03.12.19- தமிழர்கள் எதிரியால் வீழ்த்தப்பட்ட வர்களல்ல மாறாக துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள்..

posted Dec 3, 2019, 9:16 AM by Habithas Nadaraja   [ updated Dec 3, 2019, 9:17 AM ]
தமிழர்கள் எதிரியால் வீழ்த்தப்பட்டவர்களல்ல மாறாக துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள்!
விடுகைவிழாவில் காரைதீவு பிரதேசபைத் தவிசாளர் ஜெயசிறில்..


தமிழர்கள் எதிரியால் வீழ்த்தப்பட்டவர்களல்ல மாறாக துரோகிகளால் வீழ்த்தப்பட்டவர்கள். எனவே துரோகிகளையிட்டு நாம் அவதானமாக இருக்கவேண்டும்.இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரைதீவுப்பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விபுலவிழுதுகளின் விடுகைவிழாவில் பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டுரையாற்றுகையில் தெரிவித்தார்.

காரைதீவு விபுலாநந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையின் 21ஆவது வருடாந்த விபுலவிழுதுகளின் விடுகைவிழா அதன் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இ.கி.மி.பெண்கள்பாடசாலை ஒன்றுகூடுல் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக தவிசாளர் கே.ஜெயசிறிலும் நட்சத்திர அதிதிகளாக கல்முனை ஆதாரவைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சா.இராஜேந்திரன் தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் அக்கரைப்பற்றுப்பிராந்திய பொறியியலாளர் தா.வினாயகமூர்த்தி த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

விபுலாநந்தாவில் பயின்று இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 26மாணவர்கள் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

இவ்விழாவில் தவிசாளர் மேலும் பேசியதாவது:

இன்றைய விடுகைவிழாவில் இடம்பெற்ற சிறார்களின் கலைநிகழ்ச்சிகள் அத்தனையும் வியப்பிலாழ்த்தின. சிறப்பான தயார்படுத்தல் திட்டமிடல் இச்சிறப்புக்கு காரணமாகஇருக்கும். வழிநடாத்திய ஆசிரியைகளுக்கு பாராட்டுக்கள்.
20வருடங்களைத்தாண்டி தனித்துவமாக வீறுநடைபோடும் விபுலாநந்தா முன்பள்ளி பலமுன்னேற்றகரமான அம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கல்விபுலத்தைச்சேர்ந்த நாடறிந்த ஊடகவியலாளர் கல்விமான் சகா சேரின் நிருவாகத்திறன் அதற்கு அடிப்படையாகும்.

எம்மில் பலர் அத்திவாரத்தைப் பார்க்காதுமேலுள்ள கட்டட அழகையே இரசிப்பது வழமை. உண்மையில் அத்திவாரம் ஸ்திரமாக இருந்தால் மட்டுமே கட்டடம் உறுதியாகவிருக்கும். அதுபோல ஒருவனுடைய ஆளுமைவிருத்திக்கு அத்திவாரமாகிய முன்பள்ளி தரமானதாகவிருக்கவேண்டும். அது இங்கு கிடைக்கிறது.

ஒருவர் டாக்டராகவே பொறியியலாளராகவோ கலாநிதியாகவோ வரலாம். ஆனால் பண்புள்ள நல்லபிரஜையாக உருவாகவேண்டும். அதுதான் உலகின் கல்வியின்பாலுள்ள தேவை. அது இல்லாமல் சமுகம் சீரழிகிறது.

மண்ணின்மீதும் மக்கள் மீதும் எமக்கு கரிசனை இருக்கவேண்டும். இன்று எமது மயானம் மறைந்துகொண்டுபோகிறது. நான் மட்டும் கவனமெடுத்தால் போதாது. அனைவரும்இணைந்தால்மட்டுமே எதுவும்சாத்தியம்.

ரியுசன்வகுப்பு கட்டமைக்கப்படவேண்டும் என இங்கு பொறியியலாளர் வினாயகமூர்த்தி கோரினார்.உண்மை. லீவுகாலத்தில் ரியுசன் நடாத்தக்கூடாது என்று பெற்றோர்களும்எனனிடம்கூறியுள்ளனர். அளவுக்கு அதிகமாக பணம் அறவிடுதல் பற்றியும் முறைப்பாடு வந்துள்ளது. இறைவன் எமக்குதந்த வரப்பிரசாதத்தை நாம் பணத்திற்கு விற்கக்கூடாது. அதிலும் ஒருதர்மம்நியாயம் இருக்கவேண்டும்.
இம்முன்பள்ளி மேலும்பன்மடங்கு வளர வாழ்த்துகிறேன்.என்றார்.

ஆசிரியைகளான ஜெயநிலாந்தினி ரம்யா ஆகியோரும் பணிப்பாளரும் பெற்றோரினால் மேடையில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டார்கள்.
ஏனைய அதிதிகளும் உரையாற்றினார்கள். சிறுவர்களின்கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சபையோரை பெரிதும் கவர்ந்தன. விடுகையுறும் சிறுவர்களுக்கும் 1ஆம்வருட சிறுவர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

(காரைதீவு  நிருபர்)Comments