12.08.16- வளமான வாழ்வு தரும் வரலட்சுமி விரதம்..

posted Aug 11, 2016, 7:06 PM by Habithas Nadaraja   [ updated Aug 11, 2016, 7:09 PM ]
வரலக்சுமி விரதம்: 12-08-2016 வெள்ளிக்கிழமை வரலக்சுமி விரதம், எதிர்வரும் 12.08.2016 அன்று உலகலாவியரீதியில் சகல இந்து ஆலயங்களில் நடைபெற உள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். அற்புத தெய்வமான வரலட்சுமிக்குரிய விரதம் 12-08-2016 வெள்ளிக்கிழமை அனுடிக்கப்படுகின்றது. வரலட்சுமி விரதம் மிகவும் மகிமையும் மகோன்னதமும் மிக்க ஒரு புனிதமான புண்ணிய விரதமாகும். இது ஆடி மாத வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமக்கு நல்லவரன் வாய்க்க வேண்டுமென்று கன்னியர்களும் தமது கணவர் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் சுகமே வாழ வேண்டுமென்று திருமணமான சுமங்கலிப் பெண்களும் இவ்விரதத்தை நோற்கின்றனர்.

வரலட்சுமி விரதம் பற்றி பூர்வீக வரலாறும் உண்டு.  திருக்கைலாய மலையிலே சிவனும் உமையும் வீற்றிருக்க பக்தர்கள் வந்து வழிபாடியற்றிச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று உமையவள் சிவனைப்பார்த்து ஒரு கேள்வி கேட்டாள். “எனது பிராணநாயகரே! இந்தப் புண்ணிய பூமியிலே சகல விதமான செல்வ போகங்களையும் ஐசுவரியங்களையும் புத்திர சந்ததியையும் தரக்கூடிய மிகச் சிறந்த விரதம்எது என்பதைத் தேவரீர் எனக்கு உரைத்தருள வேண்டும்” என்பதே அது. அதைக் கேட்ட சிவபெருமான் “தேவி! நல்ல கேள்வி கேட்டாய் உன்னுடைய இந்த வினாவால் உலகமே நன்மையடையப் போகிறது. சரி. சொல்கிறேன் அவதானமாகக் கேள்!” என்று சொல்லத் தொடங்கினார்.

முன்னொரு காலத்திலே குண்டினம் என்ற நாட்டிலே சாருமதி என்றொரு பெண் இருந்தாள். அவள் தெய்வீக சிந்தனையும் நல்லெண்ணமும் கொண்டவள். தன்னுடைய கணவனையே தெய்வமாகப் போற்றி வணங்குபவள். சுமங்கலிப் பெண்ணான சாருமதியின் தூய்மையும் பக்தியும் மேன்மைக் குணமும் கண்ட வரலட்சுமி தேவியானவள் அவளுக்குக் காட்சி கொடுத்தாள். “பெண்ணே சாருமதி உன் பக்திக்கு மெச்சினோம். நீ விரதமிருந்து என்னை வழிபட்டு ஆராதிப்பாயாக!” என்று கூறி மறைந்தாள். இது சாருமதி நித்திரையாக இருக்கும் போது நிகழ்ந்தது. நித்திரையிலிருந்து விழித்தெழுந்த சாருமதி வரலட்சுமி அம்பிகையின் இந்த அற்புதச் செய்கையைத் தன் தோழியர்களுக்குக் கூறி மகிழ்ந்தாள்.

உடனே அந்த விரதத்தை அனுட்டிக்கும் முறையையும் எல்லோருக்கும் கூறினாள். முதலில் இருக்கும் இடத்தைத் தூய்மையாக்கிக் கழுவி மெழுகித் துப்புரவாக்கி மாவிலை தோரணங்களால் அலங்கரித்து நடுவிலே ஒரு மேடை அமைக்க வேண்டும். அம்மேடையில் நெல் அல்லது பச்சரிசியைப் பரப்பி தாமரைப் பூக்கோலம் போட வேண்டும். தாமரைப் பூக்கோலத்தின் நடுவிலே ஒரு கும்பம் வைக்க வேண்டும். பொதுவாக எல்லாக் காரியங்களுக்கும் தண்ணீர் நிரப்பியே கும்பம் வைப்பது வழமை. ஆனால் இந்த வரலட்சுமி விரதத்துக்கு மாத்திரம் கும்பம் நிறைய பச்சரிசியை நிரப்பி வைக்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு மாவிலைகள் வைத்து முடியுடைய தேங்காயைப் பக்தியோடு வணங்கியபடி கும்பம் வைக்க வேண்டும். நல்ல தூய வெள்ளை நூலிலே மஞ்சள் பூசி ஒன்பது இழைகளுடன் கூடியதாக முறுக்கி எடுத்து ஒன்பது முடிச்சுக்கள் போட்டு அந்து நூற்காப்பை கும்பத்தின் மேல் வைத்து விரதத்தை ஆரம்பிக்கலாம். முதலில் விநாயகரை வணங்கி பின்பு வரலட்சுமி தேவியை மனத்திலே தியானித்த வண்ணம் சங்கற்பம் செய்து புண்ணியாகா வாசனம், முதலாய பூர்வாங்க பூசைகளுடன் சோடசோபசாரஞ் செய்து அங்கபூசை முதலியன செய்ய வேண்டும்.

