01.03.17- களுத்துறைச் சம்பவத்தில் பலியான காரைதீவு சிறைச்சாலை அலுவலரின் சடலம் வீடுவந்துசேர்ந்தது..

posted Mar 1, 2017, 9:24 AM by Habithas Nadaraja   [ updated Mar 1, 2017, 9:27 AM ]
களுத்துறைச்சம்பவத்தில் பலியான காரைதீவு சிறைச்சாலை அலுவலரின் சடலம்  வீடுவந்துசேர்ந்தது.
ஊரெல்லாம் சோகம் :வீதியெல்லாம் :துக்கக்கொடிகள் பதாதைகள் : நாளை பூரணமரியாதையுடன்  நல்லடக்கம்!

களுத்துறை சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுச்  சம்பவத்தில் பலியான களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும் சிறைச்சாலை உத்தியோகத்தரான காரைதீவைச் சேர்ந்த சிவானந்தம் தர்மீகன் ( வயது 24) அவர்களின் சடலம்  இன்று புதன்கிழமை அதிகாலை 3மணியளவில் வீடுவந்து சேர்ந்தது.

சிறைச்சாலை திணைக்களத்தின் ஏற்பாட்டில் விசேட காரில் சடலம் கொண்டுவரப்பட்டது.கூடவே சிறைச்சாலை பஸ்சொன்றிலும் உத்தியோகத்தர்கள் வந்தனர். நேற்றுமுன்தினம் தனியார் வாகனத்தில் களுத்துறைசென்ற குடும்பத்தினரும் அவர்களோடு பயணித்து வீடுவந்துசேர்ந்தனர்.

வீட்டில் உற்றார்சுற்றார் அழுதவண்ணம் ஒப்பாரிவைத்தனர். அங்கு பிரேதத்தை உத்தியோகபூர்வமாக சிறைச்சாலை திணைக்களத்தினர் குடும்பத்தினரிடம் சடலத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இவ் அகால மரணத்தையிட்டு காரைதீவெங்கும் சோகமயாமாகக்காட்சியளிக்கின்றது. வீதிகளில் துக்க கறுப்புவெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. கூடவே அஞ்சலி பதாதைகளும் பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

காரைதீவு  1 விபுலானந்த வீதியைச்சேர்ந்த தர்மிகன் அம்பாறை கச்சேரி தேர்தல் பிரிவில் பலகாலம் பணியாற்றி இறுதியாக காரைதீவு   பிரதேச செயலகத்தில் பணியாற்றிய ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தர் பி.சிவானந்தம் காரைதீவு பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளர் திருமதி சிவயோகம் சிவானந்தம் தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.

இவர் சகோதரன் சமிந்தன் (22வயது) மற்றும் சகோதரி மிதுர்ஜா(வயது17) ஆகியோரையும் பெற்றோரையும் விட்டுச்சென்றுள்ளார்.

இவர் தொழிலில் இணைந்து ஒருவருடமும் 08மாதங்களுமாகின்றன.அடுத்தவருடம் நியுசிலாந்த செல்லிவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நாளை பூரணமரியாதையுடன் நல்லடக்கம்!

இதேவேளை பலியான தர்மீகனின் பிரேத அடக்கம் நாளை வியாழக்கிழமை மாலை 3மணியளவில் பூரண மரியாதையுடன் காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

கொழும்பிலிருந்தும் களுத்துறையிலிருந்தும் சிறைச்சாலைத்திணைக்களத்தைச்சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பூரண அணிவகுப்பு மரியாதை இடம்பெறவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இன்று சம்மாந்துறைப்பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ்மாஅதிபரின் உத்தரவின்பேரில் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தியதோடு நாளைவரைக்குமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.

இன்றும் நாளையும் பெருந்திரளான அதிகாரிகள் மக்கள் உற்றார் உறவினர்கள் வந்த அஞ்சலி செலுத்தவுள்ளதால் சம்மாந்துறைப்ப 
பொலிசார்  போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.
 
காரைதீவு.1 விபுலானந்த வீதியை இருதினங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடைஞ்சல் இல்லாதவகையில் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ள்விருக்கின்றனர். 


சிறைச்சாலை உயரதிகாரிகள் பிரமுகர்கள் வருகை!

இன்று காலை முதல் சிறைச்சாலை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் பிரமுகர்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர். சம்மாந்துறைப்பொலிசார் போக்குவரத்து கட்டுபாட்டை விபுலானந்தவீதியில் ஏற்படுத்தியுள்ளனர்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஊர் இளைஞர்களுடன் இணைந்து வாழை மரம் கட்டுவதிலும் பதாதாகை கட்டுவதிலும் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தறை சிறைச்சாலை அத்தியட்சகர் தம்மிக உள்ளிட்ட அதிகாரிகள் வருகைதந்து அஞ்சலி செலுத்திச்சென்றனர். மட்டக்களப்பு மொனராகல அம்பாறை பிரதேச சிறைச்சாலை உயரதிகாரிகளும் சம்மாந்துறை கல்முனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிகளும் வ்ந்து அஞ்சலி செலுத்தினர்.

காரைதீவு  நிருபர் சகா


Comments