[Untitled]‎ > ‎

அடியார் இடர் தீர்ப்பவள் கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்பாள்..

posted Jul 9, 2012, 1:18 AM by Web Team -A
 நம்பிக்கையுடன் வழிபடும் அடியார் இடர் தீர்ப்பவள் கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்பாள் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகருக்கு கிழக்குப் புறமாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவினுள் கோளாவில் 03 கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் அருள் வளமும், திருவளமும், பக்திப் பெருவளமும் கொண்டு செந்தமிழாட்சியும் நிறைந்திருக்கும் பழம்பெரும் பதியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அமைந்துள்ளது.

கிராமத்தின் கிழக்கே சிறுகளப்பு, சதுப்பு நிலத்தை எல்லையாகக், கொண்டு அருளாட்சி செய்யும் தெய்வமாக ஸ்ரீ முத்துமாரியம்மன் நூற்றாண்டு காலமாக அருள்பாலிக்கின்றாள்.

இத்தலத்தில் வம்சமரங்களும், தென்னை மரங்களும், வெண்மணலும், வங்கக் கடலில் இருந்து வீசும் தென்றல் காற்றும், குயில்கள் பாடும் ஓசையும் ஆலயத்திற்கு வரும் அடியார்களின் மனதைத் தொட்டுச் செல்லும்.

அம்பாள் ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகளிலும், விசேட காலங்களிலும் நிறைந்த பக்த அடியார்கள் வழிபாடு செய்து ஆத்ம திருப்தி அடைகின்றார்கள். மேலும், கதிர்காமக்கந்தனை தரிசிப்பதற்காக பாத யாத்திரை செல்லும் அடியார்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்பாளை வழிபாடு செய்து தங்கிச் செல்வது சிறப்பம்சமாகும்.

வழிபாட்டு முறை

கிழக்கு மாகாணத்தில் தொன்றுதொட்டு சக்தி வழிபாடு மிகச் சிறப்புடன் விளங்குகின்றது. பொதுவாக அம்பாள் ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறை ஒரே விதமாக அமைந்துள்ளன. ஆயினும், இவ்வாலயத்தில் அம்பாளுக்குரிய வழிபாடு கிரியை முறையிலும், பக்தாதி சடங்கு முறையிலும் பின்பற்றப்பட்டு வருவது வழக்கமாக காணப்படுகிறது.

திருவிழாக் காலங்களில், பூசைகளை நடாத்தும் அர்ச்சகரை பூசாரி எனவும், உதவியாளர்கள் கட்டாடிமார்கள் எனவும் அழைக்கப்படுவர். வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் அம்மன் கருவறைக் கதவு திறக்கப்படுவதால் ஆண்டு உற்சவம் என்று அழைக்கப்படுகின்றது.

பூசைப் பொருட்களாக தாமரை மலர்கள், மாலைகள், திருநீறு, சந்தனம், குங்குமம், மஞ்சள், வெற்றிலை, பாக்கு, பழ வகை, வேப்பிலை, கற்பூரம், ஊதுபத்தி, நல்லெண்ணெய், தேன், வாசனைப் பொருட்கள் என்பன மிக முக்கியமானவை. பூசை செய்வதற்கு முன்னர் கருவறையில் உள்ள அம்பாளை நீராட்டுவர்.

பின்னர் கருவறையில் எண்ணெய் விளக்கு ஏற்றப்படும். அதேபோன்று மற்ற பரிவாரக் கடவுள்களுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். அம்பாளுக்கு சிவப்பு நிறப்பட்டும், தங்க ஆபரணங்களும் அணிவிக்கப்படும். அம்பாளுக்கு அமுது, பொங்கல் படைத்து மலர்மாலை அணிவித்து, திரைச்சீலை அகற்றப்பட்டதும் சங்கு, மணி ஒலி, உடுக்கை, முழங்க அடியார்கள் அரோகரா, ஓம்சக்தி என்று சொல்லிக் கொண்டு மிக விருப்பத்துடன் அம்பாளை வழிபாடு செய்வர்.

திருவிழாக் காலங்களில் நான்கு தினங்கள் அம்பாள் உள்வீதி பவனி வருதலும் ஒருநாளில் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி வெளிவீதி உலா வருதல் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது. இந்நிகழ்வில் வீதிகள் தோறும் அலங்கரிக்கப்பட்டு நிறைகுடம் கும்பங்கள் வைத்து அடியார்கள் வழிபாடு செய்வர். மேலும் உற்சவ காலங்களில் அடியார்கள் பயபக்தியுடன் முள் காவடி எடுத்தல், அலகு போடுதல், அங்கப் பிரதட்சணம் செய்தல், கற்பூர சட்டி எடுத்தல், கரகமாடுதல், மண்டியிட்டு மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல், நேர்த்திக்கடன்கள் செலுத்துதல் போன்ற வழிபாடுகளை மேற்கொள்வர்.

திருப்பள்ளையம், திருக்குளிர்த்தி நடைபெறும் நாளில் பட்டாடை உடுத்தி ஆபரணங்கள் அணிவித்த அழகிய சிறுமிகள் ஏழு பேரும் அம்பாளின் தோழிகளாக ஏற்று வழிபாடு செய்து அவர்களுக்கு பூசை நைவேத்தியங்கள் கொடுத்து வழியனுப்பிய பின்னரே அடியார்களுக்கு பொங்கல் பிரசாதங்கள் வழங்குவது வழக்கமாகக் கொள்ளப்படும். இவ்வாண்டு உற்சவமானது கடந்த 4 ஆம் திகதி 9 ஆம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.

ஆலய வரலாறு

நூற்றாண்டு காலங்களுக்கு முன் இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயம், சேனைப் பயிர், கால்நடை வளர்ப்பு ஆகிய தொழில்களைச் செய்து வந்தனர். அக்காலத்தில் மாரிமழை பெய்யவில்லை வரட்சி ஏற்பட்டது. விவசாயம், சேனைப் பயிர் செய்கை பாதிக்கப்பட்டது. மக்கள் பட்டினியால் வாடினர்.

அம்மன் நோய், கண்நோய் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். இது மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது ஊர்ப்பெரியார் ஒருவரின் கனவில் அம்பாள் தோன்றி மாரியம்மனுக்கு பூசை வழிபாடு செய்து வர ஊருக்கு நன்மை உண்டாகும் எனச் சொல்லியதை அப்பெரியார் மக்களை ஒன்று கூட்டி தான் கனவில் கண்டதை சொன்னார்.

அதன்படி மக்கள் எலோரும் ஒன்றுகூடி அம்பாளுக்கு கோதாரிக்கும்பம், வைத்து சடங்கு செய்வதென தீர்மானித்து பந்தல் நட்டு வேப்பிலைகள் கட்டி அலங்காரம் செய்து அம்பாளை பய பக்தியுடன் கும்ப வழிபாடு செய்தனர். அப்போது மழை பெய்தது. நோய்கள் அற்றுப் போனது, கிராமம் செழிப்படைந்தது. அன்று முதல் மழைத் தெய்வமாகவும், ஆரோக்கிய வாழ்வுக்கு சக்தி கொடுப்பவளாகவும் பல அற்புதங்களைச் செய்து அருள் மழை புரிபவளாகவும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கொண்டு அருளாட்சி செய்கின்றாள்.

Comments