01.02.16- பிளவுபடாத ஜக்கிய இலங்கைக்குள் அதியுச்ச இணையாண்மையுடனான அதிகாரப்பகிர்வே எமது முன்மொழிவு!

posted Jan 31, 2016, 4:20 PM by Liroshkanth Thiru
பிளவுபடாத ஜக்கிய இலங்கைக்குள் அதியுச்ச இணையாண்மையுடனான அதிகாரப்பகிர்வே எமது முன்மொழிவு!
அரசியலமைப்பு சீர்திருத்த குழுவிற்கு அம்பாறைசிவில் பிரதிநிதிகள் மனு!
(காரைதீவு  நிருபர்)

பிளவுபடாத ஜக்கிய இலங்கைக்குள் அதியுச்ச இறையாண்மையுடனான அதிகாரப்பகிர்வே எமது முன்மொழிவாகும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட சிவில் அமைப்புகளை இணைத்து அரசியல்யாப்பு சீர்திருத்த முன்மொழிவுகளை தயாரித்த மனித அபிவிருத்தித் தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசியலமைப்பு சீர்திருத்த குழுவிற்கு அம்பாறைமாவட்ட சிவில்பிரதிநிதிகள் விதந்துரைத்த முன்மொழிவுகளில் மேற்கூறப்பட்ட முன்மொழிவும் ஒன்றாகும்.

மனித அபிவிருத்தித்தாபனம் அதன் கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் தலைமையில் மூன்றாம் கட்டமாக காரைதீவிலுள்ள அதன் தலைமையகத்தில்  நேற்றுக்கூடி பல முன்மொழிவுகளை முன்வைத்து இறுதிவரைபை தயாரித்துள்ளது.
3 அமர்வுகள் ஏலவே மாவட்டத்திலுள்ள 60சிவில் அமைப்புகளுக்கு அழைப்புவிடுத்து முதலாவது அமர்வை நடாத்திபல முன்மொழிவுகளை தயாரித்திருந்தது. 

அவ்வமர்வில் தெரிவான 5 நிபுணர்களைக் கொண்ட குழு இரண்டாம் கட்டமாக கூடி அவற்றில் பொருத்தமான முன்மொழிவுகளை தெரிவுசெய்தது.

அந்த முன்மொழிவுகளை நேற்று சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு காணொளிமூலம் காண்பித்து இறுதி வரைபைத்தயாரித்தது.
இதில் அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிறுவர் நன்னடத்தை மற்றும் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நீதிமன்றம் மற்றும் கல்வி பொதுநிருவாக விவசாய திணைக்களங்களின் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பிரேரணைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதிவரைபு சமர்ப்பணம்!

இவ்வரைபின்  இறுதி வரைபு  இலங்கை அரசியல் யாப்புச்சீர்திருத்தக்குழுவிற்கு  பெப்ருவரி மாதம் 04ஆம் திகதிக்கு முன்பு அனுப்பிவைக்கப்படும். அதேவேளை அதன் சமர்ப்பணம் மேற்படி குழு அம்பாறைக்கு வருகைதரும் பெப் 29ஆம் திகதி இடம்பெறுமென இணைப்பாளர் பி.ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

முன்மொழிவுகள்

இலங்கையில் பல்லின பல்சமய சமுகங்கள் வாழ்வதால் அனைத்துமதங்களுக்குமான  உரிமைகள் கௌரவம்  அரசினால் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.

ஜனாதிபதியின் உச்சக்கட்ட அதிகாரம் குறைக்கப்படுகின்ற அதேவேளை பாராளுமன்றிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டவேண்டும். 

குறிப்பாக சிறுபான்மையோர் காப்பீடு கட்டாயம் யாப்பில் இடம்பெறவேண்டும். சிங்களம் தமிழ் ஆகிய இருஅரசகரும மொழிகள் முறையாக அமுல்படுத்தப்படவேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுக்களைக்கண்காணிக்க மீயுயர்சபையொன்றின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகளுக்கு இனமதபேதமின்றி உயரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும். ஓம்புட்ஸ்மன் மாகாண மட்டத்திலும் ஏற்படுத்தப்படவேண்டும். 
இதுபோன்று பல முன்மொழிவுகள் முன்மொழியப்பட்டுள்ளன.


Comments