19.06.18- காரைதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் முத்து சப்புர திருவுலா..

posted by Habithas Nadaraja

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின் 7ம் நாள் திருச்சடங்கான இன்று 19.06.2018ம் திகதி மாலைநேர விசேட பூசை வழிபாடுகளின் பின் மாலை  7.00மணியளவில் ஆலயத்திலிருந்து  அம்மன் அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்புரத்தில் தேரோடும் வீதி வழியாக திருவுலா இடம் பெற்றது.

19.06.18- இந்துக்களுக்கு ஏற்படவிருந்த அவமானத்தை இராஜதந்திமாக துடைத்தெறிந்தது இந்து சம்மேளனத் தலைவர் நாரா.அருண்காந்த்..

posted Jun 18, 2018, 6:13 PM by Habithas Nadaraja


இந்துக்களுக்கு ஏற்படவிருந்த அவமானத்தை இராஜதந்திமாக துடைத்தெறிந்தது இந்து சம்மேளனத் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களே  காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ராசையா செல்லையா..

இந்து அல்லாத ஒருவரை இந்து கலாச்சார பிரதி அமைச்சராக நியமித்தது இந்துக்களின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால்.இச்செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டவுடனேயே இந்து அமைச்சர்களாக இருப்பவர்கள் செய்திருக்கவேண்டியது என்ன?உடனடியாக ஜனாதிபதியை சந்தித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.கேள்விகேட்டிருக்க வேண்டும்.தமிழ் மொழி மூலமான ஊடகங்களில் கேட்கப்படும் எந்த கேள்விக்கு இதுவரை ஜனாதிபதி பதிலளித்திருக்கின்றார்.?தாங்கள் ஊடகங்களுக்கு விடுக்கும்  தமிழ் மொழியிலான அறிக்கைகளை சிங்கள மொழியில் நேரடியாக பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பாதது ஏன்.?ஜனாதிபதியுடன் தொலைபேசியிலேனும் பேசுவதற்கான அடிப்படை தகைமைகூட எமது அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் இல்லாமல் போனது ஏன்.?இவை எல்லாவற்றுக்கு  மேலாக  மன்னார் திருக்கேதீச்சர காணி பிரச்சினையில் ஜோன் அமரதுங்கவிற்கு பயந்து இந்துக்களை அம்போவென கைகழுவிவிட்டு இந்துக்களை பெரும் தோல்விகாணச் செய்த அமைச்சர் சுவாமிநாதன் எவ்வாறு ஜனாதிபதியுடன் இது தொடர்பாக முட்டி மோதி தமது வாதங்களை முன்வைத்திருப்பார்.?

அறிக்கைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு மதில்மேல் பூனையாகவிருந்த இந்து கலாச்சார அமைச்சர் எந்த பேச்சுவார்தைகளிலும்  ஈடுபடாமல்  'வடமாகாண மீள்குடியேற்ற பிரதி அமைச்சை மட்டும் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டது'   என்று மட்டும் கூறியுள்ளாரே தவிர 'இந்து கலாச்சார பிரதி அமைச்சர் இராஜினாமா செய்தார்' என்று ஏன் குறிப்பிடவில்லை?ஏன் என்றால் நழுவல் போக்கு.இதுதான் இவர்களுடைய  இராஜதந்திரமா?இப்படிப்பட்டவர்கள் எவ்வாறு இந்து மக்களுக்கு சேவையாற்ற முடியும்?
இந்து சம்மேளனத்தின் தலைவர் ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய நீண்டநேரப் பேச்சுவார்த்தைகளின் போது  அவருக்கு இதன் பொருத்தப்பாடின்மை மற்றும் பாரதூரம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

இவைகளுக்கப்பால்  இந்து சம்மேளனம்   இராஜதந்திர நகர்வுகளையும் நாடு முழுவதும் வெவ்வேறு அமைப்புக்களுக்கு போலீஸ் அனுமதி பெற்றுக்கொடுத்து மக்களையும் வீதிக்கிரக்கி போராட வைத்தது.அறிக்கை போர் நடத்தாமல் நேரடியாக ஜனாதிபதி செயலகம் சென்று தைரியமாக தமது வாதங்களை முன்வைத்தது மட்டுமல்ல ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளருடன் பேசி அரசியல் மற்றும் இன,மத ரீதியிலான நெருக்கடியேற்படாமல் இராஜினாமா செய்யவைக்கப்பட்டிருக்கின்றது.

இவ் வெற்றிகரமான நடவடிக்கைகளுக்கு கிழக்கு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை இந்து சம்மேளனத் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்ற அதேவேளை அறிக்கைப் போர் நடத்துபவர்கள் இனியேனும் இந்துக்களை ஏமாற்றாதீர்கள் என்று கேட்டுக்கொள்வதோடு  தான் சார்ந்த மக்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனேயே உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்வாருங்கள் என்றும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இராசையா செல்லையா
முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்.


