசலப்பு இருந்து வரும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவீர்கள். அதிகமாகப் பேசுவதைவிட அளவோடு பேசுவது நல்லது. குடும்ப விவகாரங்களிலும், இதர பணிகளிலும் அமைதியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்களது மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்துவது நல்லது. உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உருவாகும். வண்டி, வாகனங்களால் உண்டான செலவுகள் குறையும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குவீர்கள். சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும் வாய்ப்பு உண்டு. தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. வெளியூர் பயணத்தின்போது ஞாபக மறதியின் காரணமாக பொருளிழப்பு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். பிள்ளைகளால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்களோடு அதிக நேரத்தினை செலவிட இயலாது போனாலும், கிடைக்கின்ற ஓய்வு நேரத்தையும் முழுக்க முழுக்க அவர்களுடனேயே செலவிடுவீர்கள். சிரமமான சூழ்நிலையிலும் கூட நல்லெண்ணங்களும், சுப சிந்தனைகளும் உங்கள் பணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். வருடத்தின் பிற்பகுதியில் ஆன்மீகப் பணிகளுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். மாணவர்கள் மாணவர்கள் தங்களுக்கு உண்டாகும் ஞாபக மறதியினைப் போக்க தீவிர எழுத்துப்பயிற்சியில் இறங்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டில் உங்கள் எழுத்துவலிமை அதிகரிப்பதால் தேர்விற்கு முன்னதாக பல மாதிரித்தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கம்ப்யூட்டர் சயின்ஸ். அக்கவுன்டன்சி, காமர்ஸ், ஆடிட்டிங் போன்ற துறையைச் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பெண்கள் குடும்பப் பிரச்னைகளை வெளியில் பேசுவதால் தொல்லைகள் உண்டாகும். மாற்றுமொழி பேசுவோரின் நட்பு அநாவசிய பிரச்னைகளை உருவாக்கும். கணவரோடு இணைந்து மேற்கொள்ளும் பணிகள் உடனுக்குடன் வெற்றி பெறும். அவரது உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினை மிகுந்த பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள். தொழில் - உத்யோகம் உடன்பணிபுரிவோர்களுடன் ஒத்துப்போவது அவசியமாகிறது. ஜூன் மாதம் வரை தொழில் ரீதியாக சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றத்தினால் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும் உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் உண்டாகும். வியாபாரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை அதிகம் நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் வசூலிப்பது நன்மை தரும். புதிய முயற்சிகள் வருடத்தின் பிற்பகுதியில் வெற்றி தரும். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தில் அதிர்ஷ்டத்தின் அளவு குறைவு. ஆயினும் உங்கள் தனித்திறமையின் காரணமாகவும் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாகவும், எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து வருவதன் மூலமாகவும் வெற்றி காண இயலும். பரிகாரம் பிரதி மாதந்தோறும் வருகின்ற சுவாதி நட்சத்திர நாளில் நரசிம்மரை வழிபட்டு வாருங்கள். பானகம் நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதும் நல்லது. வீட்டு வளாகத்தில் பவளமல்லி மரத்தினை நட்டு வளர்த்து வாருங்கள். பவளமல்லி மலர்களின் வாசமும், அந்த மலர்களினால் பெருமாளை அர்ச்சித்து வழிபட்டு வருவதும் சகல ஐஸ்வர்யத்தையும் தரும். விருச்சிகம்:(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) தனஸ்தானத்தின் வலிமையால் வருகின்ற 2020 ம் ஆண்டின் துவக்கம் நல்லபடியாக அமையும். ஏழரைச்சனி நடந்தாலும் மனதினில் ஸ்திரத்தன்மை உருவாகும். குருவின் அனுக்ரஹமும் உடனிருப்பதால் இவ்வருடத்தில் சிறப்பான நற்பலன்களை சந்திப்பீர்கள். மனதில் நிலவி வந்த மந்தத்தன்மை விலகி மனமகிழ்ச்சியோடு பணியாற்றி வருவீர்கள். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி காண்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நேரம் இது. நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களை நண்பர்களின் உதவியுடன் சாதித்துக் கொள்வீர்கள். வருடத் துவக்கம் முதல் பொருளாதார நிலைமை மிக நன்றாக இருந்து வரும். