05.12.18- வடக்கு கிழக்கு கல்விநிலை பின்தங்கியதற்கு யுத்தம் காரணமல்ல..

posted Dec 4, 2018, 4:26 PM by Habithas Nadaraja
வடக்குகிழக்கு கல்விநிலை பின்தங்கியதற்கு யுத்தம்காரணமல்ல:விடுதலைப்புலிகளின்காலத்தில் கல்விநிலை நன்றாகவேயிருந்தது விடுகைவிழாவில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் ஜெயசிறில்..


வடக்கு-கிழக்கு மாகாணத்தின் கல்விநிலை பின்தங்கியதற்கு யுத்தம் மட்டும்தான் காரணமென்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. உண்மையில் விடுதலைப்புலிகளின்காலத்தில் கல்விநிலை நன்றாகவேயிருந்தது.இதனை யாரும் மறுக்கமுடியாது.

இவ்வாறு காரைதீவு விபுலாநந்த மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலை விடுகைவிழாவில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டுரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

இவ்விடுகை விழா மொன்டிசோரிப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் காரைதீவு இ.கி.மி.பெண்கள் பாடசாலையின் சாரதா கலாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன் சம்மாந்துறைவலயக்கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி காரைதீவு
மக்கள்வங்கிமுகாமையாளர் திரு.உமாசங்கரன் கல்முனை மாணவர்மீட்பு பேரவையின் தலைவர் எந்திரி எஸ்.கணேசானந்தம் கிண்;ணியா வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தாமரை எவ்.எம்.பணிப்பாளர் சதா.புவனேந்திரன் சாய்ந்தமருது சிங்கர் பிரதிநிதி எ.ஹபீபுள்ளாஹ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு தவிசாளர் ஜெயசிறில் மேலும் உரையாற்றுகையில்:

இந்த நாட்டில் தமிழர்கள் எதையும் போராடித்தான் பெறவேண்டியநிலை உள்ளது.கல்வியில் சமவாய்ப்பு வழங்கப்பட மறுக்கப்பட்ட நாள் முதல் போராட்டம் கல்வித்துறையில் இடம்பெற்றுவருகிறது. தமிழர்கள் யுத்தம்செய்தபோதும் கல்வியைக்கைவிடவில்லை.

ஒரு காலத்தில் இலங்கை பூராக உயர் அரச தொழிலை வகித்தவர்கள் தமிழர்களே. அப்படி கொடிகட்டிப்பறந்த தமிழினம் இன்று3ஆம் தரப்பிரஜை போன்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

காரைதீவில் தலைசிறந்த ஒரு முன்பள்ளியாக கடந்த 20வருடங்களாக துலங்கிவரும் விபுலாநந்தா மொன்டிசோரியில் பயின்றோர் உயர் உத்தியோகங்களிலும் நல்லபிரஜைகளாகவும் சமுதாயத்தில் மிளிர்கின்றனர். காரைதீவுக்கு முன்பள்ளியில் அன்று தொடக்கம் இன்றுவரை சாதனைபடைத்துவரும் இப்பள்ளியின் பணிப்பாளராக சகா சேர் தனது சேவையை அர்ப்பணித்துவருவது குறித்து பாராட்டுகிறேன். என்றார்.

கௌரவஅதிதியான பிரதேசசெயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் உரையாற்றுகையில் மேலைத்தேய நாடுகளில் முன்பள்ளிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் துரதிஸ்டவசமாக எமது நாட்டில் வழங்கப்படுவதில்லை. முன்பள்ளிகளை அரசாங்கம் பொறுப்பேற்பதோடு அந்த ஆசிரியர்களையும் ஆசிரியசேவைக்குள் உள்வாங்கவேண்டும். அப்போதுதான் இந்தத்துறை பிரகாசிக்கும் என்றார்.

இம்முன்பள்ளியில் பயின்று தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்த 7மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
Comments