[Untitled]‎ > ‎

இந்துக்களும் பெளத்தர்களும் புனிதமாக போற்றும் வெசாக் பண்டிகை...

posted May 5, 2012, 1:01 AM by Web Admin

ஒவ்வொரு வருடமும் மே மாதம் பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் (மொழி பேதமின்றி) சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். இப் பண்டிகை (05.05.2012) இன்று கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால் இத் தினம், அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக கருதுகின்றனர். தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரத நாளாகவும், சித்திர குப்தனார் தினமாகவும் ‘சித்திரா பெளர்ணமி’ தினம் அமைவதால், இந்நாள் இந்துக்களுக்கும், பெளத்தர்களுக்கும் ஒரு புண்ணிய நாளாக அமைகின்றது எனலாம்.

இந்நாளில் புத்தபெருமானின் வாழக்கை வரலாற்றை முன்னிறுத்தி பலவித சமய நிகழவுகள் இடம்பெறும். இக்காலப் பகுதியில் தண்ணீர்ப் பந்தல்கள், அன்னதான உணவு வழங்கும் பந்தல்கள், தோரணங்கள், வெளிச்சக் கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.

இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களைக் கொண்ட நாளாக பெளத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.

சித்தார்த்தர் எனும் கெளதம புத்தர் லும்பினி (நேபாள்) என்னுமிடத்தில் அவதரித்த நாளாகவும்,

புத்தகயா எனும் இடத்தில் அவர் தவம் புரிந்து புத்த நிலை (ஞானம்) அடைந்த நாளாகவும்.

புத்தரபிரான் பரிநிர்மாணம் அடைந்த நாளாகவும் இன்றைய நாள் அமைந்து நிற்கின்றது.

இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாக பெளத்தர்கள் நம்புகின்றனர்.

நேபாளத்தின் லும்பினி என்ற இடத்தில் கி. மு. 560 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சுத்தோதன மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் சித்தார்த்தர். இளமைக் காலத்தின் சுகபோகங்களை அனுபவிக்கும் தனது 29 ஆவது வயதில் வாழ்க்கையில் மூன்று முக்கிய தத்துவங்களான மூப்பு, பிணி, மரணம் ஆகியவற்றை நேரில் கண்டார். இச்சம்பவத்தின் பின் இம்மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து நிலையான மெய்ஞ்ஞானத்தைத் தேடி முற்றும் துறந்த துறவியாக மாறி ‘கெளதம புத்தர்’ என்ற பெயரைப் பெற்றார் இளவரசராகிய சித்தார்த்தர்.

தான் மரணிக்கும் வரைக்கும் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து பொருளுக்கும் போகத்திற்கும் போராடும் மாந்தர்களுக்கு வாழ்வின் உண்மையான அர்த்தங்களைப் போதித்து வந்தவர் புத்த பிரான்.

வாழ்வில் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு முதன்மைக் காரணம் மெய்ப்பொருள் பற்றிய அறிவின்மை. நிரந்தரமாற்ற சிற்றின்பங்களின் மீதான பற்றே அறியாமை உருவாக வழிசமைக்கின்றது. அகிம்சையைப் பின்பற்றும் தியான வழிமுறை ஊடாக மன அமைதியையும் தெளிவையும் பெறுவதன் மூலம் அறியாமை இருள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வை வாழமுடியும் என்பதை கெளதம புத்தரின் போதனைகள் வலியுறுத்துகின்றன.

வெசாக் பண்டிகை பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் ஒரு வார காலத்திற்கு மேலாக அனுஷ்டிக்கப்படுகின்றது. நாடு தழுவிய ரீதியில் மத நிகழ்வுகள் இடம்பெறும். இக்காலப் பகுதியில் மக்கள் கேளிக்கை கொண்டாட்டங்களைத் தவிர்த்து அமைதி, தியானம், வழிபாடு ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

போதி மாதவனின் போதனைகளை நினைவுறுத்தும் வெசாக் வெளிச்சக் கூடுகள் எங்கும் காணப்படுகின்றன.