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு சேமிப்பில் ஈடுபடுங்கள். வருடத்தின் இறுதியில் உங்களது பட்ஜெட்டையும் மீறி சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் திருமணம். மேற்படிப்பு போன்ற சுபசெலவுகளாக இருக்குமே அன்றி அநாவசிய செலவுகள் ஏதும் இருக்காது. சொத்துப் பிரச்னைகள், பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பிரயாணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நீங்கள் நழுவிச்சென்றாலும் தாயார் வழி உறவுகள் உங்களை விடாது தொடருவார்கள். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வருடத்தின் பிற்பாதியில் சாதகமான சூழ்நிலை உருவாகும். நான்கு சக்கர வாகனங்கள் வாங்க நினைப்போருக்கு இவ்வருடத்தில் நேரம் கூடி வரும். வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு பிப்ரவரி மாதம் முதல் வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் வழியில் அதிக செலவுகளை சந்திக்க நேர்ந்தாலும் அவர்களால் உண்டாகும் மனமகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. குடும்பத்தினரோடு பொழுதினைக் கழிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளைப் பற்றி மட்டும் கவலை கொள்ளும் நீங்கள் பெற்றோர் நலனிலும் அக்கறை கொள்ளுதல் நல்லது. நெடுநாளைய குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் உங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தையும், அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்வீர்கள். எந்தப் பிரச்னை குறித்தும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் மன நிம்மதியுடன் இந்த வருடம் நிறைவாகச் செல்லும். மாணவர்கள் மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதி முடிக்க கூடுதல் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தேர்வு நேரத்தில் கிரஹ நிலை சாதகமாக இருப்பதால் கூடுதல் வேகத்துடன் தேர்வுகளை எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. பொறியியல்துறை, ஆசிரியர் பயிற்சி, கணிப்பொறி அறிவியல் போன்ற துறையில் படித்து வரும் மாணவர்கள் ஏற்றம் காண்பார்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவ்வப்போது ஒரு சில தடைகளை சந்தித்து வந்தாலும் செப்டம்பர் மாத வாக்கில் தடைகள் நீங்கப் பெற்று வெற்றி காண்பார்கள். பெண்கள் அவ்வப்போது மனதினில் குழப்பங்களும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும். உங்கள் குடும்ப பிரச்னைகளை உறவினர்கள் மத்தியில் வெளிப்படுத்தாதீர்கள். உங்கள் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கும் உறவினர்களுக்கு சாதகமான வாய்ப்பாக உருவாகிவிடும். உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளைக் கொண்டே உங்களை எளிதில் வீழ்த்தி விடுவார்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் - உத்யோகம் சுயதொழில் செய்பவர்கள் தொழில் வளர்ச்சிக்காக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்கள் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு உதவியாளர்களின் உதவியோடு அலுவல் பணியினை செய்து முடிப்பார்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் இந்த வருடத்தில் நல்ல நிலையினை அடைவார்கள். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மருத்துவ செலவுகள் குறைந்திருக்கும். தெய்வத்தின் அருளால் நன்மை அடைவீர்கள். பரிகாரம் பிரதி செவ்வாய்கிழமை தோறும் துர்கையை குங்குமார்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது. விசேஷ நாட்களில் எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். வீட்டினில் எலுமிச்சை மரம் வைத்து வளர்த்து வருவது நல்லது. எலுமிச்சை இலையை கசக்கி முகர்ந்து வருவதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை) வருகின்ற 2020ம் ஆண்டின் துவக்கம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் போகப்போக நல்ல முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக்கொள்வீர்கள். ஏழரை சனியின் தாக்கம் ஒரு புறம், ஜென்ம குரு ஒருபுறம், ஜென்ம கேது மற்றொரு புறம் என பல்வேறு சோதனைகள் காத்திருக்கின்றன. ஆயினும் அதிலும் ஒரு