பிறகு, ஒன்பது நாமங்களால் நூலிலுள்ள ஒன்பது முடிச்சுக்களையும் தியானத்துடன் பூஜித்து அதனை எடுத்து விரதகாரர் தமது வலது கையிலே கட்டிக்கொள்ளுதல் வேண்டும். பொதுவாக ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் காப்பு நூல் அணிவதே வழக்கம். ஆனால் இந்த வரலட்சுமி விரதத்துக்கு மட்டும் பெண்களும் வலது கையிலேயே காப்பு நூல் கட்டுதல் வேண்டும். ஏனெனில் வரலட்சுமி விரதம் சுமங்கலிப் பெண்களுக்கு முக்கியமான விரதமாகும். தமது கணவர் சுகத்துடன் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து நோன்பிருப்பதே இவ்விரதத்தின் நோக்கமாகும். ஒன்பது முடிச்சுக்களுக்கும் ஒன்பது நாமங்கள் உண்டு. கமலா, ரமா, லோகமாதா, விஸ்வஜனனீ, மகா லக்ஷ்மி lராப்தி தனயா, விஸ்வஸாVணீ, சந்த்ரஸகோதரி, ஹரிவல்லபா என்பதே அந்த ஒன்பது நாமங்களுமாகும்.

இவற்றை உச்சரிக்கும் போது ஓம் என்று முன்னாலும் நம என்று பின்னாலும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பூசையின் போது அம்பிகைக்கு நெய்ச்சோறு படைக்க வேண்டும். இவ்விரதத்தில் அறுகம்புல்லை எடுத்து மஞ்சளிலோ சாணகத்திலோ விநாயகப் பெருமானை ஆவாகனம் பண்ணி வணங்கிக் கொண்டு விரதத்தை ஆரம்பிக்கலாம். மதியம் ஒரு பொழுதுண்டு இரவு பால் பழம் அருந்தலாம். தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளுக்கு அனுட்டித்ததன் பின்னரே இதனை நிறுத்த வேண்டும். திருமணமாகிய சுமங்கலிப் பெண்களே இவ்விரதத்துக்குரியவர்கள். திருணமாகாத கன்னியர் தமக்கு நல்ல கணவர் வந்து வாய்க்க வேண்டுமென்ற இந்த விரத காலத்தில் நடைபெறுகின்ற பூசையைப் பார்த்துப் பிரார்த்தித்து வணங்கினாலே போதும். இவ்வாறு சாருமதி என்ற அந்தப் பெண்ணானவள் இந்த வரலக்சுமி விரதத்தை எப்படி நோற்க வேண்டுமென்று விளக்கமாகக் கூறினாளாம்.

அதைக் கேட்ட பெண்கள் எல்லோரும் இவ்விரதத்தை முறையாக அனுட்டித்து நன்மை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதம் அனுட்டிப்பவர்கள் இதனை விளையாட்டாக எண்ணிவிடக்கூடாது. உண்மையான பயபக்தியுடன் முழுநேர இறை சிந்தனையுடன் நோற்க வேண்டும். இடையிடையே தேநீர் பருகினால் பாவம் கிடைக்கும். வேறு தீய எண்ணங்களுக்கும் இச்சைகளுக்கும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறு நேர்ந்தால் குற்றமாகும். இன்று அனுட்டிக்கப் பெறுகின்ற இந்த வரலட்சுமி விரதத்தினை முறைப்படி நோற்று புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்ததன் மாண்பினைப் பெற்று சதுர்வித புருஷார்த்தங்களுடன் வாழ்வோமாக.





Comments