[Untitled]‎ > ‎

சைவத் திருமுறைகளின் பெருமை ~பஞ்சபுராண தோத்திரத் திரட்டு

posted Mar 28, 2012, 9:21 PM by Web Admin

சைவத் திருமுறைகள், சைவ சமயத்தின் அடிப்படைப் பிரமாண நூல்கள். திருமுறை என்பது சைவத்தின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் பெருமையைப் போற்றியும் வாழ்த்தியும்; ஏத்தி ஏத்தித் தொழுதும் நாயன்மார்களினால் பாடப் பெற்ற அருட் பாடல்களை உள்ளடக்கிய திருநூல்களின் தொகுப்பு ஆகும். திருமுறைகளின் தொகை பன்னிரண்டு.

இவற்றை மனம், மொழி, மெய்த்தூய்மையுடன், காதலித்து மெய்யன்போடு ஓதி வருபவர்களின் இவ்வுலக வாழ்க்கை, நன்னெறியில் அமைவதோடு; அமைதியும் இன்பமும், சீரும் சிறப்பும் பெற்றுத் திகழும் என்பது முடிந்த முடிவு ஆகும். அத்துடன் மனிதப் பிறவியின் இறுதி இலக்கு ஆகிய முத்தியின்பமும் கைகூடும் என்பது உறுதி.

பன்னிரு திருமுறைகள் தெய்வத்தன்மை பொருந்தியவை. அவற்றை அருளிச் செய்தவர்களும் திருவருட் செல்வர்கள். வேதம் வடமொழியில் உள்ளது; இறைவனால் அருளப்பெற்றது.

திருமுறைகள் தமிழ் வேதம்; இறைவன் தமது அடியார்கள் வாயிலாக அருளியவை. அவற்றுள் முதல் மூன்று தொகுதிகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களும்; அடுத்து வருகின்ற மூன்று தொகுதிகளிலும் திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரத் திருப் பாடல்களும்; ஏழாவது தொகுதியில் சுந்தரரின் தேவாரப் பதிகங்களும் இடம்பெற்றுள்ளன.

எட்டாந் திருமுறையில் மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் வைக்கப்பட்டுள்ளன. திருவிசைப்பா, திருப்பல்லாண்டுப் பாடல்களை ஒன்பது பேர் அருளிச் செய்துள்ளனர்.

அவை ஒன்பதாந் திருமுறையில் உள்ளடக்கப் பெற்றுள்ளன. பத்தாந் திருமுறையாக விளங்குவது திருமூலரால் அருளப்பெற்ற திருமந்திரம் என்னும் தோத்திர, சாத்திர நூல். பதினொராந் திருமுறையில் நாற்பது நூல்கள் அடங்குகின்றன. அவற்றை அருளியவர்கள் பன்னிருவர். அவை பிரபந்தங்கள் வகையை சேர்ந்தவை. சேக்கிழார் இயற்றிய திருத் தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம் பன்னிரண்டாந் திருமுறையாகும்.

}
கலாநிதி குமாரசுவாமி சோமசுந்தரம்

இறைவனை அடைவதற்கு நான்கு வழிகள் உள்ளன என்றும் அவை முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நெறிகள் என்றும் திருமுறைகள் எடுத்துரைக்கின்றன. வையத்துள் மனிதர்கள் வாழ்வாங்கு வாழவும், நல்ல வண்ணம் வாழவும்; இறையுணர்வு பெறவும்; அறம், பொருள், இன்பம், வீடு என்னும் மனித வாழ்க்கைப் பயன்களை அடையவும் அவர்களுக்கு உறுதுணையாக விளங்குபவை திருமுறைகள் ஆகும்.

குறிக்கோள்களை வகுக்கவும்; அவற்றை அடைவதற்கான வழிமுறைகள், செயன்முறைகள் என்பவற்றை நீதி வழுவா நெறிமுறையில் அமைத்துக் கொள்ளவும்; ஆன்மிக, ஒழுக்க விழுமியங்களை உணர்த்தவும்; புன்னெறியதனிற் செல்லும் போக்கினை மாற்றி, மேலாம் நன்னெறியதனில் வாழ்க்கையை இட்டுச் செல்ல வழிப்படுத்தியும், திருமுறைகள் மனிதர்களுக்கு உதவுகின்ற வகையில், வாழ்வியல் நூல்களாக அவை விளங்குகின்றன.

ஆன்மிகமும் உலகியலும் ஒன்றிற்கொன்று முரணானவை அல்ல; அவை ஒன்றுடன் ஒன்று இணைய வேண்டியவை; இணையக் கூடியவை; அதுவே சைவநீதி என உணர்த்துகிறது சைவ நெறி. அவை இரண்டின் இணைப்பின் பயனாகவே தனிமனித அமைதி, சமூக அமைதி, உலக அமைதி என்பன ஏற்பட வழி பிறக்கும். திருமுறைகளின் மகிமையும் வலிமையும் சொல்லில் அடங்காதவை.

