[Untitled]‎ > ‎

ஒரு பிடி அவல் அளித்த குசேலனின் குடிசை மாட மாளிகையானது அட்சய திருதியில்..

posted Apr 30, 2012, 2:33 AM by Web Admin

அட்சய திருதியை பற்றிய புராணக் கதைகள் பல உள்ளன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பால்ய நண்பர் குலேசன் வறுமையில் வாடுகிறார். உதவிகள் கேட்டு வரலாம் என்று அவரை சந்திக்க ஒரு பிடி அவலை மேலாடையில் முடிந்து கொண்டு புறப்படுகிறார்.

அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பரமாத்மா அவர் அன்போடு கொண்டுவந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்துப் போடுகிறார்.

நட்பு, அன்பு கலந்த அவலின் ருசியில் மகிழ்ந்துபோன கிருஷ்ணன், அட்சயம் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுப்புகிறார்.

இன்னொரு கவளம் அவல் தின்னவிடாமல் கிருஷ்ணனை தடுக்கிறாள் லட்சுமியின் அம்சமான ருக்மணி. காரணம் கேட்கிறார் கிருஷ்ணன் ‘அன்புடன் கொடுத்த அவலை ஒரு பிடி தின்றதற்கே குசேலனின் குடிசை வீட்டை மாட மாளிகையாக மாற்றி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிவிட்டீர்கள்.

இனியும் ஒரு பிடி தின்றால் லட்சுமி தேவியான நானே குலேசன் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான்’. என்கிறாள். குசேலன் கேட்காமலேயே அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் செல்வச் செழிப்பையும் கொடுத்து அருளியவன் கண்ணன். வீடு திரும்பிய பிறகுதான் இவை அனைத்தும் குசேலனுக்கு தெரிய வருகிறது.

கண்ணனின் அன்பை நினைத்து வியக்கிறார். அவருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை.

கெளரவர்கள் சபையில் திரெளபதியின் துகிலுரியப்பட்டபோது ஆடைகளாக அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச புராணம்.

அப்போதும் ‘அட்சய’ என்று சொல்லியே ஆடைகளை பெருக்கெடுக்கச் செய்துள்ளார் கண்ணன். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள், தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்தது.

திரெளபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி, பத்ம நிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள், மகா விஷ்ணுவின் வலமார்பினில் மகாலட்சுமி இடம்பிடித்த நாள் என அட்சய திருதியைக்கு பல்வேறு பெருமைகள் கூறப்படுகின்றன.

Comments