பார்வதி தேவி ஒரு தடவை விளையாட்டாக ஓவியம் ஒன்று வரைந்தாள். அது மிகவும் அழகாக இருந்தது. உடனே பார்வதிதேவியின் தோழியர்கள் இதற்கு உயிர் கொடுங்கள் என்று வேண்டினர். அன்னை உமையாளும் தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.
அந்தச் சமயத்தில் மரணத்திற்குப் பிறகு உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை ஆராய்ந்து சொல்ல, தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று எமலோகத்தின் அதிபதியான எமதர்மராஜன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவனும் சித்ரா குப்தனை எமனின் உதவியாளனாக உயிர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் பொறுப்பை ஒப்படைத்தார். ஒவ்வொரு சித்ரா பெளர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ரா குப்தனால் எழுதப்படுகிறது. எனவே சித்திரை பெளர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சித்ரா பெளர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து சித்ரா குப்தாய என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மாலையில் பெளர்ணமி நிலவு உதயமானதும் சித்ரா குப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும். பிறகு ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். பேனா, பென்சில், நோட்டு இவற்றைப் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். பயத்தம் பருப்பு, எருமைப் பாலும் கலந்த பாயாசத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். பின் உப்பு சேர்க்காமல் ஆகாரம் உண்டு விரதமிருந்தால் சித்ரா குப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணிய கணக்கை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரகவேதனையிலிருந்து விலகி இறைவன் வாசம் செய்யும் சொர்க்கத்தில் வாழலாம் என்பது நம்பிக்கை. |
[Untitled] >