வெசாக் என்றால் எல்லோர் மனதிலும் தோன்றுவது காற்றில் மிதக்கும் வண்ண வண்ண வெளிச்சக் கூடுகள்தான் பெளத்த மதத்தவர்கள் மட்டுமன்றி அனைவருமே வெசாக் அலங்காரங்கள் மேற்கொள்வதை ஒரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

இல்லங்கள், வீதிகள், பொதுவிடங்கள் மற்றும் நகரின் மையப்பகுதிகளில் கலைநயம் மிகுந்த வெசாக் வெளிச்சக் கூடுகள் எண்ணெய் விளக்குகளாலும் மின் குமிழ்களாலும் ஒளியூட்டப்பட்டு உயரமாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் நாடே விழாக் கோலம் பூண்டிருப்பது போன்ற உற்சாக உணர்வு அனைத்து மக்கள் மனதிலும் ஊற்றெடுக்கும்.

எளிமையான எண்கோணத்தில் அமைந்த வெசாக் கூடுகள் முதல் வியக்க வைக்கும் நுட்பமான கலைப்படைப்புகள் அனைத்தும் ஒளி வெள்ளத்தில் மிதப்பதைப் பார்க்கும் பொழுது எம் மனது உவகையில் பூரிப்பதை உணரலாம். பல வர்ணக் கடதாசிகளாலும் மூங்கில் பிரம்பு, தென்னம் ஈர்க்கு, சரட்டை முதுலான தென்னை மரத்தின் பாகங்களைக் கொண்டும் மெல்லிய உலோகப் பொருட்களைக் கொண்டும் மிகவும் பிரமாண்டமான வெசாக் கூடுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வெளிச்சக் கூடுகள் பெரும்பாலும் பெளத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு மலர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வடிவங்களில் அமைந்திருப்பதனால் பார்வையாளர்களை அதிகளவில் கவர்கின்றன.

மெய்ஞ்ஞானத்தை அடைந்த மனிதனின் வாழ்வில் அறியாமை இருள் நீங்கி நிலையான மகிழ்ச்சியும் அமைதியும் குடியிருக்கும் என்ற பெளத்த மதத்தின் தத்துவத்தை வெசாக் வெளிச்சக் கூடுகள் எடுத்துக் கூறுகின்றன.

வெசாக் கூடுகளைப் போன்று மக்களின் ரசனைக்கு விருந்தாகக் காணப்படுபவை பிரதான சந்திகளில் வைக்கப்பட்டிருக்கும் வானுயர்ந்த மாபெரும் வெசாக் பந்தல்கள்.

கண்களைக் கொள்ளை கொள்ளும் வர்ண ஜாலமும் பிரமாண்டத் தன்மையும் மக்களிடம் இவை அதிக வரவேற்பைப் பெறுவதற்குக் காரணமாகின்றன.

பிரமாண்டமான வெசாக் கூடுகளைத் தயாரிப்பதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி விடுகின்றனர். சிறந்த அலங்காரத்தை உருவாக்குவதற்காக இவர்கள் காட்டும் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பாராட்டுதற்குரியது. இதற்கப்பால், மக்களின் கலாரசனையைக் கட்டியெழுப்பும் நிகழ்வாகவும் அமைகின்றன.

ஒவ்வொரு வருடத்திலும் முன்னைய வருடத்தை விடவும் பல புதிய, மேம்பட்ட கலைப்படைப்புகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தயாராகின்றன. மக்களுக்குப் புத்த பகவானின் உன்னத பண்புகளையும் அவரின் போதனைகளையும் நினைவுறுத்துவதை முதன்மை நோக்காகக் கொண்டவை. வெசாக் அலங்காரங்கள், அனைத்து இன மக்களும் பெளத்த மதத்தின் பெருமையையும் வரலாறையும் எளிமையான வடிவில் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இது உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் உண்மையான ஆன்மிகத் தேடல் உடையவர்கள் கண்களில் ஒவ்வொரு வெசாக் வெளிச்சக் கூடும் பரிநிர்வாணமடைந்த ஒரு போதி மாதவனை மனக்கண் முன்கொண்டு வருகின்றது. வண்ண மயமான வெசாக் கூடுகளைப் பார்த்து மகிழ்ந்த பின் அன்றிரவு தனது இல்லம் திரும்பும் ஒவ்வொரு பக்தனும் மன இறுக்கம் தளர்ந்து தெளிவான சிந்தையுடன் செல்கின்றான்.

Comments