[Untitled]‎ > ‎

25.08.16- இன்று கிருஷ்ண ஜெயந்தி விரதம்..

posted Aug 24, 2016, 6:10 PM by Habithas Nadaraja
சத்தியத்தை காப்பதற்காகவும், அதர்மத்தை அழித்து  தர்மத்தை நிலை நிறுத்துவதற்காககவும் மகா விஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமே கிருஷ்ணாவதாரம். அன்றை தினமே கிருஷ்ண ஜெயந்தியாக(கோகுலாஷ்டமி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி  நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு  வருகிறது.போர்க்களத்தில்  அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான  பகவத் கீதை.  கிருஷ்ணன்  நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூஜைகள் மாலை நேரத்தில்  நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று  கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூஜையறை வரை இடப்பட்டு கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப்  பொருட்களை செய்தும்  கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.இந்நாளில் விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனை தொட்டில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரை, விரதம் இருக்க வேண்டும். 

நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம் அல்லது மறுநாள் காலையில் தஹிகலாவை உட்கொண்டும் உபவாசத்தை முடிக்கலாம். தஹிகலா என்றால் பல தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தல், பாலும் வெண்ணெயும் கலப்பது என்பர். வரஜபூமியில் கோபியர்களோடு மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டுசாதத்தோடு தன்னுடையதையும் சேர்த்து உண்பான். இந்த பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் விதமாக தஹிகலா தயாரிப்பதும் தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன.மக்கள் ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என நினைத்து அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெய் விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். 

பசுக்களையும், கன்றுகளையும் மேய்க்கும் வரஜபூமியில் கிருஷ்ணன் தனது உணவுடன்  சகாக்கள் கொண்டு வந்திருக்கும் உணவு வகைகளையும் தயிருடன் ஒன்றாகக் கலந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். இந்நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையைத் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் உறியடித் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.தென் மாநிலங்களில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று  அழைக்கப்படுகிறது. தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கிருஷ்ணரின் செயல்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை போல் அவரைக் காட்டினாலும், செயல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளர்த்தமும், வாழ்க்கை உண்மைகளும் புதைந்து கிடக்கின்றன. இதை உணர்ந்தால், மனிதர்கள் வாழ்க்கையில் வெற்றிநடைப் பயிலலாம். 

அமைதியுடனும், மனித நேயத்துடனும் வாழ முடியும். மேலும் ஆனந்தம் என்பது பொருளிலோ, புகழிலோ இல்லை. மனதில்தான் இருக்கிறது. ஆனால், ஆனந்தத்தை அகத்தில் இருந்து தேடாமல் புறத்தில் இருந்து தேடுகிறோம். கிருஷ்ணரின் ஆனந்தம், அகத்தில் இருந்து வந்தது. அது புறத்தில் வெளிப்பட்டது. அக வாழ்க்கை இனித்தால், புற வாழ்க்கை இனிக்கும்.கேரளாவில் குருவாயூர் கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை  கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோயிலுக்கு ஒரு லட்சம்  அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.இத்திருநாளில் விரதம் இருந்து மனமுருகி கிருஷ்ணரை வேண்டுவோர் அனைத்து நற்பலன்களையும் பெறுவர் என்பது திண்ணம்.


கொண்டாடும் முறை

இவ்விழாக் கொண்டாட்டத்தின் போது விரதமுறை பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர்.

மாலை நேரத்தில் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் வாயிற்படி முதல் வழிபாட்டிடம் வரையிலும் மாவினைக் கொண்டு குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்படுகின்றன.

ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணையில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில் வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.

இவ்வாறு செய்வதால் குழந்தைக் கண்ணன் வாயிற்படி வழியே வந்து வழிபாட்டு அறையினுள் நுழைந்து தங்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

வழிபாட்டு அறையில் கிருஷ்ணருடைய உருவப்படமோ, சிலையோ இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணருக்குப் பிரியமான தட்டை, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள், பால், வெண்ணெய், திரட்டுப்பால் போன்றவை படைக்கப்படுகின்றன.

கிருஷ்ணர் முல்லை, மல்லிகை, துளசி ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்படுகிறார். விளக்கு ஏற்றப்பட்டு தீபதூபங்கள் காண்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பின் அருகிலிருப்போர் மற்றும் உறவினர்களுக்கு படையல்கள் வழங்கப்படுகின்றன.

வீட்டில் வழிபாடு முடிந்தபின் அருகிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்கின்றனர். கோவில்களில் நடுஇரவு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் அதனை நினைவு கூறும் விதமாக நள்ளிரவு வழிபாடு நடைபெறுகிறது. அதன்பின்னரே விரதம் இருப்போர் உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர். குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடங்கள் இட்டு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விரத முறையைப் பின்பற்றவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திகூர்மையான குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
Comments