01.02.15- காரைதீவு பொது நூலகம் தரம் 2 ஆக தரமுயர்வு..

posted Feb 1, 2015, 12:09 AM by Liroshkanth Thiru
தரமுயர்த்தப்பட்டது காரைதீவு பொது நூலகம்..

காரைதீவில் அமைந்திருக்கின்ற பொது நூலகமானது தரம் மூன்றிலிருந்து தரம்இரண்டாக தரமுயர்வு பெற்றிருக்கின்றது. இவ்வாறு தரமுயர்வு ஏலவே பெற்றிருக்க வேண்டிய இந்நூலகம் பல அரசியல் பின்புலத்தால் தாமதப்படுத்தப்பட்டிருந்தது. இதனை காரைதீவு பிரதேசசபை தவிசாளர் யோ.கோபிகாந்த் அவர்களின் பூரண முயற்சியினால் மேற்படி பொது நூலகமானது தரம் இரண்டாக தரமுயற்றப்பட்டு அதற்கான சான்றிதழும் அண்மையில் கிடைக்கப்பெற்றிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், காரைதீவின் கல்வி வளர்ச்சியினை மேம்படுத்துவதற்காக தரம் மூன்றிற்குரிய இரண்டு நூலகங்களினை காரைதீவு பிரதேசத்தில் அமைக்க முயற்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அறியப்படுகின்றது. அவ்வாறு அமைப்பதன் மூலம் தரம் இரண்டில் இருக்கின்ற காரைதீவு பொது நூலகமான தரம் ஒன்றிற்கு தரமுயற்றப்படுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தலாம் எனும் திட்டத்திலும் காரைதீவு 12ம் பிரிவில் ஒன்றும், காரைதீவு 5ம் பிரிவில் (பழைய நூலகக்கட்டிடம் அல்லது பழைய சந்தைக்கட்டிடம்) ஒன்றுமென இரண்டு உருவாக்கப்பட்டு வினைத்திறனுடன் செயற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. 

இதுதொடர்பில் எமது இணையத்தளமானது தவிசாளரை தொடர்பு கொண்டு வினவியபோது, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தவிசாளர்.. 

"28.01.2015ம் திகதியில் எமது சபை அமர்வின்போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு உப நூலகங்கள் அமைப்பதனூடாக எமது பொது நூலகமானது தரம்-1 இற்கு தரமுயர்த்தப்பட்டு ஆளனி மற்றும் பௌதீகவளங்கள் என்பன மேலதிகமாக எமது நூலகத்திற்கு கிடைக்கும். அத்துடன் இவ்வாறு நூலகங்கள் அமைக்கப்படுவதால் எமது பொது நூலகத்திற்கு நன்மையே தவிர தீங்கில்லை. அத்தோடு இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்புவோர் என்னுடன் 0756980552 எனும் இலக்கத்திலும் அல்லது நேரடியாகவும் தொடர்பு கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்...

Comments