04.04.20- காரைதீவு ச.தொ.ச நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?

posted Apr 3, 2020, 7:58 PM by Habithas Nadaraja
காரைதீவுக்கான ச.தொ.ச.விற்பனை நிலையம் அண்மைக்காலமாக மூடப்பட்டிருப்பதனால் இன்றைய கொரோனாகாலத்தில் பொதுமக்கள் பலத்த அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர்.

இன்றைய கொரோனா நெருக்கடிக்காலகட்டத்தில் அரசநிவாரணங்களை வழங்கும் மார்க்கங்களாக ச.தொ.ச. நிலையம் ப.நோ.கூ.சங்கங்கள் போன்ற ஒருசில நிலையங்களையே அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நிலையங்களும் இன்று காரைதீவு பிரதேசத்தில் இயங்காதநிலை நிலவுகிறது.  இதனால் மக்கள் அவற்றின் சேவைகளைப்பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.

மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவேண்டாம் என்று அரசாங்கம் மக்களின்நலன் கருதி கூறியிருக்கின்றது. இந்தநிலையில் அரசநிவாரணங்களைப் பெறுவதற்காக குறிப்பிட்ட ஊரடங்குதளர்வுநேரத்தில் நீண்டதூரம் அலைந்து செல்லமுடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பாக காரைதீவுப்பிரதேச தமிழ் முஸ்லிம் மக்கள் காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் மற்றும் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர்.
அவர்களிடம் கேட்டபோது அவர்களும்  சம்பந்தப்பட்டோருக்கு குறிப்பாக அம்பாறை மாவட்ட அரசஅதிபருக்கும் முறையிட்டுள்ளதாகக்கூறினர்.

எனினும் இன்னும் அந்த நிலையம் திறக்கப்படாமையினால்  காரைதீவு தமிழ்மக்கள் மட்டுமல்ல மாளிகைக்காடு சாய்ந்தமருது மாவடிப்பள்ளி முஸ்லிம்மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகைக்காட்டில் அமைந்திருந்த இந்நிலையம் கடந்த பெப்ருவரி மாதஇறுதியில் மூடப்பட்டது. அப்போது அங்குசென்று உரியஅதிகாரியிடம்கேட்டபோது இடப்பிரச்சினை காரணமாக இதனை மூடுகின்றோம் என்று பதிலளித்தார்.

கடந்தவருட இறுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளஅனர்த்தத்தில் சிக்கியுள்ள மக்களுக்கான நிவாரணப்பொருட்களை பிரதேசசெயலகம் இந்த ச.தொ.ச. நிலையத்தினூடாகவே மிகவும் நேர்த்தியாக வழங்கியிருந்தது.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து அந்நிவாரணத்தை உரியமுறையில் பெற்றுக்கொண்டனர். அவ்வேளை ச.தொச. நிலைய ஊழியர்களுக்கு மக்கள் நன்றியும் செலுத்தினர்.
அப்படிப்பட்ட ச.தொ.ச விற்பனை நிலையம் இன்றைய அத்தியாவசியமான காலகட்டத்தில் மூடப்பட்டுக்கிடப்பது கவலைக்குரியது.

கொரோனாப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் பட்சத்தில் இந்நிலையத்தின்தேவை பெரிதாக உணரப்படும். இல்லாவிட்டால் இந்நிலையச்சேவைக்காக கல்முனை சம்மாந்துறை போன்ற பிற பிரதேசங்களுக்கு அலையவேண்டிநேரிடும்.
இன்றைய ஊரடங்கு தளர்த்தப்பட்டநேரத்தில் சனநெரிசல் மற்றும் தொற்றாபத்து என்பது எப்படியிருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

சமகாலத்தில் மக்களுக்கு அரசின் சலுகைத்திட்டத்திலான உணவுப்பொருட்களை வழங்கும் மார்க்கங்களில் ஒன்றான  ச.தொ.ச. நிலையம் மூடப்பட்டுக்கிடப்பது துரதிஸ்டவசமானது.
அதனால் காரைதீவு மக்களுக்கு குறைந்த விலையில் அல்லது மானிய அடிப்படையில் விற்கப்படும் உணவுப்பொருட்களைப்பெறும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக அண்மையில் ஜனாதிபதியினால் விலைக்குறைப்புச்செய்யப்பட்ட பருப்பு மீன்ரின்  போன்ற உணவுப்பொருட்களைப்பெற இந்த மக்களால் முடியவில்லை.
உண்மையில் இடப்பிரச்சினைதான் இதற்கு காரணமாக இருக்குமானால் அதனைத்தீர்த்துவைக்க தாம் தயாராக இருப்பதாக பிரதேசசெயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பிராந்திய முகாமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த ச.தொ.ச.நிலையத்தை மீளவும் வேறிடத்தில் இயங்கவைத்து மக்களுக்கான சேவையைப்பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுப்பார்களா?

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்


Comments