‘திருமுறையே சைவநெறிக் கருவூலம்; தென் தமிழின் தேன்பாகு,’ என்கிறது சிதம்பர தலத்துத் தனிப்பாடல் ஒன்று.


சைவப் புலவர் சு. செல்லத்துரை

சிவனுக்குத் திருமுறைத் தமிழ்ப் பாமாலைகளைப் புனைந்து ஏத்தி வழிபட்டே நாயன்மார்கள் கற்பனைக்கும் எட்டாத அற்புதங்களை நிகழ்த்தினர். அத்துணை நலமும் முத்தியும் பெற்றனர்.

மனிதரை மனிதத் தன்மைகள், பண்புகளுடனான மனிதர் ஆக்கும் வலுவும் திறனும் திருமுறைகளுக்கு உண்டு. திருமுறைகளைப் புறக்கணித்தவர், சீராக வாழ மறுப்பவர் ஆகின்றார். இன்றைய மனிதர்கள் அனுபவிக்கும் உடல், உள ரீதியான வலியும், பெற்றுக் கொண்ட வடுக்களும், திருமுறைகளையும் அவை காட்டும் வாழ்க்கை அறங்களையும் முற்றிலாகக் கைவிட்டமையால் ஏற்பட்ட விளைவுகளே என்பதைக் காலங்கடந்த நிலையிலாவது நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

‘வரைவிலா நலமே தருகின்ற திருமுறைகளின்

பெருமை போற்றிப் பேணாமையே

தமிழரெனச் சைவரெனப் பேர் சொல்லிப்

பேதையராய் வாழ்கின்ற தாழ்வுக்கும் அழிவுக்கும்

அறியாமைத் திமிருக்கும்

பெரிதான காரணமாகும்’ என்னும் ‘சாமிஜி’ அவர்களின் கவிதைக்கூற்று சிந்தனைக்குரியது. எனவே, கோயில்களிலும், இல்லங்களிலும், பாடசாலைகளிலும் மற்றும் பொதுப்பணி மன்றங்களிலும் பூசை ஆராதனைகளிலும், பிரார்த்தனைகளிலும் திருமுறைகளை மெய்யன்போடு பாராயணம் பண்ணிவர, பக்தி தளைக்கும் அதன் பயனாக, வந்த கொடு வினையும் அவற்றால் ஏற்படும் துன்பங்கள், துயர்கள், அழிவுகள், அனர்த்தங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது உறுதி.

‘முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப், பத்திநெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்’ செய்த இறைவனைத் துதித்துத் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகப் பெருமான் மேற்படி கூற்றை உறுதி செய்துள்ளார்.

திருமுறைப் பாடல்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்தமை பற்றிச் சமயகுரவர் வரலாறு கூறுவதைப் பெரிய புராணத்தில் காணலாம். திருமுறைகளை ஓதினார்க்கு நோய் நீக்கம், அகால மரண நீக்கம், செல்வப் பெருக்கம், ஞானப் பெருக்கம், உடல் நலம், மன நலம், நீளாயுள், உயிர் நலம், வாழ்க்கை வளங்கள், அறிவு நலம், ஒழுக்க மேன்மை, உயர் புகழ் அனைத்தும் கிடைக்கப் பெற்றுள்ளமைக்குச் சான்றுகள் உண்டு. திருமுறைகளை ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்றும்; அவற்றை ஓதாத நாட்களும் அவை பற்றிப்பேசாத நாட்களும் நாம் பிறவாத நாட்களேயாகும் என்றும் அருளாளர்கள் கூறியுள்ளனர்.

தேவார, திருவாசகம் முதலிய திருமுறைகள், பஞ்சாட்சர மந்திரத்தையும் சகல மந்திரப் பொருள்களையும் உள்ளடக்கி நின்று சித்தியும் முத்தியும் அருளும் மகாமந்திர வடிவமாக உள்ளமையினால், திருமுறைகளில் சிவபெருமானின் விளக்கம் நித்தியமானது என்பது அறிஞர் முடிபு. எனவே, திருமுறைகளும், வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியவையாகும். தேவாரம் முதலிய திருமுறைகள் ஆன்மாக்களுக்குப் பிறவிப் பிணி தீர்த்து முத்தியைக் கொடுக்க வல்லன.

தேவாரம் முதலிய திருமுறைப் பாடல்களைப் பாடும் போது, பண்ணோடு இசைக்க வேண்டியது இன்றியமையாதது. ‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்பது அப்பர் வாக்கு. தமிழ் மறையாகிய தேவாரப் பதிகங்களை ஓதுபவர்கள் பெறும் பலன்கள் அவ்வப் பதிகங்களினிடத்தே உரைத்து அருளப்பட்டுள்ளன.