நல்ல நேரமாக குருபகவானின் ஆட்சி பலத்தால் ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து சற்று விடுபடுவீர்கள். உங்களுடைய சேவை மனப்பான்மையும், தொண்டு உள்ளமும் அதிகமாக வெளிப்பட்டு நற்பெயரை அடைவீர்கள். சுயநலத்திற்காக அல்லாது அடுத்தவர்கள் நலனுக்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். உங்கள் தைரியமும், மன உறுதியும் அதிகரித்து எதையும் தாங்கும் இதயத்தினை பெறுவீர்கள். சிரமமான சூழ்நிலையிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். அரசாங்க வங்கிகள் மூலமாகக் கடன் பெறக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்காக அதிகம் மெனக்கெடுவீர்கள். பொருளாதார நிலை நிதானமாக உயரும். குடும்பத்தினர் வழியில் அதிக செலவினைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். முன்பின் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாற்று மதத்தினர், மாற்று மொழி பேசுபவர்கள் ஆகியோரால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் பழக வேண்டி இருக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உறவினர்களின் வருகையால் அதிக பொருட்செலவிற்கு ஆளாவீர்கள். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்கால நன்மைக்காக அவர்களை விட்டு பிரிந்திருக்க நேரிடும். உங்களது சிந்தனையில் லேசான தடுமாற்றத்தினை உணர்வீர்கள். எதிரில் அமர்ந்திருப்பவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிந்தனை வேறெங்கோ செல்லும். கவனக்குறைவால் நிறைய இழப்பினை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் கவனம் தேவை. பொதுவாக இவ்வருடத்தில் அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் ஏழரை சனியின் தாக்கத்தினால் மாணவர்கள் அதிக அளவிற்கு ஞாபக மறதிக்கு ஆளாவார்கள். ஞாபக மறதியை வெற்றி கொள்ள தீவிர பயிற்சி தேவை. பொதுத்தேர்விற்கு முன்னதாக நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். தேர்வு நேரத்தில் உங்களது எழுத்து திறமை அதிகரிக்கும். ஆகவே பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்த்து பழகுவதால் தேர்வில் வேகமாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். இயற்பியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பெண்கள் உங்கள் வீட்டு பிரச்னைகள் வெளியே செல்வதால் மதிப்பு, மரியாதை குறைந்துவிடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். தாய்வழி உறவினர்கள், சகோதரிகளால் பிரச்னைகள் தோன்றலாம். அவர்களோடு அதிகம் பேசாமல் அமைதி காப்பதால் புகுந்த வீட்டில் பிரச்னைகள் தோன்றாமல் இருக்கும். வருடத்தின் முற்பாதியில் கணவரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தொழில் - உத்யோகம் அரசுத்துறையில் பணி புரிபவர்களுக்கு தேவையற்ற இடமாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். சுயதொழில் செய்வோர் பணியாட்களுக்காகக் காத்திராமல் தாங்களே எல்லா வேலையையும் செய்ய வேண்டியிருக்கும். விவசாயிகள், ஹோட்டல் துறையில் பணி புரிபவர்கள், நகைக்கடை அதிபர்கள் நல்ல தனலாபத்தினை அடைவார்கள். செப்டம்பர் மாதம் முதல் வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தின் முற்பாதியில் அடுத்தவர்களுக்காகவும், பிற்பாதியில் தனக்காகவும் உழைக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். காரியம் ஆகவேண்டும் என்றால் அடுத்தவர்களை நம்பாமல் நீங்களே நேரடியாக இறங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. வருடத்தின் முற்பாதியில் பொறுமையைக் கடைபிடித்தால் பிற்பாதியில் அதற்கான பலனை அனுபவிக்கலாம். பரிகாரம் பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். குலதெய்வ வழிபாடும், முன்னோர் வழிபாடும் பலன் தரும். மொட்டைமாடி, பால்கனி போன்ற இடங்களில் மஞ்சள் நிற மலர்களை உடைய செடிகளை வளர்த்து வருவதன் மூலம் மனமகிழ்ச்சி காண்பீர்கள். அதே நேரத்தில் பேச வேண்டிய தருணங்களில் அவசியம் பேசியே ஆக வேண்டும் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு வருந்துவதால் உடல்நிலை கெடுவதோடு நாம் நினைத்த வேலையும் முடியாது. வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடு கொண்டாலும் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவி