05.01.18- ஊழலற்றசபையாக உள்ளுராட்சிசபைகளை மாற்றியமைப்போம்..

posted Jan 6, 2018, 2:51 AM by Habithas Nadaraja
ஊழலற்றசபையாக  உள்ளுராட்சிசபைகளை மாற்றியமைப்போம்! 
காரைதீவு 3ஆம் வட்டார வேட்பாளர் நந்தேஸ்வரன் கருத்து!


கடந்த காலங்களில் ஊழல்நிறைந்த சபைகளாகப்பரிணமித்த உள்ளுராட்சிசபைகளை ஊழலற்றசபையாக  மாற்றியமைப்போம். அதற்கான ஆணையை மக்கள் வழங்கவேண்டும்.

இவ்வாறு காரைதீவு 1ஆம் 2ஆம் 5ஆம் பிரிவுகளை உள்ளடக்கிய 3ஆம் வட்டாரத்தில் சுயேச்சை-1  அணியில் போட்டியிடும் வேட்பாளர் சின்னத்துரை நந்தேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று தமது வட்டாரங்களில் தமது ஆதரவாளர்களைச்சந்தித்து கலந்துரையாடியபோது மேற்கண்டவாறு கூறினார்.

மக்களிடம் அவர் மேலும் கூறுகையில்:

எதிர்வருகின்ற உள்ளுராட்சிமன்றத்தேர்தல் காரைதீவு மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரை காட்டிக்காத்தவந்த பாரம்பரியத்தை இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தேர்தலாகும்.

இத்தேர்தலை வழமையானதொரு தேர்தலாகக்கருதி பலரும் பிரித்து பணத்திற்கும் கையூட்டல்களுக்கும் சாராயத்திற்கும் பங்கிட்டால் இம்முறை நாம் மற்றவரிடம் கையேந்தவேண்டிநேரிடும்.

வெறும் பசப்புவார்த்தைகளுக்கும் வீரவசனங்களுக்கும் காரைதீவு மக்கள் ஒருபோதும் துணைபோன வரலாறு இல்லை. இம்முறையும் அதுதான் நடக்குமென்பதை நாமறிவோம்.

எல்லையைக்காப்பாற்றினோம் சிலைவைத்தோம் குப்பைஅள்ளும் தொழிலாளர்களை எதுவுமே வாங்காமல் நிரந்தரமாக்கினோம் என்றுகூறி ஒவ்வொரு தேர்தலுக்கும்புதுப்புதுச் சின்னத்துடன் உங்கள்முன் வருவார்கள். 

எந்தக் கொள்கையுமில்லாமல் மீண்டுமொருமுறை கொள்ளையடிக்கும் நோக்கில் வரும் அவர்களிடம் மிகவும் கவனமாக நடவுங்கள்.
விபுலமுனி அவதரித்த மண்ணில் பிறந்த உங்களுக்கு அரசியலை கற்றுத்தரவேண்டிய படிக்காத கற்றுக்குட்டியல்ல நான். 
எங்கோவிருந்து வந்து காரைதீவின் ஒற்றுமையைச் சீர்குலைத்து அதனூடாக சுயகாரியத்தைச் சாதிக்கலாமென்பது பகற்கனவு. சிலவேளை எமது பாராம்பரியசபை மற்றுமொருவர் கைக்குச்சென்றால் அதற்கான முழப்பொறுப்பையும் பழியையும் அவரும் அவர்சார்ந்த பினாமிகளும்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மக்களிடம் வாக்குப்பெற்றவர்கள் அவர்களுக்கு தொழில்வழங்கி வீதிபோட்டு பூங்கா கட்டி மண்டபம் கட்டிக்கொடுக்கவேண்டியது கடமை. அதற்காகத்தான் அவர்கள் வாக்களித்தார்களே தவிர சபைக்குவரும் பணத்தை ஏப்பமிடவும் தொழிலாளிகளிடம் கப்பம் பெறவும் இல்லையென்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கட்டுக்காசு இழப்பவர்களைப்பற்றி நாம் கவலையடையவில்லை. ஆனால் ஏனையோர் இறுதிநேரத்திலாவது ஒற்றுமைப்பட்டு ஊரைக்காப்பாற்றமுன்வரவேண்டும்.அதற்கு எந்த விட்டுக்கொடுப்பையும் வழங்க நாம் தயாராகவுள்ளோம்.


                                                                                                                காரைதீவு  நிருபர் 
Comments