[Untitled]‎ > ‎

கன்னிகா பரமேஸ்வரி

posted May 6, 2012, 11:21 PM by Web Admin

கன்னிகா பரமேஸ்வரி  ஆரிய வைசியர்களின் குலதெய்வமாக விளங்குகிறாள். இந்த அம்மனின் அவதார நன்னாள் வைகாசி தசமி. கயிலையில் பார்வதியும் பரமேஸ்வரனும் வஜ்ர, வைடூரிய, கோமேதக, நவரத்தினங்களால் உருவான தங்கமயமான மாளிகையில் ஆனந்தமாக இருந்து ஆன்மாக்களை ரட்சித்து வரும் வேளையில், மகேஸ்வரனின் பிரமோத கணங்களின் தலைவனான நந்திகேஸ்வரன் கங்கையில் நீராடப் புறப்பட்டார். அருகிலிருந்த சமாதி முனிவரிடம், தான் வரும்வரை கயிலை வாயிலைக் காவல் புரியுமாறும்; யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார்.

அப்போது பார்வதி – பரமேஸ்வரனை தரிசிக்க துர்வாச முனி அங்கு வந்தார். காவல் நின்ற சமாதி முனி வரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபமடைந்த துர்வாசர் சமாதி மகரிஷியை மானுடனாகப் பிறக்கும்படி சாபமிட்டார். (அதன்படி ரிஷி பெனுகொண்டா நகர மன்னன் குஸ¤மரேஷ்டியாகப் பிறந்து ஆண்டு வந்தார்.)

கங்கையில் நீராடித் திரும்பிய நந்தி பரமேஸ்வரன் காலில் விழுந்து வணங்கினார். இதைப்பார்த்த பார்வதி, நந்தி தன்னை அலட்சியம் செய்துவிட்டதாக நினைத்து கோபம் கொண்டாள். உடனே நந்தியைப் பார்த்து, ‘நீ பூவுலகில் மானுடனாகப் பிறப்பாய்’ என சாபமிட்டாள்.

எந்தத் தவறும் செய்யாத தனக்கு இப்படி ஒரு சாபமா என எண்ணி வருந்திய நந்தி, சிவபெருமானிடம் தானும் சாபம் தர வரம் கேட்டுப் பெற்றார். பின்னர் பார்வதியைப் பார்த்து, ‘தேவி தாங்கள் பூவுலகில் பெண்ணாக அவதரித்து, கடைசிவரை கன்னியாகவே இருந்து அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைவீர்கள்’ என சாபமிட்டார் நந்தி.

பெனுகொண்டா மன்னர் குஸ¤மரேஷ்டி (சமாதி முனிவர்) புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அதனால் அவர் மனைவி குஸ¤மாம்பிகைக்கு பார்வதியும் நந்தியும் இரட்டைப் பிள்ளைகளாக அவதரித்தனர். ஆண் குழந்தைக்கு (நந்தி) விருபாக்ஷன் என்று பெயர் பெண் குழந்தைக்கு (பார்வதி) வாசவாம்பாள் என்று பெயர். இவர்கள் இருவரும் சீரும் சிறப்புமாக வளர்ந்தனர். குரு பாஸ்கராச்சாரியரே வியப்படையும்படி சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர். வளர்ந்து பருவம் அடைந்தனர்.

முன்னமேயே சமாதி முனிவரிடம் சாபம் பெற்ற கந்தர்வன் விஷ்ணுவர்த்தன் என்ற பெயரில் பக்கத்து நாட்டை ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் பெனுகொண்டா வந்து குஸ¤மரேஷ்டி மன்னன் அரண்மனையில் தங்கியபோது அழகிய கன்னியான வாசவியைக் கண்டான். அவளிடம் மனதைப் பறிகொடுத்த அவன் திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டான்.

குஸ¤மரேஷ்டி வைசிய தர்மப்படி மன்னனுக்கு பெண் தர இயலாமையை எடுத்துக் கூறினார். கோபமடைந்த விஷ்ணுவர்தன் வன்முறையைக் கையாள முயல, பயந்த மன்னன் தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் சொல்வதாகக் கூறி சமாதானப்படுத்தி அனுப்பினார்.

18 நகரங்களிலிருந்து 714 கோத்திரத்தார் மன்னர் அழைப்பினால் வந்து சேர்ந்தனர். நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடினர். பிரச்சினையைப் பற்றி ஆலோசித்தனர். பலர் உடன்பட்டனர். சிலர் உடன்படவில்லை. 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்றனர். 102 கோத்திரக்காரர்கள் கொடுக்க வேண்டாம் என்றனர். அதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் (இவர்களை பெனு கொண்டாவில் நெய் செட்டு (நெய் செட்டி) என்று அழைப்பர்) நாட்டை விட்டு வெளியேறினர்.

இவ்வளவு குழப்பமும் தன்னால் வந்ததுதானே என எண்ணிய வாசவி இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள். அவள் கட்டளைப்படி நகரேஸ்வரர் ஆலயத்தின் முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டது. அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள்.

அவளுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டுவிட்டு அக்னிப் பிரவேசம் செய்து கயிலை அடைந்தனர். (இவர்களை எண்ணெய் செட்டு (எண்ணெய் செட்டி (என பெனுகொண்டாவில் அழைப்பார்கள்.) மேற்படி செய்திகளைக் கேள்விப்பட்ட உடனேயே விஷ்ணுவர்த்தனின் தலை சுக்குநூறாக வெடித்தது. அவன் அழிந்தான்.

அவன் மகன் ராஜராஜேந்திரன் தன் தந்தை தவறு செய்ததால் இப்படி இறந்துவிட்டாரே என வருந்தினான். பிராயச்சித்தமாக தன் அரசு முழுவதையும் வைசியர்களுக்கு காணிக்கையாக்கிவிட்டு மன்னிப்பும் கேட்டான். அவர்கள் அவன் ராஜ்ஜியத்தை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தினின்று அம்பிகையாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின் தன்னுடன் அக்னிப் பிரவேசம் செய்த நல்லவர்களை வாழ்த்தினாள்.

‘இன்று முதல் நீங்கள் (102 கோத்திரக்காரர்கள்) பொன், புகழ், கல்வி உள்ளிட்ட சம்பத்துக்கள் அனைத்தையும் பெற்று குறைவின்றி வாழுங்கள்’ என வரமளித்தாள். அதன்படி வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்கள், ஆண்டு தோறும் தங்கள் குலதெய்வமான வாசவியின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் அதிவிமர்சையாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பெனுகொண்டாவில் ஆயிரம் கால் மண்டபம்போல் அமைந்த தூண்களில், அம்மனுடன் ஐக்கியமான 102 கோத்திரத்தார்களின் வரலாறு அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

இதுபோல் புதுச்சேரி காந்தி வீதி சந்திப்பில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன்ஆலய முன்மண்டபச் சுவர்களின் வாசவியின் வரலாற்றை வண்ணச் சித்திரமாகத் தீட்டியுள்ளனர்.

Comments