வரும். முன்னோர்களின் சொத்துக்களில் பாகப்பிரிவினைக்கான வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் விஷயத்தில் உடன்பிறந்தோர் உங்களோடு ஒத்துப்போவார்கள். தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் மூலமாகக் குறிப்பிடத்தகுந்த லாபத்தினை அடைவீர்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மே மாதம் முதல் மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் நீங்கப்பெறுவீர்கள். வீடு மற்றும் வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும். தாயார் வழி உறவினர்களின் மூலம் கலகம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்களில் உள்ள வேகத்தினைக் கண்டு அச்சம் கொள்வீர்கள். மனதிற்குள் கொடி கட்டிப் பறக்கும் எதிர்காலம் பற்றிய கற்பனையை நிஜமாக்க முடியவில்லையே என மனம் வருந்துவீர்கள். கற்பனைகள் ஆயிரம் இருந்தாலும், அவை நடக்காது போனாலும் ஆண்டவன் நம்மை நன்றாகத்தான் வைத்திருக்கிறார் என்ற எண்ணத்தினை நீங்கள் மனதிற்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். நேர்மையான வழியில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டீர்களேயானால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது நிச்சயம். சட்டம் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் பயிற்சி, அக்கவுன்டன்சி, காமர்ஸ், கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். பெண்கள் நினைத்ததை உடனுக்குடன் சாதிக்க நினைத்து வேகமாக செயல்படுவீர்கள். பெரியவர்கள் சொல்லும் ஆலோசனைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் உடனடியாக காரியத்தில் இறங்குவதால் வருத்தமே மிஞ்சும். வீட்டினில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை பத்திரப்படுத்துவதில் அதிக கவனம் தேவை. நீங்கள் எண்ணிய காரியங்கள் வருடத்தின் இறுதியில் நிறைவேறும். கணவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும். தொழில் - உத்யோகம் சனி பகவான் தொழில் ரீதியாக நீங்கள் வேகமாக செயல்படுவதற்கு தடைக்கற்களை உண்டாக்குவார். ஆயினும் ராசிநாதன் சனி குருவின் இணைவைப் பெறுவதால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாஃப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடத்தின் முதற்பாதியில் குதர்க்கமான எண்ணங்களும், பிற்பாதியில் நல்லெண்ணங்களும் மனதினை ஆக்கிரமிக்கும். நினைத்த காரியத்தை எவ்வாறேனும் சாதித்துவிட வேண்டும் என்ற நிலை முதற்பாதியிலும், இப்படித்தான் செய்து முடிக்க வேண்டும் என்ற நிலை பிற்பாதியிலும் இருக்கும். இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமான அளவில் தரும் வருடமாக அமையும். பரிகாரம் பிரதி மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வழிபட்டு வருவது நல்லது. தயிர்சாதம் நைவேத்யம் செய்து ஆலயத்தில் விநியோகம் செய்யுங்கள். நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளிடம் அன்பு செலுத்துங்கள். பிறந்தநாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் அருகிலுள்ள ஆலயத்தில் தென்னங்கன்றுகளை நட்டு வைக்க உங்கள் வம்சம் நல்லபடியாக வாழும். கும்பம்: (அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதம் வரை) குரு, சனி போன்ற பிரதான கிரஹங்களின் துணையோடு வருகின்ற புத்தாண்டினை மிகச்சிறந்த முறையில் வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். வருடத்தின் துவக்கத்தில் செயலில் அதீத சுறுசுறுப்பினை உணர்வீர்கள். ஆயினும் அதிகப்படியான அவசரம் ஆபத்தில் முடியும் என்பதையும் உணரவேண்டும். என்னதான் நேரம் நன்றாக இருந்தாலும் வாயிலிருந்து வெளிப்படும் கடுமையான வார்த்தைகள் எதிரிகளை உருவாக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சற்று விவேகமாக செயல்பட்டீர்களேயானால் எத்தனை வலிமை வாய்ந்த எதிரியாயினும் பேச்சின் மூலம் அழகாக வெற்றி காண இயலும். கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவது எதிர்காலத்திற்கு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து வரும். அதே நேரத்தில் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பாராத பல வழிகளிலும் பொருள்வரவு தொடர்ந்து இருந்து வரும். சதா சம்பாத்யத்தைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் குடும்பத்தினரின் நலனிலும் சிறிது அக்கறை கொள்ள வேண்டும். ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவழித்தீர்களேயானால் குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்பினைப் போக்கி சந்தோஷத்தை வரவழைக்கலாம். உடன்பிறந்தோருக்காக உதவி செய்ய நேரிடும். சகோதரர்களின் பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களால் ஆதாயத்தினை அடைந்து வரும் நீங்கள் அவர்களுக்கு பதில் உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிதாக வண்டி. வாகனங்கள் வாங்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் தேடி வரும். வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற காத்திருப்போருக்கு நிலைமை சாதகமாக இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமைகொள்ளத் தக்க வகையில் அமையும். அவர்களுடைய வாழ்வினில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பால்ய சிநேகிதர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும். கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உல்லாசப் பயணங்கள் ஆகியவற்றை அனுபவிப்பீர்கள். நவம்பர் 15 -ல் நடைபெற உள்ள குருபெயர்ச்சியினால் லேசான சிரமத்தினை அனுபவிக்க வேண்டி இருக்கும். 2020ம் வருடம் சிறப்பான நற்பலன்களை விளைவிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் குரு பகவானின் திருவருளால் மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பார்கள். சரியான முறையில் தேர்விற்கு தயார் செய்து கொண்டீர்களேயானால் எதிர்பார்க்கும் கேள்விகளை வினாத்தாளில் காணப்பெற்று விடையளிக்கலாம். தேர்வு நேரத்தில் கிரஹ நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். பெண்கள் இந்த வருடத்தில் உங்களுக்கு நாவடக்கம் அவசியம் தேவை. நான்குபேர் மத்தியில் நீங்கள் அவசரப்பட்டு பேசும் வார்த்தைகள் உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கக்கூடும். நீங்கள் பேச நினைப்பவற்றை கணவரின் வாயிலாக வெளிப்படுத்தி காரியத்தினை சாதித்துக் கொள்ளலாம். இதுநாள் வரை புத்ர பாக்யம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த பெண்கள் இவ்வருடத்தில் புத்ர பாக்யத்தினை அடைவார்கள். தொழில் - உத்யோகம் இவ்வருடத்தின் முற்பாதியிலும் சரி, பிற்பாதியிலும் சரி தொழில் நிலை தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வரும். நீங்களாக விரும்பினாலொழிய ஓய்வு எடுத்துக்கொள்ள இயலாது. உழைப்பிற்கேற்ற ஊதியமும் நல்ல தனலாபமும் தொடர்ந்து இருந்து வரும். உத்யோகஸ்தர்கள் உடனுக்குடன் சுறுசுறுப்பாக செயல்படுவதன் காரணமாக மேலதிகாரிகளிடம் நற்பெயரை அடைவதோடு மட்டுமல்லாது முக்கியமான வேலைகள் மீண்டும் மீண்டும் உங்களிடமே ஒப்படைக்கப்படுகின்ற நிலைக்கு ஆளாவீர்கள். அரசியல்வாதிகள், நகை அடகு வட்டிக்கடை நடத்துபவர்கள், மருத்துவத் துறையில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு பொற்காலமாக இருக்கும். பொதுவான நிலை பொதுவாக இவ்வருடம் உங்களது வாழ்வினில் முன்னேற்றத்தினைத் தரும் வகையில் அமையும் என்பதால் நேரத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். பரிகாரம் பிரதோஷ நாட்களில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதையும், சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதையும் வழக்கத்தில் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களின் குழுவினருடன் சிவாலயத்தில் உழவாரப் பணி மேற்கொள்ளுங்கள். வில்வமரக் கன்றுகளை வாங்கி சிவாலயங்களில் நட்டு பராமரிப்பதன் மூலமும் இறைவனின் திருவருளைப் பெற இயலும். ![]() மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை) இந்தப் புத்தாண்டின் துவக்கம் உங்களுக்கு இனிய முறையில் அமைவதில் ஐயம் ஏதும் இல்லை. ராசிநாதன் குரு பகவானின் ஆட்சி பலத்தினால் நினைத்த காரியங்களை அமைதியாக நியாயமான முறையில் சாதித்து வருவீர்கள். பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு தத்துவார்த்தமாக பதிலளித்து சாமர்த்தியமாக தப்பித்துக் கொள்வீர்கள். மற்றவர்களை கவரும் வகையிலான பேச்சும் சிரிப்பும் உங்களுடைய மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறது. சிக்கலான நேரத்தில் அமைதி