[Untitled]‎ > ‎

உலக அதிசய வரிசையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்..

posted Apr 18, 2012, 2:52 AM by Web Admin

மீனாட்சி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் 2 வது பெரிய நகரமும் 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த ஆலயம் மீனாட்சி, சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது.

மீனாட்சி தெய்வத்திற்கு முதன்மையும் முக்கியத்துவமும் வழங்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தின் பின்னணி 800 வருடங்கள் மேலான சரித்திர வரலாறு கொண்டது (6வது நூற்றண்டில் அரசாண்ட பாண்டிய மன்னன் குலசேகரன் இந்த நகரத்தை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது) மதுரை மீனாட்சி கோவில் பாண்டியர் ஆட்சிக்குள் மதுரை உட்பட்டிருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட போதிலும் தற்போது இருந்து வரும் கட்டிட அமைப்பு நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டதாக கோவிலின் வரலாறு குறிப்பிடுகின்றது.

பல நூற்றாண்டு கட்டிட தொன்மையுள்ள மீனாட்சி கோவிலானது திராவிட நாகரிகத்திற்கும், சிற்ப கலைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. மிகவும் பழம் பெரும் தொன்மையும், நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பும், உலக புகழ் மிக்கதுமான மதுரை மீனாட்சி கோவில் தொடர்பிலான சிறு தகவல்கள் வருமாறு:

“மீனாட்சி சுந்தரேஸ்வரர்” ஆலயத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் விகிரக வடிவில் பூரிக்கப்படுகின்றன.

மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகதத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை “மரகத வல்லி” எனவும் அழைக்கின்றனர்.

மதுரை மீனாட்சி கோவில் 45 ஏக்கர் (180,000 சதுர மீற்றர்கள்) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீற்றர் நீளமும் 237 மீற்றர் அகலமும் கொண்டுள்ளது.

இந்த ஆலயம் 8 கோபுரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள இரட்டை கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது தட்டுக்களை (அடுக்கு) கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமான தெற்கு வாசல் 170 அடி (52 மீற்றர்) உயரமுடையது. மற்றய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீனாட்சி ஆலயம் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆலயத்தின் உள்ளக தூண்கள் சிறந்த கலை நுணுக்க சிற்ப வேலைப்பாடுகளுடனும் இசை மீட்கத் தக்கனவாகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். 600 வருடங்களின் மேலான கட்டுமானத்தில் உருவாகியதும். மிகவும் கலை அம்சம் மிக்கதுமான இந்த ஆலயத்தில் மொத்தமாக 33 மில்லியன் கலை வேலைப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும், தல விருட்ஷமான கடம்ப மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.

பல நுற்றாண்டு பழமையான கட்டிட வேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண பூச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்று சேர உள்ள இந்த ஆலயமானது உலக அதிசயங்களின் வரிசையில் போட்டி போடுமளவிற்கு சிறப்பு மிக்கது.

Comments