01.11.14- நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு..

posted Nov 1, 2014, 3:36 AM by Liroshkanth Thiru
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காரைதீவு மனித அபிவிருத்தி தாபனத்துடன் எமது karaitivunews.com இணையதளமும் மேலும் காரைதீவை சேர்ந்த பல சமூகசேவை அமைப்புக்களும் இணைந்து மனிதாபிமான நிவாரண பொருட்களை காரைதீவில் வீடுவீடாகச் சென்று சேகரிக்கும் பணி  இன்று 1ம் திகதி காலை 7.30 மணியளவில் சைவசமய ஆசார முறைப்படி காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவினாயகர் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு பொருட்கள் சேகரித்த பின் மதியம் 1.30 மணியளவில் நிறைவடைந்தது. சேகரிக்கப்பட்ட அனைத்து நிவாரணப்பொருட்களும் காரைதீவு மனித அபிவிருத்தி தாபன காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இவ் நிவாரணம் சேகரிக்கும் நிகழ்வானது இரண்டு குழுக்களாக காரைதீவை இரு பிரிவுகளாக பிரித்து நடைபெற்றது. 
அந்தவகையில் காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் அலயத்திலிருந்து ஆதிசிவன் ஆலயம் வரை ஒரு குழுவும், மறுபுறத்தில் நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய எல்லை வரை ஒரு குழுவும் நிவாரணப்பொருட்களை சேகரித்தன. எமது இணையதள குழுவானது நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து காரைதீவு ஆதிசிவன் ஆலய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருட்களை சேகரித்தன.

சேகரிக்கப்பட்ட பொருட்களாக அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட், பால்மா, உப்பு, கோதுமைமா, தேங்காய் மேலும் பல உலர்உணவுப் பொருட்களும் , பணமும் அறவிடப்பட்டன . மொத்தமாக அறவிடப்பட்ட பணத்தொகை 22810 ரூபாய் ஆகும்.

இந் நிகழ்வின் போது நிவாரணக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.


Comments