[Untitled]‎ > ‎

21.10.14- தீபாவளி என்றால் என்ன?

posted Oct 20, 2014, 10:44 PM by Unknown user

தன் தாயாலேயே கொல்லப்பட்ட நரகாசுரன் இறந்த நாளான நரக சதுர்த்திதான் தீபாவளி. இவன் இறந்த நாளைத்தான் நாம்  சந்தோஷத்திருநாளான தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். 

மகன் நரகாசுரன் மறைந்தான் என்பது வருத்தத்தைத் தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல், மற்றவர்கள் சந்தோஷமாக பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் மண்மாதா. நாம் வருந்தினாலும் பிறரை வருந்தச் செய்யக்கூடாது சந்தோஷமாக சிரித்து மகிழ வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தை உருவாக்கும் பண்டிகை தீபாவளி. 

பொறுமையின் சிகரமான பூ மாதா நமக்கு உணர்த்திய பாடம்தான் தீபாவளியின் உட்பொருள். ஒரு சமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில் அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்த வன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது.

எல்லாருக்கும் பல தொல்லைகளைக் கொடுத்த நரகாசுரனை வதம் செய்ய எண்ணி திருமால் தேரில் வரும்போது, தன்னுடன் சத்யபாமாவையும் அழைத்து வந்தார். போரின் உச்சகட்டத்தில் திருமால் மயங்கியதுபோல் நடிக்க, சத்யபாமா அம்பெய்தி நரகாசுரனைக் கொன்றாள். 

அப்போது அவளுக்கு, பூர்வஜென்மத்தில் தான் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்தவனே இந்த நரகாசுரன் என்பதும்; அவன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே இறந்துவிட்டான் என்பதும் நினைவுக்கு வந்தது. அவன் இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்றும்; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் கலந்திருக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்றாள். அதைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். கங்கா ஸ்நானம் 

செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், நோய் ஏற்படாது. எனவேதான் அவள் அப்படி வரம் பெற்றாள். தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.

கண்ணபிரான் தன் சக்ராயுதத்தால் நரகாசுரன் கோட்டை கொத்தளங்களைப் பிளந்தபோது எழுந்த ஓசையை எதிரொலிப்பதற்காகவே வெடிச் சத்தத்துடன் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஐதிகம்.நரகாசுரனை வதம் செய்ய திருமால் புறப்பட்டபோது, அசுரர்கள் லட்சுமியைக் கவர்ந்து செல்ல கங்கணம் கட்டினர். லட்சுமி சூட்சும ரூபம் எடுத்து (மறை உரு) ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபத்தில் இணைந்தாள். அதனால் அன்றைய தினத்தில் தீபத்தையும் தைலத்தையும் லட்சுமி சொரூபமாய் கொண்டாடுகின்றனர். ஆக நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல. நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
Comments