[Untitled]‎ > ‎

ஆடிப்பெருக்கு..

posted Aug 4, 2012, 9:04 AM by Web Team -A
தமிழ்மாதங்களில் ஒன்றான ‘ஆடி’ அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தது ஆடி மாதத்தில் என்பதால் இம் மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமத்திய ரேகைக்கு வடக்கில் பயணம் செய்து வந்த சூரியன் அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்திய ரேகைக்கு தெற்கில் தொடங்குகிறான். இக்காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில் தான்.

முற் காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதி தேவி, புன்னை வனத்தில் தவம் இருந்தார். அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணும் ஆடி மாத பெளர்ணமியன்று சங்கர நாராயணராக காட்சி அளித்தனர்.

அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன் கோவில் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொண்டார். அம்மன் தவம் இருந்து பலனை அடைந்ததால் இங்கு பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நலன் பெறுகின்றனர்.

பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என்று வரம் கொடுத்தார். காற்றும், மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடைபெறுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி கோவிலுக்கு சென்று கூழ்வார்த்து வழிபட்டு வருகின்றனர். ஆடிச் செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சளை பூசிக்குளி என்பது பழமொழி.

ஆடி மாத செவ்வாய் க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து அரைச்ச மஞ்சளை பூசி குளிப்பதால் சுமங்கலி பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை. ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.

அப்போது காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி காவிரி பெண் தனது கணவரான சமுத்திர ராஜனை அடை வதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரிக்கரையில் இருமருங்கிலும் வெள்ள பிராவகமாக செல்லும் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் நடந்தாய் வாழி காவிரி எனக் கூறி வாழ்த்துவார். கங்கையின் புனிதமாய் காவிரி நடுவிற்பாய என்கிறார் ஆழ்வார். காவிரி சோழநாட்டை வாழ்விக்க வந்த தாய் என்பார்கள்.

ஆடிப்பதினெட்டாம் நாள் காவிரி பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள். கணவனை சென்றடையும் காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகுமணிமாலை, வளையல், அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.

புதுமணத் தம்பதிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வர்.

தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று வழிபடுவர். பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலி கயிறை (மாங்கல்ய சரடு) அணிந்து கொள்வர். காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

"ஆடிச் செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சளை பூசிக்குளி"

Comments