காப்பதன் மூலம் பிரச்சினையிலிருந்து வெளியே வருவீர்கள். தொழில்நுட்ப ரீதியாக உங்கள் அறிவினை வளர்த்துக்கொள்ள முயற்சிப்பீர்கள். பொருள் வரவிற்கு வருடம் முழுக்க பஞ்சம் இருக்காது. பொருளாதார நிலையில் லேசான சிரமத்தினைத் தவிர குறிப்பிடத்தக்க சிரமமான சூழ்நிலை ஏதும் வராது. உடன்பிறந்தோருக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். இன்டெர்நெட் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களால் வாழ்க்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். தாய்வழி உறவினர்கள் பிரச்சினை ஏற்படுத்துவார்கள். சொத்துக்கள் பாகப்பிரிவினைக்கு உள்ளாகும். வழக்கு வியாஜ்ஜியங்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே சமாதானத்தில் முடியும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக சொத்து சேர்ப்பினில் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்களால் வாழ்வினில் சிறந்ததொரு கௌரவத்தினைப் பெறுவீர்கள். அதே நேரத்தில் புதியதாக சொத்துக்கள் வாங்கும்போது அவற்றினுடைய மூலப் பத்திரங்கள், வில்லங்க சான்றிதழ்கள் போன்ற முறையான ஆவணங்களை சரிபார்த்து வாங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தவும். சொத்து விவகாரங்களில் முன்பின் தெரியாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. சுற்றுலா செல்லும்போது உங்கள் மனதிற்குப் பிடிக்காத சம்பவங்கள் நடக்கலாம். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்ற நினைப்பவர்களுக்கு ஏற்ற காலமாக இவ்வருடம் அமையும். பிள்ளைகளின் மந்தமான செயல்பாடுகளைப் போக்க அதிக முயற்சி எடுத்துக்கொள்வீர்கள். நேரம் நன்றாக இருந்தாலும் கடன் கொடுக்கல் வாங்கலில் எதிரிகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. இவ்வருடத்தில் கையிருப்பு கரைந்தாலும் வங்கிக்கடன் உதவியுடன் சொத்துசேர்ப்பில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் இவ்வருடத்தில் உங்களது முழுத்திறமையையும் வெளிப்படும். போட்டியாக இருக்கும் மாணவர்களை உங்களது ஞாபக சக்தியின் துணையுடன் எளிதாக வெற்றி கொள்வீர்கள். உயர்கல்வி மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தினை காண்பார்கள். ஆய்வினில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான சூழ்நிலை தொடரும். கம்ப்யூட்டர் துறையில் பயிலும் மாணவர்கள் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள். பெண்கள் அவ்வப்போது லேசான சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். மற்றவர்கள் பேசும் பேச்சுக்களை நம்பி குடும்பத்தாரோடு கருத்து வேறுபாடு கொள்வது நல்லது அல்ல. இவ்வருடத்தில் நீங்கள் மிகவும் பொறுமைசாலியாக இருந்து காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டி வரும். பெற்றோர்கள், உடன்பிறந்தோர் உங்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பார்கள். பொறுப்புகள் என்று வந்துவிட்டால் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு வெற்றி கொள்வீர்கள். தொழில் - உத்யோகம் இந்த வருடத்தில் அலுவல் பணியில் அதிக அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் உடன்பணிபுரிவோரின் துணையுடன் சாதித்துக்கொள்வீர்கள். ஜூன் மாதத்திற்குப் பிறகு உத்யோக ரீதியாக இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகள் வருடத்தின் பின்பாதியில் அதிக அளவு அலைச்சலை சந்தித்தாலும் குறிப்பிடத்தகுந்த தன லாபத்தினை அடைவார்கள். மளிகை பலசரக்கு வியாபாரிகள் ஏற்றமான நிலையினைக் காண்பார்கள். பொதுவான நிலை இவ்வருடத்தின் முற்பாதியில் அதிர்ஷ்டமும், பிற்பாதியில் உங்களது திறமையும் கைகொடுக்க நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்துவேறுபாடு தோன்றினாலும் பிரச்னையை பெரிதாக்காமல் பேசித் தீர்த்துக்கொண்டு விடுவீர்கள், வாழ்வினில் முன்னேற்றத்தினைத் தரும் வருடம் இது. பரிகாரம் பிரதி வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். மாணவர்கள் தங்கள் குருவாகிய ஆசிரியருக்கு பாதபூஜை செய்து வணங்குங்கள். சாயிபாபா, ராகவேந்திரர் முதலான குருமகான்களை வழிபட்டு அவர்களது சந்நதியில் அன்னதானம் செய்து வருவதும் அரசமரத்தினை பிரதட்சிணம் செய்து வழிபடுவதும் மன நிம்மதியைத் தரும். |
கலாச்சாரம் >