[Untitled]‎ > ‎

ஆண்டாள், பத்மாதேவி அவதரித்த ஆடியின் சிறப்பு..

posted Jul 9, 2012, 1:14 AM by Web Team -A   [ updated Jul 9, 2012, 7:48 AM ]

சூரிய பகவான் தை மாதத்திலும் ஆடி மாதத்திலும் தன் ரதத்தை திசை மாற்றிச் செலுத்துகிறான். சூரியன் தை மாதத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் போது உத்தராயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. ஆடி மாதம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும்போது தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது.

இந்த ஆடி மாதப் புண்ணிய காலத்தில் புனித தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் விலகும் என்பர். எனினும் ஆடி மாதம் முதல் மூன்று நாட்கள் நீராடக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அந்த முதல் மூன்று நாட்கள் ‘நதி ரசஜ்வாலா’ எனப்படும் இந்த மூன்று நாட்கள் நதிகளுக்குரிய தீட்டு நாட்களாகும்.

ஜீவநதியான கங்கையில் எப்பொதும் நீர் ஓடிக் கொண்டிருப்பதால் ஆடி மாதம் புதிதாக நீர் வரும் வாய்ப்பு இல்லை. மற்ற ஆறுகளில் பழங்காலத்தில் ஆடி மாதத்தில் புது நீர் வரும். அந்த நீர் பெரும்பாலும் கலங்கலாகவும் அழுக்காவும் இருக்கும். எனவே ஆடி முதல் திகதியை ஒட்டி வரும் புதிய நீர் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் அந்தச் சமயத்தில் நதிகளில் குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது.

ஆனால், கடல், கோவில்களில் உள்ள புனிதக் குளங்களில் நீராடலாம். ஆடி மாதமானது பூமாதேவி அவதரித்த மாதமாகும். மேலும், ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதாரம் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. ஆடிப்பூர நட்சத்திரத்தில்தான், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் துளசி வனத்தில் கோதை ஆண்டாள் அவதரித்தாள்.

ஒவ்வொரு ஆடி மாத வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கு மிகச் சிறப்பான நாள். இந்த நாளில் அம்மனை வழிபடுவது குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்.

ஆடிப்பூரத்தில் தேவியார் பக்குவமடைந்ததாகப் புராணம் கூறுகிறது. அதனால் அன்று அம்மன் கோவில்களில் வளைகாப்பு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் அம்பாளுக்கு கண்ணாடி வளையல்களை சமர்ப்பித்து வழிபட்டால் சுமங்கலி பாக்கியம் நீடிக்கும்; கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

இந்த ஆடி மாதத்தில் சிகரமாகத் திகழ்வது ஆடித் தபசு விழா. தவமிருந்த அன்னைக்கு இறைவன் சங்கர - நாராயணராகக் காட்சி தந்த நாள் ஆடி பெளர்ணமி நாளாகும்.

ஆடி 18 அன்று காவேரி அன்னையை வழிபாடு செய்வார்கள். காவேரி அம்மனுக்கு இந்தச் சமயத்தில் மசக்கை ஏற்பட்டிருப்பதாக ஐதீகம். முருகப் பெருமானுக்கு ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை அன்று முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்துக் கோவில்களிலும் விழாக்கோலம் காணும். இதேபோல் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகிறது. இந்நாளில் நமது முன்னோர்களுக்கு புனித நீர் நிலையில் பிதுர்பூஜை செய்வதால் முன்னோர்களின் ஆசி கிட்டும்.

Comments