19.06.18- காரைதீவு மகா சபைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு..

posted Jun 18, 2018, 6:05 PM by Habithas Nadaraja

கடந்த வருடம் நவம்பர் மாதம் 65பேர் கொண்ட மகா சபையொன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் 57பேரின் பங்கு பற்றுதலுடன் பிரதேச சபைத் தேர்தலுக்காக ஒரு சுயேட்சைக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது எல்லோரும் அறிந்த விடயமே, ஆனால் தேர்தலின் பின்னர் இதில் பெரும்பாலானோர் தங்களுக்கும் இந்த மகா சபைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைப்போல் ஒதுங்கியிருந்தார்கள். ஆனால் உண்மையான சேவை மனப்பாங்கு கொண்ட சிலரின் வேண்டுதலுக்கிணங்க தலைவர், செயலாளரினால் இரண்டாவது தடவையாக (17.06.2018)கூட்டப்பட்ட விசேட பொதுக்கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் கலந்து கொண்டதுடன் புதிய நிர்வாக சபையும் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது.

தலைவராக திரு.K.தட்சணாமூர்த்தி அவர்களும், செயலாளராக திரு.E.நடேசமூர்த்தி அவர்களும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக திரு.T.வினோதராஜ் அவர்களும் உப செயலாளராக திரு.K.உமாரமணன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள் பொருளாளராக திரு.V.விஜயசாந்தன் மற்றும் கணக்காய்வாளராக திரு.K.மதியழகன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தலா ஒருவர் வீதம் தெரிவு இடம்பெற்றதுடன் வருகை தந்த எல்லோரையும் இணைத்து நிர்வாக சபையொன்றும் அமைக்கப்பட்டது.

அத்துடன் இளைஞர்களால், நாம் இன்னும் தாமதிக்காமல் ஊரின் நலன்கருதி எம்மால் முடிந்தவரை ஏதாவது சிறிய திட்டத்தையாவதுஉடனடியாக செயல்படுத்த வேண்டுமென்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

செயலாளர்
மகா சபை, காரைதீவு
18.06.18- காரைதீவில் தேசிய அறநெறி மாத விழிப்புணர்வு ஊர்வலம்..

posted Jun 17, 2018, 5:35 PM by Habithas Nadaraja

இந்துகலாசார அலுவல்கள்  திணைக்களத்தின் தேசிய அறநெறிமாத  விழிப்புணர்வு நிகழ்வின் ஒருகட்டமாக இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நேற்று(17.06.2018) விழிப்புணர்வு ஊர்வலம் ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பித்து வீதியுலா வருவதையும் முன்னதாக நந்தவனசித்திவிநா ய கராலய பிரதமகுரு சிவஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் நந்திக்கொடியேற்றி பஞ்சாராத்தி காட்டுவதையும் அறநெறி மாணவர்கள் இந்துசமய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.

 காரைதீவு  நிருபர் 

17.06.18- அருள்மிகு உகந்தமலை தேவஸ்தானத்தில் காரைதீவு பொது மக்களின் சிரமதான நிகழ்வு..

posted Jun 17, 2018, 3:27 AM by Habithas Nadaraja

கிழக்கின் தென்கோடியில் நாநிலங்களின் மத்தியில் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள  உகந்தமலை ஸ்ரீ முருகனாலய வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவத்தினை முன்னிட்டு காரைதீவு பொது மக்களினால் ஆலய சூழலில் சிரமதான நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது..

17.06.18- காரைதீவு மகா சபையின் விசேட பொதுக்கூட்டம்..

posted Jun 16, 2018, 6:46 PM by Habithas Nadaraja   [ updated Jun 16, 2018, 6:47 PM ]

இக் கூட்டமானது   (17.06.2018) காலை 9.30 மணிக்கு ஸ்ரீ நந்தவனபிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெறவிருப்பதால் பொதுமக்கள், சமூக நலன்விரும்பிகள் அனைவரும் இதில் தவறாது கலந்து கொண்டு எமதூரின் முன்னேற்றத்துக்காகவும் கௌரவத்திற்காகவும்உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் கடந்த மாதம் நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்துக்கு மக்களின் வரவு மிகக் குறைவாக இருந்த காரணத்தினால் எவ்வித முக்கிய முடிபும் எடுக்க முடியவில்லை என்பதையும் மிக மனவேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம
செயலாளர்
காரைதீவு, மகா சபை 17.06.18- றீம் பார்க் பாலர் பாடசாலையின் வெள்ளி விழா நிகழ்வு..

posted Jun 16, 2018, 6:34 PM by Habithas Nadaraja

றீம் பார்க் பாலர் பாடசாலையின் வெள்ளி விழா [1994-2018] 16.06.2018ம் திகதி காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ.சிறியாணி விஜயவிக்கிரம (உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர்) மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர். 

15.06.18- தலைக் கவசத்துடன் வந்த நபர் மின்னல் வேகத்தில் 5 பவுண் தங்கச்சங்கிலி அறுப்பு..

posted Jun 14, 2018, 5:17 PM by Habithas Nadaraja

தலைக்கவசத்துடன்வந்தநபர் மின்னல்வேகத்தில்5பவுண்தங்கச்சங்கிலி அறுப்பு!
காரைதீவில்சம்பவம்: பொலிசார் விசாரணை:  சந்தேகநபர் தலைமறைவு..