பஞ்ச புராணம் என்பதில் முதல் ஏழு திருமுறை களில் உள்ள தேவாரம்; எட்டாந் திருமுறையிலுள்ள திருவிசைப்பா, திருப்பல்லாண்டு; மற்றும் பன்னிரண்டாந் திருமுறையான பெரிய புராணம் எனும் இவ்வைந்தினுமுள்ள ஐந்து தோத்திரங்கள், வரிசைக் கிரமத்தில் இடம்பெறும். பஞ்ச தோத்திரம் எனவும் அழைப்பர்.

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்பவற்றிற்கு மட்டுமே பண் வகுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிவம் (அன்பு) பெருக்கி; சிந்தனையைச், சொல்லை, செயலைத் தூய்மை செய்து; அதனால் ஏற்றமுற்ற வளமான வாழ்வு அமைய; அல்லல்கள், அவலங்கள், பேதங்கள், வேற்றுமைகள் அமைதியின்மை, அந்தரங்கள், பரபரப்பு, ஏக்கங்கள், வேகம் வெறுப்புணர்வு, சந்தேக விபரீதங்கள் அனைத்தும் அடியோடு நீங்கி விடும். அமைதி, பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, மனித நேயம், ஆனந்தம், ஐக்கியம், நல்லறுவு, மகிழ்ச்சி என்பன மலர்ச்சி பெறும். திருமுறைகளை நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பு.

மானுடத்தின் உயிர் நாடி, மெய்யியல் கருவூலம், பக்திப் பெருவெள்ளம், ஆன்மிக விழுமியங்களின் ஊற்றுக்கண் எனத் திகழும் சைவத் திருமுறைகள், எமது சொந்த முதுசொத்துக்கள். ‘நல்லதோர் வீணை செய்தே, அதைப் புழுதியில் நலங்கெட விடலாமா?’ - ஆகாது.

தேமருத் திருமுறைத் தமிழோசை உலகமெலாம் பரவும் வழி செய்ய வேண்டும். திருமுறைகளை ஓதுதல், ஓதுவித்தல், பரப்புதல், அதன் புகழ் பேசுதல், திருமுறை – பஞ்ச புராண தோத்திரத் திரட்டு நூல்களை அச்சேற்றி வெளியிடுதல், பாடிப்பரவ ஊக்குவித்தல், பஞ்ச புராண தோத்திர நூல்களைத் தானமாக வறிய பிள்ளைகளுக்கு வழங்குதல் என்பன புண்ணியச் செயல்கள் ஆகும்.

அந்த வகையில், லேக் ஹவுஸ் இந்து மன்றம் அதன் கன்னி முயற்சியாக, ‘பஞ்ச புராண தோத்திரத் திரட்டு’ எனும் திருநூலை வெளியிட்டுள்ளது. அதனால் புண்ணியம் சேர்த்துள்ளது. இது சிறந்த சிவதொண்டும் ஆகும். ‘தவமும் தவமுடையோர்க்காகும்’ என்பது போலத் தொண்டு செய்வதற்கும், புண்ணியம் வேண்டும். இத்திருநூலின் சிறப்பு என்னவெனில், திருமுறைப் பாசுரங்கள் அனைத்திற்கும், யாவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய எளிய, இனிய தமிழில் விளக்கவுரை பொழிப்பாகத் தந்துள்ளமை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும். ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்

பல்லோரும் ஏத்தப்பணிந்து’

என்பது மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாக்கு.

சொற்குற்றம், பொருட் குற்றம், இலக்கணக் குற்றம் நேராது திருப்பாடல்கள் ஓதப்பட வேண்டும். அதற்குப் பாட்டின் பொருள் உணர்ந்திருத்தல் அவசியமாகும். ‘பஞ்ச புராண தோத்திரத் திரட்டு’ எனும் இந்நூலின் தொகுப்பாசியரும் உரையாசியரும் ஆக விளங்குபவர் கலாபூஷணம், சைவப் புலவர் சு. செல்லத்துரை ஆவார். அவர் தம் பணியைப் போற்றுதற்குரிய வகையில் செய்துள்ளமை பாராட்டக்குரியது.

இந்நூலை அச்சேற்றி வெளியிட்ட லேக்ஹவுஸ் இந்து மன்றத்தினர் - தலைவர், செயலாளர், பொருளாளர், குறிப்பாக சிவப்பணியொன் மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் செய்துள்ளனர். பாராட்டுக்கும் போற்றுதற்கும் உரியவர்கள்.

நன்றி:- கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்

Comments