[Untitled]‎ > ‎

16.06.14- காரைதீவு கண்ணகி அம்மனாலயத்தில் எட்டாம் ங்சடங்கு

posted Jun 16, 2014, 11:24 AM by Unknown user   [ updated Jun 17, 2014, 2:35 AM ]
வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுக்காதை எதிர்கால சந்ததியின் நன்மைகருதி புதிய ஆலயத்தில் சிற்பம் ஓவியம் அடிக்குறிப்பு சகிதம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.அவற்றைப் படங்களில் காணலாம்                                                                                                                                                                                                                                                     வரலாற்றுக்காதை  மீன்பாடும் தேனாடாம் மட்டு மாநகரின் தெற்கே 27 மைல் தொலைவில் வடக்கு, தெற்கே முஸ்லிம் கிராமங்களையும், கிழக்கு, மேற்கே முறையே நெய்தல், மருத நிலங்களையும் எல்லைகளாகக் கொண்டு பல துறைகளிலும் சிறந்து விளங்கும் பழம்பெரும் சைவப்பதியாம் காரைதீவு. இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே காரேறு மூதூர் என விளங்கிய தற்போதைய காரைதீவு சிறுசிறு காடுகளைக் கொண்டு விளங்கியது. கதிர்காம யாத்திரைக்குச் செல்லும் யாத்திரியர்கள் இவ்வூரில் தரித்து நின்று செல்வது வழக்கம் அவ்வாறே ஒரு முறை சேனாதிராஜனின் விதவை மகள் தேவந்தி அம்மையார் தனது ஒரே மகளான சின்ன நாச்சியாருடன் இலங்கை மன்னன் கஜபாகுவின் அழைப்பை ஏற்று கதிர்காம யாத்திரைக்கு வந்து கொண்டிருக்கும் போது உபசரிப்பிலும், விருந்தோம்பலிலும் சிறந்து விளங்கிய காராளர்கள் வாழும் காரைதீவை வந்தடைந்தனர். காராளர்களின் உபசரிப்பிலும், ஆதரவிலும் கவரப்பட்ட அம்மையாரும், மகளும் இவ்வூரை புகலிடமாகக் கொண்டு தற்பொழுது கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் குடிசையமைத்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் வரும்போது தாம்கொண்டுவந்த கண்ணகி விக்கிரகத்தை இற்றைக்கு 500 வருடங்கள் தாண்டி விருட்சமாகப் படர்ந்திருக்கும் வேம்புமரத்தினருகே சிறுகோயில் அமைத்து பூசைசெய்துவந்தனர்       ஒரு நாள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த வன்னிமை அரசன் தனது குடி மக்களையும் விளை நிலங்களையும் பார்வையிட்டுக் கொண்டு தனது மாளிகைக்கு (மாளிகைக்காடு) செல்லும் வழியில் தான் வந்து கொண்டிருந்த யானை நடக்க முடியாமல் கீழே விழுந்தது. செய்வதறியாது தவித்து நின்ற அரசனும், குடிமக்களும் கோயில் மணியோசை கேட்பதை உணர்ந்து அங்கு சென்று பரிகாரம் தேட விரும்பினர். அவர்கள் இக்கோயிலை வந்தடைந்து நடந்ததைக் கூறினர். தேவந்தி அம்மையார் கோயில் தீர்த்தம், வேப்பிலையில் அரைத்த குளிசை போன்றவற்றை யானைக்கு கொடுத்து கண்ணகியின் சக்தியால் யானையை எழுப்பி, அரசனின் பயணத்தைத் தொடர வைத்தார். இதனால் மகிழ்வுற்ற மன்னன் இதற்கு காணிக்கையாக கோயில் கட்டித்தருகின்றேன். அத்தோடு நீங்களும் இவ்விடத்தை விட்டு செல்லக்கூடாது என வேண்டினான். கோயில் கட்டி முடிந்ததும் அம்பாளுக்கு பொங்கல் பெருவிழா எடுப்பதற்கு தனது இருதுணைவிமாருடன் சிங்காரத்தோப்பு எனும் ஊரிலிருந்து வந்து கலந்து கொண்டான். அப்போது அம்மனுடைய திரை விலக்கப்படாது பூசைசெய்வதை விரும்பாத அரசனின் இரண்டாவது மனைவி சிறியபூங்கோதை கவலையை மன்னனிடம் முறையிட்டார். பின் திரைவிலக்கி பூசை நடைபெறும் போது சிலையை உற்றுப்பார்த்த அவருக்கு கண்ணொளி கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னன் காணிக்கையாக தனது காணிகளை இக்கோயிலுக்கு மானியமாக வழங்கினான் எழுதிக் கொடுத்தான். இக்காணிகளே “கண்கண் வெளி” என அழைக்கப்படுகின்றது.        தேவந்தி அம்மையாரின் மகள் சின்ன நாச்சியாருக்கு இவ்வூரில் உயர்குலத்தில் மணம் முடித்துக் கொடுத்து அவர்களுக்குப் பிறந்த பெண் மகவுகளான மாணிக்க நாச்சியார், கதிர நாச்சியார் வள்ளி நாச்சியார் ஆகிய மூவரினதும் பெண் சந்ததியினருக்கே இவ்வாலயமும், அதன் சொத்துக்களும் உரிமையாகக்கப்பட்டன.      இவ்வாறு கஐபாகு மன்னனால் வரவழைக்கப்பட்ட தேவந்தி அம்மையாரும் அவர் மகள் சின்னநாச்சியாராலும்காரைதீவில் கண்ணகி அம்மன் ஆலயம் அமைய அடித்தளம் இடப்பட்டது. பின்னர் சின்னநாச்சியாரின் மூன்று பெண்களாலும் அவர்கள் பெண் வழிச்சந்ததி யாராலும் இவ்வாலயக் கிரிகைகளும் விழாக்களும் நடாத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இதே ஆலயத்தின் தலவிருட்சமான வேம்புமரநிழலில் சுவாமி விபுலானந்தர் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது.அப்படங்களும் இறுதியாக பொறிக்கப்பட்டுள்ளன.
                                                                                               படங்கள் காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா
karaitivunews.comComments