தலைக்கவசத்துடன் வந்த நபர் கடையின் உரிமையாளர் அணிந்திருந்த 5பவுண் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்து மின்னல்வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார்.

அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றதாகத்தெரிகிறது.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம்(13.06.2018) இரவு 8.45மணியளவில் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காரைதீவுப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காரைதீவு 1 விபுலாந்ந்த வீதியலுள்ள விசுவலிங்கம் கோடீஸ்வரன்(வயது53) என்பவரின் பலசரக்குக்கடையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறைப்பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார் தலைமையிலான பொலிஸ் குழுவினர்  உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தடயங்களை அவதானித்து விசாரணைகளை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது. 

மறுநாள் அம்பாறையிலிருந்து விசேட துப்பறியும் சோக்கோ பொலிசாரும் வந்து தடயங்களைப்பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

பலனாக சந்தேகநபர் ஒருவரை உரிமையாளர் கோடீஸ்வரன் இனங்காட்டியுள்ளார். அவரைத்தேடிச் சென்றதும் அவர் தலைமறைவாகியுள்ளார். 

பொலிசார்அவரைக்கண்டுபிடிப்பதற்காக வலைவிரித்துள்ளனர். பிரஸ்தாப நபர் ஏலவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையிலிருந்துவந்தவர் எனக்கூறப்படுகின்றது.

சம்பவம் பற்றி கடைஉரிமையானர் வி.கோடீஸ்வரன் (53) கூறுகையில்:

அன்று இரவு 8.45மணியிருக்கும். நானும் உனது உதவியாளரும் கடையில் நின்றிருந்தோம். மோட்டார்சைக்கிளில் இருவர் வந்தனர். இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.

ஒருவர் வீதியில் இயங்குநிலையில் மோட்டார்சைக்கிளில் நின்றார். மற்றவர் தலைக்கவசத்துடனேயே என்னிடம் 3 பிறிஸ்டல் கேட்டார். நான் பணத்தைப்பெற்றுக்கொண்டு கொடுத்தேன்.அதை வைக்க வெற்றுப்பெட்டியொன்று கேட்டார்.

பெட்டியை எடுப்பதற்காக திரும்பியவேளை மின்னல்வேகத்தில் பாய்ந்து எனது கழுத்திலிருந்த மாலையை அறுத்துக்கொண்டு ஓடினார். நான் பின்னால் ஓடிப்போவதற்கிடையில் மோட்டார்சைக்கிளில் தயாராகவிருந்த நபர் இவரை ஏற்றிக்கொண்டு விர் என்று பறந்தார்.

எனது உதவியாளர் அவர்களை சிறிதுதூரம் துரத்திச்சென்றார். முடியவில்லை. அவர்கள் நேராக மாளிகைக்காட்டுப்பக்கம் ஓடித்தப்பினர்.

ஆனால் அவர்கள் லைற் போடவில்லை.பின் நம்பர் பிளேட்டை மறைத்து வெள்ளைத்தாள் ஒட்டியிருந்தார்கள். 
நான் மறுகணம் சம்மாந்துறை சென்று பொலிசாரிடம் முறையிட்டேன். என்றார்.

அப்பகுதிகளிலுள்ள சிசிரிவி கமராக்களில் சிக்காத  வகையிலே அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் விளக்குகளை அணைத்தவாறு முன்பின் இலக்கத்தகடுகளை வெள்ளைத்தாளினால் மூடியவண்ணம் சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

(காரைதீவு  நிருபர்)
14.06.18- திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது வருடாந்த தீமிதிப்பு வைபவம்..

posted Jun 13, 2018, 6:33 PM by Habithas Nadaraja

வருடத்திற்கு ஒருமுறை திருக்கதவு திறக்கப்பட்டு விழாக்கோலம் காணுகின்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமும் தீமிதிப்பு வைபவத்திற்கான முதல் நாளான 13.06.2018 ஆம் திகதி காலை 8.00 மணியளவில் கடல் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு காளி அம்பாளின் வருடத்திற்கு ஒரு முறை திறக்கப்படுகின்ற திருக்கதவானது திறக்கப்பட்டது.
14.06.18- றீம் பார்க் பாலர் பாடசாலையின் வெள்ளி விழா..

posted Jun 13, 2018, 5:58 PM by Habithas Nadaraja

றீம் பார்க் பாலர் பாடசாலையின் வெள்ளி விழா [1994-2018] 16.06.2018ம் திகதி காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ.சிறியாணி விஜயவிக்கிரம (உள்ளுராட்சி மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுதுறை இராஜாங்க அமைச்சர்) மற்றும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். றீம் பார்க் பாலர் பாடசாலையின் அனைத்து பழைய மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்..
1